உலகின் பயங்கர பெண் தீவிரவாதி, உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால், இதை உக்ரைன் அரசு மறுத்துள்ளது. உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியாக கருதப்பட்டு வந்தவர் சமந்தா லெவ்த்வெயிட் (வயது 30). ‘ஒயிட் விடோ’ (வெண்விதவை) என்று அழைக்கப்பட்ட லெவ்த்வெயிட், கடந்த 2011 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் மாம்பசா என்ற இடத்தில் ஓட்டல்களையும், வணிக மையத்தையும் தகர்க்க முயன்ற குற்றச்சாட்டுக்கு ஆளானவர்.
மேலும், அந்த நாட்டின் தலைநகரான நைரோபியில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி வெஸ்ட்கேட் வணிக வளாகத்தில் 67 பேர் கொன்று குவிக்கப்பட்ட அல் ஷகாப் தீவிரவாதிகளின் தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர், அந்த இயக்கத்தின் தளபதியாகவும் விளங்கியவர் என கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பின் சமந்தாவை உலகின் அதிபயங்கர பெண் தீவிரவாதியாக சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) அறிவித்து, தேடி வந்தது.
லண்டன் நகரில் 2005 ஆம் ஆண்டு ஜூலை மாதம், 7 ஆம் தேதி சுரங்க ரயில்களில் நடத்தப்பட்ட தொடர் தற்கொலைப் படை தாக்குதல்களில் மூளையாக செயல்பட்டவர் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள தீவிரவாதி ஜெர்மைன் லிண்ட்சே தான், இந்த சமந்தாவின் கணவர்.
இந்நிலையில், 4 குழந்தைகளுக்கு தாயான லெவ்த்வெயிட், 2 வாரங்களுக்கு முன் உக்ரைன் சென்று அங்கு அரசுக்கு ஆதரவான படையில் சேர்ந்து, குறி பார்த்து சுடும் வீராங்கனையாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது நடந்த சண்டையில், இவரை குறி பார்த்து சுடுவதில் வல்லவரான ரஷிய வீரர் ஒருவர் சுட்டுக்கொன்று விட்டதாக தற்போது ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சமந்தாவை சுட்டுக்கொன்ற ரஷிய வீரரின் தலைக்கு 6 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.3 கோடியே 78 லட்சம்) பரிசாக வழங்கப்படும் என உக்ரைன் சிறப்பு பணிகள் பிரிவு அறிவித்துள்ளது. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமந்தா சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி இங்கிலாந்தில் உள்ள அவரது தந்தையும், முன்னாள் படை வீரருமான ஆண்ட்ரூ லெவ்த்வெயிட்டிடம் கேட்டபோது, ”நான் எதையும் கேள்விப்படவில்லை. யாரும் என்னிடம் எதையும் சொல்லவில்லை. நானும் எதையும் கூறப்போவதில்லை” என்றார்.
ஆனாலும், சமந்தா சுட்டுக் கொல்லப்பட்டு விட்டதாக வெளியான தகவலை உக்ரைன் மறுத்துள்ளது.