குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

எனக்குச் சரி என்று பட்டதை நான் செய்யலாமா?

சமுதாயத்தில் வாழும் தனிப்பட்ட ஒருவன் தனக்குச் சரி என்று பட்டதைச் செய்ய உரிமை உண்டா?

இந்தக் கேள்விக்கு விடை தருவது கடினம். எந்தத் தனிப்பட்ட மனிதனும் தான் வாழும் சமுதாயத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே வாழ வேண்டியுள்ளது. அப்படியானால், தனிமனிதன் ஒருவனின் உரிமை, சுதந்திரம் என்பதெல்லாம் எந்தளவுக்கு இருக்கலாம்? யார் அதைத் தீர்மானிப்பது?

ஒருவர் தனது உரிமை என்று நினைப்பதை மற்றொருவர் தனது சுதந்திரத்தைப் பறிப்பதாய் உணரலாம். அதுமட்டுமல்ல, சரி பிழை என்பதெல்லாம் காலத்திற்குக் காலம், சமுதாயத்திற்குச் சமுதாயம், பண்பாட்டுக்குப் பண்பாடு கூட வேறுபடலாம். இந்நிலையில், சமுதாய மரபிலிருந்து மீறி வாழ, தன் விருப்பம் போல் செயல்களைச் செய்ய ஒரு தனிமனிதனுக்கு உரிமை உண்டா என்பதற்குப் பதில் சொல்வது சிரமம்.

சாத்திரங்கள் ஏதுக்கடி என்றும், நட்ட கல்லுப் பேசுமோ? என்றும் கேட்கிற போது சினம் கொள்ளாத சமூகம், ‘கடவுளை நம்புகிறவன் முட்டாள் – காட்டுமிராண்டி’ என்று பேசுகிறபோது எதிர்ப்பைக் காட்டுகிறது.

கொலை மட்டுமல்ல தற்கொலை கூட சட்டப்படி குற்றம் என்று வைத்துக் கொண்டிருக்கிற நாடுகள் எல்லாம், அந்நிய நாட்டின்மீது படையெடுப்பு என்று வந்துவிட்டால் அல்லது உள்நாட்டுக் கலகத்தை அடக்குதல் என்று வந்துவிட்டால் எத்தனை ஆயிரம் கொலைகளையும் சர்வசாதாரணமாக ஏற்றுக்கொண்டு விடுகிறது.

சமூகத்தின் மனநிலை என்று பார்த்தாலும், தனிப்பட்ட ஒருவன்மீது செலுத்தப்படும் அத்துமீறலை வன்முறை என்று பார்க்கும் சமூகம், கொலை கொள்ளை அட்டூழியங்கள் செய்யும் ஒருவன் கொல்லப்படுவதை அங்கீகரித்துக் கொள்கிறது. திரைப்படங்களில் வில்லன் மற்றும் அடியாட்கள் மீதெல்லாம் மிகுந்த வன்முறை செலுத்திக் கொல்லப்படுவதைப் பார்த்துத் திருப்பதிப்பட்டுக் கொள்கிறது பார்வையாளன் மனம்.

மனித உரிமை என்பதை ஒரு தனித்த கருத்துருவாக வரையறுத்துவிட முடியாது என்றே தெரிகிறது. இடம், காலம் ஆகியவற்றோடு பொருத்தித்தான் சொல்லமுடியும். ஒரு இடத்தில் ஒரு காலத்தில் மனித உரிமையாக இருப்பது இன்னொரு காலத்தில் இன்னொரு இடத்தில் எதிராகவும் கூட இருக்கலாம். பாம்பு தின்னும் ஊருக்குப் போனால் நடுமுறி நமக்கு என்று சொல்வதைப் போலத்தான்!

திருத்தொண்டர் புராணத்தில், உலகியல் சட்ட திட்டங்களுக்குப் புறம்பானவர் என்ற கருத்தில், இயற்பகையார் எனக் காரணப்பெயர் பெற்றுவிட்ட நாயனார் ஒருவர் வருகிறார். அடியார்கள் யாராக இருந்தாலும் அவர்கள் வேண்டும் யாவையும் இல்லை என்னாது கொடுக்கும் இயல்பினைக் கொள்கையாக குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர். ஒருநாள் அடியார் வேடத்துடன் ஒருவர் வருகிறார். “கொன்றை வார்சடை யாரடியார்கள் / குறித்து வேண்டின குணமெனக் கொண்டே / ஒன்றும் நீர் எதிர்மாறாது உவந்தளிக்கும் / உண்மைகேட்டு நும்பால் ஒன்று வேண்டி / இன்றுநான் இங்கு வந்தனன் அதனுக்கு / இசையலாம் எனில் இயம்பலாம்” என்று, வந்தவர் கேட்கிறார்.

அவர் கேட்டது ஒன்றும் பொருள் பண்டமல்ல; இயற்பகையாரின் மனைவியை. “உன் மனைவியை வேண்டி வந்தது இங்கு” என்று அந்த வேஷக்காரர் சொன்னதும், தன்னிடம் இல்லாத ஒன்றைக் கேட்டுவிடாமல் உள்ளதைக் கேட்டாரே என்று உளம்மகிழ்ந்து போகிறாராம் இயற்பகையார். கேட்டவரிடம் தன் மனைவியைக் கொடுத்தும் விடுகிறாராம்.

