குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

தகுதியறிந்து மோத வேண்டும் குட்டிகதை !!

ஓர் மலை சூழ் அடர்ந்த கானகத்தில் ஒரு காட்டு பூனை தன் வழியே நடந்து சென்று கொண்டிருந்தது. மிகவும் பருத்து புலி போன்ற வரிகளுடன் உரோமங்கள் அடர்ந்து காணப்பட்ட அது தான் புலியின் இனம் என்று எண்ணி மகிழ்ந்து கொண்டது. தனது மீசையை முன்னங்கால்களால் நீவி விட்டுக் கொண்டு சுற்றும் முற்றும் பெருமையுடன் பார்த்தது. அதைக்கண்டு சிறிய பறவையினங்கள் “கீச்கீச்” என்று கத்திக் கொண்டு ஓடியதும் அதன் கர்வம் அதிகமானது.

ஆகா! நம்மைக் கண்டு இத்தனை பேர் பயப்படுகின்றனரே! நாமும் புலிதான்! என்று மேலும் ஆனந்தம் அடைந்து கொண்டது. அங்கேயே அமர்ந்து தனது உடலை நாவால் நக்கிக் கொண்டே சுற்றும் முற்றும் இரை ஏதும் சிக்காதா என்று பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கே நிலவிய நிசப்தத்தை கலைத்தவாறே மான் ஒன்று சரசரவென ஓடிவந்து கொண்டிருந்தது.

மான் ஓடிவருவதை கண்ட காட்டுப் பூனை, என்ன மானாரே! ஏன் இவ்வாறு தலை தெறிக்க ஓடிவருகிறீர்கள்!அப்படி என்ன தலை போகிற விசயம்? என்று கேட்டது.

உயிர் போகிற விசயம் பூனையாரே! புலி ஒன்று இந்த பக்கமாக வருகிறது! ஓடி தப்பித்துக் கொள்ளும்! என்று போகிற வேகத்தில் சொல்லி மறைந்து விட்டது மான்.

அட புலியும் என் இனம் தானே! இதற்கெல்லாம் பயப்படலாமா? நீ வேண்டுமானால் ஓடு நான் அசைய மாட்டேன். என்று இருந்த இடத்திலேயே சவுகர்யமாக படுத்துக் கொண்டது காட்டுப்பூனை.சற்று நேரத்தில் அங்கே புலி வேகமாக வந்து வழியில் படுத்துக்கிடக்கும் பூனையை கண்டது.

என்ன தைரியம்! என் வழியை மறித்து படுத்துக் கிடக்கிறாயே! மரியாதையாக ஒதுங்கி வழிவிடு! என்று கர்ஜித்தது புலி!

காட்டுப்பூனையோ! நிதானமாக எழுந்து சோம்பல் முறித்தபடி. புலியே நான் ஏன் உனக்கு வழிவிட வேண்டும்? நீயும் நானும் ஒரே இனம்! சொல்லப் போனால் என்னில் இருந்து உருவானவன் தான் நீ! எனவே நீதான் என் வழியில் குறுக்கிடக் கூடாது. மரியாதையாக நீ ஒதுங்கிச் செல்! என்றது

ஏய்! அற்ப பூனையே! வீணாக எரிச்சலைக் கிளப்பாதே! நீ என் இனமா? இப்படி சொல்ல உனக்கு என்ன தைரியம் இருக்க வேண்டும். உனக்கும் எனக்கும் எத்தனை வித்தியாசங்கள்! மரியாதையாக வழியைவிடு என்று கர்ஜித்தது புலி.

முடியாது! முடிந்தால் என்னை வென்றுவிட்டு பின்னர் செல் என்றது கர்வம் பிடித்த பூனை!

ஒஹோ! நீயாக வந்து உயிரை கொடுக்கிறாய்! விதி யாரை விட்டது! வேண்டாம் இப்போதும் உன்னை மன்னித்துவிடுகிறேன். என் தகுதிக்கு உன்னை போன்ற அற்ப பிராணிகளுடன் மோதுதல் குறைவானது என்று சொன்னது புலி.

பார்த்தாயா! என்னை கண்டு நீயே பயப்படுகிறாய்! தைரியம் இருந்தால் மோது! என்று கர்வத்துடன் சவால் விட்டது பூனை!

உம்! விதி வலியது! என்று கூறிவிட்டு தன் முன்னங்காலால் ஒரே அடி வீசியது புலி! அந்த பூனை வலி தாளாமல் அலறியபடியே தொலைவில் பறந்து விழுந்தது. ஐயோ அம்மா! என்று அலறியது.

புலி, நிதானத்துடன் சொன்னது! பூனையே உன்னை கொன்றிருப்பேன்! ஆனால் அது என் தகுதிக்கு அழகல்ல! பிழைத்துப் போ! இனியாவது உன் தகுதிக்கு ஏற்றவருடன் மோது! என்று சொல்லிவிட்டு சென்றது.

காட்டுப்பூனை அதன் பின் யாருடைய வம்புக்கும் போவதே இல்லை!