ஊட்டியில் இறந்ததாக கருதப்பட்ட மாணவன் காபி குடித்த வினோதம்
ஊட்டி: ஊட்டியில் இறந்ததாக கருதப்பட்ட மாணவன் காபி குடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டியைச் சேர்ந்த மாணவன் ஒருவன், கடந்த 12ம் தேதி விஷமருந்திய நிலையில் ஊட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அவனது உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து, மாணவன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு அவன் இறந்து விட்டதாகக் கருதிய பெற்றோர், தனது மகன் விரும்பி சுவைக்கும் காபியை மாணவன் வாயில் ஊற்றியுள்ளனர். தொடர்ந்து 2 கோப்பை காபி காலியானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவனது பல்சை பரிசோதித்துள்ளனர். அவனுக்கு பல்ஸ் இருந்ததையடுத்து, மீண்டும் ஊட்டி அரசு மருத்துவமனையில் மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும்: பிரதமர் மோடி
புதுடில்லி: வலிமையான, அமைதியான ஜனநாயக நாடாக ஆப்கானிஸ்தான் உருவாக இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை, ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீத் கர்சாய் சந்தித்து பேசினார். அப்போது ஆப்கானிஸ்தானில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடந்துள்ளதற்காக கர்சாய்க்கு மோடி பாராட்டு தெரிவித்தார். மேலும், வலிமையான, அமைதியான ஜனநாயக நாடாக ஆப்கானிஸ்தான் உருவாக இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திலுள்ள டிரால் பகுதியில், பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில், 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
சென்னை ஐகோர்ட்டில் சகாயம் மனு தாக்கல்
சென்னை: சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு விளக்கம் கேட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயம் மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை ஐகோர்ட்டில் அவர் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டத்தில் நடந்த கனிமவள முறைகேடு தொடர்பாக மட்டும் விசாரணை நடத்த வேண்டுமா, அல்லது தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் நடந்த கனிமவள முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டுமா என்பதை விளக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், விசாரணையில் தான் விரும்பும் அதிகாரிகளை இணைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கும்படி அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பேசும் சக்தியை இழந்தார் சூமேக்கர்?
ஜெனிவா: பிரபல பார்முலா ஒன் வீரர் மைக்கேல் சூமேக்கர் பேசும் சக்தியை இழந்து விட்டதாக அவர் நண்பர் பிலிப் ஸ்டெரிப் தெரிவித்துள்ளார். பிரபல பார்முலா ஒன் வீரர் மைக்கேல் சூமேக்கர், ஆல்ப்ஸ் மலைத் தொடரில் பனிச்சறுக்கில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன் கோமா நிலையிலிருந்து வெளியே வந்த அவர் தற்போது ஜெனிவா நகரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சூமேக்கரின் உடல்நிலை குறித்து அவரது நண்பர் பிலிப் ஸ்டெரிப் கூறுகையில், சூமேக்கர் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீல் சேரில் நடமாடி வருவதாகவும், அவரால் பேசமுடியவில்லை என்றும், ஞாபக மறதி நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் கடும் தாக்கு
லே: காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகள் காரணமாக, இந்தியா பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இழந்து விட்டதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியிலுள்ள லேயில் பேசிய அவர், இந்தியாவின் தவறான கொள்கைகள் காரணமாகவே, திபெத் பகுதி சீனாவின் ஆக்கிரமிப்புக்கு சென்று விட்டது. லடாக் பிரதேசத்தின் அக்சய் சின் பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டது. இது போன்று முக்கியமான பகுதிகளை, காங்கிரஸ் அரசின் தவறான கொள்கைகள் காரணமாக நாம் இழந்து விட்டோம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
கோவா திரைப்பட விழாவில் ரஜினிகாந்துக்கு விருது
கோவா: கோவாவில் நடந்த 45வது சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு சிறந்த திரையுலக பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து வழங்கினர். விழாவில் பேசிய ரஜினிகாந்த், எனக்கு இவ்விருதினை வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி. இவ்விருதினை எனக்களிக்கப்பட்ட கவுரவமாக கருதுகிறேன். எனது வெற்றிக்கு உதவியாக இருந்த இயக்குநர்கள். தயாரிப்பாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இவ்விருதினை அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
முல்லை பெரியாறு: 142 அடியை எட்டியது
தேனி: முல்லை பெரியாறு அணை இன்று மாலை 142 அடியை எட்டியது. இதை, மாவட்டம் முழுவதும் உள்ள மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். முன்னதாக, அணை 142 அடியை எட்டுவதற்காக, அணையில் இருந்து நீர் திறப்பு நிறுத்தப்பட்டிருந்தது.
