கடிதம் எழுதி விட்டால் போதுமா? பன்னீருக்கு கருணாநிதி கேள்வி
சென்னை: தி.மு.க., தலைவர் கருணாநிதியின், அறிக்கை: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், தமிழக அமைச்சரவை கூட்டத்தை நடத்தி, உச்ச நீதிமன்றத்தில், 'கேவியட்' மனு தாக்கல் செய்வது பற்றி, முதல்வர் பன்னீர்செல்வம் முடிவு செய்யவில்லை.ஆனால், கேரள சட்டசபை கூட்டத்தொடரில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கையை தடுக்க, சட்ட மசோதா கொண்டு வர, அம்மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.
இதுபோல், காவிரியின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் பிரச்னையிலும், தமிழக அரசு கவனம் செலுத்தி, அனைத்துக் கட்சி கூட்டம் மற்றும் சட்டசபை கூட்டத்தை கூட்ட தயாராக இல்லை. எந்த பிரச்னையாக இருந்தாலும், பிரதமருக்கு, 'அம்மா' வழியில் கடிதம் ஒன்றை எழுதிவிட்டால், பிரச்னை முடிந்ததாக, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருதுகிறார். அமைச்சரவையையும், சட்டசபையையும் கூட்டினால், பதவிக்கு ஆபத்து வந்து விடுமோ என, பன்னீர்செல்வம் எண்ணுகிறார் போலும். அந்த பயத்தை போக்கிக் கொண்டு, தமிழக நலன்களை பாதுகாக்கும் முயற்சியில், அவர் ஈடுபடட்டும்.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.
ஈராக்கிலிருந்து 7000 இந்தியர்கள் மீட்பு
புதுடில்லி: ஈராக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்த 7000 பேர் இந்தியா கொண்டு வரப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்தியா வர விரும்பியதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
ரயில் மறியல் போராட்டத்தில் வைகோ பங்கேற்பு
சென்னை: கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தஞ்சாவூரில் வரும் 22ம் தேதி நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கூறினார். முன்னதாக, டெல்டா விவசாய சங்க பிரதிநிதிகள் வைகோவை சந்தித்து பேசினர்.
பாக்.,கில் விமான தாக்குதல்: 34 பயங்கரவாதிகள் பலி
ராவல்பிண்டி: பாகிஸ்தானின் வடக்கு வஜீரிஸ்தான் பகுதியில் உள்ள தட்டா கேல் நகரில், விமானப்படையினர் நடத்திய தாக்குதலில், 34 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பாக்., ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர். ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், நடத்தப்பட்ட தாக்குதலில் பயங்கரவாதிகளின் கமாண்டர் கொல்லப்பட்டார்.
ஊட்டி மலை ரயில் நாளை முதல் இயக்கம்
மேட்டுப்பாளையம்: ஊட்டி மலை ரயில் நாளை முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று கல்லூறு- அடர்னி மற்றும் அடர்னி- குன்னூர் இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நிலச்சரிவு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து, நாளை முதல் ரயில் போக்குவரத்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க தொண்டு நிறுவன ஊழியர் ஐ.எஸ்., பயங்கரவாதிகளால் படுகொலை
பெய்ரூட்: அமெரிக்காவை சேர்ந்த தொண்டு நிறுவன ஊழியர், பீட்டர் காசிக் என்பவரை கொலை செய்து விட்டதாக ஐ.எஸ்., பயங்கரவாதிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவை எச்சரிக்கை விடுக்கும் விதமாக இவரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர். பீட்டரை கொலை செய்த வீடியோவையும் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் 18 சிரிய ராணுவத்தினரையும் கொலை செய்து, அதனை படமாக்கி பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.
