குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

குமரிக்கடலில் மூழ்கிக்கிடக்கும் தமிழர் வரலாறு.

21.04.2022.....-ஒரிசா பாலு (எ) சி.பாலசுப்பிரமணி, கடல்சார் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்.

தமிழர்களின் சிறப்புமிகு தொன்ம வரலாற்றை  அறியவேண்டும் என்றால் அச்சடிக்கப்பட்ட காகிதங்களில் தேடிக்கொண்டிராமல் கடலுக்குள் தேடினால்தான் முழுமையாகக் கிடைத்தறியப் பெறும்..தமிழ்நாட்டின் உறையூரில் பிறந்து தமிழ்நாட்டில் கல்வி கற்று வளர்ந்திருந்தாலும்கூட ஒரிசா மாநிலத்தில் நான் பணியாற்றிய ஆண்டுகளில் தமிழ், தமிழர்களுக்கும் ஒரிசாவுக்கும் இடையே பல ஒற்றுமைகள் இருப்பதைக் கண்டு என் தேடலை, ஆய்வைத் தொடங்கினேன்..  என் அந்தத் தேடல்ப் பயணம்  இறுதியில் தென்குமரிக்கடலை நோக்கிச் சென்றது.

தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறும், பண்பாடும், கட்டுமானங்களும், மாட மாளிகை கோபுரங்களும், வாழ்ந்த தரவுகளும் தென்குமரிக்கடலுக்குள் மூழ்கிக்கிடப்பதை மீனவர்கள் உதவியுடன் நீருக்குள் மூழ்கி உறுதி செய்தேன்.

பொருளுதவியும், ஆதரவும், ஒத்துழைப்பும் இருந்தால் மூழ்கிப்போன, மறைந்துபோன தமிழ், தமிழர் வரலாற்றை முழுவதுமாக மீட்டெடுக்கமுடியும் என்ற மலைப்பு ஏற்பட்டாலும் என்றாவது இது நிச்சயம் நிறைவேறும் என்ற நம்பிக்கை மட்டும் என்னிடம் இருந்து விலகவில்லை.

லெமூரியா, குமரிக்கண்டம், தென்நாடு, தென்குமரி எனப்பலப் பெயர்களில் அறியப்படும் இந்நிலப்பரப்பு தமிழர்களின் வரலாற்றைக் கொண்டிருக்கும் பரப்பாக உள்ளது.  இதனைப்புரிந்து கொள்வதற்கு நாம் முதலில் உலக இயக்கத்தை, புவியியலை, கடல்சார் மாற்றத்தைப் புரிந்து கொள்வது அவசியம்.

அதாவது, உலக நிலப்பரப்பு தற்போது எப்படி நம் கண்களுக்குத் தெரிகிறதோ அதனை வைத்தே அந்த நிலப்பரப்பின் நீள, அகலம், சுற்று எல்லாம் கணக்கிடுகிறோம்.

ஆனால் சூரியக்குடும்பத்தின் செயல்பாடு என்பது நம் கணக்கீடுகளையெல்லாம் பல வேளைகளில் பொய்யாக்கிவிடுகிறது. நாம் வாழும் இந்தப் பூமி, சூரியனை தன் நீள்வட்டப்பாதையில் சற்று சாய்ந்த நிலையில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிவருகிறது. அதேபோல தன்னைத்தானே சுமார ஆயிரத்து 600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டே, சூரியனையும் சுற்றிவருகிறது. இந்த சூழற்சி கடற்கரைகளில் மாற்றத்தை உண்டாக்குகின்றன.

