குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

இந்தியா அபாரம்: சதமடித்த ஷேவாக், சச்சின்

 

கொல்கத்தாவில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் அபாரமாக ஆடி 5 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் சேர்த்துள்ளது. ஷேவாக், சச்சின்  அபாரமாக ஆடி சதம் போட்டனர்.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்  தொடர் நடந்து வருகிறது.

நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் தென்னாப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 6 ரன் வித்தியாசத்தில் வென்று 1-0 என்ற என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

2வது மற்றும் கடைசி டெஸ்ட் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதல் பேட்டிங் செய்தது.

தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய தென் ஆப்பிரிக்கா இந்திய பந்து வீச்சாளர்களின் திடீர் சூறாவளி காரணமாக நேற்றைய ஆட்ட நேரத்தின்போது 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது.

இன்று பேட்டிங்கை தொடர்ந்த தென்னாப்பிரிக்க அணியினர், 85 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்களை மட்டுமே எடுத்தனர்.

அல்விரோ பீட்டர்சன் சதமடித்தார். ஹஷிம் ஆம்லா 114 ரன்கள் சேர்த்தார். ஜாகீர்கான் 4 விக்கெட்டுகள் எடுத்து 90 ரன்கள் கொடுத்தார். ஹர்பஜன் சிங் 3 விக்கெட்டுகளுக்கு 64 ரன்கள் கொடுத்தார்.

இதை த்தொடர்ந்து பேட்டிங் செய்ய இந்திய அணி களமிறங்கியது. துவக்கத்திலேயே, 9வது ஓவரில் கவுதம் கம்பீர் பீட்டர்சன் மூலம் ரன்அவுட் ஆனார். கம்பீர் 38 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதேபோல் முரளி விஜயும் 12வது ஓவரிலேயே மார்க்கேல் பந்தில் ஏபி டி வில்லியர்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். முரளி 15 பந்துகளில் 7 ரன் மட்டுமே எடுத்தார்.

எனினும் முதலில் களமிறங்கிய ஷேவாக் அபாரமாக ஆடி அட்டகாசமான சதத்தைப் போட்டார். 70வது ஓவர் வரை நின்று விளையாடிய சேவாக் 174 பந்துகளை சந்தித்து 165 ரன்கள் சேர்த்தார்.

இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 23 பவுண்டரிகள் அடங்கும். ஜேபி டுமினியின் பந்தில் ஆஷ்வெல் பிரின்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

இதேபோல் சச்சினும் 71வது ஓவர் வரை நின்று 106 ரன்கள் (206 பந்துகள்) சேர்த்தார். 12 பவுண்டரிகள் எடுத்த சச்சின், பால் ஹாரிஸ் பந்தில் காலிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பத்ரிநாத் 8 பந்துகளை சந்தித்து ஒரே ரன் மட்டுமே எடுத்து டேல் ஸ்டீன் பந்தில் போல்ட் ஆனார். இதன் பிறகு களமிறங்கிய விவிஎஸ் லட்சுமண் மற்றும் அமித் மிஷ்ரா ஆகியோர் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்தியா 76வது ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் சேர்த்து இன்றைய ஆட்டத்தை முடித்துக்கொண்டது.
20 பந்துகளில் 9 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ள லட்சுமண் டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன்களை கடந்துள்ளார்.