குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

வேந்தராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள்

மாமன்னர் அக்பர் தன் நாட்டின் நடப்பு நிலை எப்படி இருக்கிறது என்று தனது ஒற்றர்களின் மூலம் அறிந்து கொள்வது வழக்கம். இருப்பினும் ஒருநாள் தன் நாட்டு மக்கள் தம்மைப்பற்றி என்ன நினைக்கின்றார்கள். என்பதை தாமே நேரில் அறிந்து கொள்ள ஆவல் ஏற்பட்டது.

மன்னர் தன் எண்ணத்தை பீர்பால் அவர்களிடம் கூறினார். மக்களின் மனநிலையை அறிந்து கொள்வது மன்னரின் கடமையாகும். ஆதலின் நேரில் போய் சந்திப்போம் என்றார் பீர்பால்.நீங்கள் சொல்வது போல் நேரில் சென்று சந்தித்தால் மக்கள் உண்மையை கூற தயங்குவார்கள் அல்லவா? என்றார் மன்னர்.மன்னர் பெருமானே, நேரில் போகலாம் என்று சொன்னது மாறுவேடத்தில். அப்படி சென்றால் யாருக்கும் அடையாளம் தெரியாது. மக்களும் மனம் திறந்து உண்மையைக் கூறுவார்கள் என்றார் பீர்பால்.பீர்பால் கூறியபடியே சாதாரண விவசாயிகள் போன்று மாறுவேடத்தில் நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்றனர்.வெகுதூரம் சென்றதும் ஒரு ஒற்றையடிப் பாதைக் குறுக்கிட்டது. அந்தப் பாதை அடர்ந்த காட்டுப் பகுதிக்குச் செல்லும் வழியாகும். வெகு தூரம் வந்தமையால் மன்னருக்கு களைப்பு ஏற்பட்டது. அதனால் பீர்பாலிடம் இங்கு சற்று ஓய்வெடுத்துவிட்டு செல்லலாம் என்றார் மன்னர்.

பீர்பாலும் அப்படியே செய்வோம் என்று கூறி ஒரு பெரிய மரத்தின் நிழலில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அச்சமயம் காட்டிற்கு செல்லும ஒற்றையடிப் பாதையின் வழியாக விறகுகளை நன்கு கட்டி தலையில் சுமந்து கொண்டு ஒருவர் வந்து கொண்டிருந்தார்.அவர்கள் அருகில் அவர் வந்ததும். பீர்பால் அவர்கள், அய்யா வயதானவரே, இந்த கடுமையான வெயிலில் விறகை சுமந்து செல்வது சிரமமாக இல்லாயா? ஆகையினால் இங்கு சற்று ஓய்வெடுத்து விட்டு செல்லுங்கள் என்றார்.அந்த முதியவருக்கு இவர்கள் யார் என்பது தெரியாமையினால் எனது தலையிலுள்ள விறகு சுமையை கீழே இறக்கிவிட்டு ஓய்வெடுப்பது நல்லதுதான். ஆனால் இப்போது கீழே இறக்கும் சுமையை பின்னர் யார் தலையில் தூக்கி வைப்பது என்றார்.

முதியவரே கவலைப்பட வேண்டாம். நீங்கள் போகும் வரையில் நாங்கள் இங்குதான் இருப்போம். நாங்களே உங்கள் சுமையை தூக்கி தலையில் வைக்கிறோம் என்று கூறியப்படி பீர்பால் அந்த முதியவரின் தலையிலுள்ள விறகு சுமையை கீழே இறக்கி வைத்தார். மூவரும் மரத்தினடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயம் பீர்பால் அவர்கள் மன்னரின் காதில் இரகசியமாக ஏதோ கூறினார். மன்னரும் சரி என்று தலையாட்டினார்.

பீர்பால் அவர்கள் அந்த முதியவரைப் பார்த்து, அய்யா! தங்களுக்கு இன்று நடந்த விஷயம் தெரியுமா? என கேட்டார்.

என்ன நடந்தது? என்றார் முதியவர்.நமது மன்னர் இன்று இயற்கை எய்தி விட்டார் என்றார் பீர்பால்.இதனைக் கேட்ட முதியவர் அதிர்ச்சி அடைந்தவராக, நமது மன்னர் இயற்கை எய்தி விட்டாரா? இது எப்படி நிகழ்ந்தது? எவராவது சூழ்ச்சி செய்து விட்டார்களா? இது உண்மையா? என்று மிகப் பதட்டத்துடன் கேட்டார்.மன்னர் இயற்கை எய்திவிட்டார் என்றதும் ஏன் இவ்வளவு பதட்டம் அடைகின்றீர்? என்றார் பீர்பால்.

பதட்டப்படாமல் என்ன செய்ய? நமது மன்னர் நாட்டிற்கு பல நன்மைகள் செய்துள்ளார். இன்று நமது நாடு செழிப்புடன் விளங்குவதற்குக் காரணம் நமது மன்னரின் நிர்வாகத் திறமை. அது மட்டுமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை நலமுடன் வாழ பல சலுகைகள் வழங்கிய நல்லிதயம் படைத்தவர். அவருக்கா இந்நிலை. இவரைப் போன்று நம்நாட்டிற்கு எந்த மன்னரும் வாய்க்க முடியாது என்று கவலையுடன் கூறினார் முதியவர்.இவ்வளவு கூறுகின்ற நீங்கள் காட்டில் விறகு வெட்டி விற்றுதானே வாழ்கின்றீர்கள், இருப்பினும் தங்களுக்கு மன்னர்மீது இவ்வளவு நல்லெண்ணம் கொண்டுள்ளீர்கள் என்பது ஆச்சர்யம் தான் என்றார் பீர்பால்.