மணிப்பூர் மாணவரை தாக்கியவர்கள் கைது
பெங்களூரு: மணிப்பூரை சேர்ந்த, இன்ஜினியரிங் மாணவரை தாக்கிய மூவரை, போலீஸார் கைது செய்தனர். மணிப்பூரை சேர்ந்தவர் சாமுவேல், 21. இவர், கோத்தனூரில், இண்டு-ஏசியன் அகாடமியில், இறுதியாண்டு பி.இ., படித்து வருகிறார். கல்லூரி அருகிலேயே, வாடகை வீட்டில் தங்கியிருந்தார். நேற்று இரவு, தனது வீட்டிலிருந்து, நண்பரின் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, குடிபோதையில் எதிரில் வந்த, கோத்தனூர் டெண்ட் ஹவுஸில் பணியாற்றி வரும் ஜாய் சச்சின், 25, ஹளேபாகலூர் ஜெகதீஷ், 20, விஜய், 18, ஆகியோர், சாமுவேலை பார்த்து, கிண்டல் செய்தனர். அநாகரிகமாக நடந்து கொண்டனர். இதனால் கோபமடைந்த சாமுவேல், அவர்களிடம் கேள்வி எழுப்பியதால், வாக்குவாதம் ஏற்பட்டது. கோபமடைந்த மூவரும், சாமுவேலின் முகத்தில் குத்தி, கல்லால் தலையில் தாக்கினர். இதை பார்த்த அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து, மூவரையும் அடித்தனர். அதனால், அவர்கள் தப்பியோடிவிட்டனர். காயமடைந்த சாமுவேல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோத்தனூர் போலீஸார், மூவரையும் கைது செய்தனர்.
45வது கோவா திரைப்பட விழா துவங்கியது
பனாஜி : 45வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் இன்று(நவ 20ம் தேதி) துவங்கியது. விழாவை இந்தி நடிகர் அமிதாப் பச்சன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். விழாவில் நடிகர் ரஜினிகாந்த், மத்திய அமைச்சர்கள் அருண் ஜெட்லி, மனோகர் பரிகர், ரத்தோர் உள்ளிட்டோர்களும் பங்கேற்றனர். இன்று துவங்கும் விழா தொடர்ந்து நவ.,30ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. சுமார் 300 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. தமிழில் இருந்து குற்றம் கடிதல் எனும் ஒருபடம் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றுள்ளது.
இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன் - கோவாவில் ரஜினி பேட்டி!
பனாஜி : அரசியலில் இப்போதைக்கு ஈடுபட மாட்டேன் என கோவாவில் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். கோவாவில் 45வது சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் துவங்குகிறது. சுமார் 10 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுமார் 300 படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இந்நிலையில், இந்தாண்டு இந்திய சினிமா நூற்றாண்டு விருது, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஜினி, தனது மனைவி லதா உடன் கோவா சென்றுள்ளார்.
கோவா சென்ற ரஜினி அங்கு அளித்த பேட்டியின் போது, மத்திய அரசு எனக்கு இந்த விருதை கொடுப்பது பெருமையாகவும், மிகப்பெரிய கவுரவமாகவும் இருக்கிறது என்றார். மேலும் நடிகர் அமிதாப் உடன் இணைந்து நடிப்பீர்களா என்று கேட்டபோது அதை நான் முடிவு செய்யமுடியாது, அவர் தான் முடிவு செய்யணும், அவர் சரி என்று சொன்னால் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றவரிடம், அரசியலில் ஈடுபடுவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்க, இப்போதைக்கு அரசியலில் ஈடுபட மாட்டேன் என்று கூறினார்.
கிரானைட் மோசடி: மேலும் 13 வழக்குகள்
மேலூர்: மதுரை மற்றும் மேலூர் பகுதிகளில், பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடமையாக்க வேண்டும் என்று கோரி, மதுரை கலெக்டர் சுப்ரமணியம் இன்று 13 வழக்குகளை மேலூர் கோர்ட்டில் தொடர்ந்தார். இதுவரை,இது சம்பந்தமாக 77 வழக்குகள் மேலூர் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது.
