குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

எந்தப் பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது - அப்துல் கலாம் காலத்தைவென்ற தஞ்சைப்பெரியகோவில்

 23.01.2012  பயணம் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்த அப்துல் கலாம்,.. அது அவர்களின் சனநாயக உரிமை என்றுரைத்தமை எத்தகைய பெருந்தன்மை! சமாதானத்தைக் கட்டியெழுப்புவதே எனது இலங்கைக்கான பயணத்தின் நோக்கமென, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
 
 
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சிந்தனையின் வடிவமாக, சிங்களம்- தமிழ் – ஆங்கிலம் ஆகிய மும்மொழியை மையப்படுத்தி, மும்மொழி ஆண்டாக 2012 ஐ இலங்கை அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
 
இப் பிரகடனத்த்தின் உத்தியோகபூர்வ நிகழ்வில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பங்கெடுத்துள்ளார்.
 
 
இந்தியாவைக் கட்டியெழுப்ப இளைஞர்களே கனவு காணுங்கள் எனும் அறைகூவல், அப்துல் கலாமின் அடையாள மந்திரமாக உள்ள நிலையில், சுபீட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்க இருக்கின்றேன் என, இந்தியாவில் இருந்து வெளிவரும் இந்து நாளேட்டுக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.
 
இலங்கையில் இணக்கம் மற்றும் செழிப்புக் கொண்ட அமைதியான இலங்கையை கட்டியெழுப்ப இரு பக்க தலைவர்களையும் தான் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 
இதேவேளை பயணம் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளித்த அப்துல் கலாம், எனது பயணம் அமைதியை ஊக்குவிப்பதற்கானது. சிலர் விமர்சித்தாலும் அது அவர்களின் ஜனநாயக உரிமை. குறிப்பிட்ட எந்தப் பிரச்சினைக்கும் போர் மூலம் தீர்வு காணமுடியாது. மோதல்களுக்கான தீர்வாக எந்தவொரு போரும் அமையவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
 
நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள அப்துல் கலாம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
 
காலத்தை வென்ற தஞ்சைப்பெரிய கலைக்கோயில் உச்சிகாலத்தில் கோபுரத்துள்ளேயே நிழல் விழுகிறது


பெருவுடையார் கோயில், ராஜ ராஜேஸ்வரம், பிரகதீஸ்வரர் ஆலயம் என்றெல்லாம் அழைக்கப்படும் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன.தென் இந்தியாவை ஆண்ட மிகவும் சக்தி வாய்ந்த அரசவம்சமான சோழர்களின் வலிமையையும், நாட்டின் வளத்தையும், கலை நயத்தையும் காலத்தை கடந்து பறைசாற்றும் சின்னமாக இருக்கிறது இந்தக் கற்கோயில்.

இந்தக் கோயில் 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது என்பது உறுதியாகத் தெரிந்தாலும் கோயிலை கட்டும் பணியை ராஜ ராஜன் எப்போது ஆரம்பித்தான் என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை என்று கூறுகிறார் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர் ஆர் நாகசாமி.

இக் கோயில் முழுவதும் பாறங்கற்களால் கட்டப்பட்டது. கற்களை தேவைப்படும் அளவுக்கு செதுக்கி ஒன்றன் மேல் மற்றொன்றை பொருத்தி இக் கோபுரம் அமைக்கப்பட்டது. கம்பீரமாக 60 மீட்டர் உயரத்துக்கு எழுந்து நிற்கும் 13 அடுக்குகளைக் கொண்ட இக் கோபுரத்தின் உட் பகுதி வெற்றிடமாக விடப்பட்டுள்ளது. 240 மீட்டர் நீளமும் 120 மீட்டர் அகலமும் கொண்ட இக்கோயிலின் பிரதான தெய்வமாக இருக்கும் சிவலிங்கம் 5 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டது, நந்தியும் மிகப் பெரியது.

அக்காலத்தில் இந்தியாவின் உயரமான கட்டிடமாக இது இருந்தது என்று கூறும் ஆய்வாளர்கள், கோபுரத்தின் சிகரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டுமே மட்டுப்பட்டுத்தப்பட்ட அளவில் சுண்ணாம்புப் பூச்சு பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்.

கோயிலை கட்டப் பயன்படுத்தப்பட்ட கிரனைட் வகைக் கற்கள் மிகவும் கடினமானவை. தொழில் நுட்பம் வளர்ந்த தற்காலத்தே – கற்களை உடைத்து சிற்பம் வடிப்பது கடினமான பணி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இதை நம் முன்னோர்கள் எப்படி சாதித்தனர்? என்பது பெரிய கேள்வியாகவே இருந்து வருகிறது.

