தி.மு.க.,-அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது:வைகோ
கரூர்: கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, வரும் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க.,வுடன் கூட்டணி கிடையாது. பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட முயலும் கேரளாவை தடுக்க வேண்டும். கொங்கு மண்டல இளைஞர்களை ஒருங்கிணைத்து கேரளாவுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும். தமிழகத்திலிருந்து ஒரு பொருள் கூட கேரளாவுக்கு செல்லவிட மாட்டோம் என கூறினார்.
பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் மோடி ஆதரவாளராவேன்:ஜிதன்ராம்
பார்க்:''பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால், மாநிலத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளை, மத்திய அரசு நிறைவேற்றினால், பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளராவேன்,'' என, அம்மாநில முதல்வர் ஜிதன்ராம் மஞ்சி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில், பார் என்ற நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, அவர் கூறியதாவது: பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என, மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அந்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும். அத்துடன், பீகாரில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை சீரமைக்க, மாநில அரசு, 100 கோடி ரூபாய் செலவழித்தது. அதை, மத்திய அரசு திரும்ப வழங்க வேண்டும்.அத்துடன் மாநிலத்தின் மற்ற பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். இதையெல்லாம் செய்தால், நான் பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவாளராவேன். மாநிலத்திற்கு தேவையான வேண்டிய பணம் கிடைக்க, பீகாரைச் சேர்ந்த, ஏழு மத்திய அமைச்சர்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். பீகாரின் பிரச்னைகளைத் தீர்க்க, ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஜிதன்ராம் மஞ்சி கூறினார்.
மக்களை வெளியேற்ற இடுக்கி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை
இடுக்கி: முல்லைப்பெரியாறு அணை 142 அடியை எட்டும் நிலையில் இருப்பதால், ஒரு மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படலாம் என தெரிகிறது. இதனால் இடுக்கி மாவட்டத்தில் முல்லைப்பெரியாற்றின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்று தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் முகாம்
கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கி வருதையொட்டி, அங்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் என 25க்கும் மேற்பட்டோர் அங்கு தங்கி அணை நிலவரத்தை கவனித்து வருகின்றனர். மேலும், அணையின் நீர்மட்டம் 142 அடியை தொட்டவுடன், அதை தெரிவிக்க அலாரம் அமைக்கப்பட்டுள்ளது.
சுருக்கில் சிக்கி சிறுத்தை பலி
ஊட்டி: ஊட்டி அருகே காட்டு பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த சுருக்கில் சிக்கி, சிறுத்தை பலியானது. நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த அனிக்கொரை கிராமத்திலுள்ள எஸ்டேட் ஒன்றில், காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுருக்கில் சிறுத்தை சிக்கி பலியானது. சம்பவம் குறித்து தகவலறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர்.
காரில் கஞ்சா கடத்திய இருவர் கைது
மேலுார்: மேலுார் அருகே கத்தப்பட்டி டோல்கேட்டில் (சுங்கச்சாவடி)தனிப்பிரிவு டி.எஸ்.பி., நேரு, இன்ஸ்பெக்டர் லெட்சுமிபிரியா, எஸ்.ஐ., சுமதி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து மதுரை நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோனையிட்டனர். அதில் காரினுள் 13 மூடைகளில் 250 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தேனி மாவட்டம் கூடலுாரை சேர்ந்த பெரியகருப்பன் மகன் முத்தையா என்ற சோ, 43, மற்றும் தேவாரத்தை சேர்ந்த கார் டிரைவர் ஆசை, 30, ஆகிய இருவரை கைது செய்தனர்.
குற்றவாளிகளை கைது செய்யுங்கள்: குணால் கோஷ்
கோல்கட்டா: சாரதா சிட்பண்டு மோசடியில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என குணால் கோஷ் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை உலுக்கிய சாரதா சிட் பண்டு மோசடி தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குணால் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று குணால் கோஷ் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் போது குணால் கோஷ், பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், சாரதா சிட்பண்டு மோசடியில் பலர் இன்னும் வெளியில் உள்ளதாகவும், அவர்களையும் கைது செய்ய வேண்டும் என கூறினார்.