தி.மு.க., உள்கட்சி தேர்தலில் கொந்தளிப்பு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் தி.மு.க., உட்கட்சி தேர்தல் நடந்தது. கடலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் பதவிக்கு சுப்புராம் மற்றும் செல்வராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். இதில், சுப்புராம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முன்னாள் எம்.எல்.ஏ,. புகழேந்தி வீட்டை 300க்கும் அதிகமான அதிருப்தி தி.மு.க.,வினர் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விருத்தாசலம் நகரத்திற்கான தி.மு.க., உள்கட்சி தேர்தலில், அனைத்து பதவிக்கும் ஒருமனதாக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, அண்ணாதுரைக்கு சென்று மாலை அணிவித்தனர். அப்போது அதிருப்தி கோஷ்டியைச் சேர்ந்த ஒருவர், அண்ணாதுரையின் சிலையை சேதப்படுத்தினார். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
கார் ஷோரூமில் ரூ.1.8 லட்சம் கொள்ளை
நாமக்கல்: நாமக்கல்லில் உள்ள தனியார் கார்ஷோ ரூமில், நள்ளிரவில், ஷட்டர் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த 1.8 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர். நாமக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம்.,ல் கொள்ளை முயற்சி
திருத்தணி: வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள ஒரு ஏ.டி.எம்.ல் நள்ளிரவில் நுழைந்த இருவர்,. பைப் வெடிகுண்டுகளை வீசி ஏ.டி.எம்.,ல் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக சிலர் வந்ததால், முயற்சியை கைவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். அரக்கோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஏ.டி.எம்.ல், 32.5 லட்சம் ரூபாய் இருந்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரவை திரும்ப பெற்றது கோர்ட்
புதுடில்லி: ஸ்பெக்ட்ரம் வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களை சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சந்தித்தார் என .வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு ஆதாரமாக, ரஞ்சித் சின்ஹா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வருகை பதிவேடு குறித்த ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த ஆவணங்களை கொடுத்தது யார் என்ற தகவலை கோர்ட்டில் அளிக்க வேண்டும் என, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், ரஞ்சித் சின்ஹா மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் உள்ளதாக கோர்ட் இன்று கூறி உள்ளது. இதையடுத்து, ஆவணங்களை கொடுத்தவரின் பெயரை வௌியிட வேண்டும் என்ற முந்தைய உத்தரவை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்று வாபஸ் பெற்றனர்.
2 ஜி வழக்கு: சுப்ரீம் கோர்ட் அதிரடி
புதுடில்லி: ஸ்பெக்டரம் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலரை சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சித் சின்ஹா சந்தித்ததாக பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடந்தது. அப்போது, ரஞ்சித் சின்ஹா மீது அடுக்கடுக்காக புகார்கள் கூறப்பட்டன. இதையடுத்து, ஸ்பெக்டரம் வழக்கு விசாரணையில் இருந்து ரஞ்சித் சின்ஹா விலகி இருக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு பதில், வேறு ஒரு அதிகாரி அவரிடத்தில் இருந்து இந்த விசாரணையை நடத்த வேண்டும் என்று கோர்ட் கூறி உள்ளது.
மோனோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல்
புதுடில்லி: சென்னையில், 3,267 கோடி ரூபாய் செலவில் மோனோ ரயில் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பூந்தமல்லி-கிண்டி, போரூர்-வடபழனி இடையே 20.68 கி.மீ., தொலைவிற்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு மத்திய நகர்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டிருந்தது. இந்நிலையில், மோனோ ரயில் திட்டத்திற்கு அமைச்சகம் கொள்கை ரீதியான ஒப்புதல் அளித்துள்ளது.
சட்டசபை கூட்டம் குறித்து கருணாநிதி
சென்னை: தமிழக அரசு முறைப்படி சட்டசபை கூட்டத்தை கூட்டாமல் உள்ளது கண்டனத்திற்குரியது என, தி.மு.க,தலைவர் கருணாநிதி கூறி உள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டிய சூழ்நிலையில், தமிழக அரசு சட்டசபை கூட்டத்தை கூட்டாமல் உள்ளது. இது கண்டனத்திற்குரியது,' என்றார்.