உளியையும் சம்மட்டியையும் வைத்தே இக் கோயிலை கட்டியதாகக் கூறுகிறார் குமரிக் கடலில் வள்ளுவருக்கு 133 அடி சிலை அமைத்த கணபதி ஸ்தபதி. எகிப்திய பிரமிடுகளில் காணப்படும் அதே அடிப்படை தத்துவம் இங்கும் பின்பற்றப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

 

இந்தக் கோயிலின் முதல் குடமுழுக்க நடந்த சில காலத்தே ராஜ ராஜன் இறந்து விட – அவர் மகன் முதலாம் ராஜேந்திரன் – பெரிய கோயிலுக்காக ராஜ ராஜன் வழங்கிய நில மான்யங்கள் பலவற்றை தான் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்கு மாற்றி விட்டார். பெரிய கோயிலை விட பிரம்மாண்டமாக கட்ட வேண்டும் என்று நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கட்டுவதற்கு கட்டிடக் கலைஞர்களையும் – சிற்ப வல்லுனர்களையும் ரஜேந்திரன் அழைத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது. எனவே ஒரு விதத்தில் பெரிய கோயில் முற்றுப் பெறாத ஒரு கோயில் என்றே சொல்ல வேண்டும்.

உச்சி காலப் பொழுதில் கோயில் கோபுரத்தின் நிழல் கோபுரத்துக்குள்ளேயே விழும்படி உச்சி குறுகலாகவும் அடி பரந்தும் இருப்பதால் இக் கோயில் கோபுரம் நிழல் விழாக் கோபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.

சோழர் வரலாற்றை விளக்கும் ஏராளமான கல்வெட்டுக்களும் – அரிய ஒவியங்களும் இக் கோயிலுக்குள் உள்ளன. மலைகள் இல்லாத காவேரிப் படுகைப் பகுதியில் – இக் கோயிலை நிர்மாணிக்க – சுமார் ஐம்பது கிலோ மீட்டர் தொலையில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறார் அறிஞர் நாகசாமி. பிரதான கோபுரத்தின் உச்சியில் இருக்கும் சிகரம் போன்ற அமைப்பு ஒரு கல்லால் அமைந்ததில்லை என்கிறார் அவர்.

 

சாரப்பள்ளத்தில் இருந்து மண் மேடை அமைக்கப்பட்டு இந்தக் கல் கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்பட்டதாகக் கூறப்படுவது சரியல்ல என்றும் நாகசாமி கூறுகிறார். அதே நேரம் இந்தக் கோயில் ஆள்பவருக்கும் – அரசியல்வாதிகளுக்கும் ராசியில்லாத கோயில் என்ற கருத்தும் இருக்கிறது. பக்தர்கள் செல்லும் புனித ஸ்தலங்களின் பட்டியலில் இந்தக் கோயில் இல்லை. இருந்தும் இந்தக் கோயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. உள்ளூர் வாசிகள் ஊரின் பெருமை இது என சிலாகித்துப் பேசுகின்றனர்.

 

இந்தக் கோயிலின் உட்புறம் சுத்தமாக காட்சியளித்தாலும், கோயிலுக்கு அருகேயே குப்பை கூளங்கள் கொட்டப்பட்டிருப்பதை நம்மால் காணமுடிந்தது. யுனேஸ்கோவால் உலக பாரம்பர்ய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்தக் கோயிலின் பிரதான கோபுரத்துக்கு சில அடி தூரத்திலேயே மேற்கொள்ளப்பட்ட ஆழ் குழாய் கிணறு அமைக்கும் பணி நீதிமன்றத் தலையீட்டால்தான் சில வாரங்களுக்கு முன்பு தடுத்து நிறுத்தப்பட்டது.

 

பல புயல்களையும், 6 நில நடுக்கங்களையும், ஒரு பெரும் தீ விபத்தையும் சந்தித்த இத் திருக்கோயில் மனிதத் தலையீட்டை தாண்டி அடுத்த ஆயிரம் ஆண்டுகளை எப்படி சந்திக்கப் போகிறது என்ற கவலைகளும் இருக்கத்தான் செய்கின்றன. கோயில் விளக்கை ஏற்றுவதற்குத் தேவையான நெய்யை வழங்குவதற்காகவே ஆடுகளையும் மாடுகளையும் தானமளித்துள்ளான் ராஜ ராஜ சோழன். ஆனால் இன்றோ கோயிலில் மின்சாரத்தால் இயங்கும் மணியும் மேளமும் – மங்கல வாத்தியத்துக்கு பதிலாக ஒலிக்கின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீதுள்ள பொறுப்புக்களும்!- அதன் பலவீனங்களும்!! – இரா.துரைரத்தினம்.
Published on January 21, 2012-1:02 am   ·   4 Comments பிள்ளை பிறந்து 12வயதை கடந்த போதிலும் அந்த பிள்ளையின் பெயரை பதிந்து சட்டரீதியாக பிறப்பு சான்றிதழை பெறவில்லை என்றால் எதிர்காலத்தில் சந்திக்கப்போகும் நெருக்கடிகள், பின்னடைவுகள் கொஞ்சமல்ல. பதிவில்லாமல் பிள்ளை ஏதோ இருந்து விட்டு போகட்டும் என நினைப்பவர்கள் பொறுப்புள்ள பெற்றோராக இருக்க முடியாது.
இந்த பொறுப்புள்ள பெற்றோரின் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும்தான் இந்த தவறுகளுக்கு காரணகர்த்தாக்கள் என்பதை அவர்கள் மறுதலிக்க முடியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோற்றம்

