அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சமீபத்தில் நடத்திய ஆய்வுகளில், நிலவில் குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் இருப்பது தெரியவந்துள்ளது.
பூமியின் துணைக்கோளான சந்திரனில் தண்ணீர் இருப்பதாக நாஸா ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீண்டகாலமாக இந்த ஆராய்ச்சி இடம்பெற்றுவந்ததாகவும் அண்மைய ஆய்வுகளால் ஆதாரத்துடன் நிரூபிக்கக் கூடியதாக உள்ளதாகவும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
இந்தியா அனுப்பிய சந்திராயன்-1 ஆய்வுக்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த ஆய்வு உபகரணங்கள் நிலவில் தண்ணீர் இருப்பதை கடந்த சில மாதங்களுக்கு முன் உறுதி செய்தது. இது விண்வெளி ஆய்வில் முக்கிய மைல்கல்லாக கருதப்பட்டது.
இதையடுத்து கடந்த சில வாரத்திற்கு முன் ராக்கெட்டை நிலவில் மோதச் செய்து அப்போது ஏற்படும் அதிர்வு மூலம் நிலவின் மேற்பரப்பை தகர்த்து அதில் தண்ணீர் இருக்கிறதா? என்ற ஆய்வு நாசா மேற்கொண்டது. இதில் தற்போது ஆச்சரியப்படும் வகையிலான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிலவின் மீது ராக்கெட்டை மோதச் செய்து நாசா நடத்திய ஆய்வில் இடம்பெற்ற விஞ்ஞானி ஜான் லோக்ஸ்டோன் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்பு மிகக் குறைந்த அளவிலேயே நிலவில் தண்ணீர் இருப்பதாக நம்பினோம். ஆனால் சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் வியக்கத்தகு வகையில் உள்ளது. குவளையில் (பக்கெட்) அள்ளக் கூடிய குறிப்பிடத்தக்க அளவு தண்ணீர் நிலவில் உள்ளது தற்போது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
ராக்கெட் மோதிய இடத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் குறைந்தது 25 கேலன் (95 லிட்டர்) தண்ணீர் இருந்ததாக நாசா தகவல்கள் தெரிவிக்கின்றன.
"சந்திரனில் தண்ணீர் உண்டு என்பதை நாம் கண்டுபிடித்துள்ளோம். மிகுந்த சந்தோசத்துடன் இந்தத் தகவலை உலகுக்கு கூறுகிறோம்" என நாஸா ஆய்வுநிலையத்தின் திட்டமிடல் பிரிவைச் சேர்ந்த விஞ்ஞானி எந்தனி கொலபிரேட் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் புதியதொரு பக்கம் திறந்திருக்கிறது எனக் குறிப்பிடும் எந்தனி, தண்ணீர் அதிகம் இருப்பதை தமது செயற்கைக் கோள்களில் தெளிவாக காட்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.