உ.பி.,யில் படகு கவிழ்ந்து 6 பேர் பலி; 34 பேர் மீட்பு
லக்னோ: உ.பி., யில் உள்ள காக்ரா நதியில், 40 பேருடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 6 பேர்பலியானார்கள். 34 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
வன்முறையை கைவிட நக்சல்களுக்கு ராஜ்நாத் கோரிக்கை
பவ்நத்பூர்: நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைய வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ராஜ்நாத் சிங், நக்சலைட்கள் வன்முறையை கைவிட வேண்டும், நக்சலைட் பயங்கரவாதம், சீனாவில் பிறந்தது. ஆனால், அது அங்கு தற்போது இல்லாததால், சீனா அமெரிக்காவுடன் போட்டி போடுகிறது. நக்சலைட்கள் வன்முறையை கைவிட்டு, தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாட்டை பலப்படுத்த வேண்டும் என கூறினார்.
'டெட்டனேட்டர்' பதுக்கியவர் கைது
விருதுநகர்:விருதுநகர் எட்டுநாயக்கன்பட்டி பெருமாள்சாமி மகன் ராமர். இவருக்கு சொந்தமான கல் குவாரி சூலக்கரை அருகே உள்ளது. இங்குள்ள பாறைகளை வெடிவைத்து உடைக்க டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை குவாரி அலுவலகத்தில் அவர் பதுக்கி வைத்துள்ளதாக சூலக்கரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இன்று அதிகாலை 4 மணிக்கு இன்ஸ்பெக்டர் அன்னராஜ், பயிற்சி டி.எஸ்.பி., ராஜேஸ்வரி தலைமையிலான போலீசார் அங்கு சோதனை செய்தனர். அங்கிருந்த 34 டெட்டனேட்டர் மற்றும் மூன்றரை கிலோ வெடி பொருட்களை பறிமுதல் செய்து, ராமரை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சண்டிகாரை கொடுங்கள்: பாதல்
டர்ன்டாரன்: மாநில தலைநகர் குறித்து பேசிய பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல், 'கடந்த 1966ம் ஆண்டு, பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் பொதுவான தலைநகராக சண்டிகார் அறிவிக்கப்பட்டது. அடுத்து மத்தியில் வந்த காங்கிரஸ் அரசு, இந்த விஷயத்தை பஞ்சாப்பிற்கு தொடர்ந்து துரோகம் இழைத்து வந்துள்ளது. தற்போது சண்டிகாரை பஞ்சாப்பிற்கு வழங்கும் நேரம் வந்துவிட்டது. மோடி அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்,' என்றார்.
சென்னையில் மேற்கூரை சரிந்து விபத்து: இருவர் பலி
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள மலையபெருமாள் கோவில் தெருவில் உள்ள பலசரக்கு கிடங்கு ஒன்றில் மேற்கூரை சரிந்தது. இ்வ் விபத்தி்ல் தொழிலாளர்கள் சுபாஷ், குமார் என இருவர் பலியாயினர் சம்பவ இடத்தில் 5 தீயணைப்பு வாகனங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
பத்திரிகை சுதந்திரம் பாதுகாக்கப்படும்: மத்திய அரசு
புதுடில்லி: பிரஸ் கவுன்சில் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ரத்தோர், பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், மக்களின் உரிமைகளை பெற்றுத்தர பத்திரிகைத்துறை பெரும் பணியாற்றியுள்ளது என கூறினார்.
காவிரியில் தடுப்பணை: போராட்டம்
தஞ்சாவூர்: கர்நாடக அரசு, காவிரியில் தடுப்பணை கட்டுவதை கண்டித்து, டெல்டா மாவட்டங்களில், 28ம் தேதி ரயில், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அனைத்து விவசாய சங்க சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர் துரை மாணிக்கம் கூறுகையில், 'காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதூது என்ற இடத்தில், இரண்டு தடுப்பணைகள் கட்ட, கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிது. இதை கண்டித்து, அனைத்து விவசாய சங்கம் சார்பில், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில், வரும், 28ம் தேதி, ரயில், சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
தண்ணீரில் யோகா: சிறுவன் சாதனை
திருச்சி: திருச்சி, தில்லை நகரில் உள்ள ருத்ரசாந்தி யோகா நிலையமும், திருச்சி மாவட்ட சுற்றுலா துறையும் இணைந்து, 16வது யோகா மாநாட்டை, திருச்சியில் நடத்தி வருகிறது. கடந்த, 14ம் தேதி, 1,000 பள்ளி மாணவ, மாணவியர் யோகசனம் செய்து மாநாட்டை துவக்கி வைத்தனர். தொடர்ந்து, மரக்கன்று நடுதல், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சிகள் நடந்தது. இன்று காலை, திருச்சி காமக்கோடி வித்யாலயா பள்ளி மாணவன் சுகித் சீனிவாஷ், 7, என்பவர், திருச்சி சங்கம் ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில், கழுத்து அளவு தண்ணீரில் அமர்ந்து, 1.14 மணி நேரம் வஜ்ராசனம் செய்தார். இதற்கு முன், 2007ம் ஆண்டில் கர்நாடகா மாநிலம், பெல்காம் மாவட்டத்தில் மொபட் ஜோனட் என்ற, 10 வயது சிறுவன், ஒரு மணி நேரம் தண்ணீ ரில் அமர்ந்து வஜ்ராசனம் செய்து சாதனை நிகழ்த்தினார். இதை, திருச்சி, மாணவன் சுகித் சீனிவாஷ் முறியடித்துள்ளார்.
அரசியலுக்கு வர பயமில்லை, தயக்கம் தான் - ரஜினி
சென்னை : ரஜினி நடித்துள்ள லிங்கா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை, சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, படம் எடுக்கிறது ஈஸிங்க. அரசியலுக்கு போறது ஈஸிங்க. ஆனால் வெற்றி கொடுக்கணுமே... நான் லேட் பண்ணுவேன். ஆனா ஒரு விஷயத்துல இறங்குனும்னு நினைச்சா உடனே இறங்கிடுவேன்". அரசியல் ஆழம், டேஞ்சர் தெரியும். நான் அரசியலுக்கு வர பயப்படவில்லை தயங்குகிறேன். நாளைக்கு என்ன நடக்கும்னு எனக்கே தெரியல. அப்படி ஏதாவது நடந்தால்... கண்டிப்பா மக்களுக்காக நல்லது பண்ணுவேன் என்றார்.
காதி சுங்குடி சேலை தயாரிக்க முடிவு
திண்டுக்கல்: காந்திகிராம அறக்கட்டளையின் கூட்டம் இன்று நடந்தது. இதில், புகழ்பெற்ற மதுரை சுங்குடி சேலையை, காதியில் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, இயற்கை சாயத்தை அதற்க பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சனிபெயர்ச்சிக்கு திருநள்ளார் தயார்
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், திருநள்ளாரில், வரும் டிசம்பர் மாதம் 16ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடக்கிறது. அன்றைய தினம் லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என்பதால், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதில் கோவில் நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது. நளன் குளம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
சிட்னி புறப்பட்டது மோடி எக்ஸ்பிரஸ்
மெல்போர்ன்: ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, சிட்னியில் நடைபெற உள்ள பொது நிகழ்ச்சி ஒன்றில் பேசுகிறார். இதில் கலந்து கொள்பவர்கள் செல்வதற்காக மோடி எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் ஒரு சிறப்பு ரயில், மெல்போர்னில் இருந்து சிட்னிக்கு இயக்கப்பட்டது. மொத்தம் 220 பயணிகள் பயணம் செய்யும் இந்த சிறப்பு ரயிலை, ஆஸி., அமைச்சர் மாத்யூ கய் கொடி அசைத்து வழியனுப்பினார். ஒரு வௌிநாட்டு பிரதமரின் நிகழ்ச்சிக்காக, சிறப்பு ரயிலை இயக்க ஆஸ்திரேலிய அரசு அனுமதி அளித்துள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
தளபதிகளை சந்திக்கிறார் பரிகர்
புதுடில்லி: பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள மனோகர் பரிகர், நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நாளை முப்படை தளபதிகளையும் சந்திக்க உள்ளார் என தகவல்கள் வௌியாகி உள்ளன.