அரசுக்கு தகவல் கூறியவரை கொன்ற அல்கொய்தா
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தின் திரா பள்ளத்தாக்கில், மக்கள் அதிகம் கூடும் இடத்திற்கு ஓருவரை அழைத்து வந்த அல்கொய்தா பயங்கரவாதிகள், தலையை துண்டித்து கொன்றனர். மேலும் மாலை வரை அவரது உடலை அங்கிருந்து அகற்றக்கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தனர். கொலை செய்யப்பட்டவர், பயங்கரவாதிகள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவித்ததாக பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
வாணியம்பாடியில் குப்பைத்தொட்டியில் ஆதார் அட்டை
வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள பாசிராபாத்தில், குப்பை தொட்டியில் ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டிய ஆதார் அட்டைகளை விநியோகம் செய்யாமல் குப்பைத்தொட்டியில் போட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஆசியாவில் ஏற்பட்டுள்ள மோதலால் ஆபத்து: ஒபாமா எச்சரிக்கை
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலையில், பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, ஆசிய கண்டத்தில் நாடுகளுக்கு இடையே, ஏற்பட்டுள்ள மோதலால், அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்க அமெரிக்கா தொடர்ந்து அங்கு இருக்கும் என கூறினார்.
பா.ஜ.,-திரிணமுல் மோதல்: போலீசார் துப்பாக்கிச்சூடு
பிர்பும்: மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டம் இமாதாபூர் என்ற இடத்தில் பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். திரிணமுல் கட்சியினரை பா.ஜ.,வினர் தடுத்ததை தொடர்ந்து மோதல் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். மேலும் 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
6 பச்சிளம் குழந்தைகள் அடுத்தடுத்து மரணம்
தர்மபுரி: தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அடுத்தடுத்து ஆறு பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அனைத்து வசதிகளுடன் கூடிய, பச்சிளம் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காலை வரை, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு மையத்தில் சேர்க்கப்பட்ட ஆறு குழந்தைகள், அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன. இச்சம்பவம், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராயபுரத்தில் மாணவிகள் மறியல்
சென்னை: சென்னை அரசு விடுதியில் மேற்கூரை இடிந்து 3 பேர் காயமுற்றனர். இந்த சம்பவத்தை கண்டித்து ராயபுரத்தில் மாணவிகள் மறியல் போராட்டம் நடத்தினர்.
நவம்பர் 18 பிசிசிஐ அவசர கூட்டம்
புதுடில்லி : நவம்பர் 18ம் தேதி பிசிசிஐ.,யின் நிர்வாகக் குழுவின் அவசரக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கிரிக்கெட் சூதாட்ட ஊழல் தொடர்பான விசாரணை அறிக்கை தொடர்பாக பல முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஜார்க்கண்டில் 40 வீடுகள் இடிந்தன
தன்பாத் : ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில், 40 வீடுகள் இடிந்த தரைமட்டம் ஆகின. அனுமதியின்றி தோண்டப்பட்ட சுரங்கம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
காபி குடித்தால் தொப்பை குறையும்
வாஷிங்டன் : காபி குடிப்பதால் தொப்பை உண்டாவது தடுக்கப்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஜியார்ஜியா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், காபியில் உள்ள காபின் என்ற வேதிப் பொருள் இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்துவதுடன், கல்லீரலில் அதிகப்படியாக கொழுப்பு சேர்வதை தடுக்கும் எனவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
பெரு கடல் பகுதியில் நிலநடுக்கம்
லிமா : பெரு நாட்டின் கடல் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகி உள்ளது. பல நிமிடங்கள் நீடித்த இந்த அதிர்வால் கட்டிடங்கள் குலுங்கின. மொபைல் போன் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
எல்.கே.ஜி., சிறுமி பாலியல் பலாத்காரம்
கோழிக்கோடு : கேரளாவின் நடபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி., படிக்கும் நான்கரை வயது சிறுமியை, அப்பள்ளியில் படிக்கும் 18 வயது மாணவர்கள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இன்று வரலாற்று நிகழ்வு:பா.ஜ.,
புதுடில்லி : ஆஸ்திரேலியாவின் இன்று நடைபெற்ற பிரிக்ஸ் தலைவர்களுடனான கூட்டத்தில் பேசிய மோடி, கறுப்பு பண விவகாரம் குறித்து குரல் எழுப்பி உள்ளார். இன்று நடைபெற்ற இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு என பா.ஜ.,வின் சம்பித் பட்ரா தெரிவித்துள்ளார்.
