01.08.2012-பல கோடி மதிப்புடைய வயலினை ரயிலில் யாரோ மறந்து வைத்து விட்டுப் போனதால் காணாமல் போன பொருட்கள்பாதுகாக்கப்படும்.அலுவலகத்தில் அது சேர்க்கப்பட்டது.
இந்த வயலினை யாரோ ஒரு இசையார்வம் நிறைந்த நண்பருக்கு அன்பளிப்பாக ஒருவர் கொடுத்திருக்கிறார்.
வயலினைப் பெற்ற நண்பரோ அதை ரயிலில் எடுத்து வந்தார். பெர்ன் நகரத்தின் ரயில் நிலையத்தில் அவர் இறங்கியபோது இந்த வயலினை மறந்துவிட்டு சென்றுள்ளார்.
வயலினைப் பார்த்த ரயில்வே பணியாளர்கள் அதன் உரிமையாளரைத் தேடிப் பார்த்தும் பலனில்லாததால் காணாமற் போன பொருட்கள் வைக்கும் அறையில் பாதுகாப்பாக வைத்தனர்.
இருப்பினும் வயலினை எடுத்துச் சென்றவர் முகம் ரயில்நிலைய வீடியோ கமெராவில் பதிவாகியுள்ளது. இதன் அடிப்படையில் அவரை தேடி வருகின்றனர்.
இத்தாலியைச் சேர்ந்த கலைஞர் அண்டோனியோ ஸ்ட்ராடிவரி என்பவர் சுமார் 600 வயலின்களைத் தயாரித்தார். இந்த வயலின்கள் ஸ்ட்ராடிவாரியன் வயலின் என்று அழைக்கப்பட்டது. இப்போது விட்டுப்போன வயலின் இந்த வகையிலான பழைய வயலின்தான்.
கடந்த 2011ம் ஆண்டில் ஜப்பானில் ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பொருட்டு இது போன்ற ஒரு ஸ்ட்ராடிவாரியன், வயலினை ஏலத்தில் விட்டபோது அந்த வயலின் 8.6 மில்லியன் பவுண்டுக்கு ஏலத்தில் விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
இனவேறுபாடு காட்டிய ஒலிம்பிக் வீரர் வெளியேற்றம்
சுவிட்சர்லாந்தின் கால்பந்தாட்ட வீரரான மைக்கேல் மோர்கனெல்லா, டிவிட்டரில் தென்கொரியாவினர் பற்றிய பகையுணர்வை பகிர்ந்து கொண்டார்.
இவரது இனவேறுபாட்டுணர்வை அறிந்த ஒலிம்பிக் விளையாட்டுக் குழுவினர் இவரை போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டனர்.
சுவிஸ் ஒலிம்பிக் குழுவின் தலைவரான “கியான் கில்லி, மெர்கனெல்லா நாளை மெக்சிகோவை எதிர்த்து நடக்கும் போட்டியில் கலந்து கொள்ள இயலாது. அவர் சுவிட்சர்லாந்துக்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்றார்.
கில்லி, ஒரு மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் மோர்க்னெல்லா பகிர்ந்து கொண்ட கருத்தை கடந்த திங்களன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் எடுத்துரைத்தார்.
மோர்கனெல்லா “நான் ஒவ்வொரு கொரியனையும் தோற்கடிப்பேன். அவர்கள் அனைவரும் தீயில் எரிந்து போகட்டும். அவர்கள் மங்கலாய்டுகளின் (மூளைவளர்ச்சி இல்லாதவர்கள்) கூட்டம்” என்று டிவிட்டரில் தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
கொரிய மக்கள் மீது இவருக்கு இருந்த வெறுப்பு, கசப்பு, அவர்களை அவமரியாதையாகப் கருதத் தூண்டியது. இவர் தென்கொரியக் கால்பந்தாட்டக் குழுவினரை அவமானப்படுத்திவிட்டார் என்பதால் அவரை இப்போட்டியிலிருந்து வெளியேற்றுவதாக கில்லி குறிப்பிட்டார்.
சுவிஸ் நாளிதழான Le Matin மோர்கனெல்லாவின் கருத்தை வெளியிட்டிருந்தது. இதன்பின்பு இவர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
தான் பெரிய தவறு செய்துவிட்டதாகவும் அதன் பலனை அனுபவித்துவிட்டதாகவும், மோர்கனெல்லாவுக்கு முன்பு இன்னொருவர் இனப்பகை காரணமாக வெளியேற்றப்பட்டார்.
அவர் கிரீஸ் நாட்டைச்சேர்ந்த வயலா பாபா கிறிஸ்டோவு என்ற பெண் தடகளப்போட்டியாளர் ஆவார். இவர் ஆப்பிரிக்கப் புலம்பெயர்ந்தோரைக் கேவலமாகப் பேசியதால் வெளியேற்றப்பட்டார்.
இலண்டன் ஒலிம்பிக் குழுவினர் இந்தப் போட்டியில் பங்குபெறும் 10,800 வீர, வீராங்கனைகளையும் சமூக வலைத்தளத்தின் மூலமாக தமது ரசிகர்களோடு கலந்துரையாட அனுமதித்துள்ளது. இந்நிலையில் இனப்பகை காரணமாக இருவர் வெளியேற்றப்பட்டனர்.
சுவிட்சர்லாந்து 2012 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இன்னும் ஒரு பதக்கத்தைக் கூட வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.