ஆத்தூர் அருகே சிறுமி கற்பழிப்பு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த பாஸ்கர், 50, ராமசாமி, 65, அன்புதுரை, 45 ஆகிய மூன்று முதியவர்களும் கற்பழித்துள்ளனர்.சிறுமியின் உடலில் இருந்த காயத்தின் மூலம் இது குறித்த தகவல் அறிந்த பெற்றோர், ஆத்தூர் மகளிர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர். போலீசார், மூன்று முதியவர்களையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈச்சம்பாடி அணை திறப்பு
தருமபுரி: பாசனத்திற்காக தருமபுரி அருகில் உள்ள ஈச்சம்பாடி அணையில் நீர் திறக்கப்பட்டுள்ளது. கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 70 கனஅடி வீதம் நீர் வௌியேற்றப்படுகிறது.
ராமர் கோவில்: மத்திய அமைச்சர் கருத்து
புதுடில்லி: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து பேசிய மத்திய அமைச்சர் சத்வி நிரஞ்சன் ஜோதி, 'அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு, சம்மதத்துடன் ராமல் கோவில் நிச்சயமாக கட்டப்படும்,' என்றார்.
பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி
கன்னியாகுமரி: கன்னியாகுமரி வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வழியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'வாசன் புதிய கட்சி துவக்கியதற்கு பா.ஜ., காரணமல்ல. காங்கிரஸ் தான் காரணம். முல்லை பெரியார் அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டி உள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றார்.
சீன போர் விமானம் விபத்து: 7 பேர் காயம்
பீஜிங்: தெற்கு சீனாவில், பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஜெட் போர் விமானம் ஒன்று, குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில், 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
தேசிய மாநாட்டு கட்சிக்கு சரிவு
ஜம்மு: தேசிய மாநாட்டு கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மெகபூப் பெக், அக்கட்சியில் இருந்து விலகி, எதிர்கட்சியான மக்கள் ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். இதனால், காஷ்மீர் மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள தேசிய மாநாட்டு கட்சிக்கு செல்வாக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் தேர்தல் முக்கியமானது-பா.ஜ.,
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரெஜ்ஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், 'ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் நடக்க உள்ள தேர்தல்கள், எங்களுக்கு மிக முக்கியமானவை,' என்று தெரிவித்துள்ளார்.
ஆங்கிலத்தில் பேசி கலக்கிய மோடி
பிரிஸ்பன்: ஆஸ்திரேலியா சென்றுள்ள மோடி, அங்கு நடந்த பல நிகழ்ச்சிகளில் இந்தியில் பேசினார். அவரது பேச்சு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. இந்நிலையில், விடை பெறும் நிகழ்ச்சியாக, பிரிஸ்பன் டவுன் ஹாலில் நடந்த விழாவில் பேசிய மோடி, மொழி பெயர்ப்பாளர் இல்லாமல் ஆங்கிலத்தில் பேசினார். அவரது ஆங்கில பேச்சை அங்கு கூடியிருந்தவர்கள் ஆரவாரத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.
கேரளாவுக்கு முதல்வர் கடிதம்
சென்னை: முல்லை பெரியார் அணை விவகாரம் குறித்து கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டிக்கு, முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். அதில், தமிழகத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள், முல்லை பெரியாறு அணையின் நீரை நம்பி உள்ளனர். . பருவமழை மற்றும் தேவையைப் பொருத்தே அணையிலிருந்து நீர் திறக்கப்படுகிறது. அதனை முறைப்படுத்தும் விவகாரத்தில் கேரள அரசு தலையிடக் கூடாது, என கூறி உள்ளார்.
ஆத்தூரில் கொத்தடிமைகள் மீட்பு
ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள ஒரு நூல் மில்லில் கொத்தடிமைகள் உள்ளனர் என்று கிடைத்த தகவலின் அடிப்படையில் ஆர்.டி.ஓ., ஜெயச்சந்திரன் தலைமையில் வருவாய்துறையினர் ஆய்வு நடத்தினர். இதில், கொத்தடிமை முறையில், வெளிமாநிலங்களைச் சேர்ந்த 50 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தது தெரிய வந்தது. அவர்களை மீட்ட வருவாய் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய-ஆஸி., உறவு பலப்பட்டுள்ளது-மோடி
பிரிஸ்பன்: பிரிஸ்பன், டவுன் ஹாலில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, 'எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்தமைக்காக, பிரிஸ்பன் நகர் மக்களுக்கு நான் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு நடந்த காந்தி சிலை திறப்பு நிகழ்ச்சியால், இந்திய, ஆஸ்திரேலியா இடையோன உறவு பலப்பட்டுள்ளது. இது, சர்வதேச நாடுகளுடன் நாம் உறவு கொள்வதற்கு உதாரணமாக உள்ளது. குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தும் ஆய்வுகள் விவசாயிகளுக்கு பயன் உள்ளதாக இருக்கும்,' என்றார்.
