முதலில் தமிழர்களிடம் ஆண்டு என்றொரு காலக்கணிப்பு முறை இருந்ததா? எனப் பார்ப்போம். ‘யாண்டு’ என்ற பழந்தமிழ்ச் சொல்லே மருவி ஆண்டு என வழங்கலாயிற்று. யாண்டு என்ற சொல்லானது தொல்காப்பியத்தின் முதற்பொருளான நிலம், பொழுது ஆகிய இரண்டையும் குறிக்கும். ‘யாண்டு’ என்ற சொல் இடம்பெற்ற சில பாடல்களைப் பார்ப்போம்.
“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.” (குறள் 4)
இப்போது காலத்தைத் தெளிவாகக் குறிக்கும் யாண்டு என்ற சொல் இடம்பெற்ற சங்ககாலப் பாடலைப் பார்ப்போம்.
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றிற் புணர்ச்சி போலப்’ (குறு:57:1)
இப் பாடலில் ‘யாண்டு கழிந்தன்ன’ என்பது ‘அக்காலம் பல யாண்டுகள் கடந்தாற் போன்ற’ என்ற பொருளில் இடம்பெறுகின்றது. இந்த ஆண்டு தற்போதைய நாட்காட்டி ஆண்டு போன்றது (365.2425 days) என நான் கூறவரவில்லை, ஏனெனில் தற்போதைய நாட்காட்டி ஆண்டு (Gregorian calendar) நடைமுறைக்கு வந்தது சில நூற்றாண்டுகளிற்கு முன்புதான்.
ஏதோ ஒரு வகையான காலப்பகுதியினை யாண்டு எனச் சங்க காலத் தமிழர்கள் அழைத்துள்ளனர் என்பதுதான் இங்கு தெளிவாகின்றது. எனவே தமிழர்களிற்கு என ஒரு ஆண்டுக் கணிப்பு இருந்திருந்திருப்பின், அந்த ஆண்டிற்கு ஒரு தொடக்கமும் இருந்திருக்கும்.
யாண்டின் தொடக்கமாக தை மாதமே இருந்துள்ளது என்பதற்கு நேரடித் தரவுகள் சங்ககாலப் பாடல்களில் காணமுடியவில்லை என்றபோதும், அதற்கான இரு சான்றுகளை உய்த்துணரலாம்.
முதலாவதாக : தை மாதமளவிற்கு வேறு எந்தவொரு மாதமும் சங்ககாலப் பாடல்களில் சிறப்புப்படுத்தப்படவில்லை. (தை மாதச் சிறப்பின் 10% அளவிற்கு கூட வேறு எந்த மாதமும் சிறப்புப் பெறவில்லை). “தைத்திங்கள் தண்கயம் படியும்” (நற்றிணை 80) , “தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” (குறுந்தொகை 196) என்பன உட்படப் பல சங்க காலப்பாடல்கள் தையினைச் சிறப்பித்துக் கூறுகின்றன.
இரண்டாவதாக : தை என்ற சொல்லிற்குச் சேர்த்தல் என்ற பொருளும் உண்டு (இரண்டு துணிகளை இணைத்து தைத்தல்). இங்கு ‘தை’ என்பது இரண்டு யாண்டுகளை (காலப்பகுதிகளை) இணைக்கின்றது. இவ்விரு காரணங்களையும் அடிப்படையாகக் கொண்டே தை மாதமே ஆண்டின் தொடக்கமாகவிருந்திருக்கும் என உய்த்தறியலாம்.
இதனைவிட, தை மாதமே ஆண்டின் தொடக்கமாகக் கொள்ள இயற்கைசார்ந்த இரு காரணங்களும் உண்டு. அவையாவன வருமாறு.
அறுவடைக்காலம் : செல்வ வளம்பொருந்திய காலமே புத்தாண்டாகக் கொண்டாடப் பொருத்தமாகவிருந்திருக்க முடியும். (இன்று பலர் உழவுத்தொழிலில் தங்கியிராத நிலையில், இதன் எச்சமாகவே பொங்கல் மிகைப்பணம் (Bonus) அரசால் வழங்கப்படுகின்றது. அன்று அந்த வாய்ப்பு இல்லாமையால், அறுவடைக்காலமே பொருத்தமானதாகும்).