ராம்பாலுக்கு நீதிமன்ற காவல்
சண்டிகார்: அரியானா போலீசாரால் கைது செய்யப்பட்ட சாமியார் ராம்பால், பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நவம்பர் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சோனியா பேச்சுக்கு அமித்ஷா பதில்
ராம்பன்: பா.ஜ.,வின் தேசிய தலைவர் அமித்ஷா பேசுகையில், 'கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியாவில் பெரும்பான்மையான ஒரு கட்சியின் ஆட்சி ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்த ஆண்டு பெரிய மாற்றத்தை காணும் என்பது உறுதி. மிஷன் 44 என்பது வெறும் கோஷமல்ல. அது நிஜமாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை. காஷ்மீர் மக்கள் தடையில்லாத மின்சாரம் பெறவில்லை. ஏன்? அதற்கு இரு குடும்பங்கள் தான் காரணம். இந்த இரு குடும்பங்களின் ஊழல்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணை முடியும் போது, அவை தான் நாட்டின் மிகப் பெரிய ஊழலாக இருக்கும். கடந்த 5 மாதங்களில் மோடி அரசு என்ன சாதித்தது என்று சோனியா கேட்கிறார். முதலில், கடந்த 60 ஆண்டுகளில் அவர்கள் என்ன சாதித்தனர் என்பதை சோனியா கூறட்டும். நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார், என்றார்.
ராம்பால் ஆஸ்ரமத்தில் ஆயுதம்: விசாரணை
சண்டிகார்: சர்ச்சை சாமியார் ராம்பாலின் ஹிசார் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த ஆதரவாளர்கள், போலீசார் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர். இது குறித்து விசாரணை நடத்திய ஐகோர்ட், ஆஸ்ரமத்திற்குள் ஆயுதங்கள் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்த போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், மற்ற சாமியார்களின் மடங்களிலும், ஆஸ்ரமங்களிலும் ஆயுதங்கள் குறித்த சோதனையை நடத்த போலீசாருக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோர்ட்டில் சாமியார் ராம்பால் ஆஜர்
ஹிசார்: அரியானா மாநில ஆசிரம சாமியார் ராம்பால் பலத்த பாதுகாப்புடன் பஞ்சாப்- அரியானா ஐகோர்ட்டில் சாமியார் ராம்பால் ஆஜர் படுத்தப்பட்டார்.
ஊத்தங்கரை தி.மு.க., உள்கட்சி தேர்தலில் மோதல்
கிருஷ்ணகிரி : ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய தி.மு.க., உள்கட்சி தேர்தல் காரப்பட்டில் நடந்தது. தற்போதைய செயலர் எக்கூர் செல்வம், மற்றும் சாமிநாதன், போட்டியிட்டனர். தேர்தல் நடந்த போது இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சந்திரன் , ரவி. முனியப்பன் ஆகியோரது மண்டை உடைந்தது. 2 கார் மற்றும் டெம்போ வேன் அடித்து நொறுக்கப்பட்டது. டி.எஸ்.பி., பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு சென்று மேலும் வன்முறை ஏற்படாமல் தடுத்தார். இந்த மோதல் சம்பவத்தினால் இப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
டுவிட்டர், பேஸ்புக்கில் மோடி சாதனை
புதுடில்லி: பிரதமர் நரேந்திரமோடியின் டுவிட்டர் பக்கத்திற்கு 80 லட்சம் பேரும், பேஸ்புக்கிற்கு 2.5கோடி பேரும் லைக் தெரிவித்துள்ளனர். இந்த வகையில் முதலிடத்தில் பராக் ஒபாமாவும், இரண்டாம் இடத்தில் போக் பிரான்சிசும் அதிகமான லைக் பெற்றவர்கள் ஆவர். பிரதமர் மோடி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார்.
வைகை அணை நாளை திறப்பு
சென்னை: சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக வைகை அணை நாளை திறக்கப்பட உள்ளது. முதல்வர் பன்னீர்செல்வம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். வைகை அணை திறப்பதன் மூலம், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள 9,620 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப்: மாணவர்கள் மீது தடியடி
பாட்டியாலா: பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலை மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் தள்ளு, முள்ளு ஏற்பட்டதால், மாணவர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.
சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு கோர்ட் குட்டு
புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில், ஸ்பெக்ட்ரம் வழக்கு நடந்து வருகிறது. இன்று, சி.பி.ஐ., இயக்குனர் ரஞ்சி்த்சின்ஹாவின் தலையீடு குறித்து விசாரணை நடந்தது. அப்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் சிலர் கோர்ட் வளாகத்தில் தேவையி்ல்லாமல் அமர்ந்திருந்தனர். அவர்களை அழைத்த நீதிபதிகள், கோர்ட் வளாகத்தில் இருந்து வௌியேறும்படியும், அலுவலகத்திற்கு சென்று அவரவர்களுக்கு உரிய பணியை செய்யும் படியும் உத்தரவிட்டது.
ராம்பால் ஆஸ்ரமத்தில் கமாண்டோக்கள்
சண்டிகார்:ஹிசாரில் உள்ள சர்ச்சை சாமியார் ராம்பாலின் சத்யலோக் ஆஸ்ரமத்தில் பல ஆயிரம் பேர் தங்கியிருந்தனர். போலீசார் ராம்பாலை கைது செய்ய சென்றபோது, அவர்களை தாக்கினர். இதனால், ராம்பால் ஆஸ்ரம வாயில் போர்க்களம் போல காட்சி அளித்தது. இந்த மோதலின்போது, துப்பாக்கிகளை ராம்பால் ஆதரவாளர்கள் பயன்படுத்தினார். இந்நிலையில், ராம்பால் கைது செய்யப்பட்டுள்ளார். சாமியாரின் பாதுகாப்புக்காக ஆஸ்ரமத்தில் தனிப்படை ஒன்று செயல்பட்டு வந்துள்ளதாகவும், அதில், 2 ஆயிரத்திற்கும் அதிகமான பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாதுகாப்பு படையில், முன்னாள் ராணுவ, போலீஸ் அதிகாரிகள் பலர் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சாரதா சிட் மோசடி: சி.பி.ஐ., ரெய்டு
கோல்கட்டா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், மேற்கு வங்க மாநிலம், பிஷ்னுபூர் என்ற இடத்தில் உள்ள சாரதா கார்டன்ஸ் அலுவலகத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று சோதனையிட்டனர்.
மருத்துவமனை மீது தாக்குதல்: 7 பேர் பலி
பீஜிங்: சீனாவின், வடகிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்குள் புகுந்த ஒரு வாலிபர், அங்கிருந்தவர்களை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதில், 6 நர்சுகளும், ஒரு பாதுகாவலரும் இறந்தனர். இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. கடந்த சில மாதங்களாவே, மருத்துவர்களும், ஊழியர்களும் தாக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறப்படுகிறது. இதற்கு, சரியான சிகிச்சை இல்லாமல் உறவினர்கள் கொல்லப்பட்டதாக சிலர் கருதுவதே காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்க ஊழல்: சிறப்பு கோர்ட் உத்தரவு
புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள ராஜ்யசபா எம்.பி., விஜய் தார்தா உள்ளிட்ட சிலரை வழக்கில் இருந்து விடுவிக்கும்படி சி.பி.ஐ., தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவர்கள் மீதான விசாரணையை தொடர்ந்து நடத்தும்படி, சுரங்க ஊழலை விசாரித்து வரும் சிறப்பு கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
யானைகள் முகாம் குறித்து ஆய்வு
மேட்டுப்பாளையம்: ஒவ்வொரு ஆண்டும், யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்து அறநிலையத் துறை ஆணையர் தனபால், மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, யானைகள் புத்துணர்வு முகாம் நடத்தும் இடத்தை பார்வையிட்டார். இணை மற்றும் உதவி ஆணையர்கள் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தனபால், 'அரசின் ஆணை கிடைத்த பின்னர் இந்த ஆண்டிற்கான யானைகள் புத்துணர்வு முகாம் குறித்து அறிவிப்பு வௌியிடப்படும்,' என்றார்.
முல்லை பெரியாறு: நீர் திறப்பு நிறுத்தம்
தேனி: முல்லை பெரியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 147 கனஅடி நீர் திறக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக அதிகரிப்பதற்காக, அணையில் இருந்து நீர் வௌியேற்றப்படுவது முற்றிலுமாக இன்று நிறுத்தப்பட்டுள்ளது.