போலீசாருக்கு அரிவாள் வெட்டு
கோவை: கோவை நகரைச் சேர்ந்த போலீஸ் எஸ்.எஸ்.ஐ.,க்களான சுரேந்தர் மற்றும் ஜோகி ஆகிய இருவரும், கோவை-பாலக்காடு சாலையில், கன்னிமார்கோவில் அருகே வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர். பைக்கில் வந்த ஒருவரை சோதனை செய்தபோது, அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் போலீசார் இருவரையும் வெடி்னார். இதை தடுக்க வந்த பொதுமக்களில் ஒருவரான காந்திராஜ் என்பவருக்கும் வெட்டு விழுந்தது. இதில் காயம் அடைந்த மூவரும் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசாரை தாக்கிய நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது.
சரத்குமார் கட்சி பேனர் எரிப்பு
நெல்லை: திருநெல்வேலியை அடுத்த கரந்தனேரி என்ற இடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் இரட்டை கொலை நடந்தது. இந்த கிராமம், சரத்குமாரை தலைவராக கொண்ட சமத்துவ மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ., எர்ணாவூர் நாராயணன் வெற்றி பெற்ற தொகுதியைச் சேர்ந்தது. இந்நிலையில், இரட்டை கொலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எர்ணாவூர் நாராயணன் ஆறுதல் கூற வரவில்லை என்று கூறி, அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு வைக்கப்பட்டிருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பேனரை தீ வைத்து கொளுத்தி உள்ளனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஏழு ஜோடிகளுக்கு இலவச திருமணம்
திருநெல்வேலி: நெல்லையில் ஏழு ஏழை ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தப்பட்டது. திருநெல்வேலியில் செயல்படும் "வாருங்கள் இறைவனை காணலாம்' என்ற அமைப்பின் மூலம் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய, ஏழை எளிய, மாற்றுத்திறனாளிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இலவசமாக திருமணம் செய்துவைக்கப்படுகிறது. நெல்லையில் இன்று காலையில் நடந்த நிகழ்வில் ஏழு ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்தப்பட்டது. இதில் ஒரு கண்பார்வையற்ற பெண். உயரம் குறைவானவர்கள் என அனைவரும் சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளவர்கள். இன்று 28வது ஆண்டாக நடந்த நிகழ்ச்சியில் இதுவரையிலும் 165 ஜோடிகள் இணைந்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை நெல்லை அரசு போக்குவரத்து நிறுவனத்தினர் செய்திருந்தனர். இதில் ஏழு ஜோடிகளின் குடும்பத்தினருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
பா,ஜ.,-திரிணாமூல் காங்., மோதல்
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம், பிர்பம் என்ற இடத்தில் பா.ஜ., மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரசாயன ஆலை விபத்து: 4 பேர் பலி
ஹூஸ்டன்: அமெரி்க்காவின், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. இதில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். வால்வு ஒன்றில் ஏற்பட்ட கசிவே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
சாலை விபத்தில் 12 பேர் பலி
லக்னோ: உத்தரபிரதேச மாநிலம், மொராதாபாத் அருகே நடந்த சாலை விபத்தில் 12 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிராம மக்களுடன் சச்சின்
கூடூர்: ஆந்திர கிராமமான புட்டம்ராஜு கந்திரிகா கிராமத்தை தத்தெடுத்துள்ள கிரிக்கெட் வீரர் சச்சின், அந்த கிராமத்திற்கு நேரில் சென்று, அங்குள்ள மக்களுடன் பேசினார். பின்னர், அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில் நலத் திட்டங்களை வழங்கினார். இந்த கிராமத்திற்கு தேவையான குடிநீர், வை-பை, மருத்துவமனை, பெண்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றை சச்சின், தனது எம்.பி., தொகுதி நிதியில் இருந்து செய்து தருகிறார். இதற்காக, 4.5 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது.
