குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

கைதிகள் மரணம் குறித்து விசாரிக்க ஆணைக்குழு நியமிக்குமாறு ஆனந்தசங்கரி னாதிபதிக்கு கடிதம்

13.08.2012-தமிழ் அரசியல் கைதிகளின் மரணத்திற்கு காரணமாக மகர சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழு நியமித்தல் குறித்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிசனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் சம்பந்தமில்லாதவர்களின் சிந்தனைகள் மகிந்த சிந்தனையாக மாற்றப்படுவது தொடர்பாக தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்..

 

அந்த கடிதத்தின் முழுவடிவம்:

 

மாண்புமிகு மகிந்த ராயபக்ச அவர்களுக்கு

சனாதிபதி,

அலரிமாளிகை,

கொழும்பு – 3.

 

மேதகு சனாதிபதி அவர்களே!

 

மகர சிறைச்சாலைச் சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆணைக்குழு நியமித்தல் வேறு சிலரின் சிந்தனைகளை மகிந்த சிந்தனையாக மாற்றப்படுவது சம்பந்தமாக மீண்டும் ஒரு தடவை தங்களுக்கு நினைவூட்டுவதே இந்தக் கடிதத்தின் நோக்கமாகும்.

 

பல பாரதூரமான விடயங்கள் சம்பந்தமான முழு விபரங்கள் கூட மகிந்த சிந்தனையின் பெயரால் மறைக்கப்பட்டு அவை காலப்போக்கில் மறக்கப்பட்டு விடுகின்றன.

 

இந்த நாட்டில் நடக்கும் பல சம்பவங்களால் குழப்பமடைந்த மக்கள் அவற்றுக்குப் பொறுப்பாக நீங்களே உள்ளீர்கள் என சிந்திக்கும் மனப்பான்மையில் வாழ்கின்றனர்.

 

மகர சிறைச்சாலை அதிகாரிகளும் அதேதினம் அதற்கு முன்பு அனுராதபுரச் சிறைச்சாலை அதிகாரிகளாலும் மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட பலருள் ஒரு மாதத்திற்கு மேல் அறிவு திரும்பாது கடந்த 7ம் திகதி மரியதாஸ் டில்ருக்சனின் மரணம் சம்பந்தமாகவே இதில் குறிப்பிட விரும்புகின்றேன்.

 

தமிழ் அரசியல் கைதிகள் அநேகர் தங்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்ய போதிய ஆதாரமில்லாதவர்களை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரதம் இருப்பது வழக்கம்.

 

வழமைக்கு மாறாக அவர்களில் ஒருவர் கூறிய ஆலோசனைக்கு அமைய தாம் நடத்திய உண்ணாவிரத நிகழ்வில் மூன்று சிறைச்சாலை அதிகாரிகளையும் கட்டாயப்படுத்தி சேர வைத்துள்ளனர்.

 

இந்த சத்தியாக்கிரகத்தில் பலாத்காரமாக அதிகாரிகளை இணைத்துக் கொண்டதை தவறு என நான் ஒத்துக்கொள்கிறேன்.

 

இது ஒரு மகாத்மா காந்தியினுடைய கொள்கையுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் இந்நிகழ்வை பாரதூரமாக எடுக்காமல் விட்டிருப்பின் பாரிய துன்ப நிகழ்வைத் தடுத்திருக்க முடியும்.

 

தங்களோடு இருந்த சக கைதி ஒருவரை அனுராதபுரச் சிறைக்கு மாற்றி மிகமோசமாக தாக்கிய செய்தியை அறிந்து அவரை திரும்ப வவுனியாவுக்கு மாற்றக் கோரியே இந்த உண்ணாவிரதப்

போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

 

இந்தப் பிரச்சனையை வவுனியா சிறைச்சாலைப் பொறுப்பதிகாரியின் பொறுப்பில் விட்டிருந்தால் மிக இலகுவாகத் தீர்த்திருக்க முடியும்.

 

ஆயுதமுள்ளவர்கள் தமது வீரத்தை நிராயுதபாணிகளிடம் காண்பிப்பதாலேயே இத்தகைய பிரச்சினைகள் உருவாகியிருக்கின்றன.