இதுதவிர, அடிக்கடி ஏற்படும் நிலஅதிர்வுகள், பூமிக்கு 100 கிலோ மீட்டர் ஆழத்திலும், கடலுக்குள் 40 கிலோ மீட்டர் ஆழத்திலும் உள்ள நெருப்புக்குமிழ்கள் இருப்பதாலும் பூமியின் அச்சில் மாற்றம் ஏற்பட்டும் கடல்சார்ந்த நிலப்பரப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இந்த சுழற்சி காரணமாக, பூமி, சூரியனுக்கு அருகில் செல்லும்போது கடல் மட்டம் அதிகரிப்பதும், பூமி சூரியனுக்கு வெகுதொலைவில் செல்லும்போது கடல்மட்டம் உள்வாங்குவதும் அவ்வப்போது நிகழ்வதுண்டு. இதுபோன்ற பல காரணங்களால், உலகம் முழுவதிலும் உள்ள பலநிரப்பரப்புகள் கடலில் மூழ்கும் நிலை உருவாகிறது. இந்தக்காரணங்கள் தவிர, பூமியின் மீது எரிகற்கள் விழும்போதும் நிலப்பரப்பு மற்றும் கடல்பரப்புகளில் மாற்றங்கள் நிகழ்கின்றன. எரிகற்கள் பூமியின் மீது விழுந்த விளைவாகவே லெமூரியா என்றும் குமரிக்கண்டம் கடலில் மூழ்கியதாக கடல்சார் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதில் குறிப்பாகப் பசிஃபிக் கடலில் மேலே உள்ள கனடா கடலுக்குள் ஆயிரத்து 500 கிலோ மீட்டர் நீளமும், 2300 மீட்டர் உயரமும் உள்ள மலை உள்ளதாக கருதப்படுகிறது. அப்படிப்பார்த்தால  3 ஆயிரம் கிலோமீட்டர் அளவுக்கான அந்தக் கடற்பரப்பில் இருந்த நீர் 2300 மீட்டர் உயரத்தில் இருந்த கடல்நீர் பின்வாங்கி எங்கே சென்றது என்ற கேள்வி எழுகிறது. அதேபோல, தற்போது உலகின் மிக உயரமான சிகரத்தைக் கொண்டிருக்கும் இமயமலை கடலாக இருந்த காலநிலையையும் நாம் ஆராயவேண்டியது அவசியம். ஒரு இடத்தில் பின்வாங்கும் கடல் நீர் பூமியைவிட்டு வெளியே எங்கும் ஓடிவிடாது, பூமியின் மற்றொரு பகுதிக்கே செல்லும் என்பது இயற்கை விதி என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

உலகிலேயே முதன் முதலாக,ஹெக்கல் என்பவர் மடகாஸ்கர் முதல் இந்தியா வரையிலான நிலப்பரப்புகள் குறித்து  1863ம் ஆண்டு விளக்கும் போது நில வழிப்பாலம் இருந்திருக்கலாம் எனக் கருத்து தெரிவித்துள்ளார்.  இதில், சிலேட்  என்பவர் 1864 ம் ஆண்டு மடகாஸ்கர் முதல் இந்தியா வரையிலான இரு பகுதிகள் கொண்ட நிலப்பரப்பை லெமுரியா என பெயரிட்டார்.

In 1864, "The Mammals of Madagascar" by zoologist and bio geographer Philip Sclater appeared in The Quarterly Journal of Science. Using a classification he referred to as lemurs, but which included related primate groups,[4] and puzzled by the presence of their fossils in both Madagascar and India, but not in Africa or the Middle East, Sclater proposed that Madagascar and India had once been part of a larger continent (he was correct in this; though in reality this was the super continent Pangaea).

The anomalies of the mammal fauna of Madagascar can best be explained by supposing that ... a large continent occupied parts of the Atlantic and Indian Oceans ... that this continent was broken up into islands, of which some have become amalgamated with ... Africa, some ... with what is now Asia; and that in Madagascar and the Mascarene Islands we have existing relics of this great continent, for which ... I should propose the name Lemuria. ,.

