கிருஸ்தவர்களின் புனித வேதமாகக் கருதப்படும் பைபிள், 'பழைய ஏற்பாடு', 'புதிய ஏற்பாடு' என்ற இருபகுதிகளைக் கொண்டது. முதல் மனிதனான ஆதாமைக் கடவுள் படைத்ததில் ஆரம்பித்து, யேசுநாதர் பிறப்பதற்கு முன்னுள்ள காலம் வரையான வரலாற்றைச் சொல்லும் பகுதி 'பழைய ஏற்பாடு' என்றும், யேசுநாதரின் பிறப்பையும், அவரது வாழ்க்கையையும், அதன் பின்னுள்ள தொடர்ச்சியான சம்பவங்களையும் சொல்லும் பகுதி 'புதிய ஏற்பாடு' என்றும் பிரிக்கப்பட்டிருக்கிறது.
புதிய ஏற்பாட்டில், யேசுநாதரின் வரலாறு நான்கு பேர்களினால் சொல்லப்பட்டிருக்கிறது. இன்றுள்ள கணிப்பின்படி, உலகம் முழுவதும் 2.1 பில்லியன் மக்கள் கிருஸ்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் மத்தேயு, மார்க்கு, லூர்க்கா, யோவான் ஆகிய நால்வரும் புதிய ஏற்பாட்டில் கூறிய யேசுநாதரின் வரலாற்றையே தெரிந்து வைத்திருக்கிறார்கள். புதிய ஏற்பாட்டில் இல்லாத யேசுநாதர் பற்றிய கதைகளை இவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. வத்திக்கானில் அமைந்திருக்கும் கத்தோலிக்கத் திருச்சபையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனாலும், புதிய ஏற்பாட்டில் காணப்படாத, சொல்லப்படாமல் தவறவிடப்பட்ட சம்பவமொன்று, வத்திக்கான் திருச்சபையாலும், கிருஸ்தவர்கள் அனைவர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. யேசுநாதர் செய்த அதிசயங்களில் ஒன்று என்பதால் அது ஏற்றுக் கொள்ளப்பட்டதோ தெரியவில்லை. 'வெரோனிக்காவின் முக்காடு' (Veil of Veronica) என்ற பெயரில் அந்தச் சம்பவம் அழைக்கப்படுகிறது. 'வெரோனிக்கா' என்னும் பெண்மணிக்கு நிகழ்ந்த ஒரு அதிசயச் சம்பவம் அது.
அந்தச் சம்பவம்……….!
குற்றமற்றவர் என்பதை நன்கு தெரிந்த பின்னரும், பரிசேயர்களின் சதியாலும், மக்களின் வெண்டுகோளினாலும், யேசுநாதரை அவர்கள் வசமே ஒப்படைக்கிறான் ஆளுனர் பிலாத்து. சிலுவையில் அறைந்து கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் அவரை இழுத்துச் செல்கின்றனர். தான் அறையப்படப்போகும் சிலுவையைத் தானே சுமந்தபடி, நொடிக்கொரு சவுக்கடியுடன் நடக்கிறார் தேவகுமாரன். தலையில் சூட்டப்பட்டிருந்த முற்கிறீடத்தின் வழியே குருதி பொங்கி வழிகிறது. கால்கள் இடற, ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்துச் செல்லும் யேசுநாதரைச் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் மக்கள். அந்த மக்கள் கூட்டத்தில் ஒரு பெண்மணியும் இந்த அநீதிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்மணியின் பெயர் 'வெரோனிக்கா'. குருதியும், வியர்வையும், அன்புடன் சேர்ந்து வழியும் அவர் முகத்தைப் பார்க்கிறாள் அவள். அவரும் அவளை அப்போது நிமிர்ந்து பார்க்கிறார். பார்த்த நொடியில் கனிவான புன்னைகையொன்று யேசுவின் முகத்தில் தோன்றி மறைகிறது. திடீரென வெரோனிக்கா துணிச்சலான காரியமொன்றைச் செய்கிறாள். தன் தலையில் கட்டப்பட்டிருக்கும் வெண்பட்டினால் நெய்த முக்காட்டுத் துணியைக் கையிலெடுத்துக் கொண்டு யேசுவின் அருகே செல்கிறாள். அவரின் முகத்திலுள்ள இரத்தத்தையும், வியர்வையையும் பரிவுடன் துடைத்துவிடுகிறாள். அப்போதும் புன்னைகையே அவளுக்குப் பரிசாகக் கிடைக்கிறது. சவுக்குகள் சீற, மீண்டும் அவர் அழைத்துச் செல்லப்படுகிறார். அவர்கள் சென்ற வழியைப் பார்த்து வெரோனிக்கா சோகத்தில் கண்ணீர் சிந்துகிறாள். உலகமே அவளைக் கொண்டாடப் போகின்றது என்று அந்தக் கணத்தில் அவளுக்குத் தெரிந்திருக்கவில்லை. வத்திக்கானில் இருக்கும் கத்தோலிக்கத் திருச்சபை அவளுக்குப் பின்னாளில் 'புனிதர்' (Saint) என்னும் அந்தஸ்தை வழங்கப் போகிறது என்றும் தெரிந்திக்கவில்லை.
