குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 10 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பிரபாகரனின் மகன் என்பதைத் தவிர, இந்தச் சிறுவன் செய்த குற்றம் என்ன? – அனைத்துலக ஆய்வாளர்

10.04.2012-சிறிலங்கா தீவில் கொல்லப்பட்ட பொதுமக்கள் விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதில், உலக நாடுகள் தமது குறுகிய தேசிய நலனைப் பயன்படுத்துவது வேதனைக்குரிய விடயம். இந்த மக்களின் இழப்புக்கள் தொடர்பில் உண்மையை உரைத்து, நீதியை நிலைநாட்ட வேண்டியது பிரதானம். இந்த விவகாரத்தில் அமைதியை கடைப்பிடிப்பது தமிழ் மக்களின் வாழ்வில் ஆபத்தை ஏற்படுத்தும். இவ்வாறு foreign policy journal ஊடகத்தில் டுபாயை தளமாக கொண்ட, மத்திய கிழக்கு மற்றும் முஸ்லிம் உலக விவகார ஆய்வாளர் Aijaz Zaka Syed எழுதியுள்ள கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை  மொழியாக்கம் செய்தவர் ‘நித்தியபாரதி‘.

 

புலியில் சவாரி செய்வது, அதன் முதலாளிக்கு மிகச் சிறப்பான சந்தர்ப்பங்களில் இலகுவான கலையாக இருக்காது. நீங்கள் புலியின் முதுகில் இருந்து கொண்டு சவாரி செய்யும் போது அது மிகப் பாதுகாப்பான இடமாக இருக்கலாம். அந்த சவாரியின் முடிவில் எது நடக்குமோ அதற்கு முகம் கொடுப்பதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.

 

ஒரு காலத்தில் தமிழர்கள் உட்பட பெரும்பாலான இந்தியர்கள், தமிழ்ப் புலிகள் என அடையாளங் கண்டுகொண்ட, அவர்களுக்கு பெரும் ஆதரவை வழங்கியிருந்தனர். அதாவது புலிகளின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்கு தேவையான சாத்தியப்பாடான உதவிகளை இந்திய முகவர் அமைப்புக்கள் 'எமது பையன்களுக்கு' வழங்கியிருந்தன. தமிழ்நாட்டில் புலிகளுக்கான பயிற்சி முகாம்கள் மிக இரகசியமாக செயற்படுத்தப்பட்டன.

 

புலிகள் அமைப்புக்கு இந்தியா இராணுவப் பயிற்சிகளை வழங்கி அதன் ஆரம்ப வளர்ச்சியில் பங்கேற்றதன் மூலம், அண்மைய வரலாற்றில் மிகப்பிரபலமாகப் பேசப்படும் புலிகள் அமைப்பு தமது யுத்த முறைமையில் ஒரு பரிணாமத்தை அடைந்து கொள்வதற்கும் வெற்றிகரமான தாக்குதல் படைகளாக உருவாவதற்கும் துணையாயிருந்துள்ளது.

 

புலிகள் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவத்துக்கு எதிராக தரையிலும் ஆழ் கடலிலும் யுத்தத்தை எதிர்கொண்டு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பிடித்துக் கொண்டனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீரத்தை கருவாகக் கொண்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் தமது கதாநாயகர்களுக்கான பாத்திரங்களை உருவாக்கிக் கொண்டனர்.

 

புலிகள் தமிழர்களுக்கான தனித் தாய்நாடு என்ற குறிக்கோளுடன் மட்டும் நின்று விடவில்லை என்பது மிகப் பிரதானமானதாகும். சிறிலங்கா அரசின் உயர்மட்டத் தலைவர்கள், பாதுகாப்பு படையினர், சாதாரண மக்கள் என பல தரப்பட்டவர்களையும் இலக்கு வைத்து புலிகள் கடந்த இரு பத்தாண்டுகளாக, தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் மேற்கொண்ட போது சிறிலங்கா ஒரு நரகமாக மாற்றப்பட்டது.