அடுத்தவன் கூட்டிச் செல்கையில் ஊரவர் கொதித்தெழுகிறார்கள். “நாடுறு பழியும் ஒன்னார் நகையையும் நாணார்@ இன்று ஃ பாடவம் உரைப்ப துன்றன் மனைவியைப் பனவற் கீந்தோ? ஃ கூடவே மடிவதன்றிக் கொடுக்க யாம் ஒட்டோம்….” என்று சூளுரைத்துத் தடுக்கிறார்கள் சுற்றத்தவர்.

இங்கே இயற்பகையாரின் உரிமை என்பது, ஊரவரின் நோக்கில் ஏன் மனைவியின் நோக்கிலும் ஏற்றுக்கொள்ள முடியாததும் கண்டனத்துக்குரியதுமாகும்.

மனித உரிமை மட்டுமல்ல அறம், நியாயம், உண்மை, சரி என்பவையும் கூட காலம் இடம் சந்தர்ப்பத்தைப் பொறுத்து மாறக்கூடியவையே. முற்றுண்மை முழுச் சரி என்றெல்லாம் எதுவும் கிடையாது. இந்தப் பிரச்சினை குறித்து, சிந்தனையாளர் உம்பர்ட்டோ எக்கோ கூறுவது இது:

“நரமாமிசம் உண்பதை வழக்கமாகக் கொண்ட கலாசாரம் ஒன்றை நான் ஆய்வு செய்ய நேர்ந்தால், நான் ஒரு சமூகவியலாளனின் நோக்கிலிருந்தே அதைப் பார்ப்பேன். நரமாமிசம் உண்பதை எப்படி அந்தக் கலாசாரம் அங்கீகரிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பேன். ஆனால் என்னுடைய சொந்த விருப்பத்தைப் பொறுத்தமட்டில் எனக்குள்ளிருக்கும் ஒழுக்கவாதி நரமாமிசம் உண்பது தவறு என்றே சொல்லுவான். ஒருவேளை நரமாமிசம் உண்ணும் ஆதிவாசிகள் சிலர் நகரத்துக்கு வந்துவிடுவதாக வைத்துக் கொள்வோம். நாம் அவர்களது கலாசாரத்தை மதிப்பதாக நினைத்து இங்கேயுள்ள மனிதர்களையும் அடித்துத் தின்பதற்கு அவர்களை அனுமதிப்போமா? அல்லது இங்குள்ள சட்டங்களுக்கு எதிரானதாக உள்ளது எனத் தடுப்போமா?

இத்தகைய சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு பிரச்சினையையும் தனித்தனியே எடுத்துக்கொண்டு, சகிப்புத் தன்மையின் எல்லை எது என்பதைத் தீர்மானிப்பதன் மூலமே விடை காண முடியும். பெண்கள் பர்தா அணிவதை ஒரு கலாசாரம் அவசியம் என்று கருதுமானால், அதைத் தடுப்பதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அது என்னுடைய அறவியல் கொள்கைகளை மீறுவதாக இல்லை. சில மதக் குழுக்களில் நடப்பது போல ஒரு கலாசாரம், நோயுற்ற குழந்தைகளுக்கு ரத்தம் செலுத்துவதைத் தடை செய்யுமானால் அது பிரச்சினைதான். ஏனென்றால், இந்த நாட்டின் சட்டம் ஒருவர் ஆபத்திலிருக்கும் போது உதவி செய்தாக வேண்டும் எனக் கூறுகிறது.

நரமாமிசம் உண்பதைத் தடை செய்தாக வேண்டும். ஏனென்றால் அது நமது மதிப்பீடுகளை மீறுவதாக இருக்கிறது. நரமாமிசம் உண்போரைப் பார்த்து, ‘இங்கே நீங்கள் வந்துவிட்ட பிறகு, இந்த சமூகத்தின் சில நியதிகளைக் கடைப்பிடித்தே ஆகவேண்டும்’ என நாம் கூறவேண்டும். சகித்துக்கொள்ளக் கூடியது எது என்பதற்கான வரையறை வகுக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், சகித்துக் கொள்ளவே முடியாத சில விஷயங்களும் இருக்கவே செய்கின்றன – இனவெறி, நரமாமிசம் உண்பது, கொலை செய்வது போன்ற சில விஷயங்கள். மனித உயிர்களைப் பலியிடுவதை எனது நாட்டில் நான் அனுமதிக்கவே முடியாது. ஆனால், மனிதர்களைப் பலியிடும் ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதை அடிமைப்படுத்தி, அந்தப் பழக்கத்தை நிறுத்தும்படி என்னிடம் கூறப்பட்டால், எனது நிலை இக்கட்டானதாகி விடும்.

காலனி ஆதிக்கத்தை நியாயப்படுத்தக் கூறப்படும் காரணம் இதுதான்: “நாம் மற்ற நாடுகளுக்குச் சென்று அந்த மக்களுக்கு நல்லது கெட்டது பற்றித் தெளிவுபடுத்த வேண்டும்” என்ற காரணத்தைத்தான் கூறுகிறார்கள். இதற்கு, இப்படி இப்படித்தான் என்பது போன்ற பதில்கள் கிடையாது. அப்படி முடிவுபண்ண ஆரம்பித்தால், நம்முடைய வாழ்க்கைத் தரத்தின் அளவுக்கு இல்லை என்பதனாலேயே உலகிலுள்ள ஒவ்வொரு குழுவையும் நாம் அடிமைப்படுத்த வேண்டி வரும்.

சிரமமாக இருந்தாலும் கூட இத்தகைய பிரச்சினைகளை, நாம் ஒவ்வொன்றையும் தனித்தனியே பரிசீலித்துத்தான் தீர்த்தாக வேண்டும்.”