தன் கையிலுள்ள பட்டுத் துணியைச் சோகத்துடன் பார்க்கிறாள் வெரோனிக்கா. இரத்தத்தால் சிவப்பு நிறத் திட்டுகளுடன் ஈரமாகிப் போயிருந்தது துணி. ஏதோ ஒரு உணர்வு அவளை நெருட, துணியை விரித்துப் பார்க்கிறாள். அவளால் நம்பவோ முடியாத ஆச்சரியம் அந்தத் துணியில் காணப்பட்டது. இப்படியொரு அதிசயத்தை அவள் பார்த்ததேயில்லை. அவளின் கைகளில் இருந்த வெண்பட்டுத் துணியில், யேசுநாதரின் முகம் அப்படியே பதிந்து போய்க் காணப்பட்டது. கண்கள் திறந்த நிலையில், இரத்தம் வழியும் அவரின் முகம் புகைப்படம் போலப் பதிந்து போய்க் காணப்பட்டது. பரிசேயர்கள், யேசுநாதரின் சீடர்களையும், அவரைப் பின்பற்றுபவர்களையும் தேடிப் பிடித்து கைது செய்து வந்தபடியால், இந்த அதிசயத்தை யாருக்கும் சொல்லாமல் தனக்குள்ளேயே பாதுகாத்து வந்தாள் வெரோனிக்கா. 'வியர்வைத் துணி' என்று லத்தீன் மொழியில், பொருள் தரக்கூடிய 'சுடாரியம்' (Sudarium) என்னும் பெயரில், இந்தத் துணி பின்னாட்களில் அழைக்கப்பட்டது. வெரோனிக்கா தன் கடைசிக் காலங்களில் ரோம் நகருக்குச் சென்று, அங்கு ஆட்சி செய்த சீசரான 'டிபெரியுஸ்' (Tiberius) சக்கரவர்த்திக்கு இந்தத் துணியைப் பரிசாகக் கொடுத்ததாக சில தகவல்கள் சொல்கின்றன.
புதிய ஏற்பாடு எங்குமே வெரோனிக்கா என்னும் பெயர் காணப்படவில்லை. அப்படியொரு அதிசயச் சம்பவம் உண்மையில் நடைபெற்றிருந்தால், யேசுநாதரின் சரித்திரத்தை எழுதிய நால்வரில் ஒருவராவது அதைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அதனால், அப்படியொரு சம்பவம் நடைபெறவேயில்லை என்று சொல்பவர்களும் இல்லாமலில்லை. ஆனால், கத்தோலிக்க திருச்சபை வெரோனிக்காவைப் புனிதராக ஏற்றுக் கொண்டது. வத்திக்கான் நகரில் அமைந்துள்ள மிகப்பிரபலமான St.Peter's Basilica தேவாலயத்தில், புனித வெரோனிக்காவுக்கெனப் பெரியதொரு சிலையும் நிறுவப்பட்டது.
