குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டைமலேசியாவில் தமிழ் நாள்காட்டி - 2043 நாள்காட்டி தோற்றம்

03.01.கிறிசுஆண்டுதமிழாண்டு2042--திருக்குறள் உலக சட்டத்திற்கு வேர்; மாந்தர் வாழ்வு நெறிக்கு வழிகாட்டி; தமிழர் வாழ்விற்கு அடிப்படை; உலகத் தமிழரை இணைத்துப் பிணைக்ககூடிய உயர்ந்த மறை. உலகிலேயே ஒரு மாண்புமிகு நூல் இஃது ஒன்றே என்ற தொடக்கத்துடன் மலேசியாவில் திருக்குறள் நாள் வாழ்த்து அட்டை வெளிவந்து உள்ளது. கடந்த 20.01.1996-ல் மலேசியாவில் நடந்த உலகத் தமிழ் மறை திருக்குறள் வாழ்வியல் மாநாட்டில் ‘சனவரி முதல் நாளை திருக்குறள் நாள்’ என உலகிற்குப் பரிந்துரை செய்யப்பட்டது. இந்தப் பரிந்துரைக்கு மிக முகாமையாகப் பங்காற்றியவர் மலேசியாவின் மூதறிஞர். தமிழ்ப்புணல் மு. மணிவெள்ளையனார் அவர்களே.


திருக்குறளால் இளைய தலைமுறையினர் அடையும் பயன், திருக்குறளின் நன்மை, அதன் முகாமையான குறிக்கோள் என்ன என்பது போன்ற உலக பொது மறை திருக்குறளின் நோக்கம் இந்த வாழ்த்து அட்டையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது.


இந்த அற்புதமான திருக்குறள் வாழ்த்து அட்டையின் மூலமாக பலருக்கு நன்மை கிடைத்து பயனடைவர் என்பது திண்ணம் என்கிறார் ‘உலக பொது மறை திருக்குறள்’ வாழ்த்து அட்டையை தயாரித்து வெளியீடு செய்த இரவாங்கைச் சேர்ந்த தமிழ் நெஞ்சர் அரசேந்திரன்.


 
தமிழ்நெஞ்சர் அரசேந்திரன்

மின்னல் பண்பலை வானொலியில் காலையில் திருக்குறள் விளக்க உரை வழங்கும் மலேசியத் தமிழ் நெறிக் கழகத் தலைவர் இரா. திருமாவளன் இந்த வாழ்த்து அட்டை சிறப்பாக அமைவதற்கு நல்ல ஆலோசனை வழங்கியதாக கூறுகிறார் அரசேந்திரன்.
ஒவ்வொருவரும் சில திருக்குறள் வாழ்த்து அட்டைகளை வாங்கி நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்தால் திருக்குறளின் காலத்தால் அழியாத பல சிறப்புகள் இன்னும் பலருக்குத் தெரிய வாய்ப்புண்டு.


ஒரு வாழ்த்து அட்டையின் விலை RM1.50  மட்டுமே.

தொடர்புக்கு :-
திருமதி மல்லிகா 016-6129554,
இரா. திருமாவளவன் 016-3262479,
அரசேந்திரன் 019-3243253.

Saturday, December 31, 2011
மலேசியாவில் தமிழ் நாள்காட்டி - 2043
 
நாள்காட்டி தோற்றம்


 தமிழையும் தமிழ்ப் புத்தாண்டையும் முன்னிறுத்தி தமிழ் நாள்காட்டி வெளிவந்துள்ளது. அதுவும், மலேசியத் திருநாட்டில் ஆறாவது ஆண்டாக இந்தத் தமிழ் நாள்காட்டி வெற்றிகரமாக வெளிவருகின்றது. இந்த நாள்காட்டியைத் தமிழியல் ஆய்வுக் களம் பெருமையோடு வெளியிட்டுள்ளது.