ராம்பால் ஆதரவாளர்கள் தொடர்ந்து வௌியேற்றம்
சண்டிகார்: சர்ச்சை சாமியார் ராம்பாலின் ஹிசார் சத்யலோக் ஆஸ்ரமத்தில், அவரது ஆதரவாளர்கள் பல ஆயிரம் பேர் தங்கியிருந்தனர். இந்நிலையில், போலீசார் சாமியாரை கைது செய்ய சென்றபோது, அவர்களை ஆதரவாளர்கள் தாக்கினர். துப்பாக்கியால் சுட்டனர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 6 பேர் இறந்தனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ராம்பாலை அரியானா போலீசார் கைது செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, ஆஸ்ரமத்தில் தங்கியிருந்த அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து தொடர்ந்து வௌியேறி வருகின்றனர்.
நேபாளத்தில் மோடி-நவாஸ் சந்திப்பு?
இஸ்லாமாபாத்: இந்திய, பாகிஸ்தான் இடையே நடக்க இருந்த பேச்சுவார்த்தை, பாகிஸ்தானுக்கான இந்திய தூதர், பிரிவினைவாதிகளை சந்தித்து பேசியதால் ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து எல்லை பகுதியில் பாக்.,ராணுவம் அத்துமீறி பலமுறை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்தியா பதிலடி கொடுத்த பின்னரே அது அடங்கியது. இந்த சம்பவங்களை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்தை சிக்கலாகி உள்ளது. இந்நிலையில், அடுத்த வாரம் காத்மாண்டுவில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திரமோடியும், பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் சந்தித்து பேச வாய்ப்புள்ளதாக, பாகிஸ்தானின் முன்னாள் வௌியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் முகம்மது கசூரி கூறி உள்ளார்.
மோடிக்கு எஸ்.எம்.எஸ்.,ல் மிரட்டல்
ராஞ்சி : பிரதமர் மோடியை கொலை செய்யப் போவதாக ஜார்கண்ட் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம எஸ்.எம்.எஸ்., மிரட்டல் ஒன்று அனுப்பபட்டுள்ளது. விசாரணையில், அந்த மொபைல் நம்பருக்கு உரியவர் ராஞ்சியைச் சேர்ந்த அம்ரிஷ் குமார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜார்கண்ட் தேர்தல் பிரசாரத்திற்காக நாளை ஜார்கண்ட்டில் பிரதமர் மோடி பிரசாரம் செய்ய உள்ள நிலையில் இந்த மிரட்டல் எஸ்.எம்.எஸ்., பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டில்லியில் மணிப்பூர் மாணவன் கொலை
புதுடில்லி : தெற்கு டில்லியின் கோட்லா முபாரக்பூர் பகுதியில் வீடு எடுத்து தங்கி, பிஹெச்.டி., படித்து வந்த மணிப்பூரைச் சேர்ந்த மாணவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் மிதமான நிலநடுக்கம்
டோக்கியோ : வடக்கு ஜப்பானில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவாகி உள்ளது. இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு ஏதும் ஏற்படாது என சுனாமி எச்சரிக்கை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரூ.1 கோடி கேட்டு சிறுவன் கொலை
புதுடில்லி : கிழக்கு டில்லியில் நகைக்கடை வைத்திருப்பவரின் 13 வயது மகன் உட்கரேஷ் பள்ளிக்கு நடந்து சென்ற போது மர்ம கும்பல் அவனை கடத்திச் சென்றுள்ளது. வெகு நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் உட்கரேசின் தாய், தனது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார். அவர்கள் அக்கம் பக்கத்தில் தேடியும் மகன் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்துள்ளனர். இரவு 8 மணியளவில் உட்கரேசின் தாயாருக்கு ஒரு மர்ம அழைப்பு வந்துள்ளது. அதில் உட்கரேசை அவர்கள் கடத்தி வைத்திருப்பதாகவும், ரூ.1 கோடி பணம் கொடுத்தால் மகனை விட்டு விடுவதாகவும் மிரட்டி உள்ளனர். இதற்கிடையில், பள்ளி அருகே இருந்த சிசிடிவி கேமிராவில் உட்கரேஷ் கடந்தப்பட்ட பதிவுகளை கண்ட போலீசார் கடத்தல்காரர்களை தேட ஆரம்பித்தனர். இதனை அறிந்த மர்ம கும்பல், உட்கரேசின் பெற்றோருக்க மீண்டும் போன் செய்து போலீசிற்கு போக வேண்டாம் எனவும், நாளை காலை 8 மணிக்குள் பணத்தை தர வேண்டும் எனவும் தெரிவித்தனர். உட்கரேசின் பெற்றோரும் பணத்தை தயார் செய்து விட்டு, தங்களுக்கு போன் வந்த நம்பருக்கு அழைத்துள்ளனர். ஆனால் அது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் போலீசாருடன் இணைந்து உட்கரேசை தேட ஆரம்பித்தனர். இந்நிலையில் இன்று காலை வீட்டருகே உட்ரேசின் பிணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உட்கரேஸ் அவர்களை அடையாளம் தெரிந்து கொண்டதால், தாங்கள் பிடிபட்டு விடுவோம் என்ற பயம் காரணமாக அவர்கள் உட்கரேசை கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
