குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

நாடோடிக் குட்டி கதை….!!

ஒரு நரி ஆற்றுப் பக்கம் தண்ணீர் குடிக்கப் போனது. எதிர்க்கரையில் இருந்த ப்ளம் மரங்களில் நிறைய பழங்கள் பழுத்துக் குலுங்கிக்கொண்டு இருந்தன. என்ன செய்வது, அந்த நரிக்கு நீச்சல் தெரியாதே…. ஏக்கத்தோடு பழங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தது நரி.
அந்தப் பக்கமாக ஒரு முதலை வந்தது. ‘‘முதலைக் கண்ணு, இங்கே வாயேன்’’ என்றது நரி.
‘‘அந்த ப்ளம் பழம் எவ்வளவு அழகா இருக்கு பாத்தியா? என்னை உன் முதுகிலே தூக்கிட்டுப் போனா நாம ரெண்டு பேரும் அந்தப் பழங்களைச் சாப்பிடலாம்’’ என்றது நரி.
‘‘அச்சச்சோ! எங்க அம்மா திட்டுவாங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவர் கூடத்தான் நான் சேர்ந்து போகணும்னு சொல்லி இருக்காங்க’’ என்றது முதலை.
நரிக்கோ ப்ளம் பழத்தின் மீது உள்ள ஆசை அடங்கவில்லை. ‘‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்று முதலையிடம் சொன்னது. முதலைக்கு வெட்கமாக, சந்தோஷமாக இருந்தது.
‘‘கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு’’ என்றது.
‘‘செய்யறேன். ஆனா, இப்போ எனக்கு பசி மயக்கம். உடனடியா ப்ளம் பழம் சாப்பிடணுமே…’’
‘‘சரி, என் முதுகிலே ஏறிக்கோ. உன்னை அக்கரையிலே விடறேன்’’ என்றது முதலை.
அக்கரைக்குப் போய் ஆசை தீருமட்டும் ப்ளம் பழங்களைச் சாப்பிட்டது நரி.
மீண்டும் முதலையின் முதுகில் சவாரி செய்து இக்கரைக்கு வந்தது நரி. கரையில் இறங்கி, ‘‘நான் போய் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டு ஓடியது.
நரி வரும் வரும் என்று ஆவலோடு காத்திருந்தது முதலை. நரி வரவில்லை. அது தன்னை ஏமாற்றிவிட்டது என்று முதலைக்குப் புரிந்தது. நரியை மீண்டும் பார்த்தால் தக்க பாடம் கற்றுத்தர முடிவு செய்தது.
சில நாட்கள் கழித்து, நரி அந்தப் பக்கமாக வருவதை முதலை பார்த்தது. நரி ஆற்றில் வாய் வைத்ததும் முதலை, நரியின் காலைக் கவ்வியது. உடனே நரி, ‘‘முதலைக் கண்ணம்மா, உன்னைத் தேடித்தான் வந்தேன். ஆனா வர்ற அவசரத்துல என் ஒரு காலை வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன். அதை எடுத்துட்டு வந்துடறேன்’’ என்றது. முதலை நரியின் காலை விட்டது. நரி போய்விட்டது.
முதலை எவ்வளவு காத்திருந்தும் நரி வரவில்லை. மீண்டும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலை, ஆற்றிலிருந்து புறப்பட்டு நரியின் குகைக்குள் போய் ஒளிந்துகொண்டது. வெளியே போயிருந்த நரி, குகைக்குத் திரும்பியது. வாசலில் முதலையின் காலடித் தடம்! முதலை உள்ளே இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. நரி, ‘‘அன்பு மனைவியே, நான் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். என்னை வரவேற்றுப் பாடமாட்டியா?’’ என்றது.
குகைக்குள் இருந்து சத்தம் வரவில்லை. ‘நரி திரும்பவும், ‘‘செல்ல மனைவியே நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். ‘அன்புக் கணவர் ஐயாவே வீட்டுக்கு உள்ளே வந்துடுங்க. குட்டிக்கு வாங்கிட்டு வந்ததெல்லாம் குட்டி கையிலே தந்துடுங்க’னு எப்பவும் பாடுவியே, அதைப் பாடினாதான் உள்ளே வருவேன்’’ என்றது நரி.
குரலை மாற்றிக்கொண்டு முதலை அந்தப் பாட்டைப் பாடியது.
அவ்வளவுதான்… முதலை உள்ளே இருப்பதைத் தெரிந்து கொண்ட நரி ஓட்டம் பிடித்தது