21.11.2024....மாண்பு இறந்து அமைந்த கற்பின்
வாள் நுதல், நின்பால் வைத்த
சேண் பிறந்து அமைந்த காதல்
கண்களில் தெவிட்டி, தீராக்
காண் பிறந்தமையால், நீயே
கண் அகன் ஞாலம் தன்னுள்
ஆண் பிறந்து அமைந்த செல்வம்
உண்டனை யாதி; அன்றே
( கம்பராமாயணம் திருவடி தொழுத படலம் : 70)
கம்பராமாயணத்தில் காண் பிறந்தமையால் என வரும் வரியில் காண் என்பது காட்சியைக் குறிப்பது என்பதே பலரின் கருத்தும். நான் பார்த்த மிகச் சிறந்த அகரமுதலிகள் அனைத்திலும் காண் என்பதைப் பெயர்ச்சொல் என்றும் குறித்துள்ளனர். சொல் பெயர்ச்சொல்லாகவும் ஏவல் வினையாகவும் இருப்பது போல் காண் என்பதும் பெயர்ச்சொல்லாகவும் வினைச்சொல்லாகவும் விளங்குகின்றது.
நற்றிணையில் “குழவி தூண்தொறும் யாத்த காண் தகுநல் இல்” ( 120:1-2) எனும் வரியில் காண் அழகு எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.
அகநானூற்றில் “நிழல்காண் மண்டிலத்து” ( 71:13) என வரும் வரியில் நிழல் தோன்றும் அல்லது நிழல் காட்சி தரும் மண்டிலம் எனும் பொருளைத் தந்து பெயர்ச்சொல்லாகவே விளங்குவதைக் காணலாம்.
காண் = காட்சி, அழகு
காண் வருதல் = காட்சிக்கு இலக்காதல்
காண்கை = அறிவு
எனத் திருமகள் தமிழகராதியும்
காண் = அழகு
எனக் கதிரவேற்பிள்ளை தமிழ் மொழியகராதியும் கழகத் தமிழ் அகராதியும்
காண் = காட்சி, அழகு
எனத் தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பெற்ற தமிழ் தமிழ் அகரமுதலியும்
பொருள் தந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
மேற்கண்ட கம்பராமாயணப் பாடலில் வரும் மாண்பு இறந்து அமைந்த கற்பின் என்பது அளவிறந்த மாண்பு அமைந்த கற்பு எனப் பொருளாகும் அதே வேளை
காதல்
கண்களில் தெவிட்டி, தீராக்
காண் பிறந்தமையால்
என்பதில்
மிகுந்த காதல் வேட்பு கண்களில் மிகுந்து காட்சியாய்த் தோன்றியமையால் என்றே பொருள்படுமே ஒழிய காண்பு இறந்தமையால் எனச் சீர் பிரித்து காட்டுவது வலிந்து பொருள் காட்டும் நோக்கத்தையே குறிப்பதாகும்.
இலங்கைத் தீவு முழுக்க சீதையைத் தேடிக் கண்ட பின் அக்காட்சியையும் சீதை இராமன் மீது கொண்டுள்ள காதல் அன்பினையும் சொல்லிக் காட்டும் வகையில் அப்பாடல் கம்பரால் தீட்டப்பட்டுள்ளது.
காண் பிறந்தமையால் என்பது சீதையின் அத்தகு காட்சிப் புலப்பட்டதை அனுமன் இராமனுக்கு உணர்த்துவதைக் குறிப்பிடுவதாகவே பொருள் அமையும். இதனையே உரையாசிரியர் பலரும் குறித்துள்ளனர்.
எனவே காண் என்பது ,
பார்
பூண்
சொல்
முடி
எனும் பெயரும் வினையும் இயைந்த சொற்கள் போல் பெயர்ச்சொல்லென்றே இவ்விடத்தில் கருதுதல் வேண்டும்.
இதன் வழி காண் பெயர்ச்சொல்லாயின் காணொலி எனும் புதுச்சொல்லாக்கத்தில் காணப்படும் காணும் பெயர்ச்சொல் என்றே புலனாகும். இவ்விடத்தில் காணும் ஒலி எனப் பொருள் கொள்வது முற்றிலும் தவறு. ஒலியைப் காணவும் இயலாது. காணொளியாயின் பொருத்தமே. ஆனால் காணொளியில் வரும் காண் பெயரன்று ; அது வினையாகும்.
காணும் ஒளி , காண்கின்ற ஒளி, கண்ட ஒளி எனக் காணொளியை வினைத்தொகையாக்கலாம். தமிழில் காணொலி எனும் சொல்லை உருவாக்கியோர் காட்சியும் ஒலியும் எனும் உம்மைத் தொகை நோக்கியே உருவாக்கியுள்ளனர். வீடியோ எனப்படும் சொல்லில் காணப்படும் காட்சியும் ஒலியும் இயைந்திருப்பதால் ஆங்கிலத்தில் vedio வீடியோ என உருவாக்கியுள்ளனர். Vedere audio காணப்படும் காட்சியும் ஒலியும் என்பதே இதன் பொருள். இவ்வகையில் காண் + ஒலி எனும் இருசொற்களும் புணர்ந்து காணொலியாகியுள்ளன. இங்குக் காணும் ஒலியும் என்றே இச்சொல் உம்மை பெற்று விரியும். காண் ஒலி உம்மைத் தொகையாகும்.
காண் + ஒலி = காணொலி என புணர்ந்தமைந்துள்ளது.
சான்றாக,
காய்கறி = காயும் கறியும்
செடிகொடி -= செடியும் கொடியும்
சாணங்குலம் = சாணும் அங்குலமும்
சாணரை = சாணும் அரையும்
கபிலபரணர் = கபிலரும் பரணரும்
சேரசோழபாண்டியர் = சேரரும் சோழரும் பாண்டியரும்
ஆதியந்தம் = ஆதியும் அந்தமும்
உடலுயிர் = உடலும் உயிரும்
இவ்வாறு நோக்குகையில் காணொலி பிழையின்று என்பதே எம் கருத்து. இது காணப்படும் ஒலியன்று… அது பொருந்துவதுமன்று. மாறாக காணும் ஒலியும் என விரிந்து காட்சியும் ஒலியும் என்றே பொருளுணர்த்தும்.
இரா. திருமாவளவன்