ஆயுதப்போராட்டம் ஒரு புறம் நடந்த போதிலும் மறுபுறத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் உறுதியான அரசியல் தலைமை ஒன்றின் அவசியம் உணரப்பட்டதன் வெளிப்பாடாகவே தமிழ் அரசியல் கட்சிகளை இணைத்து ஒன்றிணைந்த தமிழ் அரசியல் தலைமை ஒன்றுக்கான கால்கோள் இடப்பட்டது. அதற்கான முயற்சிகள் 1998, 1999ஆம் ஆண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட போதிலும் 2000ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வடக்கு கிழக்கில் சிங்கள கட்சிகளின் ஆக்கிரமிப்பும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதித்துவ வீழ்ச்சியும் தமிழ் கட்சிகள் ஒன்று பட்டு செயற்பட வேண்டும் என்ற தேவையை பலமாக வலியுறுத்தியிருந்தது. அதன் மூலமே தமிழ் மக்களின் அரசியல் குரல் ஒற்றுமையுடன் பலமாக ஒலிக்க முடியும் என்ற அவசியமும் உணரப்பட்டது.

அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள், சந்தித்த தடைகள் பற்றியோ, அந்த முயற்சியில் ஈடுபட்டவர்கள் பற்றியோ விபரிப்பது இப்போது அவசியம் இல்லை. முக்கியமாக கிழக்கில் அந்த முயற்சிகள் நடந்ததும், அதற்காக மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜோசப் பரராசசிங்கம் என பலர் மட்டக்களப்பில் நடந்த கருத்தரங்குகளில் பங்குபற்றி இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதையும் நாம் மறக்க முடியாது.

2000ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தல் முக்கியமாக கிழக்கு மாகாணத்தில் உள்ளவர்களை விழிப்படைய செய்தது. வடகிழக்கு தமிழர் தாயகத்தின் தலைநகர் என நாம் கூறிவரும் திருகோணமலையில் அத்தேர்தலில் தமிழ் பிரதிநிதிகள் ஒருவர் கூட தெரிவு செய்யப்படவில்லை என்பதும் சிங்கள, முஸ்லீம்களே தெரிவு செய்யப்பட்டனர் என்பதும் பலர் இன்று மறந்திருக்கலாம். அது போல வடக்கு கிழக்கில் தமிழ் பிரதிநிதிகளுக்கு பதிலாக வேறு இனத்தவர்களே தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றதால் இந்த அவலம் ஏற்பட்டிருந்தது.

2000ஆம் ஆண்டில் ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி இரு கட்சிகளுமாக சேர்ந்து 8பேரை மட்டும் நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றிருந்தனர்.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற தலைமையில் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட போது வடகிழக்கிலிருந்து 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்ற அந்தஸ்த்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருந்தது. அந்த ஆண்டு தமிழர் விடுதலைக்கூட்டணி சின்னத்திலேயே வடக்கு கிழக்கில் முதற்தடவையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டது.

அதன் பின்னர் ஆனந்தசங்கரி இடறிக்கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியை தன்னுடன் கொண்டு சென்றதன் காரணமாக 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழரசுக்கட்சி சின்னத்திலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அத்தேர்தலில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுக்கொண்டது. ஆனந்தசங்கரி இடரிக்கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தனது வீட்டுச்சொத்து என நினைத்து அதனை தன்னுடன் கொண்டு போகாமல் இருந்திருந்தால் தமிழரசுக்கட்சியின் பிரசன்னம் இன்று இருந்திருக்காது. ஆனந்தசங்கரி அந்நேரம் அத்தவறை செய்யாமல் இருந்திருந்தால் இன்று அவரே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பார். அது மட்டுமல்ல அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் இன்று இருந்திருப்பார். ஆனால் அவர் இன்று மனந்திருந்திருந்தி வந்திருப்பதை வரவேற்க வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பகாலத்தில்  இல்லாத பொறுப்பும், சுமையும் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது சுமத்தப்பட்டிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது காலத்திற்கு காலம் வருகின்ற தேர்தலில் போட்டியிடுகின்ற பணியை செய்கின்ற அரசியல் கட்சியல்ல. விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் அரசியல் பலத்தின் மூலமே இன்று மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க கூடிய வழி மட்டுமே தெரிகின்ற நிலையில் அது பலமான சக்தியாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என நாம் பெருமையாக பேசிக்கொண்டாலும், சர்வதேச நாடுகள் அக்கட்சியே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்டாலும், அக்கட்சி பிறப்பு பதியாத பிள்ளையாக, நிற்பது எவ்வளவு பலவீனமானது என்பதையும், உள்முரண்பாடுகள், பலவீனங்களுடன் நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்வில் அவர்களின் உறுதியும் பலமும் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாமல் உள்ளது.
இந்த பலவீனங்களை சுயவிமர்சனம் செய்து அதை நிவர்த்தி செய்யாவிட்டால் வரலாற்று தவறை இழைத்தவர்கள் என்ற பழியை நாம் சுமந்தே ஆக வேண்டும்.

இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களின் இரு பொறுப்புக்கள் உள்ளன.
ஓன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் உள்முரண்பாடுகள், மனக்கசப்புக்கள், போட்டிகளை களைந்து ஒன்றுபட்ட ஒருமித்த கருத்துக்கொண்ட பலமான அரசியல் தலைமையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
இரண்டாவது அரசியல் தீர்வு விடயத்தில் எந்த தளம்பலும் அற்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆதரவு தளத்தை உள்ளகத்திலும், சர்வதேச மட்டத்திலும் உருவாக்க வேண்டும்.

இந்த இரண்டு விடயங்களிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் உறுதியாக செயற்படுகிறார்கள் என திருப்திபடும் அளவிற்கு காரியங்கள் நடைபெறவில்லை என்பது என்னைப் போன்ற பலருக்கு இருக்கும் ஆதங்கம்.
தமிழ் மக்களின் அரசியல் தலைமை என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் என இன்றும் உறுதியாக நம்பும் என்னைப் போன்றவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பலம், பலவீனங்கள், நல்லது கெட்டது என இரண்டு பக்கங்களையும் பேசாது வெறும் துதி பாடிக்கொண்டிருப்பது நாம் செய்யும் மிகப்பெரிய தவறாகும்.

எனவே உள்ளக வெளியக நிலைகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எங்கே செல்கிறது? அதன் பலவீனங்கள் என்ன என வெளிப்படையாகவே நாம் பேச வேண்டியது காலத்தின் தேவையாகும்.

முதலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருக்கும் உள்முரண்பாடுகள், போட்டிகள், பற்றி பார்ப்போம்.

ஆரம்பத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் ஆகிய நான்கு கட்சிகள் மட்டுமே இருந்தன. 2001ஆம் ஆண்டு தேர்தலின் போது தமிழரசுக்கட்சி என்ற எந்த பேச்சும் எழவில்லை.

தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆனந்தசங்கரி தன்னுடன் கொண்டு சென்ற பின்புதான் 2004ஆம் ஆண்டு அதற்கு பதிலாக தமிழரசுக்கட்சி தலையெடுத்தது. 1972களின் பின்னர் தமிழர் விடுதலைக்கூட்டணி தோற்றத்தை தொடர்ந்து தமிழரசுக்கட்சி பற்றி யாரும் பேசியது கிடையாது.

1977ஆம் ஆண்டு மட்டக்களப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்ட இராசதுரைக்கு எதிராக காசி ஆனந்தனை களமிறக்குவதற்காக மட்டுமே அப்போது தமிழரசுக்கட்சி பயன்படுத்தப்பட்டது. அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் தமிழரசுக்கட்சி தோற்றுப்போனது. இவை எல்லாம் கடந்த காலங்களில் எமது அரசியல் தலைவர்கள் செய்த தவறான காரியங்கள். உள்முரண்பாடுகளை வளர்ப்பதற்காக தமிழரசுக்கட்சி பயன்படுத்தப்பட்டது என்ற வரலாறு எழுதப்படக் கூடாது என்பது தமிழரசுக்கட்சியை நேசிப்பவர்களுக்கு இருக்கும் ஆதங்கம்.

தமிழரசுக்கட்சி என்பது தமிழ் மக்களால் நேசிக்கப்படும் ஒரு கட்சி என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் அக்கட்சியை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கிடையில் மோதல்களையும் முரண்பாடுகளையும் வளர்ப்பது அக்கட்சியின் பெயருக்கு களங்கம் கற்பிப்பதாகவே அமைந்து விடும். தமிழ் மக்களின் ஒற்றுமையின் சின்னமாகத்தான் தமிழரசுக்கட்சி இருக்க வேண்டும்.  அக்கட்சியின் பெயரால் எந்த பிளவுகளையும் முரண்பாடுகளையும் வளர்க்க அனுமதிக்க முடியாது.

2010ஆம் ஆண்டு கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் பிரிந்து சென்றது. அதன் பின் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி, ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருந்தன. அதன் பின் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் புளொட், மற்றும் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைத்துக்கொள்ளப்பட்டதாக செய்திகள் வந்த போதிலும் ஆனால் சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோர் தாங்கள் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கூட்டிற்குள் இருக்கிறோமா அல்லது வெளியில் இருக்கிறோமா என்று தெரியாத நிலையில்தான் உள்ளனர்.