காலநிலை: தை மாதத்தின் தண்மை (குளிர்மை) பல பாடல்களில் குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறான ஒரு மகிழ்ச்சியான காலப்பகுதியே யாண்டின் தொடக்கமாகக் கொள்ளப் பொருத்தமானதாகும். (மாறாக தாயகத்தில் சித்திரையில் கொளுத்தும் வெயிலே சுட்டெரிக்கும் காலப்பகுதி பொருத்தமானதாகக் காணப்படமாட்டாது.)
மேலும் எளிய மக்களின் வழக்காற்று மொழிகளிலும் கூட பழைய வரலாற்று எச்சங்களைக் காணலாம். அந்த வகையில், “தை பிறந்தால் வழி பிறக்கும்” , “தீய்ந்த தீபாவளி வந்தாலென்ன? காய்ந்த கார்த்திகை வந்தாலென்ன? மகா ராசன் பொங்கல் வரவேண்டும்” என்பன போன்ற சொல்லடைகளும் தை மாதத்தின் முதன்மையினைக் காட்டுகின்றன.
அண்மையில் இராமநாதபுரம் கீழக்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் சில நூற்றாண்டுகளிற்கு முன்னர்வரைத் தையே புத்தாண்டாகக் கருதப்பட்டதனைக் காட்டுகின்றது. வரலாற்று தொல்லியல் ஆய்வாளர் விசயராமு 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை தை மாதமே தமிழ் ஆண்டின் முதல் மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கலாம் என்பதற்குச் சான்றாக இந்த பழங்கால கல்வெட்டு உள்ளது என்கின்றார் (சான்று – தினத்தந்தி 03-01-2019).
சித்திரை மாதக் கணிப்பீடு :
சித்திரைப் புத்தாண்டு கணிப்பீட்டு முறையானது சாலிவாகணன் என்ற அரசனால் (சிலர் கனிஷ்கன் என்கின்றனர்) கி.பி 78-ம் ஆண்டளவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது எனக் கூறப்படுகிறது. இவ்வாறு அக் காலத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்ட போதும், மக்களிடம் அந்தப் புத்தாண்டு வரவேற்புப் பெற்றிருக்கவில்லை என்பதனையே மேற்கூறிய கல்வெட்டுச் சான்றும், நாம் ஏற்கனவே பார்த்த வழக்காற்றுச் சான்றுகளும் காட்டுகின்றன.
கடந்த இரு நூற்றாண்டுகளிலேயே மதப் புராணங்கள் மூலம் சித்திரை, புத்தாண்டாக எளிய மக்களிடம் திணிக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கூறப்பட்ட புராணக்கதை வேடிக்கையானது. அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392-ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.
ஒருமுறை நாரதமுனிவர், ‘கடவுள்’ கிருச்ணனை “நீங்கள் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒருபெண்ணையாவது தரக்கூடாதா?” என்று கேட்டாராம். அதற்குக் கிருச்ணன், “என்னுடன் இல்லாமல் வீட்டில் தனியாய் இருக்கும் பெண்ணை நீ எடுத்துக்கொள்” என்றாராம். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கிருஷ்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கிருச்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மோகம் கொண்டு அவரை நோக்கி “நான் உங்களிடமே பெண்ணாக இருந்து உடலுறவு கொள்ள விரும்புகிறேன்” என்றார்.
கிருச்ணன் நாரதரை “யமுனையில் குளித்தால் பெண்ணாய் மாறுவாய்” எனச் சொல்ல, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினாராம். பின் ‘கடவுள்’ கிருச்ணனுடன் அறுபது வருடம் உடலுறவு கொண்டு, அறுபது மகன்களைப் பெற்றார். அவர்கள் பிரபவ தொடங்கி அட்சய முடிய என பெயர் பெற்றார்கள். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வருடமாகும் வரம் பெற்றார்கள். இதுதான் அந்தப்புராணக் கதை. இதில் மேலும் வேடிக்கை என்னவென்றால் இவ் அறுபது ஆண்டுகளில் 15 ஆண்டுகள் சூத்திர ஆண்டுகளாம் (ஆண்டுகளில் கூட வர்ணப் பிரிவினை).
வேறு சிலர் வியாழனை அடிப்படையாகக்கொண்ட 60 ஆண்டுக் கணிப்பீட்டு முறையினையே, பிற்காலத்தில் புராணம் ஆக்கிவிட்டார்கள் எனக் கூறுவதுமுண்டு. இராசியினை அடிப்படையாகக் கொண்டு சோதிட விளக்கம் கூறுவோரும் உண்டு.
