நள்ளிரவில் மலர்ந்த கிருஷ்ணர் கமலப்பூ
திண்டுக்கல்: குறிஞ்சி பூவினை போன்று 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நள்ளிரவில் மட்டுமே பூக்கும் "கிருஷ்ணர் கமலப்பூ' திண்டுக்கல்லில் பூத்துள்ளது. இது குறித்து லிஜி என்பவர் கூறுகையில்,"செடியிலிருந்து தண்டு தனியாக பிரிந்த பின் மொட்டு உருவாகி பூவாக மலரும் என இதை எனக்கு தந்தவர்கள் தெரிவித்திருந்தனர். அந்த தருணத்திற்காக காத்திருந்தேன். அந்த அற்புத காட்சியை நேற்று அனைவரும் ரசித்து பார்த்தோம். பரவசத்தில் என்ன செய்வது என தெரியவில்லை. கிருஷ்ணரே நேரில் வந்திருப்பதாக உணர்ந்து பூவுக்கு தீபாராதனை காட்டி வணங்கினோம்,'' என்றார்.
டிரைவர்கள் போராட்டத்தால் சென்னையில் போக்குவரத்து பாதிப்பு
சென்னை: சென்னையில் எம்எம்டிஏ சிக்னல் முதல் மதுரவாயல் சிக்னல் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் தாக்கியதாக கூறி டிரைவர்கள் போராட்டம் நடத்துவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டிரைவர்கள் ஆங்காங்கே, பஸ்களை நிறுத்திவிட்டு போராட்டம் நடத்தி
பெண்கள் பலியான சம்பவத்திற்கு எனது ராஜினாமா தீர்வாகாது: ரமன் சிங்
ராய்ப்பூர்: குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை செய்த பெண்கள் பலியான சம்பவத்திற்கு, தனது ராஜினாமா செய்வது தீர்வாகாது என சத்தீஸ்கர் மாநில முதல்வர் ரமன் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில், இந்த சம்பவம் குறித்து நீதிவிசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை வெளிப்படையாக இருக்கும் எனவும், இந்த சம்பவம் அதிர்ச்சியளிப்பதாகவும், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட மருந்தில் ஜிங்க் பாஸ்பைட் காணப்பட்டதாகவும் கூறினார்.
வண்டலூர் பூங்காவில் இரண்டு புலிகள் மாயம்
சென்னை: வண்டலூர் பூங்காவில் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து இரண்டு புலிகளை காணவில்லை என வனத்துறையினர் கூறியுள்ளனர். 5 புலிகள் மாயமானதாகவும், அவற்றில் 3 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு பலிகளை தேடி வருவதாகவும் வனத்துறையினர் கூறியுள்ளனர். பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் இருந்து புலி வெளியேறியதாகவும், பூங்காவை விட்டு புலி வெளியேற வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.
என்னுடைய வாழ்க்கை படமாக்கப்பட்டால் தீபிகா நடிக்க வேண்டும்: சானியா
புதுடில்லி: தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால், அதில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார். டில்லியில் அவர் கூறியதாவது: என்னை பற்றி சினிமா வருவதை விரும்பவில்லை. என்னுடைய தனிப்பட்ட விஷயங்கரை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை நான் விரும்புவதில்லை. என் வாழ்க்கையை சினிமாவாக்க அனுமதி கேட்டு வந்த போது மறுப்பு தெரிவித்துள்ளேன். எதிர்காலத்தில் எனது வாழ்க்கை சினிமாவாக்கப்பட்டால், எனது கதாபாத்திரத்தில் நடிகை தீபிகா படுகோனே நடிக்க வேண்டும் என விரும்புவதாக கூறினார்.
பிரதமர் மோடியின் திட்டத்தின் கீழ் கிராமத்தை தத்தெடுத்தார் சோனியா
புதுடில்லி: பிரதமரின் சன்சாத் ஆதர்ஷ் கிராம் யோஜனா திட்டத்தின் கீழ், உ.பி., மாநிலம் ரேபரேலி தொகுதியிலுள்ள உருவா என்ற கிராமத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா தத்தெடுத்துள்ளார். இதே போல், அமேதி தொகுதியில் உள்ள ஜக்திஷ்பூர் கிராமத்தை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் தத்தெடுத்துள்ளார்.