வடக்கு கிழக்கில் பலமான பெரும்பான்மையான ஆதரவை பெற்ற பெரிய கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு என நாம் கூறிக்கொண்டாலும் சட்டரீதியான எந்த அங்கீகாரமும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடையாது. அது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியும் இல்லை. அக்கட்சியில் இன்று தலைவர்கள் என சொல்லப்படும் சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கோ அல்லது தாம் கூட்டமைப்பில் இருக்கிறோமா இல்லையா என தெரியாது இரண்டும் கெட்டான் நிலையில் இருக்கும் சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோருக்கோ தாங்கள் அக்கட்சியில் என்ன பொறுப்பில் இருக்கிறோம் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சட்டரீதியான அங்கீகாரத்தையும் பலத்தையும் பெறாத நிலையில் உள்முரண்பாடுகளை வளர்த்துக்கொண்டு செல்வது அவர்கள் வெளியகத்தில் செய்ய வேண்டிய பணிகளை வெகுவாக பாதிக்கவே செய்யும், உள்ளுக்குள் ஒருவருடன் ஒருவர் வெட்டுக்கொத்து சண்டை பிடித்துக்கொண்டு பொது எதிரியுடன் எப்படி மோதி வெற்றி பெற முடியும்? இது பொது எதிரிக்கு வாய்ப்பாகவே அமைந்து விடும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்முரண்பாடுகளும் அதற்கான காரணங்களும்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல கட்சிகள் இணைந்த கூட்டுக்கட்சியாக பதிவு செய்யப்படாமை உள்ளக முரண்பாட்டிற்கான முக்கிய காரணமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உதயம் பெற்று இன்று 12 வருடங்கள் கடந்து விட்டன. அந்த ஆரம்பகாலத்தில் தமிழர் விடுதலை கூட்டணி தலைமையில் இயங்கலாம் என சிலரும், இல்லை இல்லை அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தான் தலைமை தாங்க வேண்டும் என சிலரும் அடம்பிடித்து நின்றனர். அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் கட்சிதான் தமிழ் கட்சிகளில் மூத்த கட்சி எனவே அக்கட்சியின் சின்னத்தையே தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பயன்படுத்த வேண்டும் என தமிழ் காங்கிரஷ் தலைவர்கள் அந்நேரத்தில் வாதிட்டதையும் நான் அறிவேன். இவை எல்லாவற்றையும் கடந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு சட்டரீதியாக பதிவு செய்யப்பட வேண்டும் என 2001ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்றுக்கொண்டனர். அக்காலப்பகுதியில் மட்டக்களப்புக்கு வந்த செல்வம் அடைக்கலநாதன், ஜோசப் பரராசசிங்கம் ஆகிய தலைவர்கள் அங்கு நடைபெற்ற கலந்துரையாடலில் இதனை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இணங்கியிருந்தனர். இன்றைக்கு இந்த இணக்கம் ஏற்பட்டு 12 வருடங்கள் கடந்து விட்டன.
கட்சியை பதிவு செய்வதில் இழுபறிக்கான காரணம் என்ன?

கடந்த வருடத்தில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராசாவை நான் சந்தித்த போது இந்த இழுபறி பற்றி கேட்ட போது அவர் சில விளங்களை சொன்னார்.
மாவை சேனாதிராசா சொன்ன விடயம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தனிஒரு கட்சியாக பதிவு செய்ய முடியாது. பல கட்சிகள் இணைந்த கூட்டு கட்சியாகவே பதிவு செய்ய வேண்டும். தனிக்கட்சியாக பதிவு செய்தால் ஆனந்தசங்கரி ஒரு காலத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியை கொண்டு போனது போல தனிநபர் ஒருவரின் ஆதிக்கத்திற்குள் வந்து விடும். எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பை பல கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக பதிவு செய்ய வேண்டும். அதற்காக இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் மகாநாடுகளை நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அத்தீர்மானங்களை சமர்ப்பித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பங்கு வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் சமபலம் இருக்கும் வகையிலேயே கட்சி பதிவு செய்யப்பட வேண்டும். அதற்காகவே தமிழரசுக்கட்சி மாவட்ட கூட்டங்களையும், தேசிய மகாநாட்டையும் நடத்த தீர்மானித்துள்ளோம். எமக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்வதில் எந்த கருத்து முரண்பாடும் கிடையாது என மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.
ஒவ்வொரு கட்சியும் மகாநாட்டை நடத்துவதோ அல்லது கட்சி கிளைகளை அமைப்பதோ தவறில்லை. அது அவர்களின் ஜனநாயக உரிமை. ஆனால் அந்த ஜனநாயக உரிமை தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமையை பலவீனப்படுத்துவதற்கோ, அல்லது கட்சியை பதிவு செய்து சட்ட அங்கீகாரம் பெறுவதற்கு முட்டுக்கட்டையாகவோ இருக்க அனுமதிக்க முடியாது.

