குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2054

இன்று 2023, மார்கழி(சிலை) 11 ம் திகதி திங்கட் கிழமை .

சனி கிரகத்தை சுற்றி புதிய ராட்சத வளையம்

சனி கிரகத்தை சுற்றி ஒரு ராட்சத வளையம் இருப்பதை அமெரிக்காவின் விண்வெளி "டெலஸ்கோப்" முதல் முறையாக கண்டுபிடித்துள்ளது. விண்வெளி ஆய்வில் இது ஒரு முக்கிய கண்டு பிடிப்பாக கருதப்படுகிறது.

சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் பூமிக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்ற கிரகமாக திகழ்வது சனி கிரகமாகும். ஜோதிடத்தில் சனி பெயர்ச்சி எந்த அளவுக்கு பிரதான இடத்தை பிடித்துள்ளது என்பது ஏற்கனவே தெரிந்த செய்திதான். இதன் காரணமாக சனி கிரகத்தை பற்றி அறிந்து கொள்வதில் எல்லோருக்குமே ஆர்வம் அதிகம் உண்டு.

மற்ற கிரகங்களை விட சனி கிரகத்தை வித்தியாசப்படுத்தி காட்டுவது அதை சுற்றி உள்ள அழகிய வளையங்கள்தான். சனியின் வரை படங்களில் இந்த வளையங்கள் கட்டாயம் இடம் பெறுவது வழக்கம்.

சனியை சுற்றி மொத்தம் 7 தெளிவான வளையங்கள் இருப்பது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அது தவிர மங்கலான மேலும் பல வளையங்களும் இருக்கின்றன.

இப்போது முதல் முறையாக மேலும் ஒரு வளையம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது மிக பிரமாண்டமான ராட்சத வளையமாக காட்சி அளிப்பதுதான் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக்கழகம் (நாசா) வான்வெளியில் நிறுத்தி வைத்துள்ள ஸ்பிட்சர் தொலைநோக்கி கருவிதான் சனி கிரகத்தின் ராட்சத வளையத்தை கண்டுபிடித்து படமாக பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது.

இந்த ராட்சத வளையம் பனி (ஐஸ் துகள்கள்) மற்றும் தூசிகளால் உருவானாதாகும். இது மிக, மிக குளிர்ச்சியாக காணப்படுகிறது. வெப்பநிலை மைனஸ் 316 டிகிரி பாரன்ஹீட். மற்ற வளையங்களை விட இதன் சுற்றுப்பாதை 27 டிகிரி சாய்வாக காணப்படுகிறது. வளையத்தின் ஆரம்ப பகுதி சனி கிரகத்தில் இருந்து சுமார் 60 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் தொடங்கி அதிக பட்சம் 12 லட்சம் கிலோமீட்டர் தூரம் வரை நீண்டு செல்கிறது.

இந்த வளையத்துக்குள் 100 கோடி பூமிகளை அடக்கி விடலாம் என்றும் அந்த அளவுக்கு பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது என்றும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சனி கிரகத்தின் நிலாக்களில் ஒன்றான போபே இந்த வளையத்துக்குள்ளேயே வலம் வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வளையமும் போபே நிலாவும் ஒரே திசையில் சனியை சுற்றுகின்றன. ஆனால் மற்ற வளையங்களும் இயாபெடஸ் என்று இன்னொரு நிலாவும் நேர் எதிர்திசையில் சனியை சுற்றி வருகின்றன.

மேற்கண்ட தகவல்களை நாசா நிறுவனம் நேற்று வெளியிட்டது.

சனிகிரகத்தின் புதிய வளையத்தை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ள நாசாவின் ஸ்பிட்ஸ் தொலைநோக்கி கருவி 2003-ம் ஆண்டு விண்வெளிக்கு அனுப்பப்பட்டதாகும். இது பூமியில் இருந்து 10 கோடி கிலோமீட்டர் தொலைவில் சூரிய சுற்றுப்பாதையில் வலம் வருகிறது.