அதாவது  மடகாஸ்கரில் லெமுர்  என்ற தேவாங்கு உள்ளது. அதேபோன்று, தமிழ்நாட்டின் ஊட்டியில் லெமுர் என்ற தேவாங்கு படிமம் உள்ளது. மனிதன் குரங்கில் இருந்து வந்தான் என்ற கருத்தாக்கத்திற்கு  முன்னோடியாக, குரங்கு தேவாங்கில் இருந்து வந்தது என்ற கருத்தாக்கம் உள்ளது. இதனை முன்னோட்டமாக கொண்டு, இரு பகுதிகளுக்கும் இடைப்பட்ட பகுதியை  லெமுரியா என குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1922ம் ஆண்டு தமிழ் அறிஞர்கள் ஒன்று கூடி, லெமுரியா என்ற  ஐரோப்பியர்கள் சூட்டிய பெயர் குறித்து விரிவான ஆலோசனை நடத்திப் பின்னர் குமரிக்கண்டம் என பெயர் மாற்றினார்கள்.

1916ம் ஆண்டு லெமூரியாக் கண்டம் குறித்து ஆய்வு செய்த ஆல்பட் வெஜ்னர் உள்ளிட்ட வரலாற்று அறிஞர்கள் லெமூரியாக் கண்டத்தை "கண்டத்திட்டு" என அழைத்தனர். உலகில் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் கடலால் பிரிந்த நிலம் என வர்ணித்தனர். இதனையடுத்து, ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 40 நாடுகள்  1959ம் ஆண்டு முதல் 1964ம் ஆண்டு வரை இந்தியப் பெருங்கடலுக்குள் மூழ்கிய நிலப்பகுதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், முதல் கட்ட ஆய்வு வெளியிடப்பட்டது.

இதில், அந்தமான் முதல் ஆஸ்திரேலியா வரையிலும், தமிழ்நாடு முதல் மடகாஸ்கர் வரையிலும் உள்ள கடல் பகுதியில் ஏராளமான மலைகள், தீவுகள் உள்ளது எனப் பதிவு செய்தனர். பின்னர், அலெக்சாண்டர் கோந்தர தேவ் என்பவர் 1971ல் ‘‘மா கடல் மர்மங்கள்’’ என்ற பெயரில் லெமூரியாக் கண்டம் குறித்து ஒரு நூலை வெளியிட்டார். இதில், இந்திய பெருங்கடல் தீவுப் பகுதிகளில், கடலில் மூழ்கிய நிலப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் உலக அளவில் நாகரீகத்தின் முன்னோடியாக இருந்தனர் என்ற குறிப்பை முன்வைத்தார்.