கறுப்பு பணம்: வர்த்தகருக்கு அமலாக்கத்துறை சம்மன்
புதுடில்லி: கறுப்பு பணம் தொடர்பான வழக்கில், 3 பேரின் பட்டியலை மத்திய அரசு, கடந்த சில நாட்களுக்கு தாக்கல் செய்தது. இதில் இடம்பெற்றிருந்த லோதியா என்ற தொழிலதிபருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
சீனிவாசனால் பிசிசிஐ.,க்கு அவப்பெயர்: ஷசாங்க் மனோகர்
புதுடில்லி: ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன் பி.சி.சி.ஐ., கட்டுப்படுத்தி வருவதாகவும், அவரால் கிரிக்கெட் வாரியத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அமைப்பின் முன்னாள் தலைவர் ஷசாங்க் மனோகர் கூறியுள்ளார்.
சிவகங்கை துணை மின் நிலையத்தில் தீ
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சிப்காட் துணைமின் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பல கோடி மதிப்புள்ள மின்சாதனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.பல மணி நேரமாக எரிந்து கொண்டிருக்கும் தீயை, 8 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு ரயில்கள் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: கிறிஸ்துமஸ், பொங்கல், புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோவையிலிருந்து செங்கல்பட்டிற்கு டிசம்பர் 11 முதல் பிப்ரவரி 3ம் தேதி வரை வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவையிலிருந்து கிளம்பும். செங்கல்பட்டிலிருந்து கோவைக்கு டிசம்பர் 12ம் தேதி முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை வாரம் மும்முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். செங்கல்பட்டிலிருந்து கோவைக்கு திங்கள், புதன் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ரயில்கள் கிளம்பி செல்லும். இந்த ரயில்கள் கரூர், திருச்சி, ஈரோடு, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராமேஸ்வரத்திலிருந்து செங்கல்பட்டிற்கு டிசம்பர் 15ம் தேதி முதல் ஜனவரி 14ம் தேதிவரை வாரம் இரு முறை சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்திலிருந்து திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் சிறப்பு ரயில்கள் கிளம்பும்.செங்கல்பட்டிலிருந்து ராமேஸ்வரத்திற்கு டிசம்பர் 16 முதல் ஜனவரி 15ம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் செவ்வாய் மற்றும் வியாழன் அன்று கிளம்பி செல்லும். இந்த ரயில்கள் காரைக்குடி, திருச்சி, விருத்தாசலம் வழியாக கிளம்பி செல்லும். மதுரை வழியாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
மதுரையில் நாட்டுவெடிகுண்டு: வரிச்சியூர் செல்வத்தின் உதவியாளர் கைது
மதுரை: மதுரை அண்ணாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 11 நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக வரிச்சியூர் செல்வம் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில், இந்த வெடிகுண்டுகளை வரிச்சியூர் செல்வத்தின் உதவியாளர் உபாஸ்டின் பாவா மற்றும் அவரது சகோதரரின் நண்பரும் சேர்ந்து, குப்பைத்தொட்டியில் வைத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து உபாஸ்டின் பாவாவை போலீசார் கைது செய்தனர்.