 

அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அமைச்சரை நான் தொடர்புகொள்ள எடுத்த முயற்சி தோல்வி கண்டது. நான் வவுனியாவை அடைந்தவேளை எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

 

கலவரம் அடக்கும் குழுவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூன்று அதிகாரிகளும் விடுவிக்கப்பட்டனர். அமைதியாக இது நடந்து முடிந்தது என எண்ணி மகிழ்ச்சியடைந்தேன்.

 

பின்புதான் சகல கைதிகளும் வவுனியாவிலிருந்து முதலில் அனுராதபுரத்திற்கும் பின் அவர்கள் அங்கிருந்து மகர சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டதாக அறிந்தேன்.

 

மகர சிறைச்சாலையில் நடந்த தாக்குதல் அனுராதபுர சிறைச்சாலையில் நடந்ததைப் பார்க்க கடும் மோசமானதும் மிருகத்தனமானதாகும்.

 

இவை மிக அதிர்ச்சி தருவதும் எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாததுமானதாகும்.

 

யாரோ ஒருவர் பழிக்குப்பழி வாங்க முயற்சித்திருப்பதாக மிகவும் தெளிவாகத் தெரிகிறது. மிகச்சிறிய அல்லது எதுவித பாதிப்புமில்லாமல் தீர்த்திருக்கக் கூடிய பிரச்சனை இறுதியில் பெரும் சோகத்தில் முடிந்தது.

 

இந்த மிருகத்தனமான சம்பவத்தால் முதலில் பாதிக்கப்பட்டவர் ஒரு ஏழைக் குடும்பத்தின் ஒரே மகன் - இவரில்லையெனில் இக்குடும்பத்தினருக்கு இவ்வுலகில் வேறு எதுவுமில்லை.

 

இரண்டாவதாகப் பாதிக்கப்பட்ட இவ்விளைஞன் ஒரு மாதத்திற்குமேல் நினைவிழந்திருந்த நிலையில் இரும்புச் சங்கிலியால் கட்டிலோடு பிணைக்கப்பட்டிருந்து கடந்த 7ல் மரணித்த மரியதாஸ் டெல்றொக்ஷன் ஆவார். நடந்துமுடிந்த சம்பவங்களில் மிகவும் வெட்கக்கேடான சம்பவம் இதுவாகும்.

 

இதேபோல மிருகத்தனமாக தாக்கப்பட்ட எஞ்சியுள்ள முப்பத்தேழுபேருக்கு என்ன நடக்கப் போகின்றது என்பதை யாரும் அறியார். இந்த இளைஞன் எதற்காக விசேட வைத்தியத்திற்காக வேறொரு வைத்தியசாலைக்கு மாற்றப்படவில்லை என்பதற்கு விளக்கம் கேட்கின்றனர் மாற்றப்பட்டிருந்தால் அவர் உயிருடனிருந்திருப்பார்.

 

ஒரு மாதத்திற்கு மேல் சுயநினைவற்றிருந்த ஒரு நோயாளியை ஏன் கட்டிலுடன் சங்கிலியால் பிணைத்திருந்தனர்? என்பதை அறிய அனைவரும் விரும்புவர்.

 

இந்த துரதிர்ஷ்டவசமான துன்ப நிகழ்வை சூழ்ந்திருந்த மர்மம் என்ன என்பதை அறியவும், பாதிக்கப்பட்ட எஞ்சிய இளைஞர்களுக்குப் போதிய வைத்திய வசதி செய்யப்பட்டதா, படுகிறதா என்பதை கவனிக்கவும், பாதிக்கப்பட்டு உயிரிழந்த இரு குடும்பத்தவருட்பட ஏனைய கைதிகளுக்கும் கணிசமான நஷ்டஈடு வழங்கவும் நீங்கள் ஒரு விசாரணைக் குழுவை நியமிக்கவேண்டும் என வற்புறுத்துகிறேன்.

 

பல விடயங்கள் வெளிவருவதோடு உண்மையான குற்றவாளி யார் என்பதை உலகறியவைக்கும். நாட்டின் நற்பெயர் காக்கப்படவேண்டும் ஏனெனில் அண்மையில் இராணுவத்தால் ஒழுங்கு

செய்யப்பட்ட 42 நாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்ட மாநாட்டு நிகழ்வின்போதே இத் துக்ககரமான சம்பவம் இடம்பெற்றிருந்தது.

 

வீ, ஆனந்தசங்கரி

செயலாளர் நாயகம்

தமிழர் விடுதலைக் கூட்டணி