இது ஒரு புறம் இருக்க, சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் 1917ம் ஆண்டு மடகாஸ்கர், ஆஸ்திரேலியா, தமிழ்நாடு எல்லை பகுதியில் வெறும் 49 நகரங்கள் மட்டும் கடலில் மூழ்கியிருந்தது என அறிவியல் தன்மையற்ற அளவில் பதிவிட்டிருந்தார். அதுபோல், சுமதி ராமசாமி என்பவர் 1990ம் ஆண்டில் லெமூரியாக் கோட்பாட்டை மறுத்து, லெமூரியாக் காலநிலையின் 150 வருடம் குறித்து நூல் வெளியிட்டார். இவர்களின் இதுபோன்ற கருத்தியல் காரணங்களால், குமரிக்கண்டம் என்பது இருந்ததா என்ற கேள்வி பலரிடம் எழுந்தது. ஆனால், லெமூரியாக் கண்டம் குறித்த இவர்களது ஆய்வுகள் மேலோட்டமாக உருவாக்கியதே தவிர, கடலில் இறங்கி ஆய்வு செய்தது இல்லை. அதனால், லெமூரியாவைக் குறுகிய பகுதிகளாக, குறுகிய கால ஆண்டுகளோடு ஒப்பிடுவது சரியான ஆதாரமாகவும், சரியான பதிவாகவும் இருக்காது. அதன் காரணமாகவே, லெமூரியாக் கண்டம் எனப்படும் குமரிக்கண்டத்தை பற்றிய சரியான ஆய்வுக்கு கடலில் இறங்கி ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தின் கன்னியாகுமரியில் கடந்த 2007ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக கடலில் இறங்கி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கன்னியாகுமரி முதல் மடகாஸ்கர் வரையிலான இந்த ஆய்வில் 72 கடல்சார் துறையிடம் தொடர்பு கொண்டு, ஆழ் கடல் மீனவர்கள் உதவியுடன், நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு மேற்கொண்டதில், கன்னியாகுமரி முதல் தென்பகுதியின் 130 கிலோ மீட்டர் தொலைவில் 12 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் வரை நிலப்பரப்புகள் இருப்பது  உறுதி செய்யப்பட்டன. அத்துடன், கிரேக்கர்களால் ‘‘மரிக்கானா’’ என அழைக்கப்படும் துறைமுகமானது, கன்னியாகுமரியில் இருந்து 53 கிலோ மீட்டர் தொலைவில் 44 சதுரக் கிலோ மீட்டர் நீளம், 22 சதுர கிலோ மீட்டர் அகலத்துடன் இருப்பது கண்டறியப்பட்டது. முக்கியமாக, தமிழகத்தின் தென் முனை கடல்ப் பகுதியில் மாலத்தீவு, மொரீசியஸ்,  அந்தமான், காசிமோஸ், லட்சத்தீவு போன்ற தீவுகளில் ஆய்வு செய்ததில், இந்திய பெருங்கடல் பகுதியில் 6 லட்சத்து 50 ஆயிரம் சதுரக் கிலோ மீட்டர்  வரையில் சிறு, சிறு தீவுகள் வெறும் 20 மீட்டர் முதல் 130 மீட்டர் ஆழத்தில் மூழ்கி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கியங்களில் உள்ள குறிப்புகளை அடிப்படையாக கொண்டும் லெமூரியாக் கண்டம் குறித்த தகவல்களை அறிய முடிகிறது. குறிப்பாக, சிலப்பதிகாரம், கலித்தொகை, புறநானூறு, அகநானூறு, மார்க்கண்டேய புராணம், சைவ ஆகமம் போன்றவற்றில் மிகத் தெளிவாக லெமூரியா எனப்படும் குமரிக்கண்டம் குறித்த அரிய தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

இதில், சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் இறக்கும் போது, ‘‘மண்பதை காக்கும் தென்புலம் காவல்’’ என்று சொல்லுவதில் இருந்து, தென் கடலுக்குள் இருக்கும் தீவுகள் குறித்து குறிப்பிட்டுள்ளார். அதனுடன், திருவள்ளுவர் வாழ்ந்த கிமு 31ம் ஆண்டு காலக்கட்டத்தில் லெமூரியாக் கண்டம் நிலப்பகுதியாக இருந்திருப்பதற்கான அடையாளங்கள் வள்ளுவரின் குறளிலும் உள்ளது. அதாவது,

‘‘தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தானென்றாங்கு

ஐப்புலத்தாறு ஒம்பல் தலை’’