தமிழக சட்டசபை செயலாளர் நீக்கம்
சென்னை: தமிழக சட்டசபை செயலாளர் பதவியிலிருந்து ஜமாலுதீன் நீக்கப்பட்டுள்ளார். சட்டசபை செயலாளர் பதவியில் இருந்த அவர், ஓய்வு பெற்ற பின் 5 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றார். இந்நிலையில், திடீரென அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சுகோய் விமானத்திற்கு 'கிரீன்சிக்னல்'
புதுடில்லி: இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்ட சுகோய் போர் விமானங்கள் அடிக்கடி விபத்தை சந்தித்தை தொடர்ந்து, கடந்த ஒருமாதமாக அவை விண்ணில் பறப்பது நிறுத்தி வைக்கப்பட்டு, விபத்து ஏற்படுவதற்கான காரணம், தொழில்நுட்ப கோளாறு ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், சுகோய் விமானங்கள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மன்னிப்பு கோரியது ஆஸி., பல்கலை
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய பல்கலை சார்பில் வௌியிட்டுள்ள இந்திய வரைபடம் தவறானதாக உள்ளது. இது குறித்து இந்திய வௌியுறவுத்துறை தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்தது. இதையடுத்து, தவறுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, பல்கலைக் கழகம் வௌியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
பாக்.,கில் 30 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி அமைந்துள்ள மலைப்பகுதியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் இன்று குண்டு வீசி தாக்கின. இதில், சில வௌிநாட்டவர்கள் உள்ளிட்ட 30 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் சில பயங்கரவாதிகள் அங்கு பதுங்கியிருப்பதாக பாக்., தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடிக்கு கருணாநிதி நன்றி
சென்னை: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் விடுதலையை வரவேற்றுள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதி, இந்த விடுதலைக்கு பெரிதும் காரணமான பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் ஒரு அறிக்கையில் கூறி உள்ளார்.
கிரிக்கெட் வாரிய தேர்தல் ஒத்திவைப்பு
மும்பை: ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்த முத்கல் அறிக்கையை சுப்ரீம் கோர்ட் இன்று வௌியிட்டது. இதில், ஸ்ரீநிவாசன், குருநாதன் மெய்யப்பன், ராஜ் குந்த்ரா உள்ளிட்ட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அடுத்து நடக்க இருந்த கிரிக்கெட் வாரிய தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளது.
ஐ.பி.எல்., முறைகேடு:சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல்
புதுடில்லி: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்திய முத்கல் கமிட்டி, சுப்ரீம் கோர்ட்டில் தனது அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 13 பேர்களில், 6 பேரின் பெயர்களை சுப்ரீம் கோர்ட் வௌியிட்டுள்ளது.
சுனந்தா மரணம்: புதிய தகவல்கள்
புதுடில்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவியான சுனந்தா புஷ்கர் மரணம் குறித்து நடந்து வரும் விசாரணையில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை அடிப்படையாக வைத்து, சுனந்தாவை கொல்வதற்காக துபாய் அல்லது பாகிஸ்தானில் இருந்து கொலைகாரர்கள் வந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
நாகப்பட்டினம்: காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்க கூட்டமைப்பின் சார்பில், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது.இதில், மேகதாது என்ற இடத்தில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி செய்வதை மத்திய அரசிடம் கூறி, தமிழக அரசு தடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக வழக்கு தொடர வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பீகார் முதல்வர் மீது இரு வழக்கு
பாட்னா: பீகார் முதல்வரான ஜிதான்ராம் மஞ்சி மீது, ஜாதி குறித்த சர்ச்சை பேச்சை குறிப்பிட்டு இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகள் சமாஸ்திபூர் மற்றும் பெட்டியா ஆகிய கோர்ட்டுகளில் தொடரப்பட்டுள்ளது.
உ.பி., அதிகாரிக்கு சிறை:சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: உத்தரபிரதேச மாநிலத்தின் கல்வித்துறை செயலாளராக பணியாற்றும் நந்லால் குப்தாவிற்கு 7 நாள் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. கோர்ட் அவமதிப்பு வழக்கில் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் மோடி மாஜிக் இல்லை-ஆசாத்
ஸ்ரீநகர்: காஷ்மீர் சட்டசபைக்கான தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், அது குறித்து காங்,., தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான குலாம்நபி ஆசாத் கூறுகையில், 'காஷ்மீரில் மோடி மாஜிக் எதுவும் இல்லை,' என்றார்.