ஆத்தூர் அருகே பக்தர்களை கொட்டிய தேனீக்கள்
ஆத்தூர் : சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன் பாளையம் சின்னம்ம சமுத்திரம் கிராமத்தில் கல்வராயன் மலை அடிவாரத்தில் கொப்பு கொண்ட பெருமாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த வாரம் கும்பாபிஷேகம் நடந்தது. இது முன்னிட்டு வழிபடுவதற்காக 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர். மரத்தில் இருந்த ராட்சத தேனீக்கள் பக்தர்களை கொட்டியது. ஆயிரத்து 893 படிகள் இருப்பதால் பக்தர்கள் உடனடியாக வெளியேற முடியாமல் அவதிப்பட்டனர். ஆத்தூர் தாசில்தார் தேன்மொழி தலைமையில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
சிதம்பரம் மீது சாமி தாக்கு
புதுடில்லி : குளிர்கால கூட்டத்தொடரிலேயே ராணுவ படையின் சிறப்பு அதிகார சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என கேட்டுள்ள முன்னாள் அமைச்சர் சிதம்பரத்தின் கோரிக்கை முட்டாள் தனமானது என பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார். அப்படி செய்தால் அது பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் சாதகமாக அமைந்து விடும். ராணுவ அதிகார சட்டத்தை நீர்த்து போக நாங்கள் விட மாட்டோம். ராணுவத்தை பலப்படுத்தவே முயற்சித்து வருகிறோம். ராணுவத்தை ஒடுக்க நீங்கள் சக்தியை பயன்படுத்தினால், அதனை 10 மடங்கு சக்தி கொண்டு நாங்கள் ஒடுக்குவோம் என சாமி தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்
கோல்கட்டா : மேற்குவங்கத்தில், சாரதா சிட்பண்ட் ஊழலில் கைது செய்யப்பட்டு, சிறை அறையில் நேற்று தற்கொலைக்கு முயன்ற எம்.பி., குணால் ஜோஷிடம் பேட்டி எடுத்த பத்திரிக்கையாளர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்தி உள்ளனர். தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று, தற்போது சிகிச்சை பெற்று வரும் குணாலிடம் பேட்டி எடுத்த போது அவர், உண்மையாக ஊழல் செய்தவர்களை கைது செய்யுங்கள் என தெரிவித்தார்.
