போலந்து நாட்டின் ஓஸ்ட்ரோ லுபெல்ஸ்கி என்ற இடத்தில் வசித்து வந்தவர் ஜனினா கோல்கிவ்ஸ் (வயது 91). முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக சாப்பாடு எதுவும் சாப்பிடாமல் இருந்த அவர் கடந்த 6-ம் திகதி உடல் அசைவற்று கிடந்தார். இதனால் அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர். பின்னர் ஒரு மருத்துவரை அழைத்து வந்து பரிசோதித்தனர். அப்போது ஜனினா இறந்து விட்டார் என்று கூறிய டாக்டர் அதற்கான சான்றிதழையும் வழங்கினார். இதனால், உறவினர்கள் இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இதனால் அவரது உடலை, உடல் குளிர்சாதன பெட்டிக்குள் வைத்திருந்தனர்.
மயானத்தில் இறுதிச் சடங்கிற்கான அனைத்து வேலைகளும் நடந்து கொண்டிருந்தன. அப்போது, அவர் உடல் அசைவது போன்று தெரிந்தது. உடனே, குளிர்சாதன பெட்டியை திறந்து பார்க்கும்போது அவர் உயிருடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இறந்ததாக நினைத்த அவர் சுமார் 11 மணி நேரம் கழித்து உயிர்பிழைத்ததால் அனைவரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். பின்னர் அவரை வீட்டுக்கு கொண்டு சென்றனர்.
உயிருடன் இருந்தவருக்கு டாக்டர் இறப்பு சான்றிதழ் கொடுத்தது பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.