என்ற குறளில் தென்புலத்தார் என தமிழகத்தின் தென் திசையில் வாழ்ந்தவர்களையும், அங்கிருந்து வந்த ஏதிலியர்களையும் குறிப்பிடுகிறார். இதிலிருந்து,  லெமூரியா எனப்படும் குமரிக்கண்டம் குறித்த இத்தகைய ஆய்வில் தமிழர்கள் தடம் பதித்துள்ளனர் என்பது அறிய முடிகிறது. குறிப்பாக, லெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த மக்கள் தமிழர்கள் என்பதும் தமிழ் இலக்கியங்கள் மூலம் தெளிவாக அறிய முடிகிறது. அத்துடன், கன்னியாகுமரியில், குமரி என்ற கடல்முனை இருப்பது போன்று, மடகாஸ்கருக்கு அருகில் குமரோஸ் என்ற தீவு உள்ளது. அந்த மக்கள் குமரி என்ற மொழி பேசுகின்றனர். மடகாஸ்கரில் உள்ள பழங்குடியினரிடையே 30 சதவிகிதம் தமிழ் மொழி கலந்துள்ளது. அவர்களது திருமண முறை தமிழர் பண்பாட்டை ஒத்து அமைகிறது. மடகாஸ்கரில் மனக்கரை, சாம்பவன், தென்கரை எனத் தமிழ் மொழியில் ஊர்கள் இன்றுவரை இருந்து வருகின்றன. இங்கு, ஆற்று மணலில் இருந்து தங்கம் பிரிக்கும் முறை, தமிழர்களின் முறையைப் போன்றே உள்ளது. தமிழகத்தில் கடல் பயணத்தில் திறன் கொண்ட திரைமீளர்கள் 1,024 திசை அறிந்து பயணம் செய்யும் திறன் கொண்டவர்கள். இவர்கள், தமிழகத்தில் இருந்து மடகாஸ்கர் பயணம் செய்யும் வகையில் ஆமை வழித்தடம் அமைந்துள்ளது.

இதில், குமரி மாவட்டத்தில் உள்ள ஆழ்கடல் மீனவர்கள் சீசெல்ஸ் என்ற தீவு முதல் லட்சத்தீவு வரை சென்று  மீன் பிடிப்பதால், அவர்கள் மூலம் கடலில் மூழ்கியுள்ள நிலங்கள் பற்றிய ஆய்வில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முக்கியமாக, மனிதர்கள் வாழ்ந்து இருக்கக்கூடிய மூழ்கிய கட்டிடப்பரப்புகள் பல இடங்களில் அடையாளப்படுத்த முடிகிறது. அதனுடன், தமிழகத்தில் இருந்து மடகாஸ்கர் வரையிலான 5 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் செய்த ஆய்வில் கடலில் மூழ்கிய கட்டடங்கள், தமிழகத்தின் அரிக்கம்மேடு பகுதியில் கிடைக்கக்கூடிய செம்பூரான் போன்ற கற்களை கொண்டு கட்டப்பட்டுள்ளது அறிய முடிகிறது. இதேபோன்ற கட்டட அமைப்புகள் சுமேரியா, சிந்து சமவெளி நாகரீகத்திலும் உள்ளன. இவை, இங்கிருந்தே அங்கு சென்றிருக்கும் என்பதற்கான தடயங்களும் லெமூரியா ஆய்வில் அறிய முடிகிறது.

உலகம் முழுவதும் தமிழரின் அடையாளங்கள் பரவி உள்ளது போல், வேறு எந்த அடையாளமும் பரவவில்லை. இதுபோன்ற ஒற்றுமைகளில் இருந்து, லெமூரியா எனப்படும் குமரிக்கண்டத்தில் தமிழர்கள் வாழ்ந்திருப்பார்கள் எனக் கூற முடியும். ஆதலால், தமிழக அரசு தமிழர்களின் சிறப்புகளை உலகிற்கு அறிமுகம் செய்ய குமரிக்கண்டம் குறித்த கடல் ஆய்வை குமரி பெருங்கடலில் தொடர்ந்து செய்ய வேண்டும். இதன் மூலம், தமிழர்களின் நாகரீகம், வணிகம், வீரம், பண்பாடு உள்ளிட்ட தொன்மை வரலாற்றை உலக அரங்கிற்குக் கொண்டு சேர்க்க முடியும் ..... பாலசுப்பிரமணி...  சென்னை.            பொதுவாக கட் காப்பி ஷேர்  செய்வதால் கட்டுரை முழுமைப்படுத்தாமல் விழிப்புணர்வுக்காக கொடுத்துள்ளேன்