தமிழரசுக்கட்சியில் இருக்கும் ( குலநாயகம், சிவஞானம், போன்ற) சிலரின் அண்மைக்கால நடவடிக்கைகளும், பேச்சும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்திருக்கும் ஏனைய கட்சி தலைவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமையை பலவீனப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழரசுக்கட்சி, தமிழ்காங்கிரஷ், ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ். புளொட் என பிரிந்து நிற்க விரும்பவில்லை என்பதை கடந்த கால வரலாறுகள் எமக்கு தெளிவாக புலப்படுத்துகின்றன. தமிழரசுக்கட்சி மாநாட்டை நடத்துவதோ அல்லது அதற்கு அப்பால் சென்று அங்கத்தவர்களை சேர்ப்பதோ தவறில்லை. ஆனால் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் தலைமைக்கு சட்ட அங்கீகாரத்தை பெறுவதில் இரண்டு மடங்கு வேகத்தை காட்ட வேண்டும். சட்ட அங்கீகாரம் பெற்ற அரசியல் தலைமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தவில்லை என்றால் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பெறும் விடயத்தில் தோற்றுப்போய் விட கூடிய அபாயம் காணப்படுகிறது. உள்முரண்பாடுகளை வைத்துக்கொண்டு ஒருபோதும் வெளியகத்தில் எமது தேசிய பிரச்சினையை தீர்ப்பதற்கு ஒன்றுபட்டு நிற்க முடியாது.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான சட்ட அங்கீகாரம் பெறும் விடயத்தில் தலைவர் சம்பந்தனும், செயலாளர் மாவை சேனாதிராசாவும் பொறுப்புணர்வோடு செயற்பட்டு ஏனைய அரசியல் கட்சி தலைவர்களையும் இணைத்துக்கொண்டு செயற்பட வேண்டும்.

தாங்கள் ஓரங்கட்டப்படுகிறோம் என்ற உணர்வு எந்தவகையிலும் ஏனைய தலைவர்களுக்கு வராதவகையில் செயற்பட வேண்டியது அனுபவம் வாய்ந்த சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் முன்னிலையில் உள்ள பொறுப்பாகும்.
தீர்மானம் எடுக்கும் சக்திகளாக சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரே இருக்கின்றனர் என்ற மன ஆதங்கம் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அல்லது ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஆகிய கட்சிகளின் தலைவர்களுக்கு இருப்பதை மறைப்பதற்கில்லை. இந்த நிலைகள் மாற்றப்பட்டு பன்முக ஜனநாயக சூழல் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அது போல ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதனும், இந்த விடயத்தை வெளியில் இருந்து கொண்டு பேசிக்கொண்டிருப்பதாலோ, சம்பந்தனையும், மாவை சேனாதிராசாவையும் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பதை விடுத்து நேரடியாக அவர்களுடன் பேசி உள்ளக பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காணவேண்டும். உள்ளக பிரச்சனையையும் முரண்பாடுகளையும் பலவீனங்களையும் களைய முடியாத உங்களால் எப்படி தேசிய பிரச்சினைக்கு தீர்வை பெற்றுத்தரப்போகிறீர்கள் என மக்கள் உங்கள் மீது சந்தேகம் கொள்வதற்கு நீண்டகாலம் எடுக்காது. உள்ளக பிரச்சினையை தீர்த்தால் மட்டுமே நீங்கள் பலமான அரசியல் தலைமை என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு ஏற்படும்.

என்னதான் கடந்த காலத்தில் தவறுகளை இழைத்தாலும் இன்று தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதில் ஒரே அணியில் ஒரே அரசியல் தலைமையாக செயற்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு கையை நீட்டியிருக்கும் சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரின் கரங்களையும் உதறி தட்டிவிடக் கூடாது. நீங்கள் தேடிப்போய் அழைக்க வேண்டிய நேரத்தில் தமிழ் மக்கள் ஒற்றுமையோடு செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர்களாவே உணர்ந்து வந்திருக்கும் சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோர் தொடர்பாகவும் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் எடுத்து எறிந்து நடந்து கொள்வது அரசியல் விவேகம் அல்ல.

