குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தந்தை பெரியார் அவர்களின் பார்வையில் பொங்கல் விழா

  17.01.2012-தமிழாண்டு2043பொங்கல் பண்டிகை என்பது நாள், நட்சத்திரம், மதக்கதை ஆதாரம் முதலியவை எதுவுமே இல்லாமல் தை மாதம் ஒன்றாம் தேதி என்பதாக, தை மாதத்தையும் முதல் தேதியையுமே ஆதாரமாகக் கொண்டதாகும். இதற்கு எந்தவிதமான கதையும் கிடையாது. இந்தப் பண்டிகை உலகில் எந்த பாகத்திற்கும், எந்த மக்களுக்கும் உரிமையுள்ள பண்டிகையாகும். என்றாலும், மற்ற இடங்களில் மற்ற மக்களால் பல மாதங்களில் பல தேதிகளில் பல பேர்களால் கொண்டாடப் படுவதாகும். இக்கொண்டாட்டத்தின் தத்துவம் என்ன வென்றால் விவசாயத்தையும், வேளாண்மை யையும் அடிப்படையாகக் கொண்டு, அறு வடைப் பண்டிகையென்று சொல்லப்படுவ தாகும். ஆங்கிலத்தில ஹார்வெஸ்ட் பெஸ் டிவல் (Harvest Festival) என்று சொல்லப் படுவதின் கருத்தும் இதுதான்.

மத சம்பந்தமாக பார்ப்பனர் கட்டிவிட்ட கதை

என்றாலும் பார்ப்பனர் இதை மத சம்பந்தம் ஆக்குவதற்காக விவசாயம், வெள்ளாண்மை, அறுவடை ஆகிய கருத்தையே அடிப் படையாகக் கொண்டு இதற்கு இந்திரன் பண்டிகை என்றும், அதற்குக் காரணம் வெள்ளாண்மைக்கு முக்கிய ஆதாரமான நீரை (மழையை)ப் பொழிகிறவன் இந்திரன். ஆதலால் இந்திரனைக் குறிப்பாய் வைத்து விவசாயத்தில் விளைந்து வெள்ளாண்மை யாகியதைப் பொங்கி (சமைத்து) மழைக் கடவுளாகிய இந்திரனுக்கு வைத்துப் படைத்து பூஜிப்பது என்றும் கதை கட்டிவிட்டார்கள்.

இந்தக் கதையை இவ்வளவோடு விட்டுவிடாமல், இம்மாதிரியான இந்திர விழா பற்றி கிருஷ்ணன் பொறாமைப்பட்டு தனக்கும் அந்த விழாவை (பூஜையை) நடத்த வேண்டுமென்று மக்களுக்குக் கட்டளை இட்டதாகவும், மக்கள் அந்தப்படிச் செய்த தாகவும், இந்த இந்திரவிழா, கிருஷ்ணமூர்த்தி விழாவாக மாறியதைக் கண்ட இந்திரன் கோபித்து ஆத்திரப்பட்டு இந்த கிருஷ்ண மூர்த்தி விழா ஈடேறாமல், நடைபெறாமல் போகும் பொருட்டு பெரிய மழையை உண்டாக்கி   விழாக் கொண்டாடுவோர் வெள் ளாண்மைக்கு ஆதரவாகயிருந்த கால் நடைகள், ஆடுமாடுகள் அழியும் வண்ணமாகப் பெரு மழையாகப் பெய்யச் செய்து விட்டான் என்றும், இதற்கு ஆளான மக்கள், கிருஷ்ண மூர்த்தியிடம்  சென்று முறையிட்டதாகவும், கிருஷ்ணமூர்த்தி மக்களையும், ஆடுமாடுகளையும் காப்பாற்ற ஒரு பெரிய மலை(கோவர்த்தனகிரி)யைத் தூக்கி அதைத் தனது சுண்டுவிரலால் தாங்கிப் பிடித்து காப்பாற்றியதாகவும், இதனால், இந்திரன் வெட்கமடைந்து, கிருஷ்ணனிடம் தஞ்சமடைந்து தனது மரியாதையைக் காப்பாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு இரங்கி கிருஷ்ணன் எனக்கு ஒரு நாள் பண்டிகை, உனக்கு ஒரு நாள் பண்டிகையாக மக்கள் முதல்நாள் எனக்காகப் பொங்கல் பண்டிகை யாகவும், பொங்கலுக்கு மறுநாள் பண்டிகை உனக்காக மாட்டுப் பொங்கலாகவும் கொண் டாடும்படியும் ராஜி செய்து கொண்டார்கள் என்றும் சிரிப்பிற்கிடமான, ஆபாச முட்டாள் தனமான கதைகளைக் கட்டிப் பொருத்தி விட்டார்கள்.

இதிலிருந்து தேவர்களுக்கு அரசனான இந்திரனின் யோக்கியதை எப்படிப்பட்டது, மக்களுக்குக் கடவுளான கிருஷ்ணனின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பதை மக்கள் சிந்தித்து உணரவேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். மற்றும் இதில் பொங்கலுக்கு முதல் நாளைக்கு ஒரு கதையும், மறுநாளைக்கு ஒரு கதையும் போகிப் பண்டிகையென்றும், சங்கராந்தி பண்டிகையென்றும் பெயர் வைத்து மூன்று நாள் பண்டிகையாக்கி அதில் ஏராள மான முட்டாள்தனத்தையும், மூடநம்பிக் கையையும் புகுத்திவிட்டார்கள்.

பார்ப்பன ஆதிக்கத்தின் சுயநல சூழ்ச்சி

நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம்  எப்படி இருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுகஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத, ஆராய்ச்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்ய வேண்டுமென்பதே அவர்களுடைய பிறவிப் புத்தியானதால் அதற்கேற்ப உலக நடப்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு மனிதர்களாக நாம் வாழவேண்டுமானால் பொங்கல்  பண்டிகை முதல் நாளான தை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உண வருந்துவதையும், நல்லுடை உடுத்துவதையும், மனைவி மக்கள் முதலியவர்களுடன் இன்ப மாகக் காலம் கழிப்பதையும், நம்மால்கூடிய அளவு மற்றவர்களுக்காக உதவி அவர்களுடன் குலாவுவதான காரியங்களைச் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும். மற்றபடியாக மதச்சார்பாக உண்டாக்கப் பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும் பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர் விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறி வுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமல் இருந்து தங்களை மானமும், அறிவும் உள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதற்கழகு.

-ஈ.வெ.ராமசாமி
(விடுதலை 13-10-1970)

திராவிடர் திருநாள் 


அறிஞர் அண்ணா

காற்றால் ஆடும் கதிர் ஒலி, கானமாகக் கேட்கிறது. அவனுக்கு நிமிர்ந்து பார்க்கிறான். பொன்னாடை போர்த்தியதுபோலக் காட்சி தரு கின்றன கழனிகள் அங்கே-கையிலே கறுக்கரிவாள் ஏந்தி, கக்கத்திலே அறுத்த நெற்கதிர்களோடு, அன்ன மெனச் செல்கிறாள், அகு மனைவி. வீட்டைப் பார்க்கிறான். வெண் சுண் ணம் அடித்து கூட்டி மெழுகியதால், அங்கே ஒளிவிடும் அழகு அவனுக் கோர் புது உணர்வு தருகிறது. அங்கே-சிற்றாடை தடுக்க-தத்தை போல்  தாவி-நிலாமுற்றத்தை அலங்கரித்துக் கொண் டிருக்கிறாள் - சின்ன மகள். கமலக் கரங்களால், தும்பைப் பூக்கக் கொட் டுகிறான், குறுநடைச் சிறுவன்! பிள்ளைக் கனி!! ஆகா, அந்தத் தும்பைப் பூவின் நிறம்தான் எவ்வளவு வெண்மையானது! அதையும் மிஞ்சும் அந்த உழவனின் உள்ளம் தான் எத்தகையது. பாடுபடுகிறான்-தசைகள், அசையாத நேரமில்லை. அவனுக்கு, உழைப்புதான்! உழைப்பிலே மலர் கிறது. செந்நெல்கதிர்கள்!! ஆனால், கதிர் கண்டதும், தனக்கு வாழ்வளிக் கும் தாயை மறந்துவிடவில்லை பலன் பெற்றதும், பலன் தந்தோரை மறக்கும் பதரல்லவே அவன். அதனால் மாதா வுக்கு மரியாதை செய்ய நினைக்கிறான்.

தன்னையும், தன்னைச் சார்ந்திருக்கும் கோடானுகோடி உயிர் ராசிகளையும் உய்விக்கும் அன்னை வழங்கும்பரிசைக் கண்டு பரவசமடையும் அவன, விழா கொண்டாடுகிறான். விளைச்சல் விழா வியர்வை பயன் தந்த நாளைக் குறிக்க ஓர் விழா பலன் கருதாது பரிசளிக்கும் பூமியன்னையின் ஞாபகார்த்தமான விழா! ஏன், அவனக்குப் பெருமிதம் வராது? பூமியிருக்கும் வரை எனக் கேது கவலை? என்று பூரிப்போடு பார்க்கிறான். அந்தப் பூரிப்பிலே, உலகமே, காட்சி தருகிறது. மனக் கண்ணில். நிமிர்ந்து பார்க்கிறான் தனது குப்பத்தில் கோலமிடும் கோதை யர் கும்பல், குடமெடுத்தேகும் குல மாதர்வரிசை மலர் ஆடி மகிழும் மகளிர்-அவர்தம் மொழிநாடியேகும் வீரர்! பள்ளுப்பாட்டு! பரவைசகீதம், அவனது அரும்பு மீசைகளிலே, அவன் இதயத்திலிருந்து ஓடும் இன்ப மூச்சு கள், தாக்குகின்றன. வீரம் கொட்டும் விழிகளிலே கனிவு வழிகிறது. முறுக் கேறிய உடம்பினிலே குதூகலம் ஏறு நடைபோடுகிறான் எமக்கு நிகர் யாரிங்கே? என்பது தென்படுகிறது, அவன் தோற்றத்தில்.

இத்தகைய உழவனைக் கண்டார், உலகப் பெரியார்! உளம் கிழ வரைந் தார். உழுதுண்டு வாழ்வாரே, வாழ் வார்-மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்று. வள்ளுவப் பெருந் தகை சித்தரித்த, உழுதுண்டு வாழ்வா ருடன், இன்றைய உழவரை நினைத் துப் பார்த்தால், நெஞ்சு சிலிர்க்கும், ஏர்பிடித்த வனுக்கே பார் ஆளும் வேந்தன் அடைக்கலம்-என்றோர். நிலை, தமிழகத்தில் இருந்ததுண்டு. அந்தத் தமிழகமா - இன்று? இல்லை! இல்லை!! மிடுக்கோடு பார்க்கும் உழவன் இல்லை-ஆளரசுக்கு அடி மைப்பட்டு கூனல் முதுகாகிப், போன ஏழை இருக்கிறான். ஆனால், அந்த ஏழையிடம் பரம்பரைக் குணம் மட்டும் மாறிப்போய் விடவில்லை! தமிழ்ப்பண்பு, காய்ந்து போகவில்லை! தன்னையும் உலகையும் வாழ்விக்கும் தாயைப் போற்றத் தவறவில்லை; அவன் உடல் கறுத்து விட்டது. ஆனால் உள்ளம் தும்பைப் பூவாக வேயிருக்கிறது. அவனால் உலகம் வாழ்கிறது. வள்ளுவப் பெருந்தகை வர்ணிப்பதுபோல, அவனைத்தான் அரசுக்கட்டிலேறியோர் உள்பட அனைவரும் எதிர்பார்க்கின்றனர்! அவன், பலன் கருதாத பூமியன் னையின், புத்ரனாகவே தன்னைப் பாவித்துக்கொண்டிருக்கிறான்! ஆனால் அவனால் பலன் பெறும் அரசோ, அவனை ஏமாளியென்று எண்ணிக்கொண்டிருக்கிறது!! எனினும், அவன், தன்னுடைய நன்றி காட்டும் விழாவை நடத்தத் தவற வில்லை! பொங்கலை-மறந்துவிட வில்லை.

கவ்விக்கொண்டிருக்கும் காரிருளில் ஒரு ஒளிச்சிதர்-இன்றைய பொங்கல் நாள், தமிழகத்திலே ஒரு பொன்னாளாகவிருந்த காலம் ஒன்று உண்டு. ஆனால் இன்று அந்தப் பொன், தூசுகளாலும் தூர்த்தர்களின் கழுகுப் போக்காலும், ஒளியிழந்து கிடக்கிறது. பழைய மாட்சியும், பண்டைப் பெரு மையும் இல்லை யென்றாலும், சிதறிய வரைத்தின் சிறுதுளிபோல, நமது சிந்தனையில் ஒளியிட்டுக் கொண்டிருக்கிறது.