இன்னொரு சாரார் தொல்காப்பியப் பாடல் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு ஆவணியினை புத்தாண்டாகக் கருதுவோருமுண்டு (இன்றும் சிங்க மாதமே (ஆவணி) மலையாளப் புத்தாண்டு : கொல்லமாண்டு). இத்தகைய குழப்பங்களைத் தீர்ப்பதற்காக 1935 -ம் ஆண்டில் தமிழறிஞர்கள் இணைந்து ஒரு தீர்வு கண்டிருந்தார்கள்.
குழப்பத்திற்கான அறிஞர்களின் தீர்வு :
இக் குழப்பத்திற்கு தீர்வு காணும்பொருட்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1935 -இல் மறைமலை அடிகளார் தலைமையில் பல அறிஞர்கள் ஒன்றுகூடி தை முதலே தமிழ்ப் புத்தாண்டு என முடிவு செய்திருந்தனர். பின்பு அதேபோன்று திருவள்ளுவரின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்டு ஆங்கில ஆண்டுடன் 31 ஆண்டுகளைக்கூட்டி திருவள்ளுவர் ஆண்டு தமிழாண்டாகக் கொள்வது எனவும் அறிவித்திருந்தார்கள். இவ்வாறு முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் சிலர் வருமாறு.
தமிழ்க்கடல் மறைமலை அடிகள்,
தமிழ்த் தென்றல் திரு.வி. கலியாணசுந்தரனார்,
தமிழ்க்காவலர் கா. சுப்பிரமணியபிள்ளை,
சைவப் பெரியார் சச்சிதானந்தம் பிள்ளை,
நாவலர் நா.மு. வேங்கடசாமி நாட்டார்,
நாவலர் சோமசுந்தர பாரதியார்,
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்,
பேராசிரியர் சா. நமச்சிவாயனார்,
உ.வே. சாமிநாத ஐயர்
தமிழில் புலமையும் காதலும் கொண்ட இந்த தமிழறிஞர்கள் சமய வேறுபாடுகளையும் கொள்கை மாறுபாடுகளையும் மறந்துவிட்டு; ஆரியக் கலப்பையும் வடமொழிக் குறுக்கீட்டையும் உதறிவிட்டுத் தமிழ் ஒன்றையே முதன்மைப்படுத்தி முறையான ஆய்வியல் பார்வையோடு ‘தை முதலே தமிழ்ப் புத்தாண்டு’ எனும் அறிவிப்பை வெளியிட்டனர்.
இங்கு டாக்டர் மு.வ கூறுகின்றார் “முற் காலத்தில் வருடப் பிறப்பு, சித்திரை முதல் நாளாக இருந்ததில்லை. தை முதல்நாள் தான் வருடப் பிறப்பாகப் பெரியோர்கள் கொண்டாடினார்கள்” ( சான்று – 1988 கோலாலம்பூர் பொங்கல் மலர், மு.வ. கட்டுரை மீள் பதிப்பு ). இறையன்பர்களான மறைமலை அடிகள், திரு. விக, உ.வே.சா போன்றோர் முதல் இறை மறுப்பாளரான பெரியார் ஈ.வெ.ரா வரை தமிழின் பெயரில் ஒன்றுபட்ட வேளை அது.
தமிழ்நாடு அரசு, இதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசு, இதனை ஏற்றுக் கொண்டு 1972 முதல் அரசுப் பயன்பாட்டிலும் ஆவணங்களிலும் திருவள்ளுவர் ஆண்டினை நடைமுறைப்படுத்தி வருகிறது. இருந்தபோதிலும், 2006-2011 இடைப்பட்ட கலைஞர் ஆட்சியிலேயே ‘தை முதல் தமிழ்ப் புத்தாண்டு’ ஆக அதிகாரபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா ஆட்சியில் தமிழர்கள் தமது புத்தாண்டு மரபினைத் தொலைத்துவிட்டார்கள். அக் காலப்பகுதியில் ஈழத்திலும் தைமுதலே புத்தாண்டாக விடுதலைப்புலிகளால் தமது அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. இங்கும் வரலாற்று இன்னலாக புலிகளின் அழிவிற்குப் பிறகு அந்த முயற்சி தொடரப்படவில்லை.
அறிவியல் பொருத்தப்பாடு :
அரசியல், தமிழறிஞர்களின் அறிவிப்பு என்பன எல்லாம் போகட்டும், அறிவியல்ரீதியாக எந்தப் புத்தாண்டு பொருத்தம் எனப் பார்ப்போமா!