எபோலாவிற்கு 5420 பேர் பலி
லண்டன் : எபோலா வைரஸ் தாக்குதல் காரணமாக 8 நாடுகளில் 5420 பேர் பலியாகி இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 15,145 பேர் எபோலா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சரிதா தேவிக்கு சச்சின் ஆதரவு
மும்பை : தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள குத்துச்சண்டை வீராங்கனை சரிதா தேவிக்கு அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலுக்கு கடிதம் எழுதி உள்ளார். இது போன்ற தடைகள் குத்துச்சண்டை விளையாட்டில் அவரது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி விடும் எனவும் சச்சின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகை அருகே மர்ம நபர் கைது
வாஷிங்டன் : வெள்ளை மாளிகை அருகே நிறுத்தப்பட்டிருந்த மர்ம காரில் இருந்த நபரை அமெரிக்க ரகசிய உளவுத்துறை கைது செய்துள்ளது. அவரிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. 41 வயதாகும் அந்த நபர் சட்ட விரோதமாக அமெரிக்காவில் தங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இலங்கைக்கு சந்தன கட்டை கடத்தல் : மூன்று பேர் கைது
ராமநாதபுரம்: மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு சந்தன கட்டை கடத்த முயன்றதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பேர் மற்றும் ராமநாதபுரம் உச்சிபுளியை சேர்ந்த ஒருவர் ஆகிய மூன்று பேர் மண்டபம் பகுதியில் இருந்து 10 கிலோ எடை கொண்ட ஆறு சந்தன கட்டைகளை இலங்கைக்கு கடத்த முயற்சித்துள்ளனர். இது குறித்து தகவல்அறிந்த போலீசார் சந்தன கட்டைகளை பறிமுதல் செய்து மூன்று பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இண்டர் நெட் பயன்பாடு இந்தியா இரண்டாமிடம்
புதுடில்லி: உலகளவில் இண்டெர்நெட் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து ஆய்வில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தற்போது இண்டெர்நெட்டை பயன்படுத்துவோரின் எணணிக்கை 213 மில்லியனாக உள்ளது. இது டிசம்பாத இறுதிக்குள் 303 மில்லியனாக அதகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகறிது. உலகளவில்இண்டர்நெட்டை பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் சீன மக்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதற்கு அடுத்த படியாக அமெரிக்கர்களும் மூன்றாவதாக இந்தியாவும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரி்க்காவை பின்னுக்குதள்ளி இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளது.
முதல்வரின் அதிரடி அறிவிப்பு: பீகாரில் பரபரப்பு
பாட்னா: பீகார் முதல்வரின் அதிரடி அறிவிப்பால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டு்ள்ளது. மாநில தலைநகர் பாட்னாவில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் மாநில முதல்வர் ஜிதின்ராம்மஞ்ஜி கலந்து கொண்டார். விழாவில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: பீகார் மாநிலத்தின் தேவைகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. அதே நேரத்தில் மாநிலத்தில் இருந்து 7 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். இவர்கள் அனைவரும் மாநிலத்தின் தேவைகளை பூர்த்தி செய்யாவிடில் மாநிலத்திற்குள் அனுமதிக்க மாட்டடோம் என கூறினார். முதல்வரின் இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகளிடம் மட்டுமின்றி மாநிலத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.