அதனாற்றான், இந்த நாளை, இன்னும் தமிழகம் மறக்கவில்லை. விளைச்சல் விழா - விளைச்சல் வேறெங்கோ, கொட்டிச் செல்லப்பட் டாலும், நாம் கொண்டாடத் தவறா மலிருக்கும்விழா. இத்தகைய பண்பு நம்மிடையே ஒளியிழந்திருந்த காலம்போய், இன்று ஓரளவாவது சுடர்விட்டுப் பிரகாசிக்கிறது. தூசு போக்கவும், நல்லறிவு பரப்பவுமான நற்பணி வளர்ந்து வருகிறது. இனப் பற்று, மொழிப்பற்று, நாட்டுப்பற்று எனும் வகைகளில், இந்த ஆனந்த நாளிலே, அரசு பீடத்திலமர்ந்தும் உழைப்பவன் வாழவழி செய்யாது, உறுமுதலையும் உதை தருவதையும் ஆட்சிப் பாதையாகக் கொண்டி ருக்கும் ஆட்சியினருக்கும் ஒன்றை அறிவுறுத்த விரும்புகிறோம்.

அந்த அறிவுரையும், வள்ளுவர் வழங்கியதுதான். அல்லற்பட்டு ஆற்றது அழுத கண்ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை, என்றார் அப்பெரி யார். அந்தப் படை வளர்ந்து வருகிறது. அதனை எண்ணிப் பாரீர் என்று அரசினருக்கு அறிவுறுத்துகிறோம்.
புதுநிலை வளரவும், புதுவாழ்வு விரையவும், வள்ளுவர் கண்ட திரு அகத்தைப் பெறவும் இந்த இன்ப நாளில், உறுதியெடுத்துக்கொள்வோம். வாழ்க திராவிடம், வருக இன்பம்.

திராவிடநாடு 1953 - பொங்கல் மலர்.


தைப் பொங்கல் விழாவின் தனித் தன்மைகள் -டாக்டர் சுப.திண்ணப்பன்

தைத் திங்கள் முதல் நாளில் தமி ழர்கள் கொண்டாடும் தனிப் பெரும் விழா தைப் பொங்கல் விழா. இவ்விழா வின் தனித் தன்மைகள் சிலவற்றைக் இக்கட்டுரையில் காண்போம்.

சமயங் கடந்த விழா

பொதுவாக இந்து சமயச் சார் புடைய  விழாக்கள் நட்சத்திரம் அல் லது திதி அடிப்படையில் அமையும். தைப் பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் முதலியவை நட்சத்திரம் அடிப்படையில் அமைந்த விழாக்கள். கந்த சஷ்டி, வைகுண்ட ஏகாதசி, தீபா வளி முதலியவை திதி அடிப்படையில் அமைந்த விழாக்கள். சமயச் சான் றோர்களின் பிறந்த நாளும் விழாவாகக் கொண்டாடப்படும். கிறிஸ்துமஸ், ராம நவமி, கோகுலாஷ்டமி, ஆழ்வ ர்களின் திரு நட்சத்திரம், நபிகள் நாயகம் பிறந்த நாள் முதலியவை இவ்வகையில் அமையும். வைகாசி விசாகம் புத்தர் ஞானம் பெற்ற நாள். ஆனால் தைப் பொங்கல் கொண் டாடப்படும் தை முதல் நாளோ இந்த அடிப்படையில் அமையவில்லை. நட் சத்திரம் அல்லது திதி அடிப்படையில் அமையும் விழா நாள்கள் அந்த அந்த ஆண்டுப் பஞ்சாங்கப்படி நிர்ணயிக் கப்படும்.

சிலவேளை மாறி வரவும் வாய்ப்புண்டு... ஆனால் பொங்கல் நாள் எப்போதும் மாறாது தை முதல் நாள் தான் வரும். மேலும் சமயத் தொடர் பான விழாக்களுக்கு ஏதேனும் புராணக் கதைத் தொடர்பு இருக்கும். தீபாவளி என்றால் நரகாசுரன் கதையும். கந்த சஷ்டி என்றால் சூரசம்காரக் கதையும் உள்ளன. ஆனால் தைப் பொங்கலுக் கென்று எந்தப் புராணக் கதையும் இல்லை. எனவே தைப் பொங்கல் விழா ஒரு சமயச் சார்பற்ற விழா எனக் கூறலாம். தமிழர்களின் முதன்மை உணவு அரிசிச் சோறு ஆகும். எனவே தமிழர் களில் பெரும்பாலோர் வேளாண் மையைத் தம் தொழிலாகக் கொண்ட வர்கள். வயல்களில் உழுது பயிரிட்டு வாழ்பவர்கள். அவர்கள் தாங்கள் ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த அறுவடையில் கிடைத்த நெல் லின் புத்தரிசியைச் சருக்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையிலிட்டுப் புத்தடுப்பில் கொதிக்க வைத்துப் பொங்கல் சோறாக்கிக் கதிரவனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும். பொங்கல் என்னும் இந்தப் புத்தரிசிச் சோற்றுணவை மய்யமாக வைத்தே இந்த விழாவுக்குப் பொங்கல் என்னும் பெயர் வந்தது. பானையில் பால் பொங்கி வரும்போது பொங்கலோ பொங்கல் என மகிழ்ச்சி ஆரவாரத் துடன் பொங்கல் நாளை வரவேற்பது தமிழர் மரபாகும்.

தை முதல் நாளின் சிறப்பு

தை முதல் நாளில் சூரியன் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு மாறிப் பயணம் செய்கிறான். அதாவது பூமத் திய ரேகையின் தென் பகுதியிலிருந்து வடபகுதிக்கு ஞாயிறு செல்லும் நாளே தை முதல் நாள். இதனை உத்தரா யணம் என்பர். மகர சங்கராந்தி என்றும் அழைப்பர். எனவே இந்த நாளைத் தேர்ந்தெடுத்து ஞாயிற்றுக்குப் புதுப் பொங்கலைப் படைக்கும் விழாவைக் கொண்டாடினார்கள். ஞாயிறு - சூரியன் - தானே நமக்கு வெம்மையும் வெளிச்சமும் தருகிறது. சூரியனை முதன்மைக் கோளாகக் கொண்டு தானே ஏனைய கோள்களும் அதனைச் சுற்றி வருகின்றன. சிலப்பதி காரம் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் என்று சூரியனை வாழ்த்தியே தொடங்குகிறது.

தைத் திங்களின் தலைமைத் தன்மை

தைத் திங்களே தலைமைத் திங்கள் என்னும் தலைப்பில் காலம்சென்ற மொழியியல் பேரறிஞர் ச.அகத்திய லிங்கனார் விடுதலை (27.9.2008) இதழில் எழுதிய கட்டுரையில் பின் வருமாறு குறிப்பிடுகிறார். தமிழில் காணப்படும் மாதங்களில் பண்டைக் கால இலக்கியங்களில் அதிலும் குறிப்பாகச் சங்க இலக்கியங்களில் தை மாதம் ஒன்றே மிகச் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. ஏறத்தாழ நாற்பதுக்கும் அதிகமான இடங்கள் தை என்ற சொல்லைப் பெயராகவும் வினையாகவும் (தைஇ எனும் அள பெடை நிலையில்) பயன்படுத்தி யுள்ளமை காணலாம். இது மிகப் பண்டைக் காலம் முதலே தை என்ற சொல் தமிழ்ச் சொல்லாகப் பல்வேறு நிலையில் பயன்பட்டுள்ளமையைக் காட்டும். மீதியுள்ள திங்கட்பெயர்கள் தமிழ்ச்சொல்லாக இலது காணத் தக்கது. தமிழ்நாட்டின் தட்ப வெட்ப நிலையில் மார்கழிப் பனி, குளிர் நீங்கித் தை வந்ததும் தமிழர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தை மாதம் வளம் கொழிக்கும் ஒரு மாதம் என்றும் சங்க இலக்கியமாகிய புறநானூறு (70) பேசுகிறது.

இம்மாதம் நீர் வளம் கொண்டு விளங்குவதை பாரி பறம்பின் பனிச் சுவைத் தெண்ணீர் தைத்திங்கள் தண்ணிய தரினும் என்று குறுந் தொகைப் பாடல் காட்டுகிறது. மேலும் சங்க இலக்கியத்தில் தைந் நீராடல் பற்றிய குறிப்பும், தைமாத நோன்பு பற்றிய செய்தியும் உள்ளன. தையில் நீராடிய தவந்தலைப் படு வாயோ என்னும் கலித்தொகை அடி யும், வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் தையூண் இருக்கையில் தோன்றும் நாடன் என்னும் நற்றி ணைத் தொடரும் இதற்குச் சான்று களாக உள்ளன. தைஇ என்னும் வினைச்சொல் அணிசெய்தல், சித்தி ரித்தல், சீர்செய்தல், சிறப்புச் செய்தல் போன்ற பொருள்களுடன் ஆக்குதல். புதுமை ஆக்குதல் என்னும் பொரு ளிலும் சங்க இலக்கியங்களில் கையாளப்படுதலை அகத்திய லிங்க னார் சுட்டிக் காட்டுகிறார். வல்லவன் தை இயபாவை சொல் என் னும் கலித்தொகைத் தொ டரைக் காட்டிப் புதுமையாக அல்லது புதுவதாகி வரும் மாதம் தை என்பதை அவர் புலப் படுத்துகிறார். தை மாதத்தின் சிறப்பை விளக்கிக் கண்ணதாசன் தைப்பாவை என்னும் கவிதை நூலாக் கியுள்ளார். தை மாதம் பத்தாவது மாதம், தமிழ்நாட்டுப் பயிர்கள் பிரச விக்கும் மாதம் என்னும் புதுக் கவி தையும் தைமாதச் சிறப்பைப் பேசு கிறது.

உழவர் பெருமை உணர்த்தும் விழா

உலகிலுள்ள தொழில்களிலே உழவுத் தொழிலே சிறந்ததாகும். எனவேதான் திருவள்ளுவர் தம் திருக்குறளில் உழவு என்னும் ஓரதி காரம் வகுத்து உழவின் பெருமையை நமக்கு உணர்த்துகிறார். சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை என்னும் குறள் உலகம் சோறு தரும் ஏர் வழியே செல்லத் தக்கது. ஆதலால் உழவுத் தொழிலே தலை சிறந்தது என்னும் கருத்தைக் கூறுகிறது. உலகத்தவர் களுக்கெல்லாம் உணவூட்டும் தன்மை யுடைய உழவுத் தொழிலைச் செய் கின்ற உழவர்கள் உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர்கள் என்றும், உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் என்றும் திருவள்ளுவர் உழவர்களைப் போற்றுகிறார். உழவர் களையும் அவர்களது உழவுத் தொழி லையும் தமிழர்கள் மிகச் சிறந்த தொழிலாகப் போற்றி வந்தார்கள்.

இப்பண்பு தமிழினத்தின் தனித் தன்மையாகும். இன்று கிடைக்கும் தமிழ் நூல்களில் பழைமையானதாகக் கருதப்படும் தொல்காப்பியத்திலேயே வேளாண்முல்லை, ஏரோர்களவழி என்றும் புறத்திணைத் துறைகளில் உழவர் பெருமை பேசப்படுவதைப் பார்க்கலாம். சங்கப் புலவர்களில் ஒருவர் பெயரே ஓரேருழவர் ஆகும். கவிச் சக்கரவர்த்தி கம்பர் ஏர் எழுபது எனும் நூல் வழி உழவர் பெருமையைப் பாடுகிறார். மேழிச் செல்வம் கோழை படாது என்னும் முதுமொழியும் உழவர் உயர்வை உணர்த்தும். பிற் காலத்தில் எழுந்த பள்ளு நூல்கள் உழவர் சிறப்பை உரைக்க எழுந்த வையே. பாரதியாரும் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம், வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று பாடு கிறார். மண்டிணி ஞாலத்து வாழ் வோர்க்கெல்லாம் உண்டி கொடுத் தோர் உயிர் கொடுத்தோராவர் என் பது மணிமேகலை. இத்தகைய உழவர் பெருமையை உணர்த்தும் ஓர் ஒப்பற்ற விழாவே பொங்கல் விழாவாகும். உழவு என்பது உழைத்தல், உழைப்பு என்னும் சொற்களுடன் தொடர்புடைய ஒன் றாகும். மெய்வருத்தல், பாடுபடுதல் என் பது இதன் பொருள். எனவே பொது வாக உழைப்பின் உயர்வைப் பாராட் டும் விழாவாகவும் இதனைக் கருத லாம். இக்காலத் தொழிலாளர் தினத் துடன் இதனை ஒப்பிட்டு நோக்கலாம்.