புனித வெரோனிக்காவின் இந்தச் சம்பவம் நடைபெற்றதா? இல்லையா? என்று பார்ப்பதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். இந்தக் கட்டுரையில் நாம் பார்க்க வந்த விசயமே வேறு. அந்த விசயம் எதுவெனப் பார்ப்பதற்கு முன்னர் இதை நான் சொல்லிவிட வேண்டும். இந்தக் கட்டுரை எந்த இடத்திலும் கடவுள் நம்பிக்கையாளர்களைக் காயப்படுத்தாது. கிருஸ்தவர்களின் நம்பிக்கைக்கு எதிராக எதையும் நான் சொல்லப் போவதுமில்லை. இங்கு நான் சொல்லப் போகும் தொடர்ச்சியான சில சம்பவங்களை வத்திக்கான் திருச்சபையே, விஞ்ஞானிகளைக் கொண்டு ஆராய முற்பட்டது. அந்த ஆராய்ச்சிகளின் மூலம் உண்மை எதுவெனத் தெரிந்துகொள்ள வத்திக்கானே முயற்சி செய்தது. அந்தச் சம்பவங்களை மட்டும் தெரிந்து கொள்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம். ஐரோப்பிய, அமெரிக்க நாட்டினர்களுக்கு மீடியாக்கள் மூலம் தெரிந்திருப்பது, நம் நாட்டிலுள்ளவர்களுக்கு மட்டும் தெரியாமல் இருக்கிறது. அப்படித் தெரியாமல் இருக்கும் சம்பவங்களைத்தான் இந்தக் கட்டுரை அடக்கியிருக்கும். அதனால், தயவுசெய்து, கட்டுரையின் முடிவுவரை அமைதியாகப் படியுங்கள். இப்போது அடுத்த சம்பவத்துக்குப் போகலாம் வாருங்கள். புதிய ஏற்பாட்டில் நடைபெற்ற சம்பவம் அது.
அந்தச் சம்பவம்……….!
"ஏலீ ஏலீ லாமா சபக்தானி" என்ற பெரும் சத்தத்துடன் யேசுநாதரின் ஆவி, அவர் உடலை விட்டுப் பிரிகிறது. யேசுவின் சீடரும், பெரும் செல்வந்தருமான அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசப் என்பவர், ஆளுனர் பிலாத்துவிடம் சென்று, "இயேசுவின் உடலை அடக்கம் செய்வதற்காகக் கொடுத்துவிடுங்கள்" என்று கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக் கொண்ட பிலாத்து, உடலை யோசப் வசமே கொடுக்கும்படி உத்தரவிட்டான். யேசுவின் உடலைப் பெற்றுக் கொண்ட யோசப்பும், அவரது சீடர்களும், இஸ்ரேலர்களை அடக்கம் செய்யும் முறையில், தூய்மையான மெல்லிய நீண்ட துணியினால் உடலை மூடிக்கட்டினார்கள்.பின்னர் கன்மலையில் உள்ள கல்லறையொன்றில் உடலை வைத்துப் பெரிய கல்லொன்றினால் அதன் வாசலை மூடினார்கள். மூன்றாம் தினம் கல்லறையைப் பார்க்க வந்த மரிய மக்தலேனாவும், மற்றவர்களும், கல்லறையை மூடியிருந்த பெரிய கல் விலக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். கல்லறையின் வாயில் திறக்கப்பட்டிருந்தது. பயத்துடனும் ஆச்சரியத்துடனும் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கே யேசுநாதரின் உடலைப் போர்த்தியிருந்த துணி மட்டும் கீழே வீழ்ந்து கிடப்பதைக் கண்டனர். ஆனால் அங்கே யேசுநாதர் காணப்படவில்லை. "இறந்த மூன்றாம் நாள் நான் உயிர்த்தெழுவேன்" என்று யேசுநாதர் கூறியது அவர்களின் ஞாபகத்திற்கு வந்தது. அப்போது, அங்கு தோன்றிய இறைதூதன் ஒருவன், 'யேசுநாதர் உயிர்த்தெழுந்துவிட்டார்' என்ற நற்செய்தியை அவர்களுக்கு அறிவித்தான்….