ஊழலால் நடந்த விபத்து:ராகுல் வேதனை
ராய்பூர் : சத்தீஸ்கரின் பிலஷ்பூர் மாவட்டத்தில் கறுத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்ட 14 பெண்கள் உயிரிழந்தனர். அவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு குடும்பத்தில் தாய் இறந்ததால் அந்த குடும்பம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. நான் காலையில் அவர்கள் குடும்பங்களை சந்தித்த போது அவர்கள் கூறிய விஷயங்கள் வேதனை அளிக்கிறது. கவனக்குறைவு காரணமாகவே இது நடந்துள்ளது. ஊழல் மற்றும் காலாவதியான மருந்துகளும் அந்த பெண்கள் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
பெயர் சொல்லியே கூப்பிடுங்கள்:ஆஸி., பிரதமர்
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள வந்துள்ள தலைவர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட், இங்கு இருப்பவர்கள் அனைவரும் உலகின் அதிக சக்தி வாய்ந்த, செல்வாக்கு நிறைந்த தலைவர்கள். அதனால் நான் வெளிப்படையாக பேசி கொள்வதால் நம்மிடையே இருக்கும் வேறுபாடுகள் களையப்படும். அதனால் அனைவரும் மற்றவரின் முதல் பாதி பெயரை சொல்லி கூப்பிட்டால், நம்மிடையே நட்புறவு பலப்பட உதவியாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
திறந்த வெளிக்கூண்டுக்குள்ளேயே புலி இருக்குது : வண்டலூர் வனத்துறை
தாம்பரம்: சென்னை அருகே உள்ள வண்டலூர் மிருககாட்சி சாலையில் 5 புலிகள் தப்பியதாக கூறப்பட்டது. ஆனால் இந்த புலிகளில் 4 உரிய இடத்திலும், ஒரு புலி திறந்தவழிக்கூண்டு பகுதியிலும் தான் இருக்கிறது என வனத்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் நமோ உணவகம்
பிரிஸ்பேன் : ஜி20 மாநாட்டை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடியின் ஆஸ்திரேலிய வருகையை முன்னிட்டு, பிரிஸ்பேனில் நமோ இந்திய உணவகம் என்ற பெயரில் உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஜி20 மாநாட்டை முன்னிட்டு உலக நாடுகளின் தலைவர்கள் பிரிஸ்பேனில் கூடி உள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் பயிற்சி காலத்தை குறைக்க பரிசீலனை
புதுடில்லி : ஐஏஎஸ் பயிற்சி காலத்தை 103 வாரங்களில் இருந்து 75 வாரங்களாக குறைக்க மோடி தலைமையிலான மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
சீனா ஓபன் பேட்மின்டன் ; சாய்னா இறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
பீஜிங் : சீனா ஓபன் பேட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெய்வால் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.
அரசு மீது டி.ராஜா குற்றச்சாட்டு
புதுடில்லி : வெளிநாட்டில் இருக்கும் கறுப்பு பணத்தை திரும்ப கொண்டு வரும் விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம்
சென்னை : தமிழக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு உத்தரவின்படி, சுபோத்குமார் பள்ளி கல்வித்துறை துணை செயலாலராகவும், கே.எஸ்.கந்தசாமி மற்றும் ஷில்பா பிரபாகர் சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்களாகவும், பிங்க்ளே விஜய் மாருதி தொழிற்துறை இணை செயலாளராகவும், கே.விஜயகார்த்திகேயன் கோவை மாநகராட்சி கமிஷனராகவும், பிரவீன் பி.நாயகர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜார்கண்ட் மக்களுக்கு மோடி வாழ்த்து
புதுடில்லி : ஜார்கண்ட் மாநிலம் அமைக்கப்பட்டதன் 14வது ஆண்டு தினத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி பிரிஸ்பேன் சென்றுள்ளதால், அவர் தனது டுவிட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக பொருளாதாரத்தை அமெரிக்கா சுமக்க முடியாது
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் மாணவர்கள் கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா, உலகின் பொருளாதாரத்தை அமெரிக்கா தனது முதுகில் சுமக்க முடியாது எனவும், அதனால் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி வளர்ச்சி ஏற்படுத்துவதற்கு ஜி 20 தலைவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
விரைவில் நடவடிக்கை:வி.கே.சிங்
புதுடில்லி : மசில் சம்பவம் போன்று ராணுவத்தில் ஏதேனும் தவறு நடந்தால் உடனடியாக விசாரிக்கப்பட்டு, விரைவில் நீதி வங்கப்படும் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார்.
பலியான பெண்கள் குடும்பத்திற்கு ராகுல் ஆறுதல்
பிலஸ்பூர் : சத்தீஸ்கர் மாநிலம் பிலஸ்பூரில் கருத்தடை செய்து கொள்ள வந்த போது பலியான பெண்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆறுதல் கூறினார்.