நன்றி தெரிவிக்கும் நல்விழா

நன்றி மறப்பது நன்றன்று, செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய் வில்லை இவை வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறிமுறைகள். எனவே உழவர்கள் உழவுத் தொழிலுக்கு உறு துணையாக இருக்கும் மழை, ஞாயிறு, மாடு ஆகியவற்றிற்கு நன்றி தெரி விக்கும் வகையில் தைப் பொங்கல் விழாவை மூன்று நாள்கள் கொண் டாடுகின்றனர்.

தைப் பொங்கலுக்கு முதல் நாள் போகிப் பொங்கல் நாள் எனப்படும். இது போக்கி என்பதன் திரிபாகும். பழைய பொருள்களைக் கழித்து (போக்கி) புதிய பொருள்களை - புத் தாடை, புதுப்பானை, புதுவண்ணம் முதலியவற்றை கொள்ளும் நாளே போக்கி நாளாகும். இந்த நாளை மழைக்குப் பொங்கல் படைக்கும் நாளாகக் கொண்டாடினார்கள். மழையை வணங்கும் மரபைச் சிலப் பதிகாரத்தில் இளங்கோவடிகள் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று வாழ்த்துவதன் வாயிலாக அறியலாம். மேலும் அந் நூல் மழைத் தெய்வமாகிய இந்திர னுக்கு விழா எடுத்துப் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனும் சுரக்க என வாழ்த்துவது பற்றியும் பேசுகிறது. திருவள்ளுவரும் மழையின் தேவையை வான்சிறப்பு என்னும் அதிகாரத்தில் கடவுள் வாழ்த்துக்கு அடுத்த நிலையில் வைத்துப் பேசுகிறார். மக்கள் உயிர் வாழ உணவுடன் நீரும் இன்றியமை யாத பொருளல்ல வா? விசும்பின் துளி வீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பது அரிது என்பது குறள். பயிர்த் தொழிலின் உயிரே மழை தானே! அதற்கு மக்கள், சிறப்பாக உழ வர்கள் நன்றி செலுத்துவது முறை தானே? தைப் பொங்கல் நாளன்று தமிழர் கள் உழவுக்கு உதவும் கதிரவனுக்குப் பொங்கல் படைத்து மகிழ்ந்தனர். மழைதரும் மேகம் உருவாவதற்குக் காரணம் கதிரவன் தரும் வெம்மை தானே. வெளிச்சம் தரும் கதிரவன் இல்லாவிடில் உலகமே இருட்டில் மூழ்கிவிடுமே, உயிர்கள் அனைத்தும் கண்ணிருந்தும் குருடாகிவிடுமன்றோ?

தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் நாள். உழவுத் தொழிலின் அடிப்படையான நிலத்தை உழுது பண்படுத்துவதற்கும், வண்டி இழுப்பதற்கும் உதவும் எருதுகளையும், வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளற் பெரும் பசுக்களையும் அழகுபடுத்திப் பொங்கல் ஊட்டி நன்றி தெரிவிக்கும் நாளாக இது அமைகிறது. மாடு என்றாலே செல்வம் எனக் கருதிய வர்கள் தமிழர்கள். கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றையவை என்னும் திருக்குறள் இதனை உணர்த்தும்.
இவ்வாறு மழை, சூரியன், மாடு ஆகியவற்றிற்கு; நன்றி செலுத்தும் நல்விழாவே பொங்கல் விழாவாகும். மேலை நாடுகளில் இப்போதுதானே நன்றி தெரிவிக்கும் நாள் (Thanks giving day) கொண்டாடுகிறார்கள். பொங்கல் விழாவின் நான்காம் நாள் காணும் பொங்கல் என்று இளைஞர்களும் குடும்பத்தினரும் ஆற்றங்கரை அல்லது கடற்கரைக்குச் சென்று ஆடிப்பாடி மகிழ்வார்கள். மேலும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஒருவர் ஒருவரைக் கண்டு வாழ்த்துக்களைப்  பரிமாறிக் கொள் வார்கள். நிலவுடைமையாளர்கள் உழவுத் தொழில் செய்வோர்க்கு அன்பளிப்புகள் கொடுப்பது வழக்கம். சில பகுதிகளில் கொப்பி கொட்டுதல் என்றோர் பழக்கம் உள்ளது. ஓரூரைச் சேர்ந்த பெண் மக்கள் - இளைய மகளிர் - ஓரிடத்தில் ஏற்றத் தாழ் வின்றிக் கூடி ஆடிப்பாடி உண்டு மகிழ்வர். இவ்வாறு பொங்கல் விழா உறவை மேம்படுத்தும் ஓர் ஒற்றுமைத் திருவிழாவாகவும் விளங்குகிறது. பொங்கல் விழாவை ஒட்டி இளையர்கள் காளை மாடுகளைப் பிடித்து அடக்கும் மஞ்சுவிரட்டு என் னும் வீர  விளையாட்டு தமிழகத்தின் தென்பகுதியில் நடைபெறும். இவ் விளையாட்டு சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் எனக் குறிக்கப்படுகிறது. கலித்தொகையில் முல்லைக் கலிப் பகுதி இது பற்றி விளக்கமாகப் பேசுகிறது. இடைக் குலத்தினர் தம் பெண் பிள்ளைகளுடன் எருதுகளை யும் வளர்த்து வருவதும் அவற்றை அடக்கும் காளையர்க்கு அவர்களை மணமுடிப்பதும் மர பாக இருந்ததை முல்லைக் கலி நமக்குக் கூறுகிறது.

திருவள்ளுவர் நாள்

தமிழர்கள் உலகுக்கு வழங்கிய நன்கொடைகளில் தலைசிறந்தது திருக்குறளாகும். இதனை இயற்றியவர் திருவள்ளுவர். வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு என்று பாராட்டு வார் பாரதியார். இத்தகைய திருவள்ளு வரை நினைவுகூரும் நாளாகத் தமிழக அரசு தைப்பொங்கலுக்கு அடுத்த நாளை அறிவித்துள்ளது. அன்று அரசின் சார்பில் தமிழ் அறிஞர் களுக்குத் திருவள்ளுவர், பெரியார், திரு.வி.க., கி.ஆ.பெ.விசுவநாதம் முதலிய சான்றோர்களின் பெயர்களில் விருது கள் வழங்கப்படுகின்றன. பல்வேறு துறைகளைச் சார்ந்த புத்தகங் களுக்குரிய பரிசுகளும் தரப்படுகின்றன.

இதனால் பொங்கல் விழா தமிழ் மொழி தழைக்க உதவும் விழாவாகவும் மிளிர்கிறது. இந்த (2009) ஆண்டுமுதல் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் எனத் தமிழக அரசு அறிவித்து நடைமுறைப்படுத்தி யுள்ளது. இதுவே திருவள்ளுவர் ஆண்டின் தொடக்க நாளாகவும் கருதப் படுகிறது. இதுவரை தமிழ்ப் புத்தாண்டு எனக் கருதப்பட்டு வந்த ஏப்பிரல் 14/15 இல்- சித்திரை முதல் நாளில் தொடங்கும் ஆண்டுகளின் பெயர்கள் தமிழ்ப் பெயர்களாக இல்லை என்பதும் அவற்றின் தோற்றம் பற்றிய கதை போற்றத் தக்கதாக இல்லை என்பதும் நோக்கத்தக்கவை. தமிழர்கள் கொண்டாடும் இந்தப் பொங்கல் விழா தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் கொண்டாடப் படுவதைக் காணமுடிகிறது. தாய் லாந்தில் சோங்கரான் என்னும் பெயரில் அறுவடைத் திருவிழா கொண்டாடப் படுகிறது. தமிழர்கள் போகி நாளில் செய் வதைப் போல இவ்விழாவின் முதல் நாள் அன்று பழம் பொருள் களைக் கொளுத்துவது இங்கும் உண்டு. சோங் கரான் என்பது சங்கராந்தி என்பதன் திரிபு எனக் கொள்ள இடமுண்டு. ஜப்பானில் புத்தாண்டுப் பிறப்பாகக் கொண்டா டப்பட்டு வந்தது.

ஆங்கி லப் புத் தாண்டு நடைமுறைக்கு வந்த போது இந்தப் பழைய மரபு சிறிய புத்தாண்டு KOSHOGATSUஎன மருவி அழைக்கப்பட்டது. தமிழரது தைப் பொங்கல் நடை முறையை ஜப்பானி யருடைய புத் தாண்டு நடை முறையுடன் ஒப்பிட்டு நோக்கிய ஜப்பானியப் பேராசிரியர் சுசுமு ஓனோ பின்வரும் ஒற்றுமைக் கூறுகளைக் கூறுகிறார். தை மாதம் 14 ஆம் நாள் பழைய பொருள்களை எரித்தல், புதிய குடில்கள் மாடுகளுக்கு அமைத்தல், தை 15 ஆம் நாள் மாவி லைத் தோரணம் போலக் காகிதத் தோ ரணம் கட்டல், புது நீர் எடுத்தல், பயறு சேர்த்துப் பச்சரிசிப் பொங்கல் செய் தல், தெய்வத்திற்கு மடையிடல், மாடு களை அடக்கிப் பிடித்தல், 16 ஆம் நாள் மாட்டுப் பொங்கல் படைத்தல், பணியாளர்க்குக் கொடை கொடுத்தல், தமிழர் உறவினைரைக் காணல் போல் ஜப்பானியர் கல்லறை சென்று வணங்கு தல் முதலியவை அவர் காட்டும் பண்புகளாகும். பால் பொங்கும்போது தமிழர்கள் பொங் கலோ பொங்கல் என மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது போல ஜப்பானி யரும் HONGA HONGA என ஒலி எழுப்பி வாழ்த்துவதையும் அவர் சுட்டுகிறார். இத்தொடருக்கு பொலிக பொலிக என்பது பொருளாம்.

நம்பிக்கை நன்னாள்

தை பிறந்தால் வழிபிறக்கும் என்னும் பழமொழி தைப் பொங்கல் விழா நாள் தமிழர் இல்லங்களில் திருமணம் போன்ற மங்கல நிழ்ச்சிகள் நடக்க வழி வகுக்கும் நம்பிக்கை நாள் என்பதையும் தெரிவிக்கிறது. சமயச் சார்பற்ற இத் தைப் பொங்கல் விழா பெயர்ச் சிறப்பும், காலச் சிறப்பும் கொண்ட பெருவிழா, உழவர் பெருமை உணர்த்தும் அறு வடைத் திருவிழா, நன்றி உணர்வை வெளிப்படுத்தும் நல் விழா, உறவை வலிமையாக்கும் ஒற்றுமை விழா, வீர விளையாட்டுக்குரிய வெற்றி விழா, திருவள்ளுவரை நினைத்துத் தமிழைப் போற்றும் தகைமை மிக்க விழா, தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்க விழா, ஜப்பான் போன்ற நாடுகளில் ஒளிவீசும் விழா என்று கூறத் தக்க தனித்தன்மை களைக் கொண்டு விளங் குகிறது. தமிழர்க்குரிய அடையாள மாக விளங்கும் விழாவே தைப்பொங்கல் விழா வாகும். எனவே இதனைச் சிறப்பாகக் கொண்டாடி மகிழ்வோமாக.

.தமிழ் பகைவர்கள்!

1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப் பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட புலவர் பெருமக்கள் கூடி எடுத்த முடிவு. அதிலும் முதன்மைத் தமிழ்ப் பேரறிஞர்கள் தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் காவலர் கா.சுப்பிரமணியப் பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் நா.மு.வேங் கடசாமி நாட்டார், நாவலர்சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதன் ஆகியோரும் அந்த அவையில சுடர்விட்ட தமிழ் ஆய்ந்த பெரும்புலிகள்! அறிவுக் கருவூலங்கள் அணி செய்த அந்த மிக உயர்ந்த மேடையிலே, அவையிலே எடுக்கப்பட்ட அரும்பெரும் முடிவுகள் மூன்று.

(1) திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது.

(2) அதையே தமிழர் ஆண்டு எனக் கொள்வது

(3) திருவள்ளுவர் காலம் கி.மு.31

திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை. இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள், கிழமைகள் வழக்கில் உள்ளவை என்றும் முடிவு செய்யப் பட்டது.

அதன்பின் திருச்சியில் 1937 டிசம்பர் 26 இல் தமிழர் மாநாடு, அதன் தலைமை நாவலர் சோமசுந்தர பாரதியார்.

அந்த மாநாட்டில் தந்தை பெரியார், கா.சு.பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், தமிழ்த் தென்றல் திரு.வி.க., தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் உள்ளிட்ட தமிழினச் சிங்கங்கள் கூடின.

