குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பற்றி சில இணையங்கள் ஊடகங்கள் தமிழ் அமைப்புக்கள் அக்கறையீனம் யாழ்ப்பாணம் என்றால் பதறியடிப்பார்கள் இப்போ துாங்கும் சுயநலம்

 

தமிழத்தேசியமா? 07.09.2012-தொலைபேசிமூலம் குறுந்தகவல் மூலம்  மின்னஞ்சல் மூலமும் துாண்டுங்கள்.தமிழ் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமக்குள் இருக்கும் கருத்து பேதங்களை மறந்து, அவநம்பிக்கை வாதங்களை புறம்தள்ளி இது எங்களுடைய ‘வீடு’ – இது எங்களுடைய கூட்டமைப்பு - என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய காலமிது.

அவ்வாறு நாம் சொல்ல வேண்டுமாயின், நடைபெறவிருக்கும் மகாணசபை தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற வேண்டும். அரசாங்க தரப்பில் போட்டியிடும் ஒரு தமிழ் வேட்பாளரும் வெற்றிபெறக் கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் பெறப்போகும் அமோக வெற்றி ஒன்றுதான் – நாங்கள் மாண்டுவிடவில்லை, இருக்கிறோம் என்பதைச் சொல்லும் முரசொலி ஆகும்.

 

 

இவ்வாறு த.தே.கூட்டமைப்பிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கி வெளியிட்ட துண்டறிக்கையில் திருக்கோணமலையை தளமாகக்கொண்ட கிழக்கு புத்திஐீவிகள் அமையம் தெரிவித்துள்ளது.

 

அத்துண்டறிக்கையின் முழுவிபரமாவது:

 

வரலாறு எங்களை விடுதலை செய்யும்.

 

புதிய சூழலில் பழைய அனுபவங்களுடன் மீண்டும் மீடுக்குடன் வாழ்வதற்கான அரசியலை வனைவோம்.

 

மீண்டும் தேர்தல். மீண்டும் வாக்களிக்கும் படலம். அதே தாளம். அதே பாடல். ஆனால் இப்போது நாம் ஆடும் களம் வேறு.

 

கடந்த அறுபது வருட காலமாக நமது தலைமைகள் ஆடிய அரசியல் சதிராட்டத்தால் ஆனது என்ன? இப்படியொரு கேள்வி உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் உண்டு.

 

ஆனாலும் நண்பர்களே! அன்புக்குரியவர்களே!

 

நாங்கள் ஆடித்தான் ஆக வேண்டியிருக்கிறது. இன்றைய சூழலில், இந்த அரசியல் சதிராட்டத்தில் பங்கு கொள்வது ஒன்றுதான் நமது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கிருக்கும் ஒரேயொரு வழியாகும். ஏனெனில், இது நமது தலைமுறைகள் தழுவிய ஆட்டம். இப்பொழுது - நாங்கள் இருக்கிறோம் என்பதைச் சொல்லுவதுதான் மிகப்பெரிய அரசியல் ஆகும்.

 

இலங்கைத் தீவின் வடக்கு-கிழக்கை தாயகமாகக் கொண்டு வாழும், ஈழத் தமிழர்களாகிய நாங்கள் அனைவரும் மாண்டுவிடவில்லை, இருக்கிறோம் - இருப்போம் - எங்களது அடிப்படை உரிமைகளை வெற்றிகொள்வதற்கான தார்மீக வேட்கையை நாம் என்றுமே கைவிடப் போவதில்லை - என்பதை நாம் இலங்கையின் ஆட்சியாளர்களுக்கும், சர்வதேசத்திற்கும் உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. அச்சுறுத்தல் என்னும் புகை-மண்டலத்தால் எங்கள் கண்களை நிரந்தரமாக மூடிவிட முடியுமென்று எண்ணுவோருக்கும் நாம் தெளிவான செய்தியொன்றைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

 

அதனை எவ்வாறு சொல்லுவது?

 

பேரன்புக்குரிய தமிழ் மக்களே!

 

இப்பொழுது நாம் மகாணசபை தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய இக்கட்டு நிலைக்கு ஆளாகியுள்ளோம். இது நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்றபட்ட ஓர் ஆடுகளம். நீங்கள் கேட்கலாம் - இத்தனைக்குப் பிறகும் மகாணசபையா? – அரசியலில் ஏற்ற இறக்கங்கள் தவிர்க்க முடியாதவை. இத்தகைய ஏற்ற இறக்கங்களுக்கு ஊடாகப் பயணித்துத்தான், நாம் நமது இலக்கை வெற்றி கொள்ள வேண்டியிருக்கிறது. ஏனெனில் நாம் கடந்த காலங்களில் சில அரிய வாய்ப்புக்களை தவறு விட்டிருக்கிறோம். இனியும் அத்தகைய தவறுகளுக்கு நாம் இடமளித்துவிடக் கூடாது.