டில்லி ஸ்மார்ட் சிட்டி: சிங்கப்பூர் உதவிக்கரம்
சிங்கப்பூர் : மோடி தலைமையிலான புதிய அரசிற்கு உதவி சிங்கப்பூர் அரசு தயாராக இருப்பதாக சிங்கப்பூர் உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மசகோஸ் ஜூல்கிபிலி தெரிவித்துள்ளார். மேலும், இதில் ஒன்றாக டில்லி உள்ளிட்ட இந்திய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்ற சிங்கப்பூர் முன்வந்துள்ளது. இது தொடர்பாக திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு முதலில் அப்பகுதியில் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நல்ல சட்ட நடைமுறைகள் அங்கு அமல்படுத்தப்பட வேண்டும். இது போன்ற சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மணிமுக்தா அணையில் நீர் திறக்க உத்தரவு
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் மணிமுக்தா அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இதன்படி நாளை முதல் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால் சங்கராபுரம் வட்டத்தில் 4250 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற உள்ளன. இதே போல் தருமபுரி மாவட்டம் ஈச்சம்பாடி அணையில் இருந்தும் நாளை முதல் தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் நாங்குநேரியை அடுத்த வேப்பங்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட 20 வயது பெண்ணை அப்பகுதியைச் சேர்ந்த 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக அப்பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க அதிபருடன் மோடி சந்திப்பு
பிரிஸ்பேன் : ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்க அதிபர் ஜாகோப் ஜூமாவை சந்தித்து பேசினா
சுப்ரீம் கோர்ட்டை நாட கேரளா முடிவு
திருவனந்தபுரம் : முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை நெருங்கி வருவதால் கேரள மக்கள் அச்சத்தில் இருப்பதால், 142 அடி வரை நீர்தேக்க தடை விதிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய கேரள முடிவு செய்துள்ளது. இன்று பிற்பகலில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக வெள்ள அபாய எச்சரிக்கை விடுவது தொடர்பாக கேரள அமைச்சரவை இன்று நடத்திய அவசர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பரஸ்பரம் சீண்டுதல்தான் அச்சுறுத்தல்:ஒபாமா
பிரிஸ்பேன் : ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரிஸ்பேன் சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, மாணவர்கள் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், ஆசிய நாடுகளின் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது அவர்களுக்கிடையேயான பரஸ்பர சீண்டுதல்தான். பெரிய நாடுகள் சிறிய நாடுகளை அச்சுறுத்தி வருவதும் சீண்டுதலும்தான் ஆசியாவின் அச்சுறுத்தல் என தெரிவித்துள்ளார். ஒபாமாவின் இந்த கருத்தை ஐ.நா., பொதுச் செயலாளர் பான் கி மூனும் வலியுறுத்தி உள்ளார். அவர் கூறுகையில், எபோலா, தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் உக்ரைனில் நிலவி வரும் அசாதாரணமான சூழல் ஆகியவை தான் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் நாடுகளின் முன் இருக்கும் சவால்கள் என தெரிவித்துள்ளார்.
வீட்டின் முன் நின்ற லாரி கடத்தல்
நெல்லை : நெல்லை மாவட்டம் சிவராமபேட்டை பகுதியில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த லாரி கடத்திச் செல்லப்பட்டது. இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், வாகன சோதனையின் போது லாரியை வளைத்து பிடித்தனர். லாரி கடத்தலில் ஈடுபட்ட 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
க்ளீன் இந்தியா திட்டத்தில் சரத்பவார்
மும்பை : பிரதமர் மோடியின் க்ளீன் இந்தியா திட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரும் இணைந்துள்ளார். இன்று காலை க்ளீன் இந்தியா திட்டத்தின் பிரச்சாரத்தை துவங்கிய அவர், தனது மகள் சுப்ரியா சுலே உள்ளிட்ட தனது குடும்ப உறுப்பினர்களுடன் சென்று தெருக்களை சுத்தம் செய்தார்.
எல்லையில் பாக்.,துப்பாக்கிச்சூடு
ஜம்மு : சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளன. இந்திய பாதுகாப்பு நிலைகளையும், பாதுகாப்பு படைகளையும் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிராமங்களை தத்தெடுத்த சோனியா,ராகுல்
புதுடில்லி : காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் துணைத் தலைவர் ராகுல் ஆகியோர் தங்கள் தொகுதிகளுக்கு உட்பட்ட சில கிராமங்களை தத்தெடுத்துள்ளனர். அதே சமயம், கிராமங்களை தத்தெடுப்பது பா.ஜ., அரசின் திட்டமில்லை என காங்கிரஸ் கட்சி தங்களின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது.