மலேசியத் தமிழறிஞர் இர.திருச்செல்வம் இந்த நாள்காட்டியை வடிவமைப்புச் செய்துள்ளார். 2007 தொடங்கி இந்தத் தமிழ் நாள்காட்டி தொடர்ந்து வெளிவந்து தமிழர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.


தமிழ் நாள்காட்டி முழுமையாகத் தமிழிலேயே வெளிவந்துள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகத்திற்குக் கிடைத்திருக்கும் தனித்தமிழ் நாள்காட்டி என இதனைத் துணி நாள்காட்டி வரலாற்றில் இதுகாறும் கண்டிராத மாபெரும் முயற்சியாக, இந்தந்து குறிப்பிடலாம்.


2012 சனவரித் திங்கள் 14ஆம் நாள் தைப்பொங்கல் திருநாள். அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டும் பிறக்கவுள்ளது. இது திருவள்ளுவராண்டு 2043 ஆகும்.


தமிழ்ப் புத்தாண்டாம் தை முதல் நாளில் தொடங்குகிற இந்த நாள்காட்டியில், ஆங்கில நாள்காட்டியும் உள்ளடங்கி இருக்கிறது. ஆங்கில மாதம், நாள் ஆகியன குறிக்கப்பட்டுள்ளன. அதே வேளையில், தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து நாள், மாதம், திதி, இராசி, நட்சத்திரம் என எல்லாமும் (தனித்)தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.


 

எல்லா நாள்காட்டிகளிலும் வழக்கமாக இடம்பெறுகின்ற அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. மலேசியச் சூழலுக்கு ஏற்ற வகையில், பொது விடுமுறைகள், மாநில விடுமுறைகள், பள்ளி விடுமுறைகள், விழா நாள்கள், சிறப்பு நாள்கள் என அனைத்தும் இடம்பெற்றுள்ளன.

 

 


நாள்காட்டியின் தனிச்சிறப்புகள்:-


1)தேதியைக் குறிக்கும் எண்கள் தமிழ் எண்களாக உள்ளன. தமிழ் எண்களை அறியாதவர்களுக்கு உதவியாக தமிழ் எண்ணின் நடுப்பகுதியில் ஆங்கில எண்ணும் குறிக்கப்பட்டுள்ளது.


2)திருவள்ளுவர் ஆண்டைப் பின்பற்றி மாதங்கள், கிழமைகள், நாட்கள் என அனைத்தும் தமிழ்ப்பெயர்களோடு அமைந்துள்ளன.

3)கிழமைகள் 7, ஓரைகள் 12 (இராசி), நாள்மீன்கள் 27 (நட்சத்திரம்), பிறைநாள்கள் 15 (திதி) முதலானவை தமிழில் குறிக்கப்பட்டுள்ளன.

4)50க்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் ஆகியோரின் பிறந்த நாள், நினைவு நாள்களோடு தமிழ் அருளாளர்களின் குருபூசை நாட்களும் குறிக்கப்பட்டுள்ளன.

5)மலேசியா, தமிழகம், தமிழீழம் உள்ளிட்ட, 30 தமிழ்ப் பெரியோர்கள் - சான்றோர்கள் - தலைவர்கள் - மாவீரர்கள் உருவப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

6)வரலாற்றில் மறைக்கப்பட்டு; மறக்கப்பட்டுவிட்ட தமிழர்களின் வானியல்(சோதிடக்) கலையை இந்த நாள்காட்டி சுருக்கமாக வெளிப்படுத்திக் காட்டியுள்ளது.


7)குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதற்கான எழுத்து அட்டவணை நாள்காட்டியில் பின்னிணைப்பாக வழங்கப்பட்டுள்ளது. *(கிரந்த எழுத்துகள் அறவே கலவாமல் முழுமையாகத் தமிழ் எழுத்துகளையே கொண்டிருக்கும் பெயர் எழுத்து அட்டவணை இதுவாகும்.)