 

இதன் விளைவாக இந்தியாவும் இதற்கான விலையை செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி, சிறிலங்காத் தீவில் முடிவில்லாது தொடர்ந்த வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் மிக விசுவாசமாக நம்பிக்கையுடன் ஈடுபட்டதற்காக இறுதியில் அவர் தனது உயிரை இழக்க வேண்டியேற்பட்டது.

 

சிறிலங்காவில் அமைதிகாக்கும் படையாக சென்றிருந்த இந்தியப் படையைச் சேர்ந்த 1155 வீரர்கள் புலிகளுடனான யுத்தத்தின் போது கொல்லப்பட்டதானது நாட்டில் எவ்வாறான அழிவு இடம்பெற்றது என்பதை ஆதாரப்படுத்துகின்றது. இது பாகிஸ்தானுடனான யுத்தத்தில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களின் எண்ணிக்கையை விஞ்சியிருந்தது.

 

சிறிலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் 100,000 வரையான உயிர்கள் பறிக்கப்பட்டன, இதில் 28,000 வரையான புலி உறுப்பினர்கள் மற்றும் 23,330 சிறிலங்கா இராணுவத்தினரும் உள்ளடங்குவர். சுற்றுலாத்துறையை அதிகம் நம்பி வாழும் சிறிலங்காவின் பொருளாதாரம் இங்கு இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது பின்தள்ளப்பட்டிருந்தது. ஆனால் இதன் மதிப்பீடு இங்கு குறிப்பிடப்படவில்லை.

 

படுகொலைகள், இரக்கமற்ற, மிகக் கொடூரமான நடவடிக்கைகளுக்கு பிரபாகரன் பிரபலம் பெற்றிருந்தார். பிரபாகரனின் இவ்வாறான செயல்கள் சிங்களவர்கள் மற்றும் முஸ்லீம்களை மட்டுமல்ல தமிழர்களையும் பாதித்துள்ளது. தமிழர்கள் நீண்ட ஆண்டுகளாக தமது நீதிக்கான போராட்டத்தை தொடர்ந்திருந்தாலும் கூட அந்தப் போராட்டத்தின் முறைமைகள், நீதியைப் பெறுவதற்கான வழிமுறைகளில் இருந்து தொலைவில் இருந்தது.

 

புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையை எதிர்க்கும் யுத்தம் தமிழ் மக்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கியது. நீண்ட காலமாகத் தொடரப்பட்ட குருதி தோய்ந்த யுத்தத்தின் விளைவாக 40,000 வரையான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன், பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அவர்களின் சொந்த வீடுகளிலிருந்து விரட்டியடிக்கப்பட்டனர்.

 

தான் காட்சி தர விரும்பும் இராணுவ சீருடையிலேயே,இந்த யுத்தத்தின் இறுதியில் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் காட்சிப்படுத்தப்பட்டார். இவரது 12 வயது மகனான பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட காட்சிகள் தற்போது அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியுள்ளது.

 

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி சேவையால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தில், துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட், மேலாடைகள் இன்றி, காணப்படும் அந்தச் சிறுவன் பிரபாகரனின் மகன் என அடையாளங் காணப்பட்டுள்ளது. இந்தச் சிறுவனின் உடலில் ஐந்து துப்பாக்கி சூட்டுத் துவாரங்கள் காணப்படுகின்றன. இந்தச் சிறுவன் படுத்திருப்பது போல் காணப்படும் அவனின் படுகொலைக் காட்சி அனைவரின் மனங்களிலும் குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது. பிரபாகரனின் மகன் என்பதைத் தவிர இந்தச் சிறுவன் செய்த குற்றம் என்ன?

 

கடந்த ஆண்டில், சிறிலங்கா அரசாங்கப் படைகளாலும், தமிழ்ப் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக்காட்சி சேவை தனது முதலாவது ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது. கடந்த மாதம், இச் சேவையானது மிகப் பயங்கரமான யுத்தமீறல் காட்சிகளை உள்ளடக்கிய தனது இரண்டாவது ஆவணத்தை வெளியிட்டது.