தமிழ்க் கடல் மறைமலை அடிகளார் சான்று களுடன் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடக்கம், பொங்கலே தமிழர் விழா என்று அறுதியிட்டுப் பேசினார்.

நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று தந்தை பெரியார் கூறியதுதான் தாமதம் - மாநாடே களை கட்டியது!

பெரியார் இப்படிக் கூறியதுதான் தாமதம். தமிழ்த் தென்றல் திரு.வி.க., எழுந்து என்னு டைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் என்னோடு இருந்து பாடுபட்டவர். நானும் அவரும் இந்தச் சுயமரியாதை இயக்கத்தை - நான் தாயாக இருந்தேன்; அவர் தந்தையாக இருந்து வளர்த்தார். இன்று அதே சுயமரி யாதை இயக்கத்தினுடைய தலைவர் என்னு டைய அருமை நண்பர் ஈ.வெ.ரா. அவர்கள் அந்தப் பொங்கலை ஏற்றுக் கொண்டமைக்கு இந்தத் தமிழகமே பாராட்டுதலை செய்வதற் குக் காத்துக் கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். அது முதற்கொண்டே பொங்கல் தமிழ்ப் புத்தாண்டினை ஆதரித்துக் கருத்துகள் எழுதப்பட ஆரம்பித்துவிட்டன. என்றாலும் கருத்துருவில்தான் நின்றது. அரசு ஆணை யாக, சட்டமாக அரும்பிட வில்லை.

இந்தத் தொடர்ச்சியின் தொடு புள்ளி யாகத்தான் அய்ந்தாம் முறையாகத் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராகப் பொறுப்பேற்ற மானமிகு கலைஞர் அவர்கள் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டிற்கான - தமிழர் பண் பாட்டுத் திசையில் பெருமைக்குரிய மணிமகுட மான சட்டத்தினை நிறைவேற்றினார். (29.1.2008)

தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு மட்டுமல்ல; உலகப் பந்தில் வாழும் தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் பெருக்கத்தில் திளைத்தனர்.

ஆரியப் பண்பாட்டின் அடையாளமாக, தமிழர் மீது தொடுக்கப்பட்ட பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பின் வாள் வீச்சாகப் புதியதோர் சட்டம் பாய்ந்து விட்டது - ஆம், பாய்ந்தே விட்டது. (23.8.2011) தமிழ்நாட்டு சட்டம் 2011 என்ன சொல்லுகிறது?
சித்திரை முதல்நாள்தான் புத்தாண்டுப் பிறப்பாக மாற்றப்பட வேண்டும் என்று யாரோ கோரிக்கைகளை வைத்தார்களாம்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஏதோ கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்களாம். யார் அந்தத் தொல்பொருள் அறிஞர்கள்? யார் அந்தப் பொது மக்கள்.

தினமணியின் முன்னாள் ஆசிரியரும், தொல்பொருள் ஆய்வாளருமான அய்ராவதம் மகாதேவன் என்ன சொல்லுகிறார்?

சென்ற ஆண்டு நடந்த ஒரு வானவியல் கருத்தரங்கில் நான் குறிப்பிட்டவாறு பஞ் சாங்கத்தை உரிய காலத்தில் உரிய முறையில் திருத்தி அமைக்க நாம் தவறினால் பிற்காலத் தில் அயனப் பிறப்பு நாள்கள் தலை கீழாக மாறி, உத்தராயணப் புண்ணிய காலத்தைத் தட்சணாயப் பிறப்பு நாளென்று கொண்டாட நேரிடும்.

இன்றைய பஞ்சாங்கங்கள் வானநூல், பருவங்களின் சுழற்சி ஆகியவற்றின் தற்கால நிலையை அறிவியல் கண்ணோட்டத்துடன் ஆராய்ந்து திருத்திக் கொள்ள நமக்குத் துணிவு இல்லையெனில், அறுவடை நாளாகிய பொங்கல் திருவிழாவைப் புத்தாண்டு என்று கொண்டாடுவதில் என்ன தவறு? வரலாற்று ரீதியில் பார்த்தாலும், இந்தியாவில் இன்று நடைமுறையில் உள்ள பல புத்தாண்டுகளில் இதுவும் ஒன்று என ஏற்றுக் கொள்ளலாமே? இந்தப் புதிய புத்தாண்டு நிலைத்திருக்குமா என்பதைக் காலத்தின் நிர்ணயத்துக்கு விட்டுவிடலாம். என்றாரே அய்ராவதம் மகா தேவன் என்ற தொல்லியல் அறிஞர். (தினமணி: 26.1.2008)

அதே தினமணியில்தான் சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்று முதல் நாள் கட்டுரை வருகிறது. மறுநாளே சட்டப் பேரவையில் அது சட்டமாகிறது - என்னே கொடுமை!

முதல் அமைச்சர் உரையில் கூட விளக்கம் இல்லையே. வழக்கமான அரசியல் வாடைகலந்த பேச்சுக் கச்சேரி தானே நடந்திருக்கிறது. கலைஞர் தலைமையிலான அரசால் நிறை வேற்றப்பட்ட சட்டம் ஒரு சுயவிளம்பரத்திற் காகவாம்.

அப்படிப் பார்க்கப்போனால், தந்தை பெரியாரும், மறைமலை அடிகளார், திரு.வி.க., உள்ளிட்ட தமிழ்ச் சான்றோர்கள் எல்லாம் தங்கள் சுயவிளம்பரத்திற்காகத் தான் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என்று அறிவித்தார்களா?

நிதானம் வேண்டாமா? கலைஞரைத் தாக்குவதாக நினைத்துக் கொண்டு நாட்டின் மரியாதைக்குரிய பெரும் தலைவர்களை யெல்லாம் இழிவு படுத்தலாமா?
பிரபவ என்று தொடங்கி அட்சயஎன்று முடிவுறும் 60 ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டுக்காவது தமிழில் பெயருண்டா? எல்லாம் பார்ப்பன மொழியான சமஸ்கிருதத் தைச் சார்ந்ததுதானே!

தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது இதனைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்வானா? ஒரு சட்டம் போட்டு அதிகார பூர்வமாக தமிழன் தலை மீது பார்ப்பன கலாச்சாரத்தைச் சுமத்தி வைக்கும் அரசு - எப்படி அண்ணா அரசாகும்? திராவிட இயக்க அரசாகும்? அந்தப் போர்வையில் நடக்கும்  ஆரிய ஆட்சி - பச்சையான பார்ப்பன ஆட்சி என்றுதானே பொருள்?

புத்த மதத்தில் ஆரியம் புகுந்த அவலம். திராவிட இயக்கத்துக்கும் நேர்ந்துவிட்டது என்றுதானே வரலாறு எழுதும்? என்னே அவலம்!  என்னே அவலம்!! இதற்கு நேர்முக மாகவோ மறைமுகமாகவோ ஒப்புதல் அளித்த உறுப்பினர்கள் எந்தக் கட்சியைத் சார்ந்திருந் தாலும் அவர்கள் வரலாற்றில் கருப்புப்புள்ளி களுக்குச் சொந்தக்கார்களே! தமிழர் மீதான பண்பாட்டுப் படை யெடுப்பை மீட்டெடுத்தார் கலைஞர். மீண்டும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பைப் புதுப்பித்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா என்றுதானே வரலாறு கூறும். கலைஞரை வீழ்த்துவதாக நினைத்துக் கொண்டு, தனக் குத் தானே தமிழின விரோத வலை விரித்துச் சிக்கிக் கொள்ளலாமா? 2008 தி.மு.க. சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றனரே - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு சந்துரு வழங்கிய தீர்ப்பு என்ன?

சமஸ்கிருதத்தில் உள்ள அறுபது ஆண்டு களின் பெயர்களைக் கூட தமிழில் மாற்ற குழு ஒன்று  அமைக்கலாம் என்கிற அளவுக்கு நீதி பதி கூறியுள்ளார்.  முதல் அமைச்சர் ஜெயலலி தாவோ சமஸ்கிருதத்தில் அப்படியே இருக்க வேண்டும்; அதில் கை வைக்கக்கூடாது என்று ஒட்டாரம் செய்வது எந்த இன உணர்வின் அடிப்படையில்? கேள்வி எழாதா? தமிழர்கள் கேட்கமாட்டார்களா?

நீதிபதியின் தீர்ப்பில் என்ன கூறப்பட்டது?

தமிழ் கால நெடுங்கணக்கில் 60 ஆண்டு களைக் கொண்ட சுற்று உள்ளது. இதில் 60 ஆண்டுகளுக்கும் சமஸ்கிருதத்தில்தான் பெயர்கள் உள்ளன. இது எவ்வாறு ஏற்பட்டது என்பதை இதுவரை எந்த அறிஞரும் விளக்க வில்லை. எனவே, இந்த 60 ஆண்டுகளைக் கொண்ட சுற்று தொடர்பான விவாதம் முடி வற்றதாக உள்ளது. தமிழர்கள் இப்போது வாழும் நிலப்பரப்பை பல்வேறு மதங்களைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் பல்வேறு கால கட்டங் களில் ஆண்டுள்ளனர். ஆட்சியாளர்களின் மத நம்பிக்கை சார்ந்த உத்தரவின் அடிப்படையில் அல்லது ஆட்சியாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் சகாப்தம் என்பது காலந் தோறும் மாறிக்கொண்டே வந்துள்ளது.

தமிழ்நாடு இதே போல பல சகாப்தங் களைக் கண்டுள்ளது.

1. சாலிவாகன சகாப்தம்

2. ஹிஜ்ஜிரி சகாப்தம்

3. கிறிஸ்துவ சகாப்தம்

4. சகா சகாப்தம் (திருவாங்கூர் மன்னரின் ஆட்சியின் கீழ் இருந்த பகுதியில் நடைமுறை யில் இருந்தது.)

அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த பிறகு, இப்போதைய அரசு திருவள்ளுவர் சகாப்தத்தை ஆண்டுக் கணக்காக ஏற்றுக் கொண்டுள்ளது. திருவள்ளுவரின் சகாப்தத் தின்படி இப்போது நடைபெற்றுக் கொண்டிருப் பது 2039 ஆம் ஆண்டு ஆகும். தமிழர்கள் இப் போதுதான் முதல் முறையாக தங்களுக்கென ஒரு சகாப்தம் உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு குறிப்பிட்ட காலக் கணக்கு முறையை மாற்றி, மற்றொரு காலக் கணக்கு முறையை அரசு புகுத்துவது என்பது புதி தானதல்ல. அரசியல் சாசன வரம்பிற்குட்பட்டு மாநில சட்டசபை நிறைவேற்றும் சட்டத்தை சரியாக உணர்ந்து கொள்ளப்படாத மத நம்பிக்கையின் அடிப்படையில் கேள்வி கேட்பது ஏற்கத்தக்கதல்ல. சமஸ்கிருதத் திலுள்ள 60 ஆண்டுகளின் பெயர்களையும் தமிழ் மொழியில் மாற்றுவது குறித்து பரி சீலித்து உரிய திருத் தத்தைப் பரிந்துரைக்க ஒரு வல்லுனர்கள் குழுவை அரசு நியமிக் கலாம். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. அப்படியிருக்கும் போது தமிழ் சகாப்தத்தை நடைமுறைப்படுத் தவும் அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது தான் அர்த்தமாகும். தமிழ் சகாப்தம் தொடர் பான அறிவிப்பை, 2008ஆம்  வருடத்தில் 2ஆவது சட்டமாக அரசு கொண்டு வந்துள்ள தில் சட்ட முரண் பாடோ அல்லது அரசியல் சாசனத்திற்கு புறம் பான நிலையோ எதுவுமே இல்லை. என்றாரே நீதியரசர்!

டிராபிக் ராமசாமி என்னும் பார்ப்பனரும் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டை எதிர்த் துப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார்.

மாண்பமை நீதியரசர்கள் முகோபாத்தி யாயா மற்றும் வேணுகோபால் ஆகியோர் பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தமிழ் நாடு சட்டப் பணிகள் ஆய்வுக் குழுவிடம் ஒரு மாதத்திற்குள் செலுத்தவேண்டும் என்று தீர்ப்பு அளித்துள்ளனரே! (13-2-2008)

(இதற்கு மாறாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது இப்பொழுது. சமச்சீர் கல்வி யில் செய்த அதே குளறுபடி இதிலும் இருக் கத்தான் செய்கிறது.)

யாரோ தொல்பொருள் ஆராய்ச்சியாளர் களும், வானியல்  அறிஞர்களும் சொன்னார் களாமே! இதைக் குறித்து தமிழ்ப் பேராசிரியர் தமிழண்ணல் என்ன சொல்லுகிறார்?