8)ஐந்திரக் குறிப்பு, நாள்காட்டிப் பயன்படுத்தும் முறை, பிறைநாள்(திதி), ஓரை(இராசி), நாள்மீன்(நட்சத்திரம்) பற்றிய விளக்கங்கள் ஆகியவை இரண்டு பக்கங்களில் நாள்காட்டியின் பின்னிணைப்பாக இடம்பெற்றுள்ளன.

9)ஒவ்வொரு ஓரை(இராசி) பற்றிய படத்தோடு அதற்குரிய வேர்ச்சொல் விளக்கமும் மிகச் சுருக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

10)தமிழின வாழ்வியல் மூலவர்களான வள்ளுவர் வள்ளலார் ஆகிய இருவரின் உருவப்படத்தை முகப்பாகத் தாங்கி, முழு வண்ணத்தில் தரமாகவும் தமிழ் உள்ளங்களைக் கவரும் வகையிலும் இந்நாள்காட்டி அமைந்திருக்கிறது.

 

உள்ளத்தில் தமிழ் உணர்வும் ஊக்கமும் கொண்டு தமிழ்நலத்திற்காக முன்னின்று செயலாற்றும் தமிழ் அன்பர்களும் ஆர்வலர்களும் இந்த நாள்காட்டியை வாங்கி ஆதரவு நல்குவதோடு பரப்பும் முயற்சியிலும் துணைநிற்கலாம். எந்த ஒரு வணிக நோக்கமும் இல்லாமல் முழுக்க முழுக்க தமிழ் வளர்ச்சியை மட்டுமே இலக்காகக் கொண்டு வெளிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி ஒவ்வொரு தமிழர் இல்லத்திலும் இருக்க வேண்டும்.

இது நாள்காட்டி மட்டுமல்ல; தமிழ் எண்ணியல், வானியலை மீட்டெடுக்கும் ஆவணம். தமிழர் அனைவரும் தமிழில் பெயர்ச்சூட்டிக்கொள்ள உதவும் குட்டி ஐந்திறம்(பஞ்சாங்கம்). தமிழில் இருந்து காணாமற்போன கிழமை, மாதம், திதி, இராசி, நட்சத்திரப் பெயர்களை மீட்டுக்கொடுக்கும் சுவடி. மொத்தத்தில், தமிழர் தமிழராக தமிழோடு தமிழ்வாழ்வு வாழ வழியமைத்துக் கொடுக்கும் வாழ்க்கைத் துணைநலம்.


இந்த நாள்காட்டியை அஞ்சல் வழியாகப் பெற்றுக்கொள்ள முடியும். மொத்தமாக வாங்கி விற்பனை செய்ய விரும்பும் அன்பர்களுக்கும், இந்த நாள்காட்டியை மக்களுக்குப் பரப்ப விரும்பும் அன்பர்களுக்கும் சிறப்புச் சலுகை விலையில் தரப்படும்.


இவர்தான் மறைமலை அடிகள்


தமிழ்க்கடல் மறைமலை அடிகளாரின் பிறந்த நாள் இந்நாள் (1876). தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படக் கூடியவர் - ஆரியத்தின் கடும் எதிரி - இந்து மதம் வேறு - தமிழர் சமயம் வேறு என்பதில் உறுதியாக இருந்தவர்.


சென்னைப் பச்சையப்பன் கல்லூரி மண்டபத்தில் 1933 திசம்பர் 23, 24 ஆகிய நாள்களில் தமிழ் அன்பர் மாநாடு நடை பெற்றது. சென்னைப் புத்தகால யப் பிரச்சார சங்கத்தார் இம் மாநாட்டை ஏற்பாடு செய்திருந்த னர். அதன் தலைவர் கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர், பொக்கிஷதார் எஸ். ராமஸ்வாமி அய்யர், வரவேற்புச் சபைத் தலைவர் உ.வே. சாமிநாதய்யர் மற்றும் பொறுப்பாளர்கள் எல்லாம் பார்ப்பனர்களே. அம்மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு மறை மலை அடிகளார் அவர்களுக்கு கே.வி. கிருஷ்ணஸ்வாமி அய்யர் 22.12.1933 இல் தந்தி ஒன்றை அனுப்பினார். அதற்கு மறைமலை அடிகள் அளித்த பதில்தான் மிகமிக முக்கியமானது.


