குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஈழத்தமிழ் நோக்கு நிலையிலிருந்து இந்தியாவை அணுகுவது...கட்டுரை: நிலாந்தன்

02.02.தி.ஆ 2053 ....14.02.2022  அதுதேவையில்லை இது தேவையில்லை. அதை தமது நோக்கு நிலையிலிருந்து கையாள்வதே பொருத் தமாக இருக்கும்.அதற்குப் பெயர்தான் இராயதந்திரம்.ஒன்றில் இந்தியாவை நேசிக்கிறார்கள், அல்லது இந்தியாவை வெறுக்கிறார்கள். இரண்டுக்குமிடையே இந்தியாவை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும் என்ற நோக்குநிலை ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் தொலைக்காட்சி  நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கயேந்திரன் “நாங்களும் இந்தியாவின் தலையீட்டைக் கோரித்தான் நிற்கிறோம்” என்று கூறுகிறார்.

அவருடைய கட்சி கிட்டு பூங்காவில் ஒழுங்குபடுத்திய ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட பிரகடனத்திலும் இந்தியா ஒரு நட்பு சக்தி என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்தியத் தலையீட்டைக் கேட்பது என்று முடிவெடுத்தால் ஆறு கட்சிகளின் கூட்டு அழைத்தபோது அதில் இணைந்து கூட்டுக்கோரிக்கையின் வடிவத்தை மாற்றியிருந்திருக்கலாந்தானே? மேலும், 13க்கு எதிராக அக்கட்சி மக்கள் மத்தியில் தெரிவிக்கும் கருத்துக்களை தொகுத்துப் பார்த்தால் அக்கட்சி உண்மையாகவே இந்தியாவின் தலையீட்டை கோரி நிற்கின்றதா? என்ற சந்தேகமே எழுகிறது.

எனினும்,கடந்த புதன்கிழமை மீனவர்களின் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அக்கட்சி கொண்டுவர இருந்த ஒத்திவைப்பு பிரேரணையை, கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் வேண்டுகோளை ஏற்று அக்கட்சி கையாண்ட விதம் நல்லவிதமானது( பொசிற்றிவ்) ஆனது.

13ஆவது திருத்தத்தை எதிர்ப்பது என்பது அதன் தர்க்கபூர்வ விளைவாக இந்தியாவுக்கு எதிராகத்தான் அமையும். ஏனென்றால் கடந்த 34 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா 13வது திருத்தத்தை ஒரு வாய்ப்பாடு போல சொல்லி வருகிறது.

எனவே தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு தீர்வை மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்தியா முன்வை க்கும்போது அதை எதிர்ப்பவர்கள் தவிர்க்கவியலாதபடி இந்தியாவையும் எதிர்க்க வேண்டித்தான் இருக்கும்.

ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால் அதற்காக இந்தியா ஒரு பகை நாடா என்பதுதான். கிட்டு பூங்கா பிரகடனம் இந்தியாவை ஒரு நட்பு நாடாக சித்தரிக்கிறது.

ஆனால். ஈழத்தமிழர்கள் இந்தியாவை நட்பு நாடாக பார்த்து அதை நம்பவும் தேவையில்லை, பகை நாடாகப் பார்த்து அதை எதிர்க்கவும் தேவையில்லை. அதை தமது நோக்கு நிலையிலிருந்து கையாள்வதே பொருத்தமாக இருக்கும்.அதற்குப் பெயர்தான் இராயதந்திரம்.

இந்தியாவை ஒரு நட்பு நாடாக நம்பினால் அதன் விளைவாக இந்தியாவின் மீது நம்பிக்கைகளை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். அதுதான் முதலாம் கட்ட ஈழப் போரின்போது நடந்தது.

ஆனால் இந்தியா ஒரு பேரரசு. அது ஈழத் தமிழர்களை அதன் பேரரசு நலன்களின் அடிப்படையில்தான் அணுகும். எனவே இதுவிடயத்தில் நட்பு-பகை என்பதெல்லாம் கிடையாது. நலன்சார் பேரம்தான் உண்டு.

இந்தியாவை நட்பு -பகை என்ற இருமைகளுக்கு அப்பால் கையாளப்பட வேண்டிய ஒரு பிராந்திய பேரரசு என்ற அடிப்படையில் பொருத்தமான ஒரு வியூகத்தை வகுப்பது தான் சரியாக இருக்கும். ஈழத்தமிழர்கள் மத்தியில் இந்தியாவை குறித்து ஒரு வித கறுப்பு-வெள்ளை சிந்தனைதான் உண்டு.