சூரியன் தென்திசையாகச் சாய்ந்து சென்றது மாறி, வடதிசையாகச் சாய்ந்து செல்லும் நாள் தை முதல் நாளாகும் என்றல்லவா கூறியுள்ளார். இதனை மறுக்க முடியுமா? இவ்வாண்டு நூற்றாண்டு காணும் டாக்டர் மு.வ. என்ன கூறுகிறார்?

இன்று பொங்கல் என்று திருவிழாவைக் கொண்டாடுகிறார்களே!  என்ன காரணம் தெரியுமா? ஒருவாறு தெரியும். அறுவடை யெல்லாம் முடிந்துவிட்டது. இத்தனை மாத மாகப் பாடுபட்டு உழைத்த பயன் கிடைத்து விட்டது. வீடுகளில் தானியங்கள் நிரம்பி விட்டன. புது வெல்லம், புதுக் காய்கறிகள் முதலானவை கிடைக்கின்றன. இவ்வளவு நன்மைக்குக் காரணம் யார்? சூரியனே அல்லவா? சூரியன் இல்லாவிட்டால் மழை ஏது? பசுமை ஏது? புல் ஏது? தழை ஏது? எல்லா அளியும், நிறமும், வளர்ச்சியும் சூரிய னால்தானே உண்டாகின்றன.

சூரியனே பயிர்களுக்கு உயிர் கொடுத்து வளர்ப்பவன். குடியானவர்கள் வாழ்வுக்கே சூரியன்தான் முதல் காரணம். அவர்கள் சூரியனே கண்கண்ட தெய்வம் என்று கொண்டாடுகிறார்கள். சூரியனால் கிடைத்த புதிய பொருள்களைப் பொங்கிச் சமைத்து உண்பதற்கு முன், சூரியன் செய்த நன்றியை மறக்காமல் பொங்கல் விழாவாகக் கொண் டாடுகிறார்கள். நகரங்களிலும் பொங்கல் விழா செய்கிறார்களே; அது ஏன்? உழவுத் தொழில் செய்யும் கிராம மக்கள் நன்றாக வாழ்ந்தால் தான் நகரங்களில் இருப்பவர்களும் வாழ முடியும். ஆகையால், அவர்களும் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.

இன்னொரு காரணமும் உண்டு. முன் காலத்தில் வருடப் பிறப்புச் சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள்தான் வருடப் பிறப்பாகப் பெரியோர் கள் கொண்டாடினார்கள். அந்த நாள் முதல் எல்லோருடைய வாழ்வும் பல வகையிலும் புதிய வாழ்வாக இருக்க வேண்டும் என்று ஏற்படுத் தினார்கள். உண்ணுவதில் புதுமை, உடுப்பதில் புதுமை, வீட்டில் புதுமை, தெருவில் புதுமை, ஊரெல்லாம் புதுமை, மனத்திலும் புதுமை. புதிய பச்சரிசியைப் பொங்குகிறார்கள். புதிய காய்கறிகளைச் சமைக்கிறார்கள். புதிய ஆடை களை வாங்கி உடுக்கிறார்கள். வீட்டுக்கு வெள்ளை அடித்து அழகு செய்கிறார்கள். தெருவில் புதுமண் போட்டு, செம்மண் இட்டு ஒழுங்கு செய்கிறார்கள். ஊரெல்லாம் திரு விழா நடத்துகிறார்கள். மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்கிறார்கள். எல்லாரோடும் அன்பாகக் கலந்து பேசுகிறார்கள்; மகிழ்கிறார் கள். இப்படி நகரங்களில் புது ஆண்டுப் பிறப்பாகப் பொங்கல் கொண்டாடுகிறார்கள்.
- டாக்டர் மு.வரதராசனார், (ஆதாரம் 1988 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பொங்கல் சிறப்பு மலர்). அதே நேரத்தில் பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?

கேள்வி: தை மாதத்தை புத்தாண்டின் முதல் மாதமாக அறிவித்திருக்கிறாரே முதல்வர் கலைஞர்.  இதனால் ஏற்படக் கூடிய மாற்றங் கள் யாவை?

பதில்: அவருக்கு ஒரு திருப்தி. மற்றபடி எந்த மாற்றமும் இருக்காது. வழக்கம்போல ஏப்ரல் மாதத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண் டாடப்படும். கலைஞர் அறிவிக்கிற புதிய புத்தாண்டு தினத்தன்று அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கலாம். அவ்வளவுதான். வேண்டுமானால் கிடைத்தது சாக்கு என்று மற்றொரு சங்கமம் நிகழ்ச்சி நடத்தலாம் (துக்ளக் 30.1.2008)

ஃ ஃ ஃ அனைவருக்கும் வணக்கம். பொங்கல் வாழ்த்துகள் (ஒரு வாசகர் - புத்தாண்டு வாழ்த்து இல்லையா? என்று கேட்டார்) அதை மூன்று மாதம் கழித்துச் சொல்கிறேன். நாளைக்குத் திடீரென தீபாவளியை பிப்ரவரி மாதத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உத்தரவு வந்தால் அதற்காக எங்களுக்குத் தீபாவளி வாழ்த்துச் சொல்லுங்கள் என்று நீங்கள் கூறினால், அதைச் செய்வதற்கு நான் தயாராக இல்லை.
எந்தப் பண்டிகை வழக்கமாக நம்பிக்கை யின்படி கொண்டாடப்பட்டு வருகிறதோ, அந்தப் பண்டிகையைத் தான் நான் ஏற்றுக் கொள்கிறேனே யொழிய, இந்த மாதிரி விஷயங்களில் ஒரு முதல்வரோ, ஒரு அரசோ உத்தரவிட்டு எதையும்  சொல்வதை நான் ஏற்கத் தயாராக இல்லை. இதெல்லாம் வழக் கத்திற்கு விரோதமானது. நம்பிக்கைக்கு விரோதமானது. கலாச்சாரத்திற்கு விரோத மானது. நான் இதை ஏற்கவில்லை.
(துக்ளக் ஆண்டு விழாவில்  சோ. ராமசாமி - துக்ளக் 27.1.2010)
முதலமைச்சர் மாண்புமிகு செல்வி ஜெயலலிதா அவர்கள் கொண்டுவந்த சட்டத் தின் வாசகத்திலும், முதல் அமைச்சரின் அது தொடர்பான சட்டப் பேரவைப் பேச்சிலும்  துக்ளக் சோ ராமசாமி எழுதி வந்த, பேசி வந்த அந்தப் பச்சையான வாடை அப்படியே வீசுகிறதே -  இதன் பின்னணி என்ன?

கேள்வி: ஜி.ஜெயராமன், கூந்தலூர்.

தமிழர்களின் புத்தாண்டு தைமுதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல்வர்?

பதில்: எல்லாம் கிடக்க கிழவியை மணை யில் அமர்த்திய கதைதான்! (கல்கி  27.1.2008)
பார்ப்பனர்கள், பார்ப்பன ஊடகங்கள் பிசிறு சிறிதும் இல்லாமல், சுருதி பேதம் இல்லாமல் தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு என்பதைப் பூணூலை முறுக்கிக் கொண்டு சிலம்பம் ஆடுவதன் நோக்கம் என்ன?
தமிழா சிந்தித்துப்பார்!

 

உலகத் திராவிடர்களே! ஒன்று சேருங்கள்!
இந்தத் தலைப்பு சிலருக்கு வியப்பையளிக்கும்.தமிழ்நாட்டிலே திராவிடர் என்ற சொல்லாட்சியையே கடிந்தொதுக்குபவர்கள் பெருகிவிட்ட இக் காலத்தில் உலகத் திராவிடர் எனல் எவ்வாறு பொருந்தும் எனவும் மறுப்பும் மருட்கையும் பலருள்ளத்தில் ஏற்படக் கூடும்.

தந்தை பெரியார் அவர்கள்  திரா விடர் என்னும் சொல்லைத் திராவிட-நில எல்லைக்குட்பட்டு வாழ்வோர் என்னும் பொருளில் பயன்படுத்த வில்லை. மனிதனின் இனம் என்ற பிரிவு என்று ஏற்பட்டதோ அன்றிலிருந்து திராவிடனும் இருந்துவருகிறான். என்று கூறும் பெரியார், இழிவுள்ள சகல மக்களும் ஒன்றுசேர அவ் வார்த் தையில் இடம் இருக்கவேண்டும் என் பதுதான் எங்கள் ஆசை. என விளக் குகிறார்.

ஒடுக்கப்படுபவன் என்று பொருள் படும் தலித்துஎன்னும் சொலைக் காட் டிலும் ஆழ்ந்த நிலையில் பெரியார் திராவிடர் என்ற சொல்லைக் கருதி யுள்ளார். ஒடுக்கப்படுபவன், பொருளா தார நிலையில், ஆட்சி அதிகாரத்தில், கல்விவாய்ப்பில், வேலைவாய்ப்பில் ஒடுக்கப்படுபவன் எனப் பொருள் தரலாம். ஆனால் மனிதநிலையே அளிக்கப்படாமல் மனிதனினும் கீழாக இழிவுபடுத்தப்படுபவன் என்று பொருள்தரும் திராவிடர் எனும் சொல்லாட்சி தந்தை பெரியாரின் அகன்றுவிரிந்த சமூகவியற்பார் வையைப் புலப்படுத்துகிறது.

அங்ஙனம் ஒடுக்கப்படுபவன் தன் விழுப்பமும் (Self-esteem) தன்மதிப் பும் (Self-respect) பெறும்வகையில் சமூக அமைப்பை மாற்றியாக வேண் டும் என்பதே பெரியாரின் குறிக் கோளாக இருந்தது.

வகுப்புவழிச் சார்பாண்மைக்கு அடித்தளம் அமைத்து நீதிக்கட்சி ஆட்சியிலேயே உயர்கல்வி வாய்ப்புக ளையும் உயர்பதவிகளையும் சூத்திர விலங்கு பூட்டப்பட்டுக் கிள்ளுக் கீரைகளாகக் கீழ்நிலைக்குத் தள்ளப் பட்டவர்கள் பெறும்வகையில் பெரியார் உழைத்தமையும் இந்திய விடுதலைக்குப் பின்னும் இந்திய அரசியற்சட்டத்தையே திருத்தி இந்த வாய்ப்புகள் தொடரும் வகை செய் தமையும் பழைய வரலாறு.

இன்னும் ஆரிய மேலாண்மையே!

இன்று அவர் உழைப்பின் பயனை நுகரும் நாம் இன்னும் ஆரிய மேலாண்மை நம்மைஅடிமைப் படுத்திக்கொண்டிருப்பதைப் பற்றிய தெளிவும் விழிப்புணர்வும் இன்றி நமக்குள்ளே பங்காளிச் சண்டையிலே ஈடுபட்டுவருகிறோம். இவ்வேளையில் பெரியார் நெறியில் தன்மதிப்புணர் வுடன் நாம் ஆற்றவேண்டிய பணிகள் இமயமலையினும் பெரிது என்பதை உணர்த்துவதே இக் கட்டுரையின் நோக்கம்.

நான் கற்றறிந்தவரையில், கேட்ட றிந்தவரையில், பட்டறிந்தவரையில் சமற்கிருதத்திற்கு வழங்கப்படும் முதன் மையும் சிறப்பும் உலகில் வேறெந்த மொழிக்கும் வழங்கப்படவில்லை என்பதே உண்மை. நூல்கள் என எடுத்துக்கொண்டால்,ஆங்கிலத்தில் சமற்கிருதம் குறித்த நூல்கள் மிகமிக அதிகம்.இணையதளத்திலும் சமற்கிருதம் பற்றிய வலைத்தளங்கள் மிகுதி.


இந்தியா என்றாலே சமஸ்கிருதம்தானா?

சமற்கிருதம் என்னு மொழியைப் பற்றியும் அம் மொழியில் அமைந் துள்ள வேதங்கள் முதலான சமயச் சார்பான நூல்களைப் பற்றியும் உல கெங்கணும் உள்ள அறிவுத்துறையினர் நன்கு அறிந்துள்ளனர். இந்தியா என்றாலே அதன் மொழியும் பண் பாடும் சமற்கிருதம் சார்ந்தவை என் னும் எண்ணமும் கருத்தும் உலகெங் கணும் நிலவிவருவது உண்மை. 1987இல் நான் அமெரிக்கா சென்ற போது நான் சென்றவிடங்களிலெல் லாம் அறிவுத்துறையினர் இத்தகைய ஒரு முற்சாய்வு கொண்டவர்களாக இருப்பதைக் கண்கூடாக அறிந்தேன்.

