குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

மன்னாரில் அழிவடைந்து வரும் வரலாற்றுச் சிறப்புமிக்க அல்லிராணி கோட்டை!

21.06.2012-மன்னார் மாவட்டத்தில் அரிப்புக் கிராமத்தில் அமைந்துள்ள அல்லிராணி கோட்டை பராமரிப்பின்றியும், கடலரிப்பாலும் அழிவடைந்து வருவதாக மன்னார் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரும் விதத்தில் அமைந்ததுமான கிராமங்களுள் அரிப்புக் கிராமமும் ஒன்று. இந்த அரிப்புக் கிராமத்தில் பழைமை வாய்ந்த அல்லிராணி கோட்டை காணப்படுகிறது.

 

கடந்த யுத்த காலத்தின் போது இந்தப் பிரதேசத்துக்குச் செல்ல முடியாத நிலை காணப்பட்டது. இதனால் அல்லிராணி கோட்டை என்ற பெயரை மட்டும்தான் மக்கள் கேட்டிருப்பார்களே தவிர அதனைப் பார்க்க முடியாத நிலையில் இருந்தனர்.

 

யுத்தம் ஓய்ந்த பின்னர் தற்போது அதனைப் பார்வையிடுவதற்கான சூழ்நிலை தோன்றியுள்ளது. கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட இந்த அல்லிராணி கோட்டை இராவணன் காலத்தில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 

இத்தகைய பெருமை வாய்ந்ததும் சிறந்த சுற்றுலாத்தலமாகத் திகழ்வதுமான அல்லிராணி கோட்டை தற்போது கடலரிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் காணப்படுகின்றது. இதனைப் பார்ப்பதற்கு மிகவும் வேதனையளிப்பதாகப் பலர் தெரிவித்துள்ளனர்.

 

மன்னார் மாவட்டத்தின் பெருமையையும் சரித்திர சிறப்புகளையும் காட்டி நிற்கும் இந்த அல்லிராணி கோட்டையைப் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டியது உரியவர்களின் தலையாய பணியாகும்.

 

கடந்த யுத்த காலத்தில் கூட இந்தக் கோட்டை பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது பராமரிக்கப்படுவதில்லை. கடந்த கால வரலாற்றைக் கூறும் ஞாபகச் சின்னங்கள் பல வடக்கில், குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் காணப்படுகின்றன.

 

ஆனால் அவை உரிய முறையில் பராமரிக்கப் படாமையால் அழிவடைந்து வருகின்றன. இந்த வகையில் இந்த அல்லிராணிக் கோட்டையும் கடலரிப்பின் காரணமாகத் தினமும் சிதைவடைந்து வருகின்றது.

 

இந்தக் கோட்டை செங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்வையிடுவதற்குத் தென் பகுதியில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பலர் தினமும் வந்து செல்கின்றனர். ஆனால் கடலரிப்புக் காரணமாக இந்த அரிதான கோட்டை அழிவடைந்து வருவதால் சில ஆண்டுகளின் பின்னர் இதனைப் பார்வையிட முடியுமா என்ற ஐயமும் எழுந்துள்ளது.

 

பண்டைக்கால வரலாற்றுச் சின்னங்களை நிர்மாணிப்பது என்பது இயலாத விடயமாகும். ஆனால் இருக்கின்ற வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்க முடியும். அந்தவகையில் அழிவடையும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அல்லிராணிக் கோட்டையைப் பராமரிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.