பள்ளி வேன் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்
திருவள்ளூர் : திருவள்ளூர் அருகே நெடுவரம்பாக்கம் பகுதியில் பள்ளி வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் 15 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மாணவர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வேகமாக சென்றதே விபத்திற்கு காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
பா.ஜ., மீது காங்கிரஸ் புகார்
மும்பை : மகாராஷ்டிரா சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பில் பா.ஜ., அரசு முறைகேடு செய்து வெற்றி பெற்றிருப்பதாக மகாராஷ்டிர கவர்னர் வித்யாசாகர் ராவிடம் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. நம்பிக்கை ஓட்டெடுப்பில் சட்ட விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் புகாரில் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இணையதள விற்பனையில் தமிழரின் "சாதனை"
பெரம்பலூர் : பெரம்பலூரில் இணையதளம் மூலம் தனியார் கல்வி நிறுவனத்தை விற்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை முதலிவாக்கத்தைச் சேர்ந்த 3 பேர், பெரம்பலூரில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்திற்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவ கல்லூரி, நர்சிங் கல்லூரி, கலைக்கல்லூரி உள்ளிட்டவைகளை ரூ.700 கோடிக்கு விற்பனை செய்வதற்காக இணையதளம் மூலம் விளம்பரம் செய்துள்ளனர். இது தொடர்பாக பலரும் விண்ணபித்து, கல்வி குழுமத்தை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். தகவல் அறிந்த கல்வி நிறுவனமும் இவர்களிடம் பேரம் நடத்துவது போன்று பேச்சுவார்த்தை நடத்தி, அதுன் மூலம் அவர்களைப் பற்றிய தகவலை சேகரித்து போலீசில் புகார் அளித்துள்ளது. இதனையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரிடம் இவர்கள் ரூ.10 லட்சம் வரை முன்பணம் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள அரசை கண்டித்து வைகோ பேரணி
உடுமலை : பாம்பாற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சி மேற்கொண்டு வரும் கேரள அரசை கண்டித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 25 இடங்களில் பேரணி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. உடுமலை அமராவதி நகரில் வைகோ தலைமையில் துவங்கிய பேரணி தாராபுரம் வரை செல்ல உள்ளது.
மக்களின் மூலமே சீர்சிருத்தம்:மோடி
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் பிரிக்ஸ் நாட்டு தலைவர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய மோடி, சீர்திருத்தம் என்பது மக்களாலேயே ஏற்பட வேண்டும். சீர்திருத்தம் அரசியல் நெருக்கடிகளில் இருந்து விடுபட்டு, வலிமையானதாக ஏற்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சீர்காழியில் அமைச்சர் சிறப்பு ஹோமம்
சீர்காழி : தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராக வேண்டி, தமிழக மீன்வளத்துறை அமைச்சர்கள் பூநாச்சி, ஜெயபால், , நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்துள்ள திருக்காட்டுப்பள்ளி அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஆரன்யேஸ்வரர், ஆலயத்தில் சிறப்பு அஸ்திர ஹோமம் நடத்தி வழிபாடு நடத்தினர். இதில் அதிமுக.,வை சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். இக்கோயில், இந்திரன் வழிப்பட்டு இந்திரபதவியை மீண்டும் பெற்ற தலம் ஆகும்.
தமிழகத்தில் யார் முதல்வர்:ஸ்டாலின் கிண்டல்
மதுரை : மதுரையில் சிகிச்சை பெற்று வரும் திமுக பிரமுகரை நேரில் சந்திக்க வந்த திமுக பொருளாளர் ஸ்டாலின், செய்தியாளர்களிடம் பேசுகையில், மரணத்தின் விளிம்பில் இருந்த மீனவர்களை காப்பாற்றிய மத்திய அரசுக்கு திமுக சார்பில் நன்றி. மீனவர்களை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் வலியுத்தினோம். அதனை ஏற்று நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதியும் நானும் நேற்று நன்றி தெரிவித்தோம். தமிழகத்தில் யார் முதல்வர் என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கே தெரியவில்லை என தெரிவித்தார். தமிழகத்தில் யார் முதல்வர் என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் பேசியதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.