அமெரிக்காவின் மத்தியப்பகுதியில் அமைந்துள்ள, மலைகள் நிறைந்த ஊட்டா மாநிலத்தில் புரோவோ என்னும் நகரில் விளங்கிவரும் பிரிகாம் யுங் பல்கலைகழகத்தில் நடைபெற்ற உலக மொழியியல் மாநாடு ஒன்றில் ஆய்வுரை வழங்கச் சென்றிருந்தேன். மூன்று நாள்கள் நடைபெற்ற அம் மாநாட்டில் (1987) கலந்து கொண்ட வர்களில் நான் ஒருவன் மட்டுமே இந்தியன்; அங்கேயே ஆங்கிலத் துறையில் அப்போது பணியாற்றிய பேராசிரியர் மா.ஆரோக்கியசாமி மற்றொரு இந்தியர்; இவர்தான் என்னை அங்கே கலந்து கொள் ளுமாறு ஆற்றுப்படுத்தியவர்.

அம் மாநாட்டில் கலந்துகொண்ட அத்துணைப்பேரும் இந்தியா என்பது சமற்கிருத மொழி வழங்கும் நாடு; சமற்கிருத மொழியும் அதன் கிளை மொழிகளுமே அங்கே நிலவுகின்றன என்னும் கருத்து உடையவர்களாகவே இருந்ததனைத் தெளிவாக உணர முடிந்தது. அங்கே மொழியியல் துறைத்தலைவராகப் பணிபுரிந்த இராபர்ட்டு பிளேர் என்பவர் மட்டும் திராவிடமொழிகளின் தனித் தன்மையை உணர்ந்தவராக இருந்தார். எனினும் பேராசிரியர் பிளேர் அவர் களைப் போல் திராவிடமொழிகளின் தனித்தன்மையை அறிந்தேற்கும் மன முதிர்ச்சியும் தெளிந்த அறிவும் அங்கே வேறு பல்கலைக்கழகப் பேராசிரி யர்களிடம் காணமுடியவில்லை. நல்வாய்ப்பாகக் கலிபோர்னியாப் பல்கலைக்கழகம் சென்றேன்.அங்கே சார்சு கார்ட்டு எனும் அறிஞர் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார் என்பதைக் கேள்விப்பட்டு அவரைக் காணும் நோக்குடன் சென்றேன். அவர் அங்குத் தமிழ் பயிலும் மாணவர் களுக்குப் பயன்படுமாறு ஒரு சொற் பொழிவு நிகழ்த்தப் பணித்தார்.அந்தப் பெருந்தகை ஆர்வார்டு பல்கலைக் கழகத்தில் சமற்கிருதம் பயின்றவர் என்பதையும் சங்க இலக்கியங்களை ஒப்புநோக்கில் ஆய்வுசெய்தவர் என் பதையும் கேள்விப்பட்டிருந்தேன். அன்றிலிருந்து இன்றுவரை அவரைப் போல் நடுநிலையாகத் தமிழின் தனித் தன்மையையும் தனிச்சிறப்பையும் உலகுக்கு உணர்த்தும் நோக்குடன் பணியாற்றும் வேறொரு பேராசிரி யரை அவருக்கு ஒப்பாகக் கூற இயல வில்லை என்பதே உண்மை.

தமிழ் இலக்கியப்பரப்பும் வட மொழி இலக்கியப்பரப்பும் மட்டு மின்றி இச் செம்மொழிகளின் இலக் கணங்களையும் ஆழ்ந்து கற்ற சார்சு கார்ட்டு கிரேக்கம்,இலத்தீன் என்னும் செம்மொழிகளிலும் பெரும்புலமை மிக்கவர்.உருசிய மொழி,பிரெஞ்சு மொழி முதலான ஐரோப்பிய மொழிகள், இந்தி, தெலுங்கு முதலான இந்திய மொழிகள் எனப் பதினெட்டு மொழிகளில் பெரும்புலமை வாய்ந்த இப்பேரறிஞர் தமிழின் தனித் தன்மையையும் தொன்மையையும் உலகுக்குணர்த்திய ஒப்பற்ற பணியைப் பன்னெடுங்காலமாக ஆற்றிவருகிறார். 1987-இல் கலிபோர்னியாப் பல்கலைக் கழகம் சென்று அவரைக் கண்டு உரையாடி மகிழவும் மாணவர் களுடன் கருத்துரையும் கருத்துப் பரிமாற்றமும் நிகழ்த்தும் வாய்ப்பும் நான் எதிர்பாராமல் எனக்குக் கிடைத்த இனிய வாய்ப்புகளாகும்.

1997-இல் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழியல் இருக்கை நிறுவும் முயற்சியில் முனைந்த பேராசிரியர் சார்சு திரு. குமார் குமரப்பன் தலைமையில் செயற் பட்டுவந்த வளைகுடாத் தமிழ்ச் சங்கத்துடன் ஒருங்கிணைந்து அமெ ரிக்கத் தமிழர்களின் துணையுடன் வெற்றி கண்டார்.

இந்தியாவிலிருந்து ஒரு சிறப்பு வருகை தரு பேராசிரியர் வந்து பணியாற்றினால் நலமாக இருக்கும் என அமெரிக்கத் தமிழர்கள் விரும் பினர். 1997-இல் இப்போது உள்ள தைப் போன்று தனியார் தொலைக் காட்சிச் செயற்கைக்கோள் அலை வரிசைகள் அமெரிக்காவில் இல்லை. எனவே அங்ஙனம் வரும் பேராசிரியர் வார நிறைவு நாட்களாகிய சனி, ஞாயிறுகளில் அமெரிக்காவின் பல் வேறு மாநிலங்களிலும் செயற்பட்டு வரும் தமிழ்ச்சங்கங்களுக்குச் சென்று உரையாற்றவும் வாய்ப்பிருக்கும்; இதன்விளைவாக இலக்கிய ஆர்வம் மிக்கவர்களும் தமிழ்ப்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பு ஏற்படும் எனவும் அவர்கள் கருதினர்.

இங்ஙனம் பணியமர்த்தம் செய்யப் படுவதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் எனத் தெரிவுசெய்யப்பெற்ற பட்டி யலில் என் பெயரும் இருந்தது. அப் பட்டியலிலிருந்து நான் தெரிவு செய்யப்பெற்றமைக்கு தனிப்பட்ட யாரையும் காரணம் எனக் கூற இய லாது. இங்கே உள்ளதைப் போன்று பரிந்துரை, கொல்லைப் புறவழி முதலியவை அந்நாட்டில் கிடையாது.

எனினும் மொழியியலில் ஆய்வுப் பட்டம், சமற்கிருதக் கல்வி,நூல் வெளியீடு, கருத்தரங்கங்கள் (குறிப் பாக ஆங்கில மொழியில் நடை பெற்றவை) பலவற்றில் கலந்து கொண்டமை எனும் இவையே என்னை முன்னிறுத்தக் காரண மாயின எனலாம்.

அங்ஙனம் தெரிவு பெற்றாலும் மூன்று அறிஞர்களின் அறிந்தேற்பு தேவை; இதற்காக அந்த நேரம் அமெரிக்கா வந்திருந்த மூன்று தமிழ றிஞர்களிடம் என் தகவுடைமை குறித்து வினா எழுப்பப்பட்டுப் பதிவு செய்துகொண்டனர்.

இதன் விளைவாக நான் பணிய மர்த்தம் பெற்றமை சார்சு அவர் களுக்குப் பெருமகிழ்வே. இங்ஙனம் சென்று அங்கே ஆற்றிய பணிகள் பற்றிப் பின்னொரு கட்டுரையில் விளக்குகிறேன்.

இங்கு இதனை விரித்துரைக்கக் காரணம்,1987-இல் நான் வந்து சார்சு அவர்களைக் கண்டு இபடி ஒரு துறை அமைக்குமாறு வேண்டியதாகவும் சார்சு என்னைப் பணியமர்த்திய தாகவும் நாங்கள் இருவரும் இணைந்து இந்திய அரசுக்குப் பல வலியுறுத்துமடல்கள் அனுப்பித் தமிழைச் செம்மொழியாக அறிவிக்கு மாறு செய்துவிட்டதாகவும் தவறான ஒரு படப்பிடிப்பை இராசீவ் மல் கோத்ரா, அர்விந்தன் நீலகண்டன் என்னும் இருவர் இணைந்து எழுதி யுள்ள Breaking India என்னும் ஆங்கிலநூல் வழங்கியுள்ளது.நான்கு ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க வெளியீடாக வந்த இந்நூல், சென்ற ஆண்டு இந்திய வெளி யீடாகவும் வெளிவந்தது.இந்த ஆண்டு, இப்போது உடையும் இந்தியா எனத் தமிழாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள் ளது. துண்டுதுணுக்காக நிகழ்ந்த சில நிகழ்வுகளை ஒன்றுகூட்டி ஒரு பூதத்தைப் படைத்துக் காட்ட இவர்கள் விழைகின்றனர். அப்படிப் பூச்சாண்டி காட்டித் தங்கள் வருவாயைப் பெருக் கிக் கொள்ள முனைந்தமையால் இத னை ஒரு மோசடிக்குற்றம் எனக் குறிப் பிடவேண்டும்.

1987-இல் பிரிகாம் யங் பல்கலைக் கழக்த்திற்கு நான் சென்றது மொழி யியல் ஆய்வுரை வழங்குதற்கே. எனினும் என் வலைப்பக்கத்தில் என் கருத் துரையாக மார்மன் விவிலியத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அந் நுலைப் படித்தபோது திருவாசகத்தை ஒப்பிடத் தோன்றியது. ஏனெனில் திருவாசகத்தில் எல்லாப் பாக்களிலும் தம் நெஞ்சை முன்னிலைப்படுத்தி மாணிக்கவாசகர் பாடியிருப்பார். மார்மன் விவிலியத்திலும் அத்தகு  நிலையைக் காண்கிறோம். இறை வனைத் தேன் என மாணிக்கவாசகர் குறிப்பது போன்றே அமெரிக்க நூலிலும் குறிப்பு பலவிடங்களிலும் பயின்றுவருகிறது. இது தற்செயலான் ஒப்புமையெனினும் குறிப்பிடத்தக்க ஒன்று என் வலைப்பதிவில் குறிப்பிட்டி ருந்தேன். இக்குறிப்பு திருவாசகத்தை நன்கறிந்த நம்மவர்களுக்காக. ஆனால் நான் அப்ப்டி அமெரிக்காவில் பேசிய தாகவும் அதன்விளைவாகத் தமிழ்ப் பத்தியிலக்கியத்தின் தரத்தைத் தாழ்த்தி விட்டதாகவும் இந் நூலாசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நான் சார்சுக்கு வேண்டிக்கொண்டதால் சார்சு இந்திய அரசை வலியுறுத்தித் தமிழைச் செம்மொழி என அறிவிக்க வழிவகை செய்துவிட்டதாகவும் இவர்கள் புனைந்துரைத்துள்ளனர்.

ஆற்றாமையும், அழுக்காறும்

தேவபாடையாகிய சமற்கிருதத் திற்கு நிகராகத் தமிழ் செம்மொழித் தகுநிலையை அடைந்துவிட்டதே என்று  ஆற்றாமையும் அழுக்காறும் இவர் களின் உள்ளத்தைக் குடைந்து கொண்டிருப் பதையே இவர்களின் புனைவுரைகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆனால் உண்மைநிலை என்ன? இன்னும் தமிழ் தனக்குரிய தகுதியை அடையவில்லை. கணினித் துறையில் உல்ககச்சாதனை பெற்றுவிட்டதாக நம் இளைஞர்கள் பெருமையடித்துக் கொள்ளும் இவ்வேளையில்  உண்மை யான நிலையைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இணையதளத்தில் கூகுள் தேடு பொறிக்குச் சென்று Tamil என்று தட்டச்சு செய்தால் 61,300,000 வலைத் தளங்கள் ஓடிவரும்.அதே வேளையில் Sanskrit  என்று தட்டச்சு செய்தால் 36,900,000 வலைத்தளங்கள் மட்டுமே வரும். இதனை வைத்துக்கொண்டு தமிழ் முதலிடம் பிடித்துவிட்டதாக மனநிறைவு அடைந்துவிடக் கூடாது. பின்வரும் விவரங்களைப் பாருங்கள்.

Hindu—115,000,000 results
Vedas-1,270,000 results
Hindu philosophy-1,490,000 results
Brahmin-13,800,000 results
Manu dharma shatra-13,800,000
results

இவற்றையெல்லாம் எந்தக்கணக் கில் சேர்ப்பது?

கூகுள் தேடுபொறிக்குச் சென்று  Thirukkural என்று தட்டச்சு செய்தால் 483,000  வலைத்தளங்கள் வரும். ஆனால் பின்வரும் பட்டியலைப் பாருங்கள்.

