குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உயிர் காக்க செயற்கை இரத்தம் தயார் !

இரத்தம், நம் உயிர் காக்கும் திரவம். நம் உடலில் சுமார் ஐந்தரை லிட்டர் ரத்தம் எப்போதும் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதில் 55 சதவீதம் பிளாஸ்மா எனும் திரவம். மீதி 45 சதவீதம் சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள், உணவுச் சத்துகள், வைட்டமின்கள், தாதுக்கள், ஹார்மோன்கள், என்சைம்கள், உடல் கழிவுகள் என்று பல பொருள்கள் உள்ளன.

 

 

இரத்தம் பார்ப்பதற்கு சிவப்பாக ஒரே நிறத்தில் இருந்தாலும் அதில் A, B, AB, O என்று பல வகைகள் உள்ளன. சிவப்பணுக்களில் காணப்படும் ஆன்டியெனை வைத்து இப்படி வகை பிரித்திருக்கிறார்கள். இந்தக் காரணத்தால்தான், எல்லோருடைய ரத்தமும் எல்லோருக்கும் சேருவதில்லை. குறிப்பிட்ட வகை ரத்தத்தை அதே ரத்த வகை உள்ளவருக்கு மட்டுமே செலுத்த முடியும். இதற்கு விதிவிலக்காக, 'O' வகை ரத்தத்தை மட்டும் அனைவருக்கும் செலுத்தலாம்.

இன்றைய இயந்திரகதியிலான வாழ்க்கைமுறை மற்றும் மாறிவிட்ட உணவுக் கலாசாரம் காரணமாக ரத்தத்தின் தேவையும் அதிகரித்து வருகிறது. விபத்தில் அடிபட்டு ரத்தம் வெளியேறும்போது, அறுவை சிகிச்சையின்போது, ரத்தசோகை, தலசீமியா, ஹீமோஃபீலியா, மூலநோய் மற்றும் மாதவிலக்கின்போது அதீத ரத்தமிழப்பு ஏற்படும்போது, அதை ஈடுகட்ட ஒருவருக்கு ரத்தம் செலுத்த வேண்டி வரலாம். அப்போது ஆரோக்கியமாக உள்ளவரிடமிருந்து ரத்தத்தைப் பெற்று தேவைப்படுபவருக்குச் செலுத்தப்படுகிறது. ஆனால், நம்மிடம் ரத்தம் கொடுக்க முன்வருபவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர். ரத்தத்தின் தேவையோ மிக மிக அதிகம். இதற்கு என்ன தீர்வு என்று யோசித்தபோது செயற்கையாக ரத்தம் தயாரிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர் விஞ்ஞானிகள்.

இந்த முயற்சி 1940ல் தொடங்கியது. 1983ல் இரு கலிபோர்னிய விஞ்ஞானிகள் செயற்கை ரத்தம் தயாரிப்பதில் முதன்முதலில் வெற்றிபெற்றனர். ஆனால், அந்த ரத்தம் 4 மணி நேரமே உடலில் வேலை செய்தது. இதைத் தொடர்ந்து கிரீன்கிராஸ் எனும் ப்பானிய நிறுவனம் பெர்ஃபுளூரோகார்பன் (Perfluorocarbon) எனும் வேதித்திரவத்தைப் பயன்படுத்தி 'ஃபுளோவோசால் டிஏ20' (Fluosol DA 20) எனும் செயற்கை ரத்தத்தைத் தயாரித்தது. இதுவும் கொஞ்ச நேரம்தான் வேலை செய்தது. ஆகவே, இயற்கை ரத்தத்துக்கு இணையாகச் செயற்கை ரத்தத்தைத் தயாரிக்கும் முயற்சிகள் உலகளவில் தொடர்ந்தன. ஸ்டெம்செல்கள் மூலம் இப்போது வெற்றி கிடைத்துள்ளது.