முதலாவதாக திருவள்ளுவர் ஆண்டானது எண்களில் வருவதனால் சிறப்பானது, மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீடானது ஒரே பெயர்களில் 60 ஆண்டுகளிற்கொரு முறை மறுபடியும் மீள வருவதனால் குழப்பகரமானவை. எடுத்துக் காட்டாக சுக்கில ஆண்டு என்றால், எந்தச் சுக்கில ஆண்டைக் கருதுவீர்கள். மேலும் இப்பெயர்கள் எதுவுமே தமிழில் இல்லாதிருப்பதுடன் அவற்றின் கருத்துக்கள் ஆபாசமானவை அல்லது எதிர்மறையானவை. (சுக்கில-விந்து, துன்மதி-கெட்டபுத்தி).
இரண்டாவதாக ஒருவரின் (திருவள்ளுவரின்) வாழ்க்கைக் காலத்தினை அடிப்படையாகக்கொண்ட கணிப்பீடானது அனைத்துலக நடைமுறைகளுடன் ஒத்துப்போகின்றது. மறுபுறத்தில் சித்திரைக் கணிப்பீட்டிற்கான நாம் ஏற்கனவே பார்த்த புராணக்கதையினை மதநம்பிக்கையாளரில் பெரும்பாலானோரே நம்பமாட்டார்கள். அதேபோன்று சித்திரைக்கணிப்பீட்டிற்குச் சொல்லப்படும் இராசிக்கணிப்பும் அறிவியலிற்கு முரணான புவிமையக் கொள்கையினை அடிப்படையாகக்கொண்டது.
படிக்க :
இங்கிலாந்துத் தேர்தலில் தடம் பதித்த இந்துத்துவா : வி.இ.குகநாதன்
சுற்றுலாப் பயணிகளை கவரும் ஸ்டாலின் பிறந்த வீடு ! | கலையரசன்
மூன்றாவதாக, தைக் கொண்டாட்டமானது சங்க இலக்கியங்களினடிப்படையில் வரலாற்றுத் தொன்மையானதாகக் காணப்பட, மறபுறத்தில் சித்திரை ஆண்டுப் பிறப்பானது இடைக்காலத்தில் வெளியாரின் திணிப்பால் உள்நுழைக்கப்பட்டதாகக் காணப்படுகிறது.
நான்காவதாக தைத்திருநாளானது மதசார்பற்றதாகக் காணப்படுவதால் எல்லாத் தமிழரும் கொண்டாடக்கூடியதாகவிருக்க, மறுபுறத்தில் சித்திரையானது இந்துக்களிற்கு மட்டுமே அதுவும் பார்ப்பன ஆதிக்கத்தினை ஏற்றுக்கொண்டவரிற்கே பொருத்தமானதாகக் காணப்படுகின்றது.
இறுதியாக தைத்திருநாளானது தமிழரின் வாழ்க்கையுடன் இணைந்தும், உழவுத்தொழிலுடன் தொடர்பானதாகவும் காணப்படுகிறது.
முடிவுரை:
இதுகாறும் இலக்கியச் சான்றுகள், மக்களின் வழக்காற்றுச் சான்றுகள், கல்வெட்டுச் சான்று, அறிஞர்களின் முடிவு, அறிவியற் பொருத்தப்பாடு என்பனவற்றை அடிப்படையாகக் கொண்டு தை முதலே தமிழ்ப் புத்தாண்டு எனப் பார்த்தோம்.
யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், கிரிகேரியன் நாட்காட்டி (Gregorian calendar) சனவரி 15 ம் திகதியினைக் காட்டும், அந்த நாளே திருவள்ளுவர் ஆண்டு 2051 (2020+31) ஆகும் நாளன்றே (தை முதலே) தமிழ்ப் புத்தாண்டாகும்.
முடிவாக தைத்திருநாள், தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு (தை) என்பன அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த ஆயிரமாயிரமாண்டு தமிழர் மத சார்பற்ற பண்பாட்டு நிகழ்வுகளே. பாவேந்தரின் பாடலுடன் இக் கட்டுரையினை முடிப்பதே சிறப்பானதாக அமையும்.
“நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் , கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!”
-பாவேந்தர் பாரதிதாசன்
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வி.இ. குகநாதன்
( வி. இ. குகநாதன் ஐயாவிற்கு நன்றிகள்)