06.03.2014-உக்ரைனின் ஒரு பகுதியாக இருக்கும் கிரீமியா ரசியாவுடன் ஓர் மாகாணமாக இணைய திடீர் முடிவு செய்துள்ளது. ரசியாவுடன் இணைப்பது குறித்து வரும் 16-ந் தேதி வாக்கெடுப்பு நடத்த கிரீமியா நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்தார் அதிபராக இருந்த விக்டர் யானுகோவிச். இதனால் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் ரசியாவில் அடைக்கலமானார். இதையடுத்து உக்ரைனில் புதிய அரசு அமைந்தது. ஆனால் ரஷியாவோ உக்ரைனின் கிரீமியா என்ற சுயாட்சி பிராந்தியத்தை கைப்பற்றியது.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச மோதலாக உருவெடுத்தது. கிரீமியா மீதான தமது மேலாதிக்கத்தை ரசியா விட்டுக் கொடுப்பதாக இல்லை.
ஆனால் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் ரசியாவின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் அங்கு போர்மேகம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் புதிய திருப்பமாக கிரீமியா நாடாளுமன்றத்தில் ரஷியாவுடன் இணைவது தொடர்பாக பொதுவாக்கெடுப்பு நடத்தும் தீர்மானம் இன்று அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ரசியர்கள் அதிகம் வாழும் கிரீமியா தற்போது ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழ்தான் உள்ளது. என்னதான் பொதுவாக்கெடுப்பு நடத்துகிறோம் என்று ‘நடைமுறை’ப்படி அறிவித்தாலும் ரஷியாவின் நெருக்கதல் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது.