பாரீஸ்: ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சி 10 ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய ரோசட்டா என்ற விண்கலம், விண்வெளியில் 640 கோடி கி.மீ தூரம் பயணம் செய்து 67பி என்ற வால்நட்சத்திரத்தில் நேற்று வெற்றிகரமாக தரையிறங்கியது. சூரிய குடும்பத்தையும், வால்நட்சத்திரங்களையும் ஆராயும் பணியில் ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சி ஈடுபட்டுள்ளது. கடந்த 1969ம் ஆண்டு ஒரு வால்நட்சத்திரத்தை சோவியத் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் சுரிமோவ், கெராசிமென்கோ ஆகியோர் கண்டறிந்தனர். அதற்கு அதை கண்டுபிடித்த விஞ்ஞானிகளின் பெயரை சூட்டப்பட்டது.
இது சுருக்கமாக 67பி என்றழைக்கப்பட்டது. இந்த வால் நட்சத்திரம் மணிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கி.மீ வேகத்தில் சூரியனை சுற்றிக் கொண்டிருக்கிறது. இதில் விண்கலத்தை தரையிறக்கி ஆய்வு செய்ய ஐரோப்பிய விண்வெளி ஏஜன்சி முடிவு செய்தது. இதற்காக ரோசட்டா என்ற விண்கலம் ஏரியன் 5 ராக்கெட் மூலம் கடந்த 2004ம் ஆண்டு மார்ச் 2ம் தேதி அனுப்பப்பட்டது. விண்வெளியில் 10 ஆண்டு காலம் 640 கோடி கி.மீ தூரம் பயணம் மேற்கொண்ட ரோசட்டா விண்கலம் கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி அன்று வால்நட்சத்திரத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்தது. ரோசட்டா விண்கலத்திலிருந்து பிலே லேண்டர் என்ற ரோபோ ஆய்வுக் கருவியை வால்நட்சத்திரத்தின் மேற்பரப்பில் தரையிறக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது.
அதன்படி பிலே லேண்டர் நேற்று விண்கலத்திலிருந்து பிரிக்கப்பட்டு, வால்நட்சத்திரத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட் டது. அந்த விண்கலம் உடனடியாக கட்டுப்பாட்டு மையத்துக்கு போட்டோக்களையும் அனுப்பியது. ஆனால் பிலே லேண்டர் திட்டமிடப்பட்ட இடத்திலிருந்து 1 கி.மீ தூரம் தாண்டி தரையிறங்கியது. இது ஒரு மலை உச்சியின் நிழல் பகுதி. சூரிய ஒளி பட்டால்தான் தான் சோலார் பேனல்கள் மின்சாரத்தை உற்பத்தி செய்யும். அதனால் பிலே லேண்டரின் பேட்டரி விரைவில் செயல் இழக்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. பிலே லேண்டரில் உள்ள கருவிகளில் இருந்து கூடிய விரைவில் அதிக தகவல்களை பெறும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.