எந்த ஒரு சிறுபான்மை சமூகத்திலும் பலமான அரசியல் சக்திகள் இருக்க கூடாது என சிறிலங்காவின் ஆளும் தரப்பு விரும்புகிறது. முஸ்லீம் சமூகத்தில் பலமான அரசியல் தலைமையை உடைப்பதில் சிறிலங்கா ஆளும் தரப்பு வெற்றி கண்டிருக்கிறது. அதேபோல தமிழ் தரப்பிலும் பலவீங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமல்ல என்ற வாதத்தை இன்று சிறிலங்காவின் ஆளும் தரப்பு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பலமாக பிரசாரம் செய்து வருகிறது. இதற்கு துணைபோகும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அரசியல் தலைவர்கள் நடந்து கொள்வது தமிழ் தலைமைகள் மீது தமிழ் மக்களுக்கு முற்றாக நம்பிக்கை இழக்க வைத்து விடும்.

இராஜதந்திரிகளை சந்திக்கும் போதும் முக்கிய நாட்டு தலைவர்களை சந்திக்கும் போதும் தமிழ் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒரே அணியில்தான் இருக்கிறோம் என்பதை காட்டும் வகையில் கட்சி தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரையும் இணைத்துக்கொள்வதால் தமிழ் மக்களின் பலம்தான் வெளிப்படும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற உறுதியான அரசியல் தலைமை தேர்தலுக்காகவோ அல்லது நாடாளுமன்றத்திற்கு சில பிரதிநிதிகள் செல்வதற்காகவோ இருக்கும் அரசியல் கட்சி அல்ல என்பதற்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை பெறுவதற்கான தமிழ் மக்களின் தலைமையாக செயற்பட வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அக்கட்சிக்கு உண்டு. எனவேதான் இந்த விடயத்தில் வடக்கு கிழக்கில் உள்ள புத்திஜீவிகள், கல்விமான்கள் என அனைவரும் இணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களை ஒரு மேசைக்கு அழைத்து உள்ளக பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு உதவ வேண்டும். பூசைக்கு யாராவது மணி கட்சியாக வேண்டும்.

இரண்டாவது விடயம்
அரசியல் தீர்வு விடயத்தில் எந்த தளம்பலும் அற்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்க வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஆதரவு தளத்தை உள்ளகத்திலும், சர்வதேச மட்டத்திலும் உருவாக்க வேண்டும்.
இந்த விடயத்தில் எந்த வெளிச்சக்திகளின் அழுத்தங்கள் வந்த போதிலும் உரிமைகளை வென்றெடுப்பதில் உறுதியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்கும் என்ற நம்பிக்கை தமிழ் மக்களுக்கு இருக்கின்ற போதிலும் இந்தியா போன்ற சக்திகளின் அழுத்தங்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அடிபணிந்து போய்விடுவார்கள் என்ற அச்சமும் எழுகிறது.

அண்மையில் அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளிலும் சரி இந்திய வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா உட்பட இராஜதந்திரிகளுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளிலும் சரி மாகாணசபைக்கான அதிகாரப்பகிர்வின் ஒரு அங்கமாக காணி, காவல்துறை அதிகாரங்கள் பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேசி வருகிறது. அப்படியானால் வடகிழக்கு இணைப்பு என்ற விடயத்தை பேசியதாக தெரியவில்லை. குறைந்தது வடகிழக்கு இணைந்த மாகாணத்தில் சுயாட்சி அதிகாரங்கள் என்ற விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுதியாக இருக்க வேண்டும்.

வடக்கு கிழக்கு இணைப்பு என்பதன் அவசியத்தை கிழக்கு மாகாண தமிழ் மக்கள் முக்கியமாக உணர்வார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்படவில்லை என்றால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மூன்றாம் தர குடிமக்களாகத்தான் இருப்பார்கள். கிழக்கு மாகாணம் பிரிந்திரிக்கும் ஒவ்வொரு நிமிடமும் வடகிழக்கில் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமை கிடைக்காத ஒவ்வொரு நிமிடமும் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்கள் அபகரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். இன்று திருகோணமலையில் தமிழர்கள் இந்த கிராமங்களில் வாழ்ந்தார்களா என்ற அடையாளமே தெரியாத வகையில் அபகரிப்புக்கள் இடம்பெற்றது போல கிழக்கு மாகாணத்தில் உள்ள பல தமிழ் கிராமங்களுக்கும் ஏற்படலாம்.

சில சுயநலவாதிகள்,  அரசியல் அரிச்சுவடி தெரியாதவர்கள், கிழக்கு மாகாணம் பிரிந்திருக்க வேண்டும் என சொன்னாலும் கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்கள் வடக்கு கிழக்கு இணைப்பே எமக்கான பாதுகாப்பு என்பதில் உறுதியாக உள்ளனர். எனவே வடகிழக்கு இணைப்பை பற்றிய பேச்சை  தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைவிடுமாக இருந்தால் கிழக்கு மாகாண தமிழ் மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடும்.

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு என்பது இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்த இணைப்பு விடயத்தில் இந்தியாவுக்கு முக்கிய பங்குள்ளது. எனவே இந்தியா அரசியல் தலைவர்களுக்கு இதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொறுப்பாகும்.

அரசுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு தற்போது சிறிலங்கா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக அறிய முடிகிறது. பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றினால் மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை தொடர முடியும் என அறிவித்திருக்கிறது.

அரசுக்கும் தமக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் காணப்படும் முடிவுகள், அல்லது தீர்மானங்களை பாராளுமன்ற குழுவுக்கு சமர்ப்பித்து அந்த விடயம் விவாதிக்கப்படும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதில் பங்கு பற்றும். தற்போது அரசுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் எந்த தீர்மானமோ, முடிவோ எட்டப்படவில்லை. எனவே பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பங்குபற்ற வேண்டிய தேவை இதுவரை எமக்கு ஏற்படவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியிருக்கிறது.
பாராளுமன்ற தெரிவு குழு என்பது கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் காலத்தை இழுத்தடிப்பதற்கு ஆளும் கட்சி மேற்கொள்ளும் தந்திரோபாயம் என்பது தமிழ் மக்கள் அறிந்த விடயம்.

அதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழுவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்கு பற்ற வேண்டும் என இந்தியா மறைமுகமாக அழுத்தம் கொடுத்து வருவதாகவும், இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடிபணியும் பலவீனமான நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருப்பதாகவும் வடக்கு கிழக்கில் உள்ள பெரும்பாலான தமிழ் மக்களின் கவலையாகும்.

இந்தியாவின் ஆதரவை பெறுவதோ அல்லது வெளிநாட்டு ஆதரவை பெறுவதோ முக்கியம் தான். கடந்த காலங்களில் தமிழர் தரப்பில் உலக நாடுகளை பகைத்துக்கொண்டதன் விளைவை கண் கூடாக கண்டிருக்கிறோம். ஆனால் அதற்காக இந்தியாவோ அல்லது வெளிநாட்டு சக்திகளோ போடும் தாளத்திற்கு எல்லாம் ஆடுபவர்களாக மாறிவிட முடியாது. அது மக்களின் விடுதலையை வேறு திசைக்கு கொண்டு சென்று விடும். இந்த அழுத்தங்கள் வராது தமது தரப்பு நியாயத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்தியா உட்பட வெளிநாட்டு சக்திகளுக்கு தெளிவு படுத்தும் இராஜதந்திரத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்.

கடந்த ஒரு வருடகாலமாக சிறிலங்கா அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சு வார்த்தை நடத்தியிருக்கிறது. ஆனால் அதன் பெறுபேறு பூச்சியமாகவே உள்ளது. எனவே மூன்றாம் தரப்பு வெளிநாட்டு மத்தியஸ்தம் ஒன்றுடன் பேசாதவரைக்கும் சிறிலங்கா அரசாங்கம் தமிழ் தரப்பை ஏமாற்றிக்கொண்டே இருக்கும். எனவே இனிமேல் சிறிலங்கா அரசாங்கத்துடன் பேசுவதாக இருந்தால் வெளிநாட்டு மத்தியஸ்த்தம் ஒன்றுடன் தான் பேச வேண்டும் என்ற முடிவுக்கு வர வேண்டும். அதற்கான ஆதரவு தளத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டு இராஜதந்திரிகள் மட்டத்திலும் ஏற்படுத்த வேண்டும்.
இன்று பல தளங்களில் தமிழ் மக்களின் விடுதலைக்கான ஜனநாயக போராட்டம் நடத்தப்பட வேண்டும்.

ஓன்று அரசாங்கத்துடன் பலமான நிலையில் இருந்து கொண்டு வெளிநாட்டு மத்தியஸ்தத்துடன் பேசுதல்

இரண்டு சர்வதேச மட்டத்தில் அதற்கான ஆதரவு தளத்தையும் பெறுவதற்காக கிராமமான வேலைகளை செய்ய வேண்டும்.

மூன்று வடக்கு கிழக்கில் மட்டுமல்ல இலங்கையில் இருக்கும் ஏனைய (மலையக மற்றும் மேல் மாகாண தமிழ்)  கட்சிகளை இணைத்துக்கொண்டு ஜனநாயக போராட்டங்களை நடத்த வேண்டும். இதற்கு சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஷ் போன்ற முஸ்லீம்கள் கட்சிகளுடனான உறவை பலப்படுத்த வேண்டும்.

நான்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஜனநாயக போராட்டத்திற்கான ஆதரவு தளத்தை வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் ஏற்படுத்துதல்

இது போன்ற பல தளங்களில் இருந்து பணியாற்றினால் மட்டுமே தமிழ் மக்களுக்கான உரிமையை மீட்டெக்க முடியும்.   அதைவிடுத்து உள்முரண்பாடுகளை வளர்த்து குடும்பிச்சண்டை போடுவது தமிழ் மக்களை மீண்டும் நந்திக்கடலில் கொண்டுபோய் வீழ்த்துவதாக அமைந்து விடும்.