குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

கோடையை சமாளிக்க வழிமுறைகள்

பத்து மணிக்கு மேல் வெளியில் தலை காட்டவே மககள் பயப்படுகின்றனர். கோடை வெயில் மண்டையைப் பிளக்கிறது. அரை மணி நேரம் வெயிலில் செல்ல நேர்ந்தால் கண் எரிச்சல், தோல் வறட்சி, வியர்வை, உடல் சோர்வு, சிறுநீர் தொற்று என பல பிரச்சினைகள் வாட்டுகின்றன.

.  வெயில் நேரத்தில் எந்தப் பாதுகாப்பும் இன்றி வெளியில் செல்வதால் வியர்வை சங்கடத்தை ஏற்படுத்தும். தோல் வறட்சி காணப்படும். மேலும் வியர்வை அதிகரிப்பால் ஏற்கெனவே தோல் பகுதியில் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு அரிப்பு அதிகரிக்கும். அக்குள் மற்றும் முதுகுப் பகுதியில் இந்த அரிப்பு காணப்படும். உடல் சூட்டின் காரணமாக வெயில் கொப்புளம் மற்றும் வியர்குரு போன்ற தொல்லைகள் உண்டாகும்.

உடல் இயல்பான தட்பவெப்ப நிலைகளில் தோல் வியர்வை மூலம் இயற்கையாகவே வெப்ப மாறுபாடுகளை சரி செய்து விடும். நீண்ட நேரம் அதிக வெப்பநிலையில் இருக்கும் போது உடல் வெப்பக் கட்டுப்பாடு செயலிழக்கிறது. இதுவே பல்வேறு பிரச்சினைகளுக்கும் காரணம் ஆகும். கடும் வெப்பத்தின் காரணமாக வலியுடன் கூடிய வெப்பத் தசையிழுப்பு ஏற்படலாம். இதன் மூலம் உடல் உழைப்பில் ஈடுபடும் தசைகளும், வயிற்றுத் தசைகளும் பாதிக்கப்படுகின்றன. மேலும் அதிக வெப்பத்தின் காரணமாக சோர்வு அதிகரிக்கும். மயக்கம், இதயத்துடிப்பு அதிகரித்தல், ரத்த அழுத்தம் குறைதல், தோல் குளிர்ந்து சுருங்குதல் போன்ற தொல்லைகள் உண்டாகும். வயதானவர்கள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்களுக்கு வெப்பத்தாக்கு ஏற்படலாம்.

 

நீரிழப்பு, மதுப்பழக்கம், இதய நோய்கள், கடும் உடற்பயிற்சி மற்றும் சில மருந்துகளை உட்கொள்வதால் வெப்பத்தாக்கு வரும். இயல்பாகவே வியர்வை சுரப்பு குறைவாக உள்ளவர்களை இது விரைவில் தாக்கும். இதயத்துடிப்பு அதிகரித்தல், சுவாசத்தின் வேகம் அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் ரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

வெப்பத்தால் ஏற்படும் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு போதுமான நீர் ஆகாரம், சரியான உணவு முறை மற்றும் வெயிலில் இருந்து காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். வெயில்கால நோய்களுக்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.