காட்டில் விறகு வெட்டி விற்பதனால் என் குடும்பத்திற்கு எந்தவித கஷ்டமும் இல்லை. நல்ல வருமானமும் கிடைக்கிறகு. எனது குடும்பம் கஷ்டத்தில் வாழ்ந்தால் தானே மன்னரை குறை கூற முடியும்? என்றார் முதியவர்.முதியவர் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு விடைப் பெற்றார். பீர்பால் அந்த விறகு சுமையை மீண்டும் அந்த முதியவரின் தலையில் ஏற்றிவிட்டு அவர்களும் புறப்பட்டுச் சென்றனர்.மன்னர் பெருமானே! இந்த மாறுவேட பயணத்தினால் அந்த விறகு வெட்டியான முதியவர் மனதில் நீங்கள் ஆழப் பதிந்துள்ளீர்கள் என்பது அறிய முடிகிறது. இதனை கேட்ட எனக்கும் மனமகிழ்வை அளிக்கின்றது என்றார் பீர்பால்

அரசரும் – பீர்பாலும் பேசியபடி நகர வீதியை அடைந்தனர். நடந்து வந்த களைப்பால் மன்னருக்கு தாகம் எடுத்தது. பீர்பால் அவர்களே, தாகத்திற்கு ஏதாவது அருந்திவிட்டு செல்லலாம் என்றார் அக்பர்.அப்படியே செய்யலாம் என்று பீர்பால் கூறிக் கொண்டிருக்கும்போதே வீதியில் மோரு….. மோரு….. என்று கூவியப்படி ஒரு பெண் தலையில் மோர் பானையுடன் வந்துக் கொண்டிருந்தார்.அந்த மோர்காரப் பெண்ணைப் பார்த்து பீர்பால், மோர்காரப் பெண்ணே, எங்கள் இருவருக்கும் இரண்டு குவளை மோர் கொடு என்று கூறி மோருக்கானப் பணத்தைக் கொடுத்தார்.அரசரும் – பீர்பாலும் மோரைக் குடித்தனர்.

பீர்பால் மோர்காரப் பெண்ணைப் பார்த்து, என்ன இவ்வளவு சாதாரணமாக இருக்கிறாய்? நம் மரியாதக்குரிய மன்னர் இன்று இயற்கை எய்திவிட்டார். என்கிற செய்தி உனக்குத் தெரியாதா? என்று கேட்டார்.அதற்கு மோர்காரப் பெண். மன்னர் இருந்தால் என்ன? மறைந்தால் என்ன? மன்னராகப் பிறந்தாலும் இயற்கையை வெல்ல முடியாது. நல்ல வேளை செய்தியை இப்போது சொன்னீர்கள் மன்னரின் மறைவைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவார்கள் அங்கு சென்றால் எனக்கு நல்ல வியாபாரம் ஆகும் மேலும் ஒரு மோர் குடம் விற்றுவிடும் என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாகச் சென்றுவிட்டாள்.

பீர்பால் அவர்களே, நாம் சந்தித்த இருவரும் இருவிதமான எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனரே இதற்கு என்ன காரணம்? என்றார் அக்பர்.மன்னர் பெருமானே, விறகு வெட்டி பழுத்த முதியவர். மன்னரான தங்களின் மீது பெரும் மதிப்பை வைத்துள்ளார். அதனால் இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியினால் மிகவும் வேதனையடைந்தார்.மோர் விற்ற பெண்ணிடம் கொஞ்சம் கூட நாட்டுப்பற்று கிடையாது. சுயநலமிக்கவள். சிந்தனை முழுவதும் மோர் அதிகமாக விற்றால் நல்ல பணம் கிடைக்கும் என்பதாக இருந்தது. அவளது எண்ணப்படி பார்த்தால் அவள் கூறியதிலும் தப்பில்லை என்றார் பீர்பால்.

அப்படியானால் யார் மீது தவறு? என்று வினவினார் மன்னர்.மன்னர் பெருமானே, தவறு நம்மீது தான். ஏனெனில் நாட்டின் நலன் கருதி பல நல்ல செயல்களைச் செய்யும்போது மக்களின் சிலர் போற்றுவதும். சிலர் தூற்றுவதும் நடைமுறையான விஷயம்தான்.நாட்டில் எது நடந்தாலும் மன உறுதியுடன் தாங்கி மக்களின் நன்மைக்காக நாடாளும் மன்னராக இருக்க வேண்டுமே தவிர, மக்கள் இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று சிந்திக்கக்கூடாது. வீரத்துடனும் – விவேகத்துடனும் நாட்டை ஆள்வதினால் தான் பிறர் நாட்டவரும் தங்களைப் போற்றுகின்றனர் என்றார் பீர்பால்.பீர்பால் கூறியதைக் கேட்ட மன்னர், நாடாளும் மாமன்னராக இருந்தாலும் மக்கள் நான்கு விதமாகத்தான் பேசுவார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றார் மன்னர் அக்பர்.