நாமக்கல் அருகே கன மழை: 150 வீடுகள் மூழ்கின
நாமக்கல்: பரமத்தி வேலூர் பகுதியில இன்று மதியம் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. இதில் சுல்தான்பேட்டை பகுதியில் வீடு மற்றும் கடைகளில் தண்ணீர் புகுந்தது. பல வீடுகள் பாதிப்புக்குள்ளானது. கழிவுநீர் வீட்டிற்குள் வந்ததால் இப்பகுதியினர் ஆத்திரமுற்றனர். இதனால் அரசு நிர்வாகத்தை கண்டித்து நாமக்கல்- மோகனூர் சாலையில் இப்பகுதியினர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
காஷ்மீர் தேர்தல்:பயங்கரவாதிகள் மிரட்டல்
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. இந்நிலையில், காஷ்மீர் மக்கள் இந்த தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்றும், ஓட்டு போட வரக்கூடாது என்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் புல்வாமா பகுதியில் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
அக்டோபரில் பணவீக்கம் 1.77 சதவீதமாக குறைந்தது
புதுடில்லி : மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் வெளியாகிறது. அதன்படி கடந்த சில மாதங்களாக பணவீக்கம் சரிந்து வருகிறது. செப்டம்பர் மாதம் பணவீக்கம் 2.38 சதவீதமாக இருந்த நிலையில், அக்டோபரில் 1.77 சதவீதமாக குறைந்துள்ளது. முன்னதாக 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணவீக்கம் 7.24 சதவீதமாக இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன் சில்லரை வர்த்தக பணவீக்கம் வெளியானது. இதில் அக்டோபர் மாதத்தில் சில்லரை வர்த்தக பணவீக்கம் 5.52 சதவீதமாக குறைந்தது. உணவு பொருட்களின் பணவீக்கம் குறைந்து வருவதால் மொத்த விலை பணவீக்கமும் குறைந்து வருகிறது.
தங்கம் விலை ரூ.72 குறைந்தது
சென்னை : தங்கம் விலை இன்று(நவ 14ம் தேதி) சவரனுக்கு ரூ.72 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில், மாலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,438-க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.19,504-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.90 குறைந்து ரூ.26,080-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 70 காசுகள் குறைந்து ரூ.36.70-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.715 குறைந்து ரூ.34,265-க்கும் விற்பனையாகிறது.
சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்
கோல்கட்டா: கோல்கட்டா: சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் கைதாகி சிறையில் உள்ள, மாஜி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷ் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததார். இந்த சம்பவம் ஜெயில் வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் காரணமாக சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
குழந்தைகளுக்கு மோடி வாழ்த்து
பிரிஸ்பேன்: பிரதமர் நரேந்திரமோடி, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பன் நகரில் இருந்து அனுப்பி உள்ள டுவிட்டர் தகவலில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, குழந்தைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். டுவிட்டரில், 'இன்று நவம்பர் 14, பண்டித நேருவின் பிறந்தநாள், இந்நாளில், குழந்தைகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்யசபாவில் கேள்வி நேரம் மாற்றம்
புதுடில்லி: வரும் 24ம் தேதி துவங்க உள்ள ராஜ்யசபாவின் குளிர்கால கூட்டத் தொடரில், கேள்வி நேரம் காலை 11 மணியில் இருந்து 12 மணிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேலத்தில் பள்ளி மாணவி கொலை
சேலம்: சேலம், அழகாபுரம் வன்னியர் நகரில் வசித்து வரும் துரைராஜ் மகள் தேஜாஸ்ரீ. வீட்டில் தனியாக இருந்த தேஜாஸ்ரீயை மர்ம நபர்கள் இருவர் கொலை செய்துள்ளனர். இது குறித்து சேலம் போலீசார் நடத்திய விசாரணையில், ஹெல்மெட் அணிந்து, பைக்கில் வந்த இருவர் தான் இந்த கொலையை செய்திருக்க வேண்டும் என்று தெரியவந்துள்ளது.
ராணுவம் குறித்து பரிகர் கருத்து
புதுடில்லி; காஷ்மீர் மாநிலம், மசில் போலி என்கவுன்டரில் ஈடுபட்ட 2 அதிகாரிகள் உள்ளிட்ட 7 ராணுவத்தினருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பரிகர், 'இது, ராணுவத்தில் யார் நடைமுறையை மீறி செயல்பட்டாலும் தண்டிக்கப்படுவார்கள் என்பதை காட்டுகிறது,' என்றார்.