போலி ஆன்லைன் வர்த்தக நிறுவனம்
பெங்களூரு: ஆல்லைன் வர்த்தகம் அதிகரித்து வரும் நிலையில், போலி ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை பெங்களூரு போலீசார் கண்டுபிடித்து, அதை நடத்தி வந்த ஆறுபேரை கைது செய்தனர். கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் இந்த நிறுவனம் ஏராளமான வாடிக்கையாளர்களை ஏமாற்றி உள்ளது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
லிங்கா ஆடியோ ரிலீஸ் - ரஜினி ரசிகர்கள் மீது தடியடி!
சென்னை : கோச்சடையான் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள படம் லிங்கா. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினியுடன் அனுஷ்கா, இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்துள்ளனர். ரஜினி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தமாதம், ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று(நவ., 16ம் தேதி) காலை சத்யம் தியேட்டரில் நடக்கிறது. ஆடியோ விழாவுக்கு ரஜினி வந்தார். இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இதனிடையே ரஜினி வருகையையொட்டி அவரது ரசிகர்கள் ஏராளமான பேர் சென்னை சத்யம் தியேட்டரில் குவிந்தனர். போலீசார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளால் ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருக்கட்டத்தில் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்படதை தொடர்ந்து, போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர்.
கிராமத்தை தத்தெடுத்தார் சச்சின்
புதுடில்லி: பிரதமர் நரேந்திரமோடியின் எம்.பி.,க்களின் கிராமங்கள் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ், பிரபல கிரிக்கெட் வீரரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சச்சின் டெண்டுல்கர், நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜு கந்திரிகா கிராமத்தை கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இது குறித்து அந்த மாவட்ட கலெக்டர் ஸ்ரீகாந்துடன் அவர் ஆலோசனை நடத்தி உள்ளார்.
12 மணிநேரத்தில் 5 குழந்தைகள் பலி
தர்மபுரி : தர்மபுரி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கடந்த 12 மணிநேரத்தில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 5 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. பல்வேறு காரணங்களால் இந்த குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகவும், அவர்களின் உயிரிழப்பிற்கு மருத்துவர்களின் அலட்சியமோ அல்லது மருத்துவ குறைபாடோ காரணம் இல்லை எனவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுமி கொலை வழக்கில் 2 பேர் கைது
சேலம் : 13 வயது சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக அச்சிறுமியின் அக்காவின் நண்பர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஈரோட்டைச் சேர்ந்த யுகாதித்யன் அவரது நண்பர் சசிகுமாருடன் சேர்ந்து, தேஜஸ்ஸ்ரீயை அவரது சகோதரியின் மொபைல் எண்ணை கேட்டு துன்புறுத்தி உள்ளனர். தேஜஸ்ஸ்ரீ, மொபைல் எண்ணை தர மறுத்ததால் அவரை கொலை செய்ததாக கொலையாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். போலீசாரிடம் தப்பி ஓட முயன்ற போது காலில் அடிபட்ட இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரையும் இன்று மாலை கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
மேட்டுப்பாளையம் மலைரயில் ரத்து
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில், அடர்லி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் இன்று ஒருநாள் மேட்டுப்பாளையம்-குன்னூர் இடையேயான மலைரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மனிதஉரிமை கமிஷன் தலைவரானார் மீனாகுமாரி
சென்னை : தமிழக மனிதஉரிமை கமிஷனின் தலைவராக மீனாகுமாரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேகாலயா ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர். இவர் பதவியேற்றது முதல் 5 ஆண்டுகள் வரை பதவியில் இருப்பார் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மலைரயில் பாதையில் மீண்டும் மண்சரிவு
ஊட்டி : மண்சரிவு காரணமாக கடந்த 2 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஊட்டி மலை ரயில் சேவை இன்று காலை மீண்டும் துவங்கியது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு 150 பயணிகளுடன் கிளம்பிய மலைரயில், கல்லாறு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் பயணிகளுடன் மலைரயில் மேட்டுபாளையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்ற அடைந்தனர்.