புதிய ஏற்பாடானது, யேசுநாதரின் உயிர்த்தெழுதலுக்குப் பின்னர், சீடர்களுடன் சில காலம் அவர் இருந்ததையும், அவர் பரலோகத்துக்குச் சென்றதையும், சீடர்களுக்கிடையே நடந்த சம்பவங்களையும் சொன்னதேயொழிய, யேசுநாதரின் இறந்த உடலைப் போர்த்தப் பயன்படுத்தப்பட்ட அந்தத் துணியைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. அதற்குப் பின்னர், அந்தத் துணிக்கு என்ன நடந்தது? அதை யாராவது கல்லறையிலிருந்து பாதுகாப்பாக எடுத்துச் சென்றார்களா? என்னும் தகவல் வரலாற்றில் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், அந்தத் துணி பின்னாட்களில் வரலாற்றின் மிகப்பெரிய அதிசயத்துக்கு அத்திவாரமாகப் போகிறது என்று யாருக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர், நம்பவே முடியாத சாட்சியாக, அறிவியலையே திணறடிக்கப் போகின்றது அந்தத் துணி என்று யாரும் அறிந்திருக்கவுமில்லை. கிட்டத்தட்ட 1350 ஆண்டுகளின் பின்னர், அதாவது கி.பி.1357ம் ஆண்டளவுகளில், பிரான்ஸ் நாட்டின் 'லிரே' நகரத்தில் (Lirey, France) இறந்த உடலை மூடிவைத்த நீண்ட துணியொன்று, அழகிய பெட்டியொன்றினுள் புனிதமான பொருளாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததாக சரித்திரக் குறிப்புகள் சொல்கின்றன. அரசர்களின் கொண்டாட்டங்களிலும், தேவாலயங்களில் நடைபெறும் புனித விழாக்களிலும், அந்தத் துணிக்கு முக்கிய இடமளிக்கப்பட்டு, மரியாதை செய்யப்பட்டு வந்ததாகவும் குறிப்புகள் சொல்கின்றன. கி.பி.1354ம் ஆண்டளவுகளில் பிரான்ஸில் நடைபெற்ற போரொன்றில், நாட்டுக்காகப் போரிட்டு இறந்த ஒரு மாவீரனின் உடலைப் போர்த்திய துணியாகத்தான், அந்தத் துணி இருக்க வேண்டும் என்று அந்தக் காலங்களில் கருதப்பட்டிருக்கிறது. லிரே நகரத்து மக்கள், ஒரு மாவீரனுக்குரிய மரியாதையைச் செலுத்தினார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
சில ஆண்டுகளின் பின்னர், இந்தத் துணி வரலாற்றில் மிகமுக்கியமானதொரு வடிவத்தை எடுத்துக் கொண்டது. பிரான்ஸிலிருந்த இந்தத் துணி, கி.பி.1578ம் ஆண்டளவில் இத்தாலியைச் சேர்ந்த 'டுரின்' நகருக்கு (Turin, Italy) எடுத்துச் செல்லப்பட்டது. 'டுரின்' நகரில் உள்ள கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றில் (Cathedral of Turin), ஒரு முக்கிய காரணத்தை முன்னிட்டு, மிகவும் புனிதமான ஒரு பொருளாகப் பாதுகாக்கப்படவும் ஆரம்பித்தது. அந்தப் புனிதத்துக்குக் காரணம் என்னவாக இருக்கும் என்பதை இப்போது நீங்கள் ஊகித்திருப்பீர்கள். யேசுநாதர் இறந்தபோது அவரது உடலை மூடிய துணிதான் இது என்று முடிவுக்குத்தான் அவர்கள் வந்திருந்தார்கள். அப்படியொரு முடிவுக்கு அவர்கள் வருவதற்குக் காரணங்களிருந்தன. வெரோனிக்கா, பட்டுத் துணியொன்றினால் யேசுநாதரின் முகத்தைத் துடைத்த போது, அவரின் முகம் அந்தத் துணியில் பதிந்தது போல, 'லிரே' நகரிலிருந்து 'டுரின்' நகருக்குக் கொண்டுவரப்பட்ட அந்தத் துணியிலும் முழுமையான மனிதனின் உருவ அமைப்பு பதிந்து காணப்பட்டது. நீளமான 'லினன்' (Linen) நூலினால் நெய்யப்பட்ட வெள்ளைத் துணியில், கைகளைக் குறுக்காக வைத்துக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் முன்புற உடம்பும், பின்புற உடம்பும் சித்திரமாக வரைந்தது போல, அந்தத் துணியில் பதிந்திருந்தது. பதிந்திருக்கும் உடற்பகுதியெங்கும் இரத்தம் திட்டுத் திட்டாக வடிந்திருக்கும் அடையாளங்களும் காணப்பட்டன. யேசுநாதர் மரித்த போது கூட, அவரது உடல் அரிமத்தேயு யோசப்பினால், நீண்டதொரு வெள்ளைத் துணியொன்றினாலேயே மூடப்பட்டுக் கல்லறையில் வைக்கப்பட்டது. அதனால், யேசுநாதரின் உடலை மூடிக் கல்லறையில் வைத்த அதே துணிதான், இந்தத் துணியென்றும் பலரால் நம்பப்பப்பட்டது. டுரினுக்கு எடுத்துச் சென்ற அந்தத் துணிக்கு 'டுரின் பிரேதத் துணி' (Shroud of Turin) என்ற விசேச பெயரும் கொடுக்கப்பட்டது.