பிரிதிவி 2 சோதனை வெற்றி
புவனேஸ்வர்: ஒடிசா மாநில கடலோர பகுதியில் இந்தியாவின் அதிநவீன, அணுஆயுதம் தாங்கி செல்லும் ஏவுகணையான பிரிதிவி 2 சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
உ.பி., சட்டசபையில் அமளி
லக்னோ: உத்தரபிரதேச சட்டசபை கூட்டம் நடந்தது. அப்போது, மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும், மற்றும் பல்வேறு பிரச்னைகளை எடுத்து கூறியும் எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இதற்கு, ஆளும் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டசபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
திருவாரூர் அருகே தங்கம் பறிமுதல்
திருவாரூர்: திருவாரூர், கத்திமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்றை மறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில், 14 கிலோ தங்கம் கடத்தப்படுவது தெரிந்தது. இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது சம்பந்தமாக மூவரிடம் விசாரணை நடத்தி
குன்னூர் மலை பாதையில் ரயில் நிறுத்தம்
ஊட்டி: மேட்டுப்பாளையம்- குன்னூர் மலை பாதையில் ஹில்குரோவில் மரம் விழுந்தது. இதனால் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டது. 3 இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. சாலைகள் சீரமைத்த பின்னர் ரயில் போக்குவரத்து துவங்கும். இந்நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மலைரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நெல்லையில் தொடர்ந்து கனமழை
திருநெல்வேலி: நெல்லையில் நேற்று இரவு மழை பெய்ய துவங்கியது. இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை பெய்வதால், குற்றால அருவிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குயி்ன்ஸ்லாந்து பல்கலையில் மோடி
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா சென்றுள்ள பிரதமர் நரேந்திரமோடி, பிரிஸ்பேனில் உள்ள குயின்ஸ்லாந்து தொழில்நுட்ப பல்கலைக்கு சென்றார். அங்கு, புதிய கண்டுபிடிப்புக்கள் குறித்தும், தொழி்ல்நுட்பங்கள் குறித்தும் விஞ்ஞானிகளிடம் மோடி கேட்டறிந்தார்,.
பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், குல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த அவர்களை தேடும் பணியில் பாதுகாப்பு படையினர் நேற்று முதல் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் தொடர்ந்து 16 மணி நேரமாக துப்பாக்கி சண்டை நடந்து வரும் நிலையில், பாதுகாப்பு படையினர் சுட்டு பயங்கரவாதிகள் இருவர் இறந்தனர்.
ஒரு வாரத்தில் மீனவர்கள் திரும்புவர்?
கொழும்பு: இலங்கை கோர்ட்டால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில், இது குறித்து இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி: தூக்கு தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது. ஆனால், வழக்கு தொடர்பாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதிபர் தண்டனையை ரத்து செய்ய முடியாது. எனவே, மேல்முறையீட்டு மனுவை வாபஸ் பெற வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அடுத்த இரண்டு தினங்களில் இந்த நடவடிக்கைகள் முடிந்து, அதிபர் தூக்கு தண்டனையை ரத்து செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு செந்தில் தொண்டைமான் கூறினார்.
தமிழக மீனவர்கள் தூக்கு தண்டனை ரத்து?
கொழும்பு: கடந்த 2011ம் ஆண்டு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த 5 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. பி்ன்னர், அவர்கள் மீது போதை மருந்து கடத்தல் வழக்கை பதிவு செய்து, சிறையில் அடைத்தது. சமீபத்தில், அவர்கள் 5 பேருக்கும் இலங்கை ஐகோர்ட் தூக்கு தண்டனை விதித்தது. இது பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. பல்வேறு அமைப்புக்கள், இலங்கை கோர்ட்டின் தீர்ப்பை கண்டித்து போராட்டங்கள் நடத்தின. மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். இந்நிலையில், மீனவர்களை சட்டரீதியாக விடுவிக்க இந்திய அரசு முயற்சி எடுத்தது. வழக்காடு செலவிற்காக தமிழக அரசு 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கியது. இதையடுத்து, இலங்கை ஐகோர்ட்டில், மீனவர்களின் தூக்கு தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில், மீனவர்கள் பிரச்னை குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை போன் மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, தமிழக மீனவர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போது, மீனவர்களை தமிழக சிறைக்கு மாற்ற ராஜபக்சே ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வௌியாகின. இந்நிலையில், தமிழக மீனவர்களுக்கு இலங்கை கோர்ட்டால் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இலங்கை ரத்து செய்துள்ளதாக இலங்கை எம்.பி., செந்தில் தொண்டைமான் தெரிவித்துள்ளார்.