மோடி மீது திக்விஜய் சிங் தாக்கு
டேராடூன் : மோடிக்கு ஆர்.எஸ்.எஸ்.,ன் கொள்கைகள் மீது மட்டும் தான் கவனம் உள்ளது எனவும், அவருக்கு காந்தி, நேரு மற்றும் பட்டேலின் கொள்கைகள் மீது கவனமோ அக்கறையோ இல்லை எனவும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் அதிகாரத்தை பெறுவதற்காக பா.ஜ., எந்த எல்லைக்கும் செல்லும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
கருத்தடை பெண்களுக்கு மருந்தில் விஷம்
ராய்பூர் : சத்தீஸ்கரில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்ள வந்த 14 பெண்கள் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி 3 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க கோர்ட் உத்தரவிட்டிருந்தது. இதன்படி ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் விசாரணையில், பலியான பெண்களுக்கு துருப்பிடித்த கத்தியை கொண்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், தற்போது அப்பெண்களுக்கு கொடுக்கப்பட்ட மயக்க மருந்தில் விஷத்தன்மை உள்ள பொருட்கள் கலந்திருந்திருந்தது தெரிய வந்துள்ளது.
ஊட்டி மலை ரயில் சேவை ரத்து
ஊட்டி : ஊட்டி, அரவங்காடு பாதையில் மரம் விழுந்துள்ளதால் மலைரயில் சேவை இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக அரவங்காடு பாதையில் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
நேரு ஒரு கட்சிக்கு சொந்தமில்லை:மேனகா
புதுடில்லி : முன்னாள் பிரதமர் நேருவின் கொள்கைகளை தங்களுடையதாக்கிக் கொள்ள பா.ஜ., முயல்வதாக காங்கிரஸ் கூறி உள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சர் மேனகா, நேரு நாடு முழுவதற்கும் சொந்தமானவர். அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை என தெரிவித்துள்ளார்.
மன்மோகன் பற்றி புத்தகம் எழுதும் குர்ஷித்
புதுடில்லி : காங்கிரஸ் ஆட்சியில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த சல்மான் குர்ஷித், மன்மோகன் சிங்கின் ஆட்சி காலம் குறித்து புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். முன்னாள் பிரதமரின் ஆலோசகரின் வழிகாட்டுதலின் பேரில் எழுதப்படும் இந்த புத்தகத்தில் மன்மோகன் சிங்கின் அரசில் பணியாற்றிய அதிகாரிகள் பற்றியும் எழுதப்பட்டு வருகிறது.
141 அடியை நெருங்கும் முல்லை பெரியாறுஅணை
சேலம் : முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்ட உள்ளது. இன்று (நவம்பர் 15) காலை நேர நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140.80 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு 1916 கனஅடியில் இருந்து 3357 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 900 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்இருப்பு 7342 கனஅடியாக உள்ளது. முல்லை பெரியாறு அணை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்த கேரள அமைச்சரவை இன்று கூறுகிறது.
கறுப்பு பணத்தை மீட்புக்கு முன்னுரிமை:மோடி
பிரிஸ்பேன் : பிரிஸ்பேனில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரிக்ஸ் நாட்டு தலைவர்களின் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், வெளிநாடுகளில் இருக்கும் கறுப்பு பணத்தை மீட்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்த தலைமுறைக்காக உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி வருகிறோம். வெளிநாடுகளில் இருக்கும் கணக்கில் அடங்கா கறுப்பு பணமும் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய சவால் என தெரிவித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்திற்கு ராகுல் இன்று வருகை
புதுடில்லி: சட்டீஸ்கர் மாநிலத்திற்கு இன்று ராகுல் வருகை தர உள்ளார். மாநிலத்தில் குடும்ப அறுவை சிகிச்சை மேற்கொண்டு பலியான பெண்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். முன்னதாக மாநில காங்கிரஸ் கட்சியினர், நடைபெற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்த விசாரணை கமிஷன் அமைத்துள்ள நேரத்தில் காங்கிரஸ் கட்சியினர் இச்சம்பவத்தை அரசியலாக்க முற்படுகின்றனர் என மாநில முதல்வர் கூறியுள்ளார்.