கி.பி.1578ம் ஆண்டிலிருந்து, கி.பி.1898ம் ஆண்டுவரை, அந்தத் துணியில் காணப்படும் உருவம் யேசுநாதரினுடையதுதான் என்று பரவலாக நம்பப்பட்டு வந்தாலும், அதை உறுதிப்படுத்த முடியவில்லை. நம்பிக்கை ஒன்றையே அடிப்படையாகக் கொண்டு, அந்தத் துணியைப் புனிதமாகக் கருதிவந்தார்கள். காலம் செல்லச் செல்ல, அந்தத் துணியில் பதிந்திருந்த உருவம் மங்க ஆரம்பித்தது. அங்கங்களின் வடிவங்கள் மெதுமெதுவாக மறையத் தொடங்கியது. அதனால், அந்தத் துணியைப் புகைப்படமாகப் பிடித்து வைப்பதற்கு வத்திக்கான் விரும்பியது. கி.பி.1898ம் ஆண்டு புகைபடத்தை எடுக்க ஆயத்தம் செய்த போதுதான் அந்த உலகை உலுக்கும் அதிசயம் நடந்தது. அதுவரை இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் உடைத்தெறிந்தது அந்தச் சம்பவம்.
1898ம் ஆண்டு, மே மாதம், 28ம் தேதி இத்தாலியைச் சேர்ந்த புகைப்படப்பிடிப்பாளரான, 'செகண்டோ பியா' (Secondo Pia) என்பவர், டுரின் துணியை அவரது புகைப்படக் கருவியினால் (Camera) படமெடுப்பதற்கு அனுமதிக்கப்பட்டார். முதன்முறையாக அந்தத் துணி ஒரு நவீனப் புகைப்படக் கருவியினால் (அந்தக் காலத்தின்) படமெடுக்கப்பட்டது. தன் வீட்டிலிருந்த பிரத்தியேக அறையில், படத்தின் எதிர்மறைப் பிரதியை (Negative) உருவாக்கிய பின்னர், அதை உற்றுப் பார்த்தார் 'செகண்டோ பியா'. பார்த்தவர் பயத்தில் உறைந்து போனார். தான் காண்பது கனவா? நிஜமா? என்றே தெரியவில்லை அவருக்கு. அந்த எதிர்மறைப் பிரதியில் செகண்டோ பியா கண்டது, ஒரு மனித முகத்தை. அதுமட்டுமில்லை அவர் பயத்துக்குக் காரணம். அந்த மனித முகம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் சிலுவையில் அறையப்பட்டவர் என்று சொல்லப்படும் யேசுநாதரின் முகமேதான். செகண்டோ பியா கண்ட அந்த எதிர்மறைப் பிரதி உருவத்தில் மேலுமொரு அதிசயமும் அல்லது அதிர்ச்சியும் இருந்தது. அது இன்னும் விசேசமானது. ஒரு புகைப்படத்தின் எதிர்மறைப் பிரதியில் (நெகட்டிவ்) எப்போதும் எதிர்மாறான விம்பம்தான் காணப்படும். அதாவது, கருமையான பகுதிகள் வெண்மையாகவும், வெண்மையான பகுதிகள் கருமையாகவும் இடம் மாறிக் காணப்படும். ஆனால், செகண்டோ பியா எடுத்த படத்தின் எதிர்மறைப் பிரதியில் காணப்பட்ட உருவம், நெகட்டிவ் உருவமாக இருக்கவில்லை. பாசிட்டிவ் (Positive) உருவமாகவே காணப்பட்டது. அதாவது சாதாரணமான ஒரு புகைப்படம் போல இருந்தது. செகண்டோ பியா எடுத்த படத்தின் நெகட்டிவே, பாசிட்டிவாக இருந்தது. நம்பவே முடியாத ஆச்சரியம் இது. இப்படி இருப்பதற்கு ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும். எந்தத் துணியை செகண்டோ பியா படமெடுத்தாரோ, அந்தத் துணியில் இருந்த உருவம், ஏற்கனவே நெகட்டிவாகவே அந்தத் துணியில் பதிந்திருக்க வேண்டும். நெகட்டிவ் உருவம் ஒன்றைப் புகைப்படக் கருவியினால் படமெடுத்து, அதன் நெகட்டிவைப் பார்த்தால் மட்டுமே, பாசிட்டிவாகத் தோன்றும். அப்படியென்றால், அந்தத் துணியில் உள்ள உருவம் எப்படி எதிர்மறை விம்பமாகப் பதிந்தது? இந்தச் சம்பவம் அறிவியல் ரீதியாக ஒரு குழப்பத்தையே ஏற்படுத்தியது.