கடிதங்கள், அழைப்புகள், தந்தி ஆகியவற்றிற்கெல்லாம் உங்களுக்கும், டாக்டர் உ.வே. சாமிநாதய்யர் அவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடந்தரவில்லை என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். பண்பட்ட பழைய மொழிகளெல்லாவற்றி லும் தமிழ்மொழி ஒன்றுதான் இன்னும் தன் பண்டை நலஞ் சார்ந்த புகழோடு வாழ்கின்றது. பிற மொழிக் கலப்பு அதன் தூய தன்மையினைக் கெடுக்குமென்றும், அதன் வளர்ச்சியினை குன்றச் செய்யும் என்றும் யாம் உறுதியாக நம்புகின்றோம். ஆதலால் எமது தனித்தமிழ்க் கொள்கையினைக் கடைபிடிக்காத உங்களுடைய மகாநாட்டிலே கலந்துகொள்ள முடியாமையினைப் பொறுத்துக் கொள்வீர்களாக! என்று பதில் எழுதியவர் தான் நமது போற்றுதலுக்கும், மதிப்புக்கும் உரிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் அவர்கள்.


சுவாமி வேதாசலம் என்ற தம் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டவர். சைவக் கொள்கையால் மாறு பட்டு இருந்தாலும்கூட, தந்தை பெரியார் அவர்களைப் பெரிதும் போற்றி மதித்தவர். இந்தி எதிர்ப் புக்களத்தில் தந்தை பெரியார் அவர்களுக்குத் துணை நின்றவர். தந்தை பெரியார் அவர்களைப் பல்லாவரத்துக்கு அழைத்துச் சென்று தாம் அரிதிற் சேர்த்துக் குவித்த நூல்கள் கொண்ட நூலகத்தைக் காட்டி மகிழ்ந்தவர். அவர் உடலால் மறைந்திருக்கலாம்; தமிழ் உணர்வால் நம்மோடு நிறைந்திருக்கிறார்.


இனம் எது - இனப் பகைவர் யார் என்பதை இனம் பிரித்துக் காட்டிய அந்தத் தமிழ்க் கடலின் நினைவைப் போற்றுவோம்!குறைந்தபட்சம் தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயரைச் சூட்டும் உணர்வு கிளர்ந்தெழட்டும் - அதுதான் அந்தப் பெருமகனாருக்கு தமிழர்கள் காட்டும் உண்மையான மதிப்பாகும்.

மலேசியாவில் மறைமலையடிகள் விழா
 
மறைமலையடிகளார் தமிழ் மொழிக்கும் சிவ நெறிக்கும்(சைவ சமயம்) 100 ஆண்டுகளுக்கு முன்னர் அருந்தொண்டாற்றியப் பெருமகனார்.

தமிழ், ஆங்கிலம் மற்றும் வடமொழி ஆகிய முமொழிகளில் தலைசிறந்த புலவராவார்.

50 நூல்களை எழுதி தமிழுக்கு அரும்பணியாற்றியவர் மறைமலையடிகளார்.

 

அடிகளாரின் சிறந்த பணியினை நினைவு கூரும் நோக்கத்துடன் மறைமலையடிகளாரின் நிறைதமிழ் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மறைமலையடிகளாரின் நிறைதமிழ் விழா வரும் ஞாயிற்றுக்கிழமை 24.8.2008இல் கோலாலம்பூர் சோமா அரங்கம், விஸ்மா துன் சம்பந்தனில் நடைபெறும். இந்நிகழ்ச்சி காலை மணி 9.00 லிருந்து பிற்பகல் மணி 3.00 வரையில் நடைபெறும்.

 

இவ்விழா பெட்டாலிங் ஜெயா தமிழ் இளைஞர் மணிமன்ற ஏற்பாட்டில் நடைபெறுகிறது. தமிழ் மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.