குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 10 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

முட்டாள்களிடம் எப்படி பேசுவது? – அக்பர் பீர்பால் கதை

அக்பர் ஒரு நாஷ் பீர்பாலிடம் பேசித் கொண்டிருக்கும் போது ஒரு புதுமையான கேள்வி ஒன்று எழுந்தது.உடனே பீர்பாலிடம் முட்டாள்களிடம் எப்படி பேசுவது? என்று அக்பர் கேட்டார்.

திடீரென்று அக்பர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்று எதிர்பாராமையால், மன்னர் பெருமானே இதற்கான பதிலை நாளைக்குக் கூறுகிறேன் என்றார் பீர்பால்.

மறுநாள் காலை – பீர்பால் டில்லிக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று ஒருவனிடம் நான் சொல்வது போன்று செய்தால் நூறு வெள்ளிக்காசுகள் தருகிறேன் என்றார்.அவனும் பீர்பால் சொல்வது போன்று செய்வதாகக் கூறினான்.உன்னை நான் இப்போது மன்னரின் அரண்மனைக்கு அழைத்துச் சென்று மன்னரிடம் அறிமுகம் படுத்தி வைப்பேன். அச்சமயம் மன்னர் உன்னிடம் சில கேள்விகளைக் கேட்டார்.

மன்னர் என்ன கேள்விகள் கேட்டாலும் நீ வாய் திறந்து பதில் பேசாது மவுனமாக நின்று கொண்டிருக்க வேண்டும் என்றார்.

பீர்பால் கிராமத்தானை அரசவைக்கு அழைத்துச் சென்றார்.மன்னர் பெருமானே! இவன் எனது உறவினன், படித்தவன், உலக அறிவு மிக்கவன், தாங்கள் என்ன கேள்விகள் கேட்டாலும் இவனால் உடனடியாகப் பதில் கூற முடியும்! என்று அவனை மன்னரிடம் அறிமுகப்படுத்தி வைத்தார் பீர்பால்.

மன்னர் அவனை நோக்கி, பீர்பாலிடம் கேட்ட அதே கேள்வியை, முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டார்.கிராமத்துக்காரன் பீர்பாலிடம் சொல்லியபடி மன்னர் கேட்ட கேள்விக்கு பதில் ஒன்றும் பேசாது மவுனமாக நின்றிருந்தான்.மன்னர் பலமுறை இதுபோன்று கேட்டும் அவன் பதில் கூறாது வாய்மூடி மவுனம் சாதித்தான்.

இதனால் அக்பர், பீர்பாலை நோக்கி, என்ன? உங்கள் உறவினரிடம் பலமுறை கேட்டும் இதற்குப் பதில் கூறாது மவுனம் சாதிக்கிறானே! நீங்கள் கூறியபடி இவன் அறிவாளியாக இருப்பான் என்று தெரியவில்லையே! என்றார்.பீர்பால், மன்னர் பெருமானே! தாங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் கூறி விட்டானே என்றார்.

நான் கேட்ட கேள்விக்கு எங்கே பதில் கூறினான் மவுனமாக நின்று கொண்டிருக்கிறானே! என்றார் அக்பர்.மன்னர் பெருமானே! நேற்றைய தினம் முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று தானே கேட்டீர்கள். அதற்கான விடையைத் தான் தன்னுடைய மவுனத்தின் மூலம் விடை கூறியுள்ளான். அதாவது முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் மவுனமாக இருக்க வேண்டும் என்பதை தான் பேசாது வாய்மூடி மவுனமாக இருந்தான் என்றார் பீர்பால்.

முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னைக் குறிப்பிட்டாலும், முட்டாள்களிடம் எதனைப் பற்றிப் பேசினாலும் அவர்களுக்கு தக்க பதில் கூற முடியாது. ஆகையினால் அவர்களிடம் பேசாமல் இருப்பதே சிறந்ததாகும் என்பதை உணர்த்திய பீர்பாலின் நுண் அறிவைப் பாராட்டினார் அக்பர்