கறுப்பு பணத்தை மீட்பதி்ல் ஒருங்கிணைப்பு :மோடி
பிரிஸ்பென்: ஆஸ்திரேலியாவின் பரிஸ்பென் நகரில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி கறுப்பு பணத்தை மீட்பதி்ல் ஒருங்கிணைப்பு தேவை என கூறினார். மேலும் கறுப்பு பணத்தை தீவிரவாதிகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்காக சைபர் பாதுகாப்பை வலுப்படுத்துவதோடு மட்டுமல்லாது தகவல் பரிமாற்றத்தை எளிதாக்க வேண்டும் என கூறினார்.
21-ல் உலக இந்து மாநாடு
புதுடில்லி: வரும் 21-ம் தேதி உலக இந்து மாநாடு நடைபெற உள்ளது. தலைநகர் புதுடில்லியில் மூன்று நாட்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 40 நாடுகளில் இருந்து ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட அறிஞர்கள் கலந்து கொள்ள உள்ளனர். துவக்க விழாவி்ல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பகவத் கலந்து கொண்டு பேசுகிறார். மேலும் பா.ஜ., தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, நிர்மலா சீதாராமன் உட்பட பலர் பங்கேற்கி்ன்றனர், மாநாட்டில் கல்வி மற்றும் அறிவியல் உட்பட 45 தலைப்புகளில் விவாதம் நடைபெற உள்ளது. என மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் லிசாபன்சாலி தெரிவித்துள்ளார்.
ரியல் எஸ்டேட் அதிபரை கொல்ல முயற்சி:பெட்ரோல் கேன் வெடித்து பெண் படுகாயம்
புதுச்சேரி:புதுச்சேரியில், 2 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கேட்ட தகராறில், ரியல் எஸ்டேட் அதிபரை கொலை செய்ய முயன்றவர் கைது செய்யப்பட்டார். சம்பவத்தின்போது, பெட்ரோல் கேன் வெடித்து, சாலையோரம் நின்றிருந்த பெண் படுகாயமடைந்தார். புதுச்சேரி சின்னக்கடை ஜீவானந்தபுரம் வீதியைச் சேர்ந்தவர் சேகர், 50; ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தில்லை மேஸ்திரி வீதியைச் சேர்ந்தவர் ஜெயராமன், 51; பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்.நண்பர்களான இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சேகரிடம் வாங்கிய 2 லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி தராமல் ஜெயராமன் ஏமாற்றி வந்துள்ளார். இதை கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மாலை, சின்னவாய்க்கால் வீதி காந்தி வீதி சந்திப்பில் உள்ள, சேகரின் ரியல் எஸ்டேட் அலுவலத்திற்கு வந்த ஜெயராமன், கேனில் தயாராக கொண்டு வந்த பெட்ரோலை, சேகர் மீது ஊற்றி கொலை செய்ய முயன்றார்.அப்போது சேகர் தப்பித்து ஓடியதால், பெட்ரோல் பட்டு, ரியல் எஸ்டேட் அலுவலகம் தீப்பிடித்து எரிந்தது. மேலும், பெட்ரோல் கேன் வீசி எரிந்ததால், வெடித்து சிதறியது. அருகில் உள்ள வாய்க்காலில் பெட்ரோல் கொட்டி கொழுந்துவிட்டு எரிந்தது.அப்போது, சாலையோரம் நின்றிருந்த ஜீவா நகரைச் சேர்ந்த பேபி ,54; என்ற பெண்ணின் கை மற்றும் முதுகில் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அந்த பெண்ணை, பொதுமக்கள் மீட்டு,அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தகவல் தெரிவிக்கப்பட்டதன்பேரில், பெரியகடை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பச்சையப்பன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.பெட்ரோல் கேனை வீசி, சேகரை கொலை செய்ய முயன்ற ஜெயராமனை, போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.