குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

காவிகளைப் பற்றி சித்தர்கள் - வழக்குரைஞர் ஆர்.டி. மூர்த்தி, திருச்சி-17

தமிழ்நாட்டில் முன்பு மூன்று ஆசைகளைத் துறந்தவர்களைத் துறவிகள் என்பர். அதாவது மண்ணாசை, பெண்ணாசை பொன்னாசையாகும். உதாரணமாக இளங் கோவடிகள், பட்டினத்தார், இராமலிங்க சுவாமிகள் ஆவர். மேற்படி மூவரும் தங்களின் சுகபோக வாழ்க்கையைத் தாமாகவே மனமொப்பி இழந்து அனைத்துச் சுகங்களையும் இழந்து எவ்வித பற்றும் இன்றி மக்கள் தொண்டு ஒன்றினையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்தனர். எனவே அவர்களின் வாழ்க்கையை துறவு வாழ்க்கை என்றும் அவர்களை துறவிகள் என்றும் தூய தமிழ்ச் சொல்லால் அழைத்தனர்..

 

பிற்காலத்தில் அதற்கு நேர்மாறாக ஒரு சிலர் மதத்தின் பேராலும் சாதியின் அடிப்படையிலும் அரண்மனை போன்ற பெரும் மடாலயங்களைக் கட்டிக் கொண்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், தங்க வைர நகைகள், ரொக்கம் ஆகியவைகளை மக்களின் மடமை அறியாமையைப் பயன்படுத்தி வசூல் செய்து பழங்கால ராஜாக்களைப் போல், ஏன்? அவர்களைவிட ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்களை சங்கராச்சாரி என்றும், ஆதீனம் என்றும், பண்டாரங்கள் என்றும், மடாதிபதி என்றும், ஞானிகள் என்றும் கூறிக் கொள்கின்றனர். மேற்சொன்ன யாரும் தங்களை துறவிகள் என்று கூறிக் கொள்வதும் இல்லை. மக்களும்

 

 

 

அவர்களை  அவ்வாறு கூறுவதும் இல்லை. அவர்கள் தங்களைப் பிற மக்களிடமிருந்து பிரித்துக் காட்டுவதற்காக காவிஆடையை பிரதானமாக அணிவது, பல்வேறு வித தங்க உத்தராட்சமாலை அணிவது, கைகளில் தங்கக் காப்பு போன்றவை அணிந்து கொள்கின்றனர். மேலும் நெற்றி நிறைய சாம்பல்திருநீறு பூசிக் கொள்கின்றனர். சமீப காலமாக அவர்களில் ஒரு சிலர் செய்யும் மாபெரும் குற்றங்கள் ஊடகங்கள் மூலமாக வெளிவந்து ஒரு சிலர் நீதிமன்றப் படியேறி சிறை என்றும் பிணை என்றும் கூறி அலைகின்றனர். நம்மவரில் சிலர் வயதில் மூத்தோர் அந்தக் காலத்தில் சாமியார்கள், சங்கராச்சாரியார், பண்டாரங்கள், ஞானிகள் என்போர் மிக்க ஒழுக்கத்துடனும் அனைத்து ஆசைகளையும் துறந்து வாழ்ந்ததாக கூறுவர்.அவர்கள் கூறும் காலத்தில் தற்பொழுது உள்ளதுபோல் ஊடக வசதிகளும் பத்திரிகை வசதிகளும் இல்லாததினாலும் பொதுவாக மக்களிடம் சாமியார்கள் யாரும் ஒழுக்கமானவர்கள் என்கிற தவறான எண்ணம் இருந்ததினால் அவர்களைப் பற்றிய உண்மைகள் வெளியில் தெரியாமல் இருந்தன. மேலும் ஒரு சிலருக்கு உண்மை தெரிந்திருந்தபோதிலும் சாமியார்களுக்குள்ள பண வசதி, ஆள்பலம், அரசியல் செல்வாக்கைக் கண்டு வெளியில் சொல்ல அஞ்சி வந்தனர். ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் காவிகளைப் பற்றி மிக தெள்ளத் தெளிவாக கூறியுள்ளார்கள்.

 

ஞானிகளைப் பற்றி சிவவாக்கியர்

வெந்த நீறு மெய்க்கணிந்து வேடமும் தரிக்கிறீர்

சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கு மந்திரம்

முந்த  மந்திரத்திலோ மூலமந்திரத்திலோ

எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே    - 200

ஞானி ஞானி என்றுரைத்த நாய்கள் கோடி கோடியே - 330

காவியும் சடைமுடி, கமண்டலங்கள் ஆசனம்

தாவுருத்தி ராட்சம் யோகத்தண்டு கொண்டமாடுகள் - 518

மதுரை வாலை சாமி சித்தர் தனது ஞானக் கும்மி பாட்டில்

தாடி வளர்த்துச் சடைவளர்த்து நல்ல சந்நியாசி யென்றொருவேடமிட்டே

ஓடித்திருந்த விளையாட்டையிங்கே ஒப்புவதாரடி ஞானப்பெண்ணே - 114

சித்தர் கருவூரார் தன் பூஜா விதி என்ற பாடலில் 16ஆவது பாடல்.

புகலுவார் வேதமெல்லாம் வந்ததென்று

பொய்பேசிச் சாத்திரங்கள் மிகவும் கற்றே

அகலுவார் பெண்ணாசை விட்டோமென்றே,

அறிவுகெட்டே ஊர்தோறுஞ்சுற்றிச் சுற்றிச்

சகல முமேவந்தவர்போல் வேடம் பூண்டு

சடைமுடியுங் காசாயந் தன்னைச் சாற்றி

இகலுமன மடங்காமல் நினைவு வேறாய்

எண்ணமெல்லாம் பெண்ணாசை பூசை தானே

சித்தர் காகபுசுண்டர் பாடல் 35.

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி

பணம் பறிக்க வுபதேசம் பகர்வோமென்பான்

ஆரப்பா பிரமநிலை காட்டாமற்றான்

ஆகாசப் பொய்களையுமவன்தான் சொல்வான்

எனவே அறிவுள்ள மக்கள் தங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி இனிமேலும் சாமியார்களை தேடிப் போய் இப்படிப்பட்டவர்களிடம் தங்கள் அறிவு, பொருள் மானம் போன்றவற்றை இழக்காமல் இருப்பார்களாக.