குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

ஆழமான ஆனந்தம் எங்கே?

பெரும்பாலான மனிதர்கள் வாழ்க்கையில் துன்பத்திற்கு ஆளாகும்போதுதான், வாழ்கையை ஆழமாகப் பார்க்கவும், அதிலிருந்து கற்றுக்கொள்ளவும் செய்கிறார்கள், இது புத்திசாலித்தனத்தின் அறிகுறியல்ல. ஆனந்தமாக இருக்கும்போதுதான், வாழ்க்கையை மிக ஆழமாகப் பார்க்க வேண்டும்.

ஆனால், சந்தோஷமாக இருக்கும்போது பலரும் வாழும் விதம் மிகவும் மேலோட்டமானதாகவும், அற்பமானதாகவும் இருக்கிறது. வாழ்வில் ஏதாவது ஒரு அசம்பாவிதம் நடந்தால்தான், அவர்களால் வாழ்க்கையை ஆழமாகப் பார்க்க முடிகிறது.

 

நீங்கள் ஆசிரமத்தில் தங்கி இருப்பதாக யாரிடமாவது சொல்லிப்பாருங்கள்...உடனே அவர்கள், "ஓ! என்ன ஆயிற்று ? உங்கள் குழந்தை இறந்துவிட்டதா? அல்லது வேறு எதாவது மோசமான சம்பவம் நிகழ்ந்துவிட்டதா?" என்று துக்கம் விசாரிப்பார்கள்.

பெரும்பாலான மனிதர்கள், தங்களது வாழ்வில் ஏதாவது மோசமாக நடந்தால்தான், இல்லையென்றால் எல்லாமே தவறாகப் போனால்தான், வாழ்வின் அழமான பரிணாமத்தை நோக்கிப் போவார்கள் என்று கருதி இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள்.

இது மனித குளத்தின் துரதிர்ஷ்டமான வரலாறு. அனால் இது இப்படியிருக்கத் தேவையில்லை. அதிகமான மக்கள் ஏதோ ஒன்றைச் செய்கிறார்கள் என்றால், அது சரியான செயலாக ஆகிவிடாது.

கடந்த காலத்தைத் திரும்பிப் பார்த்தாலே இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை எடுக்க முடியும்.

1970களில் கிட்டத்தட்ட 80 சதவீத ஆண்கள் புகை பிடித்தார்கள். அந்த காலக்கட்டத்தில் அது சரியான செயலாகவே கருதப்பட்டது. புகை பிடிக்காமல் இருந்தால், நீங்கள் சரியான ஆண் இல்லை என்ற கருத்து அப்போது உருவாகப்பட்டிருந்தது. அதை எல்லோரும் நம்பினார்கள்.

இளைஞர் சமுதாயமோ இதை கர்ம சிரத்தையோடு பின்பற்றியது. ஆனால் இன்று பிடிப்பது என்பது, ஒரு அபத்தமான செயல் என்ற பெரும் பிரச்சாரம் மிகத்தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பயனாக புகை பிடிப்போரின் எண்ணிக்கை இன்று நம்ப முடியாத அளவு குறைந்திருப்பதை கண்கூடாகப் பார்க்கலாம்.

இந்தப் பிரச்சாரமும், விழிப்புணர்வும் இதே போல தொடர்ந்தால், இன்னும் 50 ஆண்டுகளில் எவருமே புகை பிடிக்கமாட்டார்கள் .

கடந்த காலங்களில் மக்கள் அதிகம் புகை பிடித்தார்கள்; அதிகமாக இருமினார்கள்; புற்று நோயால் பீடிக்கபட்டாலும் புகை பிடிப்பதைத் தொடர்ந்தார்கள் என்பதை எதிர்கால சந்ததியினரால் நம்புவதற்கு கடினமாக இருக்கும். அப்படியொரு காரியத்தை மக்கள் கடந்த காலத்தில் ஏன் செய்தார்கள் என்பதை அவர்களால் புரிந்து கொள்ளக்கூட முடியாது.

வாகனங்களில் இருந்து வெளியேறும் புகையயே நாம் குறைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மனிதர்கள் எப்படி புகை பிடித்திருக்கக் கூடும்? இரு தலை முறைகளுக்குப் பிறகு, புகை பிடிக்கும் பழக்கம் என்று ஒன்று இருந்ததாக அவர்கள் நம்பவே மாட்டார்கள்.

விக்டோரியா மகாராணி காலத்தில் இங்கிலாந்திலும், ஐரோப்பாவின் பல தேசங்களிலும் காச நோயால் பீடிக்கப்பட்டிருப்பது என்பது ஒரு நாகரீகமாகவே கருதப்பட்டு வந்தது.

இதை நீங்கள் நம்புவீர்களா? ஆனால் உண்மை அதுதான்.

காசநோய் இருப்பது அன்று நாகரிகமாக இருந்தது. நிறைய இளம் புத்திசாலிகளும், கவிஞர்களும், கலைஞர்களும் புத்திசாலிகள் என்றால் இருமிக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கருதியதால், காசநோய்க்கு சிகிச்சை எடுக்க கூட மறுத்தார்கள்.

அவர்களின் நோயின் தாக்குதல் தீவிரமாகி, இறந்தும் போனார்கள். ஒருவர் அரோக்கியமாகவும், வலுவாகவும் இருந்தால், அவருக்கு மூளை இல்லை, அவர் வெறும் மாமிச பிண்டம் என்ற கருத்தும் நிலவியது.

காசநோய்க்கு நாம் பறி கொடுத்த மிச் சிறந்த கவிஞர்களுள் ஒருவர் ஜான் கீட்ஸ். தனது நோய்க்கு சிகிச்சை எடுத்து கொள்ள மறுத்ததால் 25 வயதிலேயே அவர் இறந்தார். இது நடந்து ஒரு நூற்றாண்டு அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்புதான்.

இப்போது இதை நீங்கள் நம்புவீர்களா?

என்னென்றால், உங்கள் சமூக அடையாளத்தோடு உங்களது புத்திசாலித்தனம் மிக ஆழமாக சிக்கிக் கொண்டால், பிறகு வாழ்வின் யதார்த்தத்தோடு பொருந்தி உங்கள் மூளை வேலை செய்யாது. இதை நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களது மனம், உடல், உணர்வு ஆகிய மூன்றுமே உங்கள் வாழ்வின் ஆதாரமான உயிர் சக்திக்கு எதிராக வேலை செய்கின்றன. இதுதான் துயரத்தின் ஊற்றுக்கண்.

உங்களின் உயிர் சக்தி அளவற்ற ஆனந்தத்தை அடைய எப்போதும் ஏங்கிக் கொண்டிருக்கும் பொது, உங்களது மனமும், உணர்வுகளும் சில நேரங்களில் உங்களது உடலும் எதிர் திசையில் சென்று கொண்டிருக்கின்றன. இது முட்டாள் தனமாக இருக்கிறது இல்லையா?

நீங்கள் புரிந்து கொள்ளவே முடியாத அளவிடகூட முடியாத ஆழமான முட்டாள் தனம் இது. முட்டாள்களால் தாங்கள் எந்த அளவுக்கு ஆழமான முட்டாள்கள் என்பதை புரிந்து கொள்ள முடியாது. உங்கள் வாழ்வுக்கு எதிராகவே நிங்கள் செயல்படுவதால், இது மிகவும் ஆழமான முட்டாள்தனமாகும்.