 

இந்த மகாணசபையில் நாம் பங்குகொள்ள வேண்டியதன் அவசியம் என்ன?

 

இலங்கைத் தீவில் பாரபட்சமாக நடத்தப்பட்டுவரும் ஈழத் தமிழர்களுக்கு, தங்களை தாங்களே தீர்மானித்து வாழும் ஓர் ஆட்சி முறைமை அவசியம் என்பதை கருத்தளவிலும், கட்டமைப்பு ரீதியாகவும் ஏற்றுக் கொண்ட முதல் அரசியல் முன்மொழிவு மகாணசபையாகும். இது (1987) இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அறுவடை ஆகும். வடக்கு-கிழக்கை அடிப்படையாக் கொண்டு இதுவரை நமது தலைமைகளால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து அரசியல் முன்னெடுப்புக்களுக்கும் பக்கத்துணையாக இருந்ததும், இருப்பதும் இந்த மகாணசபை முறைமைதான். இதன் காரணமாகவே மகாணசபை முறைமையை அங்கீகரிக்கும் 13வது திருத்தச் சட்டத்தை அரசியல் யாப்பிலிருந்து நீக்க வேண்டுமென்று, சில அடிப்படைவாத சக்திகள் கோரி வருகின்றனர்.

 

மகாணசபை தோற்றம்பெற்ற காலத்தில், அதனை நாம் ஒரு அட்சயபாத்திரமாக பயன்படுத்தியிருக்க முடியும். அதனை அடித்தளமாகக் கொண்டு எங்களுக்கு தேவையான பலவற்றை பின்னர் அள்ளியெடுத்திருக்க முடியும். ஆனால் அரசியலில் 'தக்கன பிழைக்கும்' (Survival of fittest) கலையை நாம் சரிவரக் கற்காததால், கைக்கெட்டிய ஒன்று வாய்க்கு எட்டாமல் போனது. இதனால் மீண்டும் பழைய ஆட்டமொன்றுக்குள் புதிய சுலோகங்களுடன் நுழைய வேண்டிய இக்கட்டு நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.

 

நமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், நாம் இந்த ஆட்டத்தில் பங்கு கொள்ளத்தான் வேண்டும். நாம் இதனைச் சரியாக கையாளாது விட்டால், இப்போது நமக்கு கிடைத்திருக்கும் (Political Space) அரசியல் வெளியையும் நாம் இழக்க நேரிடலாம். இறுதியில் நாம் பட்டுவேட்டிக்கு ஆசைப்பட்டு, இருக்கும் கோவணத்தையும் இழந்த கதைக்கு ஆளாகலாம்.

 

இன்று, வரலாறு நமக்கு பல்வேறு படிப்பினைகளைத் தந்துள்ளது. அந்த வரலாற்று படிப்பினைகளின் படி, நமது அரசியல் தலைமை முன்னகர ஆரம்பித்திருக்கின்றது. இதற்கு மக்களாகிய நாம் பக்கபலமாகவும் உந்துசக்தியாகவும் இருக்க வேண்டும். அதுவே நமது வரலாற்றுக் கடமையாகும்.

 

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, மகாணசபை தேர்தலில் முதல் முதலாக போட்டியிடுகின்றது. இன்று - வீட்டுச் சின்னத்தின் கீழ் அணிதிரண்டிருக்கும் அனைத்து கட்சிகளும், தமிழ் மக்களின் ஒன்றுபட்ட அரசியல் சக்தியாக பரிணமித்திருக்கின்றன. இப்போது நமக்கிருக்கும் ஒரேயொரு பலம் - தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் பல்வேறு தரப்பினரும் ஓரணியில் நிற்கின்றனர் என்பது மட்டும்தான். இந்த பலத்தை நாம் ஒரு பேரம் பேசுவதற்கான அரசியல் பலமாக மாற்ற வேண்டுமாயின் மகாணசபையை நாம் கட்டாயமாக கைப்பற்றியாக வேண்டும்.