உடலில் உறுப்புகளை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிப்பவை ஸ்டெம் செல்கள். உடலின் அடிப்படை செல்களான இவற்றுக்கு ஓர் உயரிய தன்மை உண்டு. அதாவது, ஒரே தன்மையுள்ள செல்லிலிருந்து பல்வேறு விதமான உயிர்செல்களை உண்டாக்கக்கூடிய பன்முகத்தன்மை இவற்றுக்கு உண்டு. இதனை 'புளூரிபொட்டன்சி' (Pluripotency) என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கருப்பையில் கரு வளர்ச்சி அடையும்போது கீழிருந்து மேலாக எண்டோடெர்ம் (Endoderm), மீசோடெர்ம் (Mesoderm), எக்டோடெர்ம் (Ectoderm) என்று மூன்று செல் அடுக்குகள் முதலில் உருவாகின்றன. இவற்றிலிருந்துதான் வெவ்வேறு விதமான உறுப்புகள் உருவாகின்றன. ஆனால், இந்த மூன்று செல் அடுக்குகளையும் ஒரே செல்லிலிருந்து உருவாக்க முடியும் என்பதுதான் ஆச்சரியத்திற்குரிய அறிவியல் விஷயம். அப்படிப்பட்ட செல்களுக்குப் 'புளூரிபொட்டன்ட் செல்கள்' (Pluripotent cells) என்று பெயர். உடலில் ஏதாவது சில செல்களை எடுத்துக்கொண்டு, செயற்கையாக இவற்றைப் 'புளூரிபொட்டன்ட் ஸ்டெம் செல்'களாகவும் மாற்ற முடியும். இந்த செல்களை 'இண்டியூஸ்டு புளூரிபொட்டன்ட் ஸ்டெம் செல்கள்' (Induced Pluripotent Stem cells IPS) என்கிறோம். இந்த செல்கள்தாம் செயற்கை ரத்தம் தயாரிப்பதற்கு இப்போது உதவியுள்ளன.

'o' வகை ரத்தம் கொண்ட ஒருவரின் தோலிலிருந்து ஃபைப்ரோபிளாஸ்ட் (Fibroblast) எனும் செல்களை மட்டும் பிரித்தெடுத்து, அவற்றை 'ஐபிஸ்' செல்களாக மாற்றி, அவற்றிலிருந்து புதிய சிவப்பணுக்களை உற்பத்தி செய்திருக்கிறார்கள், இங்கிலாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இந்த ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பேராசிரியர் மார்க் டர்னர் (Marc Turner) இந்த மருத்துவ அற்புதம் குறித்து பேசும்போது, “பரிசோதனைக்கு வந்தவரின் தோல் செல்களை எடுத்து 'ஐபிஸ்' செல்களாக மாற்றினோம். அவற்றிலிருந்து மீசோடெர்ம்களை உருவாக்குகின்ற முன்னோடி செல்களான மீசோதீலியல் செல்களைப் பிரித்தெடுத்தோம். காரணம், மீசோதீலியல் செல்களில் இருந்துதான் இயற்கையாகவே சிவப்பணுக்கள் உருவாகின்றன. இந்த செல்களை எங்கள் சோதனைக் கூடத்தில் ஒரு வளர் ஊடகத்தில் வளர்த்தோம். இவை சிவப்பு அணுக்களாக உருவாவதைத் தூண்டுவதற்கும், முழுமையான வளர்ச்சி பெற்று முதிர்ச்சி அடைவதற்கும் சில வேதிப் பொருள்கள் உதவுகின்றன என்பதை அறிந்து, அவற்றை இந்த செல்களோடு கலந்தோம். இந்த செல்களின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணித்து வந்தோம். என்ன ஆச்சரியம், அடுத்த இரண்டு வாரங்களில் புதிய சிவப்பணுக்கள் உருவாகியிருந்தன. இது ஸ்டெம்செல்கள் மூலம் செயற்கையாக ரத்தத்தை உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பமாகும்” என்றார்.

“இந்தச் சிவப்பணுக்களின் அமைப்பும் பண்புகளும் இயற்கை ரத்த செல்களோடு பெரிதும் ஒத்துப் போகிறது. இதை மனிதர்களிடம் சோதித்துப் பார்க்கவேண்டியது அடுத்தகட்டம். தலசீமியா எனும் கடுமையான ரத்தசோகை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி ரத்தம் செலுத்தவேண்டியது அவசியம். ஆகவே முதலில் அவர்களுக்கு இதைச் செலுத்திப் பார்க்க முடிவு செய்துள்ளோம். மனித உடல் இதை ஏற்றுக்கொண்டால், ரத்தம் தேவைப்படுவோர் அனைவருக்கும் இதைப் பயன்படுத்த முடியும்” என்கிறார் டர்னர்.

உடலில் இயற்கையாக உற்பத்தியாகின்ற சிவப்பணுக்கள் சுமார் 120 நாட்களுக்குத்தான் உயிரோடு இருக்கும். ஆனால் செயற்கை ரத்தச் சிவப்பணுக்களோ 120 நாட்களைக் கடந்தும் உயிரோடு இருக்கின்றன. அடுத்து இந்த செல்களின் ரத்தவகை 'o' என்பதால் இதை எல்லோருக்கும் செலுத்த முடியும்; ரத்தம் சேராது எனும் பேச்சுக்கே இடமில்லை. பொதுவாக ரத்தம் செலுத்தும்போது புதிய நோய்த் தொற்று வந்துவிடுமோ என ஏற்படும் பயத்துக்கும் இதில் இடமில்லை.