கறுப்பு பண விவகாரம் இந்தியாவிற்குமுக்கியம் : மோடி
பிரிஸ்பேன்: கறுப்பு பணம் இந்தியாவிற்கு முக்கியம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஜி-20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதமர் மோடி பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார். அப்போது கறுப்பு பணம் விவகாரம் இந்தியாவிற்கு முக்கியம் , பாதுகாப்பு சவால்கள், மற்றும் கறுப்பு பணம் ஒருங்கிணைந்தது என கூறினார். மேலும் கறுப்பு பணத்தை மீட்டு வருவதற்கு முக்கியத்துவம் கொடுப்போம் என கூறினார்.
சென்னை ஐகோர்ட் வாசல்கள் மூடல்
சென்னை: சென்னை ஐகோர்ட்டின் அனைத்து வாசல்களும் இன்று மூடப்படுகிறது. நீதிமன்றம் தனி நபர் ஒருவருக்கு சொந்தமல்ல என்பதை குறிக்கும் வகையில்ஆண்டிற்கு ஒருநாள் ஐகோர்ட்டின் அனைத்து வாசல்களும் மூடப்படும் என்ற நடமுறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இன்று இரவு 8மணி்க்கு துவங்கி நாளை இரவு 9 மணி வரை அனைத்து வாசலகளும் மூடப்பட்டிருக்கும் என ஐகோர்ட்டின் நிர்வாக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய எல்லையில் பாக்., ராணுவத்திற்கு சீனா பயிற்சி!
புதுடில்லி: இந்திய எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்திற்கு சீன ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருவதாக உளவுத்துறையினர் கூறியுள்ளனர். பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு ஆயுதங்களை கையாள்வது குறித்து சீன ராணுவத்தினர் பயிற்சி அளித்து வருவதாக தெரியவந்துள்ளது.
புதுடில்லி தொகுதியில் கெஜ்ரிவால் மீண்டும் போட்டி
புதுடில்லி: ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால், வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் புதுடில்லி
தொகுதியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஆஷூதோஷ் கூறினார். மேலும் அவர், கெஜ்ரிவால் தலைமையில், ஆம் ஆத்மி டில்லி சட்டசபை தேர்தலை சந்திக்கும் எனவும் கூறினார்.
ஈராக்கில் கார் குண்டுவெடிப்பு:17 பேர் பலி
பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இரண்டு இடங்களில் கார் குண்டு வெடித்ததில் 17 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில்57 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு யாரும் பொறுப்பேற்கவில்லை.
டில்லி பல்கலை., நூலகத்தில் மாணவி மானபங்கம்
புதுடில்லி: டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில்., மாணவியை, மாணவன் ஒருவன் மானபங்கம்படுத்தியுள்ளான். இது தொடர்பாக போலீசார் கூறும் போது, கடந்த வெள்ளியன்று, நூலகத்திற்கு சென்ற மாணவியை, மாணவன் ஒருவன் இழுத்து சென்று மானபங்கப்படுத்தியதாகவும், நூலகரிடம் மாணவி புகார் கூறியபோது, இந்தபிரச்னையை அப்படியே விடுமாறு கூறியதாகவும், மாணவி அளித்த புகாரின் போரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரதமராகவில்லை என்ற வருத்தமில்லை: அத்வானி
பாட்னா: இந்தியாவின் பிரதமராகவில்லை என்ற வருத்தமில்லை என பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: லோக்சபாவில் எனது இடம், அனைத்து கட்சிகளிடமிருந்தும் எனக்கு கிடைத்து வரும் மரியாதை ஆகியவை மேலானவை. இந்த மரியாதையும், மதிப்பும் பிரதமர் ஆவதை விட உயர்வானது என கருதுகிறேன் என கூறினார்.