 

தமிழ் மக்களாகிய நாங்கள் ஒவ்வொருவரும் எமக்குள் இருக்கும் கருத்து பேதங்களை மறந்து, அவநம்பிக்கை வாதங்களை புறம்தள்ளி இது எங்களுடைய ‘வீடு’ – இது எங்களுடைய கூட்டமைப்பு - என்பதை உரத்துச் சொல்ல வேண்டிய காலமிது. அவ்வாறு நாம் சொல்ல வேண்டுமாயின், நடைபெறவிருக்கும் மகாணசபை தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றிபெற வேண்டும். அரசாங்க தரப்பில் போட்டியிடும் ஒரு தமிழ் வேட்பாளரும் வெற்றிபெறக் கூடாது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் பெறப்போகும் அமோக வெற்றி ஒன்றுதான் – நாங்கள் மாண்டுவிடவில்லை, இருக்கிறோம் என்பதைச் சொல்லும் முரசொலி ஆகும்.

 

இப்போது நமது கடமை என்ன?

 

வாக்காளர்களாகிய தமிழ் மக்கள் முன் இரண்டு பிரதான கடமைகள் இருக்கின்றன.

 

1.வீட்டுச் சின்னத்தின் கீழ், தமிழ் மக்களின் ஒன்றுபட்ட சக்தியாக களமிறங்கியிருக்கும் - தமிழ் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றிபெறச் செய்வது. கூட்டமைப்பு அதிகூடிய ஆசனங்களை பெற வேண்;டுமாயின் மக்கள் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். குறிப்பாக வசிதியுள்ள மத்தியதரவர்க்க தமிழ் மக்கள் வாக்களிப்பில் பெரியளவில் நாட்டம் கொள்வதில்லை. ஆனால் ஒன்றை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேலும் பலமிழக்குமாயின் நீங்கள் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வசதிகளையும் இழக்க நேரிடலாம். ஒரு அரசியல் அமைப்பு என்பது அந்த சமூகத்தின் பாதுகாப்பு. அந்த சமூகத்தின் அடையாளம். ஆந்த வகையில் விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் த.தே.கூட்டமைப்பின் பக்கமாக அனைவரும் அணிவகுக்க வேண்டும்.

 

2.சரியான வேட்பாளரை தெரிவு செய்வது - சரியான வேட்பாளர் என்று நாங்கள் குறிப்பிடுவதற்கு பிறிதொரு காரணம் உண்டு. அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற முடியாது. ஒரு சிலர்தான் வெற்றீயீட்ட முடியும். எனவே அவ்வாறு நீங்கள் தெரிவு செய்யும் அந்த ஒரு சிலர் மக்களது பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பவர்களாகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெற்றி கொள்ளும் தார்மீகப் பயணத்திற்கு தொடர்ந்தும் தோள் கொடுக்கக் கூடியவர்களாகவும் இருப்பது கட்டாயமானதாகும். அத்தகைய வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்யும் போதே ஒரு மக்கள் கூட்டம் தங்களின் கடமையை சரியாகச் செய்வதாக பொருள் கொள்ளப்படும். எனவே வேட்பாளர்களை தெரிவு செய்யும் போது அவர்களது கடந்தகாலம், தனிப்பட்ட நடத்தை, அறிவு ஆகியவற்றை துல்லியமாக மதிப்பிட வேண்டிய பொறுப்பு மக்களாகிய உங்களுக்கு உண்டு. தகுதியற்றவர்களை தங்களின் தலைவர்களாக தெரிவு செய்யும் சமூகம் தனக்குத்தானே புதைகுழியை தோண்டிக் கொள்கின்றது.

எமது மக்கள் சரியான காலத்தில், சரியான முடிவை எடுப்பார்கள் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

 

பேரன்புக்குரிய தமிழ் மக்களே!

 

வரலாற்றின் விசித்திர வெளியில் எங்களுக்கான வாய்ப்புக்கள் இன்னும் முழுமையாக அற்றுப் போய்விடவில்லை. அத்தகையதொரு அவநம்பிக்கை நமக்கு வேண்டியதுமில்லை. காலம் - அத்தகைய வாய்ப்புக்களுடன் அச்சொட்டாகப் பொருந்திப் போகுமொரு தருணத்தில் - எங்களது வெற்றி தீர்மானிக்கப்படும். அதுவரைக்கும் தலைமுறைகள் தழுவிய எங்களது ஆடுகளத்தை, உயிர்ப்பாக வைத்திருப்பது ஒன்றே எங்களது வரலாற்றுக் கடமையாகும்.

 

"வரலாற்றிலிருந்து நாம் எதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றால் எதையுமே கற்றுக் கொள்ளவில்லை என்பதைத்தான்" - ஜேர்மனிய அறிஞர் ஹெகல்.

 

வரலாறு எங்களை விடுதலை செய்யும்.

 

கிழக்கு புத்திஐீவிகள் அமையம்

திருகோணமலை