 

நிச்சயமாக பிரபாகரன் தனது நடவடிக்கைகளுக்காக இவ்வாறான தண்டனையைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒரு ஆயுதக் குழுவுக்கும், நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட, அனைத்துலக சட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு நாட்டின் இராணுவத்துக்கும் இடையில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்பதையே சிறிலங்காவில் நடந்த யுத்த மீறல்கள் எடுத்துக் காட்டுகின்றன.

 

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், மூன்று பத்தாண்டுகளாக தொடரப்பட்ட புலிகளின் பயங்கரவாத செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவுக்கு கொண்டு வந்தபோது, சிறிலங்கா தீவு தான் இவ்வளவு காலமும் அனுபவித்த துன்பங்களிலிருந்து விடுதலை பெற்றுவிட்டதாக சிறிலங்கர்கள் அனைவரும் ஒருசேர நினைத்திருந்தார்கள்.

 

இன்றுநாட்டில் அமைதியும் பாதுகாப்பும் நிலவுவதாகவும், சுற்றுலாப் பிரயாணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் எனது சிறிலங்கா நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் நாட்டில் அமைதியும் பாதுகாப்பும் நிலைபெறுவதற்கு எத்தகைய விலை கொடுக்கப்பட்டுள்ளது? நாட்டில் நிலவிய பயங்கரவாதத்தையும், வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வருவதில் கவனிக்கப்பட வேண்டிய எந்தவொரு சட்டங்களோ அல்லது நீதிய நடைமுறைகளோ இல்லையா?

 

இதற்கான பதிலை அனைத்துலக சமூகமும், சிறிலங்காத் தலைமையும் கூறவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது சிறிலங்காத் தீவில் எதைச் செய்யவேண்டும் என்பதையும், இற்கு இடம்பெற்ற மிகக் கொடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்பதையும் அங்கீகரிப்பதற்கான ஒன்றாக காணப்படுகின்றது.

 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அழுத்தத்தின் பேரில், அனைத்துலக நாடுகள் சிறிலங்கா தீவில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்கான தமது அழுத்தங்களை ஒரு சேர வழங்கிய நிலையில் இந்தியா பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து தனது வாக்கை வழங்கியது பெருமைப்பட வேண்டிய விடயம்.

 

ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக கிட்டத்தட்ட எழுபது ஆண்டுகளாக இஸ்ரேல் யுத்தத்தை மேற்கொண்ட போது, அமைதி வழிமுறையில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட பல முயற்சிகளை தடுத்த நாடு, தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவதில் தலைமை தாங்கியது மிகக் கொடுமையான நடவடிக்கையாக உள்ளது.

 

இது தவிர, ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட அதிர்ச்சியான சம்பவங்களும், குவான்ரனமோ, Abu Ghraib மற்றும் போன்ற சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் மனிதஉரிமை மீறல்களும் தற்போது பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவதில் முதன்மை வகித்த அந்த நாட்டாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஈராக்கில் பல மில்லியன் கணக்கான மக்கள் தமது உயிர்களை இழந்துள்ளனர். ஆனால், இவ்வாறான மீறல்களுக்கு காரணமான வல்லரசுக்கு எதிராக அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்கும் என எவரும் எதிர்பார்க்க முடியாது.

 

சிறிலங்காவில் சீனா அதிகம் முதலீடு செய்வதை அமெரிக்கா விரும்பவில்லை. பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை தான் ஆதரித்தால் சிறிலங்கா சீனாவின் ஆதரவைப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என்பதை இந்தியா தனது கவனத்திற் கொண்டிருந்தது. இதனாலேயே இவ்வாக்கெடுப்பில் இந்தியா பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.