ஒன்றில் இந்தியாவை நேசிக்கிறார்கள், அல்லது இந்தியாவை வெறுக்கிறார்கள். இரண்டுக்குமிடையே இந்தியாவை புத்திசாலித்தனமாக கையாள வேண்டும் என்ற நோக்குநிலை ஈழத்தமிழர்கள் மத்தியில் மிகவும் பலவீனமாகவே காணப்படுகிறது.

ஈழத்தமிழர்கள் இந்தியாவை ஒரு நட்பு நாடாக பார்க்கும் நிலைமை எங்கிருந்து உற்பத்தியாகிறது?அது தமிழகத்தை மையமாக வைத்து சிந்திக்கும்போதுதான் உற்பத்தியாகிறது.கடலால் பிரிக்கப்பட்டிருக்கும் தமிழகம் மொழியால் இனத்தால் பண்பாட்டால் ஈழத் தமிழர்களிடமிருந்து பிரிக்க முடியாத ஒரு நிலத்துண்டு.எனவே தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையில் உள்ள இந்த பிணைப்பை-(கனெக்டிவிற்றியை)-வைத்துக் கொண்டு இந்தியாவை ஈழத்தமிழர்கள் பார்க்கிறார்கள்.

தமிழகம் எனப்படுவது கூட ஒற்றைப் பரிமாணத்தில் விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு சனத்தொகையோ, நிலப்பரப்போ அல்ல. அது பல அடுக்குகளைக் கொண்டது. அங்கே ஆளுங்கட்சி உண்டு. ஏனைய கட்சிகள் உண்டு.

ஈழ அபிமானிகளாகக் காணப்படும் கட்சிகள் உண்டு. ஈழ உணர்வாளர்கள் உண்டு. இவை தவிர தமிழகத்தின் பொதுசனம் உண்டு. இதில் தமிழகத்தின் ஆளும் கட்சி இந்திய சமசுடி கட்டமைப்புக்கு கட்டுப்பட்டது. அது இந்திய நடுவண் அரசின் வெளியுறவுக் கொள்கையை மீறி ஈழத்தமிழர்களுக்காக முடிவெடுப்பதில் வரையறைகள் இருக்கும்.

ஏனைய தமிழகக்கட்சிகளும் கூட ஈழத்தமிழர்களின் விவகாரத்தை தமது தேர்தல் அரசியல் நோக்கு நிலையிலிருந்தே அணுகும். இதுவும் ஈழத்தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

ஆனால் ஈழத்தமிழர்களின் நெருங்கிய நண்பர்களாக காணப்படும் கட்சிகளும் அரசியல்வாதிகளும் உணர்வாளர்களும் தேர்தல் மையநோக்கு நிலைகளுக்கு அப்பால் ஈழத்தமிழர்களுக்காக அர்ப்பணிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இது ஒரு சிறு தொகை. இது தவிர தமிழகப் பொதுசனங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஏதும் நடந்தால் கொதித்து எழுவார்கள்.ஆனால் அக்கொதிப்பை மடைமாற்றவும் திசைதிருப்பவும் தலைவர்களால் முடியும். இதுதான் தமிழகம்.

எனவே தமிழகத்தை தட்டையாக ஒற்றைப் பரிமாணத்தில் விளங்கிக் கொள்ளக்கூடாது. தமிழகத்துக்கும் ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான இனமொழி உறவை அடிப்படையாக வைத்து இந்தியா ஈழத்தமிழர்களின் விவகாரத்தில் தலையிடுகிறது என்ற ஒரே காரணத்துக்காக ஈழத் தமிழர்களின் விவகாரத்தை இந்தியா தமிழகத்துக்கு ஊடாகத்தான் பார்க்கும் என்றோ,அல்லது இனமான உணர்வுக்கூடாகத்தான் அணுகும் என்றோ எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. ஒரு பேரரசின் வெளியுறவுக் கொள்கையை அவ்வாறு விளங்கிக் கொள்ளவும் கூடாது.

ஒரு பேரரசின் வெளியுறவுக் கொள்கை அதன் அரசியல் பொருளாதார ராணுவ நலன்களின் அடிப்படை யில்தான் வடிவமைக்கப்பட்டிருக்கும். அயல் நாடுகளுடனான உறவும் அவ்வாறு தான் அமையும். புதுடில்லிக்கு கொழும்புக்கும் இடையிலான உறவும் அப்படித்தான்.