Ramayanam- 1,610,000 results
Mahabaratham- 5,040,000 results

நாம் முன்னேறியிருக்கிறோமா இல்லை வெறும் ஏமாளித்தனமா என எண்ணிப்பார்க்கவேண்டும்.

என்னைத் திராவிடக் கல்விசார் தீவிரவாதி (Dravidian Academic–Activist) என அந்நூலாசிரியர்கள் குறித்திருப்பது என் வாழ்நாளில் எனக்குக் கிடைத்த பெரும்சிறப்பு எனலாம். எனினும் அத்தகைய பெருஞ் சிறப்புப் பெறுமளவு நான் குறிப்பிடத் தக்க பணிகள் இதுவரை ஆற்றவில்லை. அங்கே மாணவர்கள் வேண்டுகோளுக்கிணங்கத் திரு முருகாற் றுப்படை, நாச்சியார் திருமொழி ஆகிய வற்றில் சிறப்புப் பயிற்சியளித்து அந்நூல் களை என் மேற்பார்வையில் மொழி பெயர்க்கச் செய்தேன்.

இதற்காக என்னை இந்துசமயவிரோதி என அழைத்துள் ளனர். இவர்களின் கூற்றில் உண்மை யில் லை எனத் திரு.குமார் குமரப்பன் அவர் கள் இணையத்தில் விடையளித்துள்ளார். பேராசிரியர் சார்சு கார்ட்டு அவர்களும் பல்கலைக் கழக இணைய தளத்திலேயே இக் கூற்றின் பொய்ம்மை யையும் பொருந் தாமையயும் விளக்கியுள்ளார். திராவிடக் கல்விசார் தீவிரவாதி (Dravidian Academic - Activist) என இவர்கள் பெரு மைப்படுத்தியதற்கிணங்க நான் பெரும் பணியாற்ற வேண்டும். உலகப் பல்கலைக் கழகங் களுக்குச் சென்று பெரியாரியத் தின் பெருமையையும் அதன் உலகளாவிய பார்வை யையும் எடுத்துரைத்து மாணவர்களை ஆற்றுப்படுத்த வேண்டும். அவ் வகையில் எனக்கு ஊக்க மளித்த உடையும் இந்தியா நூலாசிரியர் களுக்கு என் நன்றி...

.தமிழர்தம் அடையாளம், தமிழ்ப் புத்தாண்டு! தடம் மாறுகிறது, தமிழக அரசு!! -முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன்

(பச்சையப்பன் கல்லூரி முன்னாள் முதல்வர்

தினமணி 22.08.2011 நாளிட்ட இதழில் சித்திரைதான் தமிழ்ப் புத்தாண்டு என்னும் தலைப்பில் லா.சு.ரங்கராஜன் என்பவரின் குறுங்கட்டுரை வெளிவந்தது. அதில் இந்து தர்ம மறை நூல்கள் விதித்த முறைப்படியே தமிழ்நாட்டில் பெருவாரி யான மக்கள் காலங்காலமாகப் பல பழக்க வழக்கங்களைப் பயபக்தியுடன் பின்பற்றி வருகின்றனர். அவற்றை ஒவ்வொன்றாக மெல்ல மெல்லக் குலைத்து ஒடுக்குவதற்கு, சென்ற தி.மு.க. ஆட்சியில் பல நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் ஒன்றுதான் சித்திரை தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பை, தை மாதத்திற்கு மாற்றிய அதிரடிச் சட்டம்.

... தை முதல் தேதிதான் புத்தாண்டு என்று மாநில அரசு வேண்டுமானால் வீம்புக்குச் சட்டம் இயற்றி, அரசாங்கப் படிவங்களில் அச்சடித்து அழகு பார்க் கலாம். ஆனால், தமிழ் மக்கள் மத்தியில் அச்சட்டம் கிஞ்சித்தும் செல்லுபடியாக வில்லை. ஆகவே, ஆன்மீகம் செறிந்த தமிழ் மக்களின் உள்ளார்ந்த விருப்பத்தை ஏற்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை யிலான இன்றைய அ.தி.மு.க. அரசு, சித்திரை முதல் தேதியையே எப்போதும் போல் புத்தாண்டு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதே அனை வரின் வேண்டுகோளாகும். என்று இன் றைய தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுவதோடு அக்குறுங்கட்டுரை முடிகிறது.

 

அக்கட்டுரையை எழுதிய லா.சு.ரங்க ராஜனுக்கு மறுநாளே கைமேல் பலன் கிடைக்கிறது. அதாவது 22.08.2011 அன்று கட்டுரை வெளிவருகிறது. மறுநாள் 23.8.2011 அன்று தமிழகச் சட்டப் பேரவை யில் சித்திரை முதல்நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்படுகிறது. எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்? தினமணி ஆசிரியருக்கே வெளிச்சம்.

இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் கொண்டு வந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட அந்த சட்ட மசோதாவில் என்னதான் கூறப்பட்டிருக்கிறது? 24.08.2011  நாளிட்ட தினமணியில் அது வெளிவந்துள்ளது.

தை முதல் நாளில்தான் தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்ற சட்டம் வழக்கமான நடைமுறைக்கு எதிராக உள்ளதாகத் தொல்லியல் அறிஞர் கள், வானியல் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்துறை  அறிஞர்களும், பொதுமக்களும் ஊடகங்கள் மூலம் தங்களது கருத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

... தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண் டாகப் பின்பற்றுவதில் பொதுமக்களிடையே நடைமுறை இடர்ப் பாடுகள், தடை, எதிர்ப்பு ஆகியவற்றை ஏற்படுத்தியுள்ளது. 2008இல் கொண்டு வரப்பட்ட சட்டத்தை ரத்து செய்வதன் மூலம் சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடும் காலத்தால் முற்பட்ட வழக்கத்தை மீட் டெடுக்க அரசு முடிவு செய்துள்ளது.

தினமணி கட்டுரையில் இந்து தர்ம மறை நூல்கள் விதித்த முறைப்படியே தமிழ்நாட்டு மக்கள் பயபக்தியுடன் பின் பற்றி வருவதாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது. கட்டுரையாளர் லா.சு.ரங்கராஜன் கருதும் இந்து தர்ம மறைநூல்கள் யாவை? அவற்றுக்கும் தமிழ் மக்களுக்கும் என்ன தொடர்பு? இந்து தர்மம் என்கிறாரே, அது எப்போது தோன்றியது?

ஆன்மீகம் செறிந்த தமிழ்மக்களின் உள்ளார்ந்த விருப்பம் என்று எதைக் கருதுகிறார்?

லா.சு.ரங்கராஜன் கூறும் இந்து தர்மப்படிதான் ஓர் அரசு சட்டம் இயற்ற வேண்டுமா?

ஆன்மீகவாதியான தமிழ்க்கடல் மறைமலை யடிகளார் தலைமையில் 1921 ஆம் ஆண்டு  பச்சையப்பன் கல்லூரியில் 500 தமிழ்ப் புலவர்கள் கூடி தை முதல் நாள் தான் திருவள்ளுவர் ஆண்டு; அதுதான் தமிழ்ப் புத்தாண்டு என்று முடிவெடுத்து அறிவித்தார்களே, அதை ஏற்றுக் கொண்டு 2008 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கலைஞர் சட்டம் கொண்டு வந்தாரே, அதில் என்ன தவறு இருக்க முடியும்?

புதிய அரசு, 2011இல் நிறைவேற்றி யுள்ள இந்தச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ள நடைமுறை இடர்ப்பாடுகள் எவை? தடை எது? எதிர்ப்பு எங்கிருந்து வருகிறது? இவற்றுக்கு என்ன பதில்? நடைமுறை இடர்ப்பாடு, தடை, எதிர்ப்பு எல்லாமே லா.சு.ரங்கராஜன் போன்றவர்களால் தினமணி மூலம் வருபவைதாமே. மற்றபடி, தொல்லியல் அறிஞர்கள், வானியல் வல்லு நர்கள், ஊடகங்கள் வாயிலாகக் கருத்தை வெளியிட்டுள்ளதாகக் கதை கட்டுவது ஏன்? சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத் தாண்டாகக் கொண்டாடுவது காலத்தால் முற்பட்ட வழக்கமாம். தமிழ் விரோத அரசின் புதிய சட்டம் புகல்கிறது. யார் காதில் பூச் சுற்றப் பார்க்கிறார்கள்?

சித்திரை ஒன்று தமிழ்ப் புத்தாண்டு என்பது ஆரிய ஆபாசக் கதையை அடிப் படையாகக் கொண்டதுதானே. அதனை மீண்டும் கொண்டுவரச் சட்டம் இயற்றுவது தமிழர்கள் மீது தொடுக்கப்பட்ட பார்ப் பனப் பண்பாட்டுப் படையெடுப்பே என்று தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி கணித்திருப்பது சரியானதுதானே.

காலத்தால் முற்பட்ட வழக்கம் என்ற பொய் முத்திரை குத்தி, சித்திரை யைத் தூக்கிப் பிடிக்க நினைக்கும் சூது மதியினரே! தெரிந்து கொள்ளுங்கள். கி.பி.78ஆம் ஆண்டில் சாலிவாகனன் என்னும் வடநாட்டு வேந்தனால் ஏற்பட்டது தான், சாலிவாகன சக வருடம் என்பது. அது பிரபவ-விபவ, பிம்ம, மோதுத எனும் 60 ஆண்டு கால வட்டமாகக் கொள்ளப் படுகிறது. இந்த 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்று கூட தமிழ்ச் சொற்கள் இல்லை. அனைத்துமே சமஸ்கிருதப் பெயர்கள்தாம். இந்த 60 ஆண்டுகளின் தொடக்கம்தான் சித்திரை முதல் நாளாம். அதைத்தான் தமிழ் வருடப் பிறப்பு (Tamil New Years Day)  என்று தவறாக வழங்கி வந்தார்கள்.

அந்த 60 ஆண்டுகளும் எப்படிப் பிறந்தன என்பதற்கு ஒரு புராணக் கதை கூட உண்டு. அது ஆபாசத்தின் உச்சக் கட்டக் கதையாகும். கண்ணன், பெண்ணாக மாறிய நாரதருடன் 60 வருடம் கூடி மகிழ்ந்து, 60 ஆண் பிள்ளைகளைப் பெற்றா ராம். (ஒன்று கூட பெண்பிள்ளை இல்லை யாம்!) அந்த 60 ஆண் பிள்ளைகள்தாம் 60 ஆண்டுகளாம். இந்தக் கதையை அடிப் படையாகக் கொண்டு அமைந்த பற்சக்கர ஆண்டின் தொடக்கம்தான் சித்திரை முதல் நாள். அது எப்படித் தமிழ்ப் புத்தாண்டா கும்? புதிய அரசு பகுத்தறிவோடு சிந்தித் துப் பார்த்திருக்க வேண்டாமா?

. . .  தரணியாண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்றும்
பல்லாயிரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்

புத்தாண்டு, தை முதல் நாள், பொங்கல் நன்னாள்! என்றும்

புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் பாடிய பொன்னான வரிகளையாவது புதிய அரசு எண்ணிப் பார்த்திருக்க வேண்டாமா? எண்ணிப் பார்த்திருந்தால், இந்தப் புதுக் குழப்பத்திற்கு வழி பிறந்திருக்குமா?

நூற்றாண்டு விழாக் காணும் தமி ழறிஞர் டாக்டர் மு.வரதராசனார், முன் காலத்தில் வருடப் பிறப்பு சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல் நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர் கள் கொண்டாடினார்கள்  என்று ஆணித் தர மாகக் கூறியுள்ள கருத்தையாவது புதிய அரசு கருதிப் பார்த்திருக்க வேண்டாமா?

கலைஞர் எதைச் செய்தாலும் அதற்கு நேர் எதிராக எதையாவது செய்தே ஆக வேண்டும் என்று எண்ணிச் செயல்படு வோருக்கு, சிந்திக்க நேரமேது?

சட்ட மசோதா தயாராகிக் கொண் டிருக்கும் அதே நேரத்தில் தினமணிக் கென்று ஒரு கட்டுரையும் அல்லவா தயா ராகிக் கொண்டு இருந்திருக்கிறது?


தை முதல்நாளே தமிழாண்டுத் தொடக்கம், என்பது தமிழகத்தில் மட்டு மன்று, உலகளாவிய நிலையிலும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருந்த ஒன்றாகும். மலேசிய நாட்டுத் தலைநகர் கோலாலம் பூரில் 06.10.2001 அன்று ஒரு மாபெரும் மாநாடே நடைபெற்றது. எதற்காக தெரி யுமா? தமிழ்ப் புத்தாண்டின் தொடக் கம் தை முதல் நாளே என்பதை உலகளாவிய நிலையில் பிரகடனம் (பரிந்துரை) செய்வ தற்காகத்தான் அம்மாநாடு கூட்டப் பெற்றது. மலேசியத் தமிழ் இலக்கியக் கழகம், மலேசியத் திராவிடர் கழகம், மலேசியத் தமிழ் நெறிக் கழகம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் ஒருங் கிணைந்து அம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்திருந்தன.

அம்மாநாட்டில் தமிழகம், ஈழம், சிங்கப்பூர், சுவிட்சர் லாந்து, செர்மனி, மொரீசியசு, தென்னாப்பிரிக்கா, கனடா முதலான பல நாடுகளிலிருந்து பிரதிநிதி கள் பங்கு கொண்டு சிறப்பித்தனர். அம்மாநாட்டின் இறுதியில் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று முதன் முதலாக பரந்துரை (பிர கடனம்) செய்யப்பட்டது.

30.9.2007 அன்று மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மலேசியத் தமிழர் அமைப்புகள் ஒருங்கிணைந்து, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதை மீண்டும் மறு உறுதி செய்து உலகப் பரந்துரை (பிரகடனம்) செய்தன. அப்பரந் துரையின் நகல்கள் அனைத்து நாட்டுத் தமிழர் அமைப்பு களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. அம்மாபெரும் பரந்துரை விழாவில், தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்களின் அறிவார்ந்த பார்வைக்கும் உடனடி அறிவிப்புக் கும் மலேசியத் தமிழர்களின் சார்பாக இவ்வேண்டுகோளை முன் வைக்கின்றோம். டாக்டர் கலைஞர் ஆட்சிக் காலத்தி லேயே உலகத் தமிழர் களின் தை முதல் நாளே தமிழ்ப் புத் தாண்டு என்னும் இவ் வேண்டுகோள் நிறைவேறட்டும் என்னும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டு, அன்றைய முதல்வர் கலை ஞர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டது.

தமிழக அளவிலும், உலகளாவிய நிலையிலும் ஒருமித்து எடுத்த முடிவின்படி தான், முதல்வர் கலைஞர் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் இயற்றி, தமிழர் தம் நெஞ்சங்களிலெல்லாம் பால் வார்த்தார்.

புதிய அரசோ எதையும் சீர்தூக்கிப் பார்க்காமல், சில பஞ்சாங்கப் பேர்வழி களின் தவறான வழிகாட்டுதலுக்கு ஆட்பட்டு, மன்னிக்க முடியாத மாபெரும் பழிக்கு ஆளாகித் தவிக்கிறது. தமிழ்ப் புத்தாண்டு, சித்திரை முதல் நாள்தான் என்று சட்டம் இயற்றி தகாத செயலை இன்று செய்துள்ளார்கள்.

மீண்டும் கஞைர் ஆட்சிக்கு வந்து, தை முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டு என்னும் சட்டத்தை மீண்டும் இயற்றி, தமிழர் தம் அடையாளத்தை மீட்டெடுப்பார். அவனியெங்கும் வாழும் தமிழர்களை அதன்மூலம் அடையாளங்கண்டு அரவணைத்து மகிழ்வோம்.

.அழிக்கத் துடிக்கும் ஆரியர் கூட்டம் - கலைஞர்-

நேற்றைய தினம் சட்டமன்றத் திலே என்ன அறி வித்திருக்கிறார் கள்?  இனிமேல், இந்த ஆண்டுக் கணக்கு பழைய கணக்குதான்.  புதிய மரபை நாங்கள் கடைப்பிடிக்க முடி யாது. பெரியார் என்ன? மறை மலை யடிகள் என்ன? யாராக இருந்தால் தான் என்ன? அவர்கள் சொன்னால் நாங்கள் கேட்க மாட்டோம்.  நாங்கள் பழைய பஞ்சாங்கப்படிதான் நடப்போம் என்று பழைய பஞ்சாங்கத்தைத் தூக்கி தலையிலே வைத்துக் கொண்டு, நடக்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால், நான் கேட்கின்றேன்.  நம்முடைய கலை, கலாச்சாரம், மரபு இவைகளுக் கெல்லாம் எவ்வளவு பெரிய ஆபத்து வந்திருக்கிறது என்பதை  தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும்.  இன்றைக்கு இது சாதாரண விஷய மாகத் தெரியலாம்.   எதிர்காலத்தில்  கொஞ்சம் கொஞ்சமாக செல்லரிப் பதைப்போல நம்முடைய செல்வங் களையெல்லாம், அறிவுச் செல்வங் களையெல்லாம்,  நம்முடைய கலைச் செல்வங்களையெல்லாம்,  நம்முடைய  இதிகாசச் செல்வங்களையெல்லாம், நம்முடைய இலக்கியச் செல்வங்களை யெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக  அறுத்து அழித்து அவைகளை இல்லா மலேயே புதைத்து, எதிர்காலத்திலே தமிழன் என்று ஒருவன் இருந்தான் என்று சொல்வதற்கே ஆள் இல்லாமல் நம்முடைய சமுதாயம் போய்விடுமோ - இன்றைக்கு தி.மு.கழகம் இருக்கிற காரணத்தால் தான், பெரியார் பிறந்த காரணத்தால்தான், அவர் வழியிலே அண்ணா பணியாற்றிய காரணத் தால்தான், அவர் வழியிலே நாமெல் லாம் தொண்டாற்றிய காரணத்தால் தான் எதற்கும் அஞ்சாமல் இந்தியை எதிர்த்து, தமிழை வாழ வைத்து எதற்கும் அஞ்சாமல் பல உயிர்களைக் கூட தத்தம் செய்து நாம் தமிழை காப்பாற்றினோமே அந்தத் தமிழுக்கு இன்றல்ல, நான் இன்றைக்கு  உயி ரோடு இருக்கிறேன், நான் இல்லாத காலத்திலேகூட யாரும் அறியாமல், உங்களையெல்லாம் அறியாமல் தமிழ் மொழியை கொள்ளை கொண்டு போய்விடுவார்கள், தமிழை அழித்து விடுவார்கள். தமிழ் உணர்வை எந்த உலுத்தர்களும்

அழித்துவிடாமல் பாதுகாப்போம்!

ஆகவே இன்றைக்கு தமிழக சட்டமன்றத்திலே ஜனநாயகத்திற்கு மாத்திரம் ஆபத்தல்ல, நம்முடைய தமிழ் மொழிக்கே ஆபத்து.  நாம் பேசுகின்ற தமிழ் இலக்கியத்திற்கே ஆபத்து,  நாம் பேசுகின்ற, பாடுகின்ற தமிழ் இசைக்கே ஆபத்து, தமிழுக்கே ஆபத்து.  அந்த ஆபத்தைத் தடுத்து நிறுத்திட ஜனநாயகத்தை நாம் காப் பாற்றுவது முதலாவதாக, இரண்டாவ தாக இருந்தாலும்கூட, முதலாவதாக இருக்க வேண்டியது, இன்றைக்கு அழிக்கத் தலைப்பட்டிருக்கிறார்களே,  நம்முடைய தமிழ் உணர்வை அந்த உணர்வை - நாம் காப்பாற்றித் தீர வேண்டும். அந்த உணர்வை எந்த உலுத்தர்களும் அழிக்காமல் பாது காத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்கிறேன். பூசுரர்கள் கூட்டம்,  புரோகிதர்கள் கூட்டம், ஆரியக் கூட்டம், தமிழை அழிக்க பின்னு கின்ற வலைகளை யெல்லாம் அறுத் தெறிந்து தமிழ் வாழ, தமிழர் வாழ நாம் உயிரையும் கொடுக்கத்  தயாரா வோம் என்று கூறி உங்கள் அன்பான வரவேற்புக்கும் நீங்கள் காட்டுகின்ற எழுச்சிக்கும், இத்தகைய இளை ஞர்கள் எல்லாம் இருக்கின்ற வரை யில் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்கின்ற அந்த நம்பிக்கை யோடு உரையை நிறைவு செய்கிறேன்.

வட சென்னை தங்கசாலைப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து
முரசொலி 26.8.2011

தமிழினம் பற்றி பண்டைய கிரேக்க நூல் 
இலெமூரியன் என்னும் இனத்திலிருந்துதான் மாந்தன் தோன்றினான் என்பது டார்வின் கண்டறிந்த உயிரினத் தோற்றங்களின் கோட்பாடு. எனவே, இலெமூரிய இனம் வாழ்ந்த இடமாகிய இலெமூரியக் கண்டத்தில்தான் மாந்தன் முதன் முதலில் தோன்றி இருக்க வேண்டும் என்பது அறிஞர்களின் துணிபு.

தொலை மேற்கில் உள்ள கிரேக் நாட்டிற்கும், மேற்கில் உள்ள எகிப்து நாட்டிற்கும், தொலை கிழக்கில் உள்ள சீன நாட்டிற்கும், இடைப்பட்ட இடமே இலெமூரியக் கண்டம் என்றும் அதுவே இலக்கியங்கள் கூறுகின்ற குமரிக் கண்டம், பழந்தமிழ் நாடு என்றும் கி.மு. 484 முதல் கி.மு.408 வரை வாழ்ந்து மறைந்த கிரேக்க நாட்டைச் சேர்ந்த முதல் வரலாற்று ஆசிரியர், இரோடட்டசு என்பவர் தனது வரலாறுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். உலகின் முதல் வரலாற்று ஆசிரியர் இவரே. உலக வரலாறுகள்பற்றி எழுதப்பட்ட முதல் நூலும் இதுவே.

தமிழர்களின் பழைமையைப் பறைசாற்றுகின்ற இந்நூலில் இரோடட்டசு உலக நாடுகளில் உருவான நாகரிகங்களில் முன்னணி வகிப்பது தமிழர் நாகரிகமே. வரலாறு படைத்துக் கொண்ட மாந்த வகுப்பிற்கே ஆதியும் அந்தமுமாய் இருந்தவன் தமிழனே; இருந்த மொழி தமிழ் மொழியே; இருந்த நாகரிகம் தமிழர் நாகரிகமே என்று உறுதியாகக் கூறுகின்றார்.
தமிழர்கள் 25000 ஆண்டுகளுக்கு முன்பே கடல் வழியாகவும், தரை வழியாகவும் உலகின்

பல்வேறு பகுதிகளுக்குச் சென்று குடியேற்றங்களை அமைத்து வாழ்ந்து வரலாறு படைத்தனர் என்றும், பனை, தென்னை மரங்களின் பயன்பாட்டில் வாழ்ந்த தமிழர்கள் பனையேறிகள் என்று அழைக்கப்பட்டனர் என்றும், அவர்கள் வாழ்ந்த குமரிக் கண்டம் ஏழுபனை நாடு, ஏழு தெங்குநாடு, நெடும்பனை நாடு, குறும்பனை நாடு என்றெல்லாம் வழங்கப்பட்டன என்றும், பனையேறிகளாகிய தமிழர்கள்தாம் பாமேசியர் என்றும் பினீசியர்கள் என்றும் பெயரேற்று வாழ்ந்தனர் என்றும் இந்நூல் கூறுகின்றது.
முனைவர் மு. பொன்னவைக்கோ


உலகை மாற்றுவோம்
- கவியரசர் முடியரசன்

உலகம் இங்குப் போகும் போக்கை
ஒன்று சேர்ந்து மாற்றுவோம்
ஒருவ னுக்கே உரிமை யென்றால்
உயர்த்திக் கையைக் காட்டுவோம்
கலகம் இல்லை குழப்பம் இல்லை
கடமை யாவும் போற்றுவோம்
கயமை வீழ உரிமை வாழக்
கருதி யுணர்வை ஏற்றுவோம்

உழைத்து ழைத்து விளைத்த நெல்லை
ஊருக் கெல்லாங் கொடுக்கிறோம்
உழைத்து விட்டுக் களைத்த பின்னர்
உணவில் லாமற் படுக்கிறோம்
களைத்துப் போன கார ணத்தைக்
கருதிக் கொஞ்சம் நோக்குவோம்
கடவுள் ஆணை என்று சொன்னால்
கண்ணில் நெருப்பைக் காட்டுவோம்

நமக்குள் நாமே வேறு பட்டு
நாலு பக்கம் போகிறோம்
நாதி யற்றுக் குனிந்து நெஞ்சம்
நலிந்து நாளும் சாகிறோம்
நமக்குள் வேறு பாடு காணல்
இல்லை யென்றே சொல்லுகிவோம்
நமது கூட்டம் நிமிர்ந்து சொன்னால்
நாளை உலகை வெல்லுவோம்.
உலகம் போகும்போக்கை யிங்கு மாற்றுவோம்
உடைமை யாவும் பொதுமைஎன்று சாற்றுவோம்.