சிறையில் எம்.பி., தற்கொலை முயற்சி
கோல்கட்டா : திரிணாமுல் காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டு, சாரதா சிட்பண்ட் ஊழல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு குணால் கோஷ், சிறையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை காப்பாற்றிய போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக கூறப்படுகிறது.
மத்தியமைச்சர் மீது போலி சான்றிதழ் வழக்கு
புதுடில்லி : நவம்பர் 9ம் தேதி மத்திய அமைச்சரவையில் கல்வித்துறை இணையமைச்சராக புதிதாக பதவியேற்ற ஆர்.எஸ்.கத்தேரியா மீது போலி சான்றிதழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பிறகு போலி சான்றிதழ் விவகாரத்தில் சிக்கி உள்ள இரண்டாவது அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லை பெரியாறு அணை:140 அடியை எட்டியது
இடுக்கி:மழைகாரணமாக, முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டம் 140 அடியை எட்டியது. அணையில் நீர் இருப்பு 7,126 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 1,916 கன அடியாகவும், பாசனத்திற்கு 456 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.தமிழக பொதுப்பணிதுறையினர், தேனி, இடுக்கி ஆகிய இருமாவட்ட ஆட்சியருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுப்பது குறித்து தகவல் கொடுத்துள்ளனர்.
பீகாரில் பா.ஜ.ஆட்சிக்கு வரமுடியாது; நிதிஷ் சூளூரை
பாட்னா: பீகாரில் பா.ஜ.வை ஆட்சிக்கு வரவிடாமல் செய்வதற்காகவே காங்., ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி வைத்ததாக முன்னாள் முதல்வர்நிதிஷ்குமார் கூறினார்.
பீகாரில் ஜிதின் ராம் மஞ்சி தலைமையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சியுடன், காங்., ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஒன்றாக கூட்டணிவைத்து போட்டியிட்டு வெற்றியும் பெற்றன.
இந்நிலையில் அடுத்தாணடு வரும் சட்டசபை தேர்தலையொட்டி முன்னாள் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள கட்சி மூத்த தலைவருமான நிதிஷ்குமார் , நேற்று தனது சம்ப்ரக் என்ற யாத்திரை துவக்கினார். நேற்று பெட்டியாக் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நிதிஷ் குமார் பேசியதாவது.
முன்னர் பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தோம் அப்போதே பீகார் மாநிலத்திற்குசிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்குறுதி கொடுத்த பா.ஜ. எங்களை ஏமாற்றிவிட்டது. மகாராஷ்டிராவில்நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் நிகழ்வுகளை பார்த்தால் பா.ஜ.விற்கு ஆட்சியை பிடிப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறது.சுயலாபத்திற்கான தேசியவாத கட்சியுடன் கைகோர்த்து ஆட்சியை பிடித்துள்ளது பா.ஜ. நடந்த முடிந்த இடைத்தேர்தலில் பா.ஜ.விற்கு எதிராகத்தான் காங். மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டோம்.
இம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதில் பா.ஜ.வால் ஆட்சிக்கு வரமுடியாது. வரவிடமாட்டோம். வரவிடாமல் செய்ய வேண்டியது உஙகளின் கடமை இவ்வாறு அவர் பேசினார்.
