அவை, தங்கள் கூடுகளில் (தரையில் உள்ள பள்ளங்கள்தான் அவற்றின் கூடுகள்) சில நேரங்களில் படுத்திருக்கும் என்பதிலிருந்து இந்த கட்டுக் கதை எழுந்திருக்கலாம். அப்படிப் படுத்திருக்கும்போது தங்கள் தலையை பள்ளத்துக்கு மேலே நீட்டிக்கொண்டு, ஏதேனும் ஆபத்து வருகிறதா என்று பார்த்துக் கொண்டே இருக்கும். அதைக் கொல்லக்கூடிய விலங்கு ஏதேனும் அருகில் வந்தால், அது எழுந்து ஓடிப்போய்விடும். மணிக்கு 65 கி.மீ. (40 மைல்) வேகத்தில் அதனால் ஓடமுடியும்.
உலகிலேயே மிகவும் பெரிய பறவை தீக்கோழிதான். ஒரு ஆண் பறவை 2.7 மீட்டர் (9 அடி) உயரம் வரை வளரும். ஆனால் அதன் மூளையோ ஒரு வாதுமைப் பருப்பைப் போன்ற அளவில்தான், அதன் கண்களை விடக் சிறியதாக, இருக்கும்.
தீக்கோழி ஒட்டகக் கோழி என்றும் அழைக்கப்படுகிறது. பாலைவனங்களில் வாழ்வதாலும், அதன் கழுத்து ஒட்டகத்தின் கழுத்து போல் நீளமாக இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். தீக்கோழி மணலில் தலையை நுழைத்துக் கொள்ளும் கதை முதன் முதலாக ரோம் நாட்டு வரலாற்றாசிரியரான பிளினியால் தெரிவிக்கப்பட்டது. தீக்கோழி உற்றுப் பார்த்தே முட்டையைக் குஞ்சு பொறிக்க வைத்துவிடும் என்றும் அவர் நினைத்தார். கண்ட கண்ட பொருட்களையெல்லாம் விழுங்கிவிடக்கூடிய அதன் குணத்தைப் பற்றி அவர் குறிப்பிடவில்லை.
கல், இரும்பு, செம்பு, செங்கல், கண்ணாடி என்று எதனை வேண்டுமானாலும் தீக்கோழி விழுங்கிவிடும். லண்டன் விலங்கியல் பூங்காவில் இருந்த ஒரு தீக்கோழி ஒரு மீட்டர் நீளமுள்ள கயிற்றையும், ஒரு படச்சுருளையும், ஒரு அலாரம் கடிகாரத்தையும், ஒரு பென்சிலையும், ஒரு சீப்பையும், மூன்று கையுறைகளையும், ஒரு கைக்குட்டையையும், தங்க நெக்லசின் துண்டுகளையும், ஒரு கைக்கடிகாரத்தையும், ரூபாய் நாணயங்கள் பலவற்றையும் விழுங்கியதை மக்கள் கண்டுள்ளனர். நமீபியாவில் உள்ள தீக்கோழிகள் வைரங்களைக் கூட சாப்பிடும்.