குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சித்திரை தமிழப்புத்தாண்டா?

20.04.2012-தமிழாண்டு2043-ஆதியிலிருந்து தைத் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தாலும், இடைக்காலத்தில் சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கிய மரபும் தமிழரிடையே இருந்துள்ளது. கி.மு 317ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டாக உருவாகியது. சித்திரைப் புத்தாண்டுக் கணக்கும் தமிழருக்கு உரியதே.

பிற்காலச் சோழர் காலத்தில் சித்திரைப் புத்தாண்டுக்குப் பெரும் செல்வாக்கு ஏற்பட்டது. இதற்குக் காரணம், சோழநாட்டில் தமிழியத்தின் தலைமை கொஞ்சங் கொஞ்சமாக மாறியும் மறுவியும் திரிந்தும்போய் ஆரியப் பார்ப்பனியம் தலையெடுக்கத் தொடங்கியதுதான்.

இதனால், அதுவரை தூயத்தமிழாக இருந்த தமிழரின் வானியல் கண்டுபிடிப்புகளும், ஐந்திரக் குறிப்புகளும், நாள், நாள்மீன், பிறைநாள், திங்கள், ஓரை (ஜோதிடம், தினம், நட்சத்திரம், திதி, இராசி, மாதம்) ஆகிய அனைத்தும் வடமொழிக்கு மாற்றப்பட்டன. தமிழர் கண்ட வானியல் மரபு ஆரியமயமாக்கப்பட்டு அடியோடு மறைக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாது, தொல்காப்பியர் காலத்தில், அதாவது கி.மு 5ஆம் நூற்றாண்டுக்கும் கி.மு.7ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் ஆவணி முதல்நாளில் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. தொடிதோட் செம்பியன் எனும் முசுகுந்த சோழன் என்ற மன்னன் ஆட்சிக்காலத்தில் ஆவணிப் புத்தாண்டுக்குப் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதாக மணிமேகலைக் காப்பியம் தெரிவிக்கின்றது.

முடிவும் விடிவும் இதுதான்!

ஓர் இடைக்கால மாற்றம் என்பதாலும், ஆரிய வலைக்குள் சிக்கிக் கொண்டதாலும், மீட்க முடியாத அளவுக்குக் கலப்படம் நேர்ந்துவிட்டதாலும், பார்ப்பனியக் கூறுகளும் மத ஊடுறுவல்களும் அளவுக்கதிமாக நேர்ந்துவிட்டதாலும் சித்திரையைத் தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கமுடியாது என 1921இல் 500 தமிழறிஞர்கள் எடுத்த முடிவு முற்றிலும் சரியானதே என்பதை ஆய்வுப்பார்வையும் அறிவுநோக்கும் கொண்ட எவரும் ஒப்புவர். அதுபோலவே ஆவணிப் புத்தாண்டும் வழக்கற்றுப் போனதோடு காலச்சூழலும் மாறிப்போய்விட்டது.

 

இந்நிலையில், அகநிலையிலும் புறநிலையிலும் தமிழர்கள் விடுதலை பெற்ற இனமாக வாழவும் உயரவும் தனித்திலங்கவும் தைப்பிறப்பையே தமிழாண்டுப் பிறப்பாக – தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்! கடவுளின் தீர்ப்பு!

 

உலகின் பழமையான இனமாகிய தமிழினம் தலைநிமிர்ந்து வாழ வேண்டுமானால், தமிழரின் வாழ்வியல் தமிழியலைச் சார்ந்திருக்க வேண்டும்; தமிழியத்தின் விழுமியங்களைத் தாங்கியிருக்க வேண்டும்; தமிழிய மரபுவேர்களில் எழுந்துநிற்க வேண்டும். இந்த முடிவொன்றே தமிழருக்கு விடிவாக அமையும்.