குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

நீறுபூத்த-நெருப்பாக-உருவெடுத்த-அரசியல்-மோதல்!-இராயபக்சவினரின்-வரலாற்றை-மாற்றி-எழுதிய-சுசில்-

14.01.2022....மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் காரணமாக வன்செயல்களின் பின்னர் கடந்த 1991 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத்தேர் தல்கள் நடத்தப்பட்டன. அன்றைய சனாதிபதி இரணசிங்க பிரேமதாச வின் அரசாங்கம் யே.வி.பியின் கிளர்ச்சியை அடக்கிய விதத்தை எதிர்த்ததால், மக்கள் தமக்கு வாக்களிப் பார்கள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி எண்ணியது.

1991 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சந்திரிக்கா தலைமையிலான வெகுயன சுதந்திர முன்னணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியை சந்தித்தது. நீல நிற அதிகார கோட்டைகள் பலத்தை இழந்த போது, சிறிலங்கா சுதந்திரக் கட்சி கோட்டே மாநகர சபையை மாத்திரம் கைப்பற்றியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டையான கொழும்பு மாவட்டத்தின் கோட்டே மாநகர சபையை சிறிலங்கா சுதந்திரக் கட்சி கைப்பற்றியமை பிரேமதாசவின் அரசாங்கத்தை அதிர்ச்சிக்கு உள்ளாகியது. கோட்டே மாநகர சபையின் மேயராக சந்திர சில்வா பதவி வந்தார். அவர் ஒரு சட்டத்தரணி, கோட்டே மாநகர சபைக்கு போட்டியிட்ட மற்றுமொரு சட்டத்தரணியான சுசில் பிரேமசயந்த பிரதி மேயரானார்.

1991 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு பின்னர், நீறுபூத்த நெருப்பாக இருந்த பண்டாரநாயக்க குடும்பத்தின் மோதல்கள் உக்கிரமடைய ஆரம்பித்தது. சந்திரிக்காவை மீண்டும்சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ப்பதை அனுர பண்டாரநாயக்க அணியினர் வெளிப்படையாக எதிர்த்தனர். இதன் காரணமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் சந்திரிக்கா அணி, அனுர அணி என இரண்டு அணிகள் உருவாகின.

கோட்டே மாநகர சபையிலும் இரண்டு அணிகள் உருவாகின. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அன்றைய கோட்டே தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான யினதாச நியத்தபால, அனுர அணியில் இருந்தார். இதன் காரணமாக யினதாச நியத்தபாலவின் சகாவான சந்திர சில்வா, அனுர அணிக்கு சார்பாக இருந்தார். சுசில் பிரேமயயந்தவும் நியத்தபாலவின் பிரதிநிதியாக இருந்தாலும் அரசியலை வேறு விதமாக நோக்கினார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமாயின் இடதுசாரி கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற சந்திரிக்காவின் நிலைப்பாட்டுடன் அவர் ஒத்துபோனார். நியத்தபால ஐக்கிய தேசியக் கட்சியின் பழைய உறுப்பினர். சந்திரா சில்வா, நியத்தபாலவின் நம்பிக்கைக்குரியவர். எனினும் சுசில் பிரேமயயந்த தான் சிறந்த சுதந்திரக் கட்சிக்காரன் என எண்ண ஆரம்பித்தார்.

சந்திரிக்கா மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து பொதுயன ஐக்கிய முன்னணியை உருவாக்கும் பணிகளை ஆரம்பித்தார். 1993 ஆம் ஆண்டு சந்திரிக்கா மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் போது, கொழும்பில் அவருக்கு நம்பிக்கையான அணிக்கு வேட்புமனுக்களை வழங்கினார். சந்திரிக்காவின் தெரிவுக்கு அமைய கோட்டே மாநகர சபையின் பிரதி மேயர் சுசில் பிரேமயயந்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார்.

சந்திரிக்கா முதலமைச்சராக தெரிவானார். சுசில் மாகாண சபை உறுப்பினரானார். 1994 ஆம் ஆண்டு அனுர, சந்திரிக்காவுடன் முரண்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த போது நியத்தபாலவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். அப்போது கோட்டை தொகுதியில் சுசிலே சந்திரிக்காவுக்கு பக்கபலமாக இருந்தார். 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா 17 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தை பெற்றுக்கொடுத்து பிரதமராக பதவியேற்றார்.

அவர் முதலமைச்சர் பதவியில் இருந்து விலகிய போது, மொரிசு இராயபக்சவை முதலமைச்சராக நியமித்தார். சுசிலுக்கு மாகாண அமைச்சர் பதவி கிடைத்தது. இதன் பின்னர் 1995 ஆம் ஆண்டு சந்திரிக்கா, சுசிலை மேல் மாகாண முதலமைச்சராக நியமித்தார். அப்போது கொழும்பு மாநகர சபையை அடிப்படையாக கொண்டு மகாத்மா அரசியல் பற்றி பேசும் காலம் உருவானது.

ஐக்கிய தேசியக் கட்சி மகாத்மா அரசியல் அடையாளமாக கரு சயசூரியவை நியமித்தது. 1997 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையை வென்ற கரு, 1999 ஆம் ஆண்டு மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

கரு சயசூரியவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததை சந்திரிக்காவால் பொருