குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

“அடிப்படை வசதிகள் கூட இல்லை” – இந்திய ஒலிம்பிக் வீரர் புகார்

கனடாவின் வான்கூவர் நகரில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கி நடந்துவருகின்றன. இங்கு குழாய் பாதையில் படுத்த நிலையில் அதிவேகமாய் சறுக்கிச் செல்லும் லூஜ் என்ற போட்டியில் கலந்துகொள்ளும் ஜோர்ஜிய வீரர் ஒருவர் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் நடந்த பயிற்சிகளின்போது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த லூஜ் பந்தயத்தில் இந்திய வீரர் ஒருவரும் பங்குபெற்றிருந்தார். சிவா கேசவன் என்ற இவ்வீரர் , நான்கு முறை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றவராவார்.

ஆனால் இம்முறை லூஜ் ஒற்றையர் பிரிவில் அவரால் 27ஆவது இடத்தையே பெற முடிந்துள்ளது. இந்தியாவின் சார்பில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் மூன்று வீரர்களில் ஒருவரான சிவா கேசவன், தனக்கு வழங்கப்பட்ட சீருடை தொடர்பிலும், வீரர்களுக்கு இந்திய விளையாட்டு நிர்வாகிகள் செய்து தந்துள்ள வசதிகள் தொடர்பிலும் குறைகளை வெளியிட்டுள்ளார்.

தரம் குறைந்த சீருடைகளே தனக்கு வழங்கப்பட்டிருந்ததால் இந்த வீரர் துவக்க விழாவில் இந்திய அணிக்கான சீருடை இன்றி கலந்துகொண்டிருந்தார். இந்த சர்ச்சையை அடுத்து இந்திய வீரர்களுக்குத் தேவையான சீருடைகளை கனடாவில் விளையாட்டுப் உபகரணங்கள் விற்கும் இந்தியர் ஒருவர் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

கனடாவில் உள்ள ஒரு உள்ளூர் பஞ்சாபி வானொலி மூலமாக இந்திய வீரர்களுக்கு நிதி திரட்டப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறதது. கேசவன் பயன்படுத்துகின்ற லூஜ் எனப்படுகிற சறுக்குப் படுக்கை உடைந்துபோய் பழுது பார்க்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகத் தெரியவந்ததை அடுத்து அவர் புதிய சறுக்குப் படுக்கை வாங்க கனடாவில் வாழும் இந்திய சட்டத்தரணிகள் ஐந்து பேர் நாலரை லட்சம் ரூபாய் வரையில் நிதி வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிவா கேசவன் அல்லாது அல்பைன் பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் ஜாம்யங் நம்ஜியால் என்பவரும், நெடுந்தூர பனிச்சறுக்கு போட்டியில் கலந்துகொள்ளும் டாஷி லண்டுப் ஆகியோரும் வான்கூவர் வந்துள்ள இந்திய அணியில் அடங்குவர்.