போதைப்பொருள் கடத்தலில் பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி கென்யாவில் கைது
நைரோபி:போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆப்பிரிக்க நாடான கென்யாவில், பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி கைது செய்யப்பட்டார்.நைரோபியில் விக்கி கோசுவாமியும், மம்தா குர்கர்னியும் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கினர். அவர்களை கென்யா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், மம்தா குல்கர்னி இந்தியாவுக்கும், விக்கி கோசுவாமி அமெரிக்காவுக்கும் நாடு கடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.மும்பை அந்தேரி மேற்கு பகுதியை சேர்ந்தவர் நடிகை மம்தா குல்கர்னி (வயது 42). இவர், தமிழில் 1991-ம் ஆண்டு, ஷோபா சந்திரசேகர் இயக்கிய 'நண்பர்கள்' படத்தில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து இந்தி, வங்காளம், கன்னடம், மலையாளம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து பிரபலமாக இருந்தார்.
லிபியாவில் குண்டு வெடிப்பு: தூதரகங்களுக்கு சேதம்
திரிபோலி:லிபியா தலைநகர் திரிபோலியில் நேற்று நடந்த கார் வெடிகுண்டுத் தாக்குதலில் எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம் தூதரகங்கள் அமைந்துள்ள கட்டடங்கள் சேதமடைந்தன.
எபோலா நோயால் பலி: 5 ஆயிரத்தைக் கடந்தது
ஜெனீவா:எபோலா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.எபோலா நோயால் 13,268 பேர் பாதிப்படைந்துள்ளனர் எனவும், 4,960 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உலக சுகாதார அமைப்பு கடந்த கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்திருந்தது.இந்நிலையில், அந்தப் புள்ளிவிவரங்கள் வெளியான அடுத்த சில நாட்களிலேயே பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,098 எனவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,160 எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
நக்சல்களுக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்
குர்கான்:வன்முறையைக் கைவிட்டு ஜனநாயகத்தின் வழியாக சமூக முன்னேற்றத்துக்கு பாடுபடுங்கள் என்று நக்சல்களை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தியுள்ளார்.மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்) 75-ஆம் ஆண்டு விழா குர்கானில் நேற்று நடைபெற்றது. இதில் படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பிறகு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,மாவோயிஸ்ட்டுகளால் பின்பற்றப்படுவதாகக் கூறப்படும் மா சே துங்கின் கொள்கைகளை, அவர் பிறந்த சீன நாட்டைச் சேர்ந்தவர்களே கைவிட்டுள்ளனர். ஆனால் இந்தியாவில் அவரது கொள்கைகளை பின்பற்றுவதாகக் கூறும் நக்சல்களால் அப்பாவி மக்கள் கொல்லப்படுபவதாக தெரிவித்தார்.
சத்தீஸ்கரில் டாக்டர் கைது
பிலாஸ்பூர்:சத்தீஸ்கரில், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் போது, 12 பெண்கள் இறக்க காரணமாக கருதப்படும், அறுவை சிகிச்சைகள் மேற்கொண்ட டாக்டர் ஆர்.கே.குப்தா நேற்று கைது செய்யப்பட்டார். நண்பர் வீட்டில் மறைந்திருந்த அவரை, போலீசார் பிடித்துச் சென்றனர். அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், 'சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் துருப்பிடித்தவை அல்ல; அறுவை சிகிச்சையிலும் எந்த குறைபாடும் இல்லை; பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அளிக்கப்பட்ட மருந்தில் தான் கோளாறு இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளார்.இவர் சமீபத்தில், 50 ஆயிரம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டதற்காக, கடந்த குடியரசு தின விழாவில் கவுரவிக்கப்பட்டவர்.
சட்டீஸ்கருக்கு அனைத்து உதவி: மத்திய அமைச்சர்
ராய்ப்பூர்: சட்டீஸ்ர்மாநிலத்தில் குடும்பஅறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண்கள் அதிகமானோர் பலியாயினர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய மாநில அரசு சம்பந்தப்பட்ட டாக்டரை கைது செய்தது.மேலும் இரண்டு நகரில் செயல்பட்டு வந்த மருந்து நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தியது. இந்நிலையில் மாநில அரசுக்கு தேவைப்படும் அனைத்து விதமான உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.