தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்திருப்பதன் மூலம் நீதிமன்ற உத்தரவை அவமதித்திருப்பதாக சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கார்த்திகை மாதம் இரண்டாம் தேதியன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “மதுரை மாவட்ட ஆட்சியரின் ஆய்வு அறிக்கை சரிதானா என்பதை ஆய்ந்து அறிக்கை தாக்கல் செய்யத்தான் சகாயத்தை சென்னை உயர்நீதிமன்றம் நியமித்துள்ளது என்று கூறியிருப்பதாக தெரிவிக்கும் சகாயம் ஆய்வுக் குழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முகிலன், உண்மையில், உயர் நீதிமன்றம் தமிழகம் முழுவதும் நடக்கும் முறைகேடுகள் குறித்து விசாரிக்கவே சகாயம் குழுவுக்கு உத்தரவிட்டதாகவும், ஆனால் தமிழக முதல்வர் அதை மாற்றிச் சொல்வதாகவும் குற்றம்சாட்டுகிறார்.