இதை மேலும் தொடர்வதற்கு முன்னர், சில விசயங்களை நாம் பார்க்கலாம். ஆன்மீகவாதிகள், நம்பிக்கை என்னும் தளத்தில் இயங்கிக் கொண்டிருப்பவர்கள். அதனால் எதையும் பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய கட்டாயங்களோ, நிர்ப்பந்தங்களோ அவர்களுக்கு ஏற்படுவதில்லை. நம்பிக்கை என்ற ஒன்றே அவர்களை வழிநடத்திச் செல்லும். ஆனால், கடவுள் மறுப்பாளர்களுக்கும், அறிவியலாளர்களுக்கும், நம்பிக்கையினடிப்படையில் சொல்லப்படுபவைகளுக்கான ஆதாரம் எப்போதும் தேவைப்படுகிறது. நம்பிக்கை என்னும் ஒற்றை வார்த்தை அவர்களைத் திருப்திப்படுத்திவிடாது. முட்டாள்தனமான நம்பிக்கைகளை அவர்கள் மூடநம்பிக்கையென்று சொல்லி முழுமையாக நிராகரித்துவிடுகிறார்கள். அதேநேரம் உண்மையான நம்பிக்கைகளுக்கு ஆதாரம் கேட்டு நிற்பார்கள். மேலே சொல்லப்பட்ட்ட டூரின் துணியை எடுத்துக் கொள்வோம். அந்தத் துணியில் இருக்கும் உருவம் யேசுநாதருடையது என்று சொன்னாலே நம்பிகையுள்ளவர்கள் எந்தக் கேள்விகளையும் கேட்காமல் நம்பிவிடுவார்கள். ஆனால், அறிவியல் அதை அப்படியே ஏற்றுக் கொண்டுவிடாது. ஒரு இரத்தம் தோய்ந்திருக்கும் மனித முகத்தின்மேல் ஒரு துணியைப் போட்டால், அந்த முகம் புகைப்படம் போல அல்லது சித்திரம் போலத் துணியில் பதியவே முடியாது என்றுதான் அறிவியல் சொல்லும். அதற்கான சாத்தியக் கூறுகள் இல்லவே இல்லை என்றுதான் மறுக்கும். அப்படியொரு துணி இருக்கும் பட்சத்தில், அந்தத் துணியில் உள்ள உருவத்தை யாராவது நிஜம் போல வரைந்திருக்கலாம் என்றுதான் அறிவியல் சந்தேகப்படும். டுரின் துணியிலும் அறிவியல் அப்படியொரு சந்தேகத்தையே கொண்டிருந்தது. பல நுற்றாண்டுகளுக்கு முன்னர், யாரோ இந்தத் துணியில் மனித உருவத்தை வரைந்திருக்கலாம் என்றுதான் அறிவியல் நம்பியது. ஆனால், செகண்டோ பியாவின் நெகடிவ் விம்பக் கருத்தினால், அறிவியலும் கொஞ்சம் ஆடித்தான் போனது. ஒரு மனித உருவத்தைச் சித்திரமாக வரைபவர்கள் அந்தக் காலத்தில் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு நெகட்டிவ் பிரதியை எப்படி வரைந்திருக்க முடியும்? அப்படி வரைந்திருக்க முடியுமென்று வைத்துக் கொண்டாலும், இப்படியொரு புகைப்படக் கருவியைப் பிற்காலங்களில் கண்டுபிடிப்பார்கள் என்றும், அதில் நெகட்டிவாகப் படமெடுப்பார்களென்றும் அந்தக் காலத்து சித்திரம் வரைபவனுக்கு எப்படித் தெரியும்? அதனால், இந்த எதிர்மறை வடிவம் டுரின் துணியில் இருப்பது அறிவியலுக்கு ஒரு சவாலாகதான் இருந்தது. ஆனாலும், அறிவியல் இதை நம்பிவிடத் தயாராகவில்லை. தன் அடுத்த பரிசோதனைக்கே ஆயத்தமானது.