எனவே அரசுக்கும் அரசுக்கும் இடையிலான கட்டமைப்புசார்;நலன்சார் உறவுகளின் அடிப்படையில்தான் இந்தியா இலங்கையை அணுகும். அதிலும்கூட கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தைத்தான் அவ்வாறு அணுகும்.கொழும்பில் இருக்கும் அரசாங்கத்தின் நலளை பகைத்துக்கொண்டு இந்தியா ஈழத்தமிழர்களை முழுமையாக நெருங்கிவராது.

கொழும்பில் இருக்கும் அரசாங்கம் பணிய மறுக்கும்பொழுது ஈழத்தமிழர்களை ஒரு கருவியாகக் கையாண்டு அரசாங்கத்தின் மீது இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்கும். இவ்வாறு ஈழத் தமிழர்களை ஒரு கருவியாக பயன்படுத்த விளையும்பொழுது அதில் ஈழத் தமிழர்களுக்கும் தமிழகத்திற்கும் இடையிலான இனரீதியான,மொழி ரீதியான,பண்பாட்டு ரீதியிலான இணைப்புகளை இந்திய மத்திய அரசு தனது புவிசார் அரசியல் நோக்கு நிலையிலிருந்து அணுகும்.

நிச்சயமாக ஈழத்தமிழர்களின் தொடர்பிலான (செண்டிமெண்டலான) நோக்கு நிலைகளில் இருந்தோ அல்லது தமிழகத்தின் இன உணர்வு நோக்கி நிலைகளிலிருந்தோ அணுகாது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்திய-ஈழத்தமிழ் உறவை இந்த அடிப்படையில்தான் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஆனால் ஈழத் தமிழர்களில் கணிசமானவர்கள் தமிழகத்துக்கும் தமக்கும் இடையிலான இனம், மொழி, பண்பாடு சார்ந்த நெருக்கத்துக்கூடாக இந்திய மத்தியஅரசை விளங்கிக்கொள்ள முற்படுகிறார்கள். இது தவறு.

இந்த நிலையில் தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் இடையிலான(தொடர்பை) கனெக்ரிவிட்டியை ) இந்திய நடுவண் அரசு அதன் பேரரசு நோக்குநிலையிலிருந்து பயன்படுத்துகிறது என்பது ஒரு கொடுமையான நடைமுறை! இடைச்செருகலாக ஈழததமிழர்களுக்கு பாதிப்பானதும் அந்த நடைமுறைதான் (யதார்த்தம்.)

னென்றால் அரசுகள் எப்பொழுதும் அப்படித்தான் நடந்து கொள்ளும்.

இது மேற்கத்தைய அரசுகளுக்கும் பொருந்தும். சீனாவுக்கும் பொருந்தும். எனவே ஈழத் தமிழர்கள் இந்தியாவை சென்டிமென்டலாக அணுகும் அந்த நோக்கு நிலையில் இருந்து விடுபட வேண்டும்.

மாறாக புத்தி பூர்வமாக அணுக வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் இந்தியாவுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற தர்க்கத்தை பலமாக முன்வைக்கவேண்டும்.

ஈழத்தமிழர்கள் மிக நீண்ட கடல் எல்லைகளின் சொந்தக்காரர்கள்.தமிழ்க் கடலை கட்டுப்படுத்தும் எந்த ஒரு நாடும் இந்தியாவின் தெற்கு மூலையை கட்டுப்படுத்தும். எனவே தமிழ்க் கடலை இழந்தால் இந்தியா தனது தெற்கு வாசலின் பாதுகாப்பையும் இழக்க நேரிடும். இந்த தர்க்கத்தை ஈழத்தமிழர்கள் முன்வைக்கலாம். இந்தியாவை நோக்கி ஈழத்தமிழர்கள் முன்வைக்கக்கூடிய கோரிக்கைகளும் அந்த அடிப்படையில் அமைவது நல்லது.

ஒரு மக்கள் கூட்டம் வெளிநாடுகளை நோக்கி அதன் கோரிக்கைகளை முன்வைக்கும்போது வெளிநாடுகள் ஏற்றுக்கொள்ளும் என்று பார்த்து அந்தக் கோரிக்கைகளை வடிவமைக்கத் தேவையில்லை.