 

இந்நிலையில் இவ்வாக்களிப்பில் இந்தியா எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை அனைத்து ஊடகங்களும் கவனித்துக் கொண்டிருந்தன. பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் அயல்நாடுகள் சிறிலங்காவின் நட்பு நாடுகளாக விளங்கியதால் அவை சிறிலங்காவை ஆதரித்து வாக்களித்தன. ஒரு மனிதன் சிலருக்கு பயங்கரவாதியாகவும் சிலருக்கு சுதந்திரப் போராளியாகவும் காணப்படுவர் என இந்நாடுகள் கூறிக்கொண்டன.

 

சிறிலங்கா விவகாரத்தில் பூகோள அரசியலும், இராஜதந்திர நகர்வுகளும் செல்வாக்குச் செலுத்தின. தமிழ் மக்கள் அநீதியை எதிர்கொண்டு, பெரும்பான்மை சிங்கள மக்களின் கைகளில் அவர்கள் அகப்பட்டுக் கொண்ட போதே தமது கைகளில் ஆயுதங்களை ஏந்தினர். அநீதி எங்கு நிலவுகின்றதோ அங்கு நீதிக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது என்பதே கருத்தாகும் என மாற்றின் லூதர் கிங் கூறியிருந்தார்.

 

சிறிலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் தமிழ் மக்களும் அவர்களுக்காக போராடிய புலிகள் அமைப்பும் சந்தித்த மீறல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவையாக காணப்படுகின்றன.

 

சிறிலங்கா தீவில் கொல்லப்பட்ட பொதுமக்கள் விவகாரம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றுவதில், உலக நாடுகள் தமது குறுகிய தேசிய நலனைப் பயன்படுத்துவதானது வேதனைக்குரிய விடயமாகும். இந்த மக்களின் இழப்புக்கள் தொடர்பில் உண்மையை உரைத்து நீதியை நிலைநாட்ட வேண்டியது பிரதானமானதாகும். இந்த விவகாரத்தில் அமைதியை கடைப்பிடிப்பதானது தமிழ் மக்களின் வாழ்வில் ஆபத்தை ஏற்படுத்தும்.

 

கடந்த ஏழு பத்தாண்டுகளாக பாகிஸ்தானில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதை அவதானிக்க முடியும். அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேலியப் படைகள் பாலஸ்தீனியர்களை வகை தொகையற்ற விதத்தில் படுகொலை செய்து வருகின்றனர். பாலஸ்தீனம் முழுமையும் இஸ்ரேலியப் படைகளின் துன்புறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உட்பட்டுள்ளன. இதேபோல் றுவாண்டா மீதான அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கையில் ஒரு மில்லியன் வரையான மக்கள் கொல்லப்பட்டனர். பல்கன்சில் பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர்.

 

சிரியாவில் பல ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தற்போதும் சிரிய அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழுள்ள மக்கள் எப்போதும் கொல்லப்படலாம் என்ற நிலையில் உள்ளனர். சிரியா விடயத்தில் சில வல்லரசு நாடுகள் தமது பூகோள அரசியல் நலன்களை முதன்மைப்படுத்தி அமைதி காப்பதால் சிரிய மக்கள் தொடர்ந்தும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

 

ஆகவே கடந்த காலம் கடந்து விட்டதாயினும், கடந்த கால விடயம் தொடர்பில் சிறிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும். பாதுகாப்பு மற்றும் சமாதானம் என்ற பெயரில் மக்கள் படுகொலை செய்யப்படும் விடயத்தில் உலக நாடுகள் தொடர்ந்தும் தமது பூகோள அரசியல் சார் நலன்களை முதன்மைப்படுத்தி செயற்படும் நடைமுறையானது நீக்கப்பட வேண்டும்.

 

இவ்வாறு மக்கள் கொல்லப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாங்கள் அமைதி காத்து, அந்த விவகாரத்தில் நாம் எமது கண்களை இறுக மூடுவதானது, அப்பாவி மக்களின் இழப்புக்களில் நாம் பங்கேற்கிறோம் என்பதே கருத்தாகும். அமைதி காப்பதானது கொலைகளுக்கு வழிவகுக்கிறது.