'டுரின் பிரேதத் துணி' (Shroud of Turin) என்றழைக்கப்படும் அந்தத் துணி, கிட்டத்தட்ட நான்கரை மீட்டர் நீளமும், ஒரு மீட்டர் அகலமும் கொண்ட 'லினன்' (Linen) வகைத் துணியாகும். இறந்த ஒருவரை நிர்வாணமாக அந்தத் துணியின் மேல் கிடத்தி எஞ்சிய பகுதியால் மேல் பகுதியையும் மூடிவிடுவது இஸ்ரேலர்களின் வழமைகளில் ஒன்று. அதனால் இறந்த உடலின் பின் கால்களிலிருந்து முதுகுப் பகுதி முதல், மார்பு, முன்கால்கள் வரை முழுவதுமாக அந்தத் துணியினால் மூடுவார்கள். யேசுநாதரின் உடலையும் அதே விதமாகவே மூடிக் கல்லறையில் அடைத்தார்கள் என்று நம்பப்படுகிறது. அந்த இரண்டு மீட்டர் நீளமான துணியில், யேசுநாதரின் பின் பகுதியும் (முதுகுப்பக்கப் பகுதி), முன்பகுதியும் (மார்புப் பக்கப் பகுதியும்), டுரின் துணியில் பதிந்துள்ளதாக நம்புகிறார்கள். அந்தத் துணியில் காணப்படும் உருவத்தின் கைகள் இரண்டும் நீட்டிய நிலையில் ஒன்றின் மேல் ஒன்றாகக் கைகள் வைக்கப்பட்டபடி இருக்கிறது. அந்த உருவத்தின் முகப் பகுதியிலும், மணிக்கட்டுப் பகுதியிலும், மார்புப் பகுதியிலும் இரத்தம் வழிந்த அடையாளங்கள் சிவப்புத் திட்டுகளாகக் காணப்படுகின்றன. இந்த அடையாளங்கள் அனைத்துமே யேசுநாதருக்கு பொருந்துவதாக இருக்கின்றன. அத்துடன், செகண்டா பியா எடுத்த படத்தின் நெகட்டிவில் தெரியும் உருவத்தில் இருக்கும் தாடியும், நீண்ட தலைமுடியும் யேசுநாதரின் தோற்றத்தையே ஒத்திருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்து அந்தத் துணிக்கு மறுக்கவே முடியாத புனிதத் தண்மையையும், அற்புதத் தண்மையையும் வழங்குவதால், ஆன்மீகவாதிகளின் கொண்டாட்டத்திற்கு அடையாளமாக அது கருதப்படுகிறது.
ஆனாலும், அறிவியல் ரீதியாக எதிர்ப்புக் குரல்களும் எழாமலும் இல்லை. அந்தத் துணியைக் 'கார்பன் தேதிப்' (Carbon Dating) பரிசோதனைக்குட்படுத்தக் கேட்டபோது, வத்திக்கான் அதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அனுமதியளித்தது. அதனல், அந்தத் துணியின் கீழ் மூலையில் சிறியதொரு பகுதி வெட்டியெடுக்கப்பட்டு. கார்பன் தேதிப் பரிசோதனையும் நடைபெற்றது. பரிசோதனையின் முடிவும் அதன் தொடர் சம்பவங்களும் ஆச்சரியமானதாகவே இருந்தது.
அது என்ன முடிவு என்பதையும், உண்மையாகவே டுரின் துணி யேசுநாதருடையதுதானா? என்பதையும், இந்தத் துணி பற்றி ஆராயும் போது, மேலும் மேலும் வந்து கொண்டே இருக்கும் ஆச்சரியங்களையும் அடுத்த உயிர்மையில் பார்க்கலாம்.