மாறாக தங்களுக்கு எது தேவை என்ற அடிப்படையில் உச்சமான கோரிக்கைகளை முன் வைக்கலாம். பின்னர் அதற்காக உழைக்க வேண்டும். இந்தியாவை நோக்கி ஒரு கூட்டுக் கோரிக்கையை முன்வைத்திருக்கும் கட்சிகள் இந்த விடயத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். இடைச்செருகலாக இது உண்மையான  ஈழத்தமிழர்களுக்கு  தேவையான நிலைப்பாடு

இந்த அடிப்படையில் 13வது திருத்தம் என்ற கோரிக்கையை ஈழத்தமிழர்கள் முன்னிலைப்படுத்த தேவையில்லை. அதேசமயம் 13ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு இந்தியா தொடர்பான தனது அணுகுமுறைகளில் ஒரு குழப்பமான படத்தை வெளிக்காட்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் இதில் ஒரு தெளிவான நிலைப்பாட்டுக்கு வரவேண்டும்.

அக்கட்சியின் தலைவர்கள் தாங்கள் இந்தியாவின் புவிசார் அரசியல் நலன்களுக்கு எதிர் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் 13 ஐ அவர்கள் எதிர்க்கும் விதம் அக்கட்சியிடம் இந்தியாவை ஊக்கப்படுத்தவேண்டும் (என்கேச்) பண்ணுவதற்குரிய பொருத்தமான வெளியுறவுத் தரிசனம் ஏதும் உண்டா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

இந்தியா ஒரு பிராந்திய பேரரசு. ஈழத்தமிழர்கள் அரசற்ற ஓரினம். இனப்படுகொலை,புலப்பெயர்ச்சி போன்றவற்றால் மெலிந்து போய் இருக்கும் ஒரு மக்கள் கூட்டம். ஈழத்தமிழர்கள் மத்தியில் மகப்பேற்று விகிதமும் கவலை தரும் வகையில் குறைந்துவருகிறது.

சில ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் இலங்கைத் தீவின் இரண்டாவது சிறிய தேசிய இனமாக மாறக்கூடிய ஆபத்து உண்டு என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

எனவே ஈழத்தமிழர்கள் குறுகிய காலத்துக்குள் தமது அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு ஒரு வழி வரைபடத்தை தயாரிக்க வேண்டும். ஓர் அரசற்ற இனத்தைப் பொறுத்தவரை அல்லது சிறிய தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரை பக்கத்துப் பேரரசுதான் இறுதியிலும் இறுதியாக தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதனை உலகின் நவீன வரலாறு உணர்த்துகிறது.

இப்பொழுது கொதிநிலையில் இருக்கும் உக்ரேன் விவகாரத்திலும் இதுதான் நடக்கிறது.இரசியா கிரிமியாவை ஆக்கிரமித்தது இந்த அடிப்படையில்தான். தீபெத்தில்,பலுசிசுதானில், காசுமீரில் போராடும் மக்களுக்கு மீட்சி கிடைக்காமல் இருப்பதும் அந்த அடிப்படையில்தான்.

பங்களாதேச் தனிநாடு ஆகியதும் அந்த அடிப்படையில்தான். பின்லாந்து மிக நுட்பமான ஒரு வெளியுறவுக்கொள்கையை வடிவமைக்க வேண்டி வந்ததும் அந்த அடிப்படையில்தான்.கிழக்குத் திமோரில் பொதுமக்கள் வாக்கெடுப்பின் முடிவுகளை இறுதியிலும் இறுதியாக நடைமுறைப்படுத்தியது பக்கத்தில் இருக்கும் பலமான அரசாகிய ஓசுரேலியாதான்.

எனவே சிறிய தேசிய இனங்களின் போராட்டங்களைப் பொறுத்தவரை இறுதி முடிவை தீர்மானிப்பது அருகிலுள்ள பெரிய அரசுகள்தான் என்பதே உலகளாவிய அனுபவம் ஆகும். இந்த அனுபவங்களின் அடிப்படையில் ஈழத்தமிழர்கள் பிராந்திய அரசியலை கெட்டித்தனமாக அணுக வேண்டும்.இந்தியாவின் நலன்களுக்கும் ஈழத் தமிழ் நலன்களுக்கும் இடையிலான பொதுப்புள்ளிகளைக் கண்டுபிடித்து பேரம் பேச வேண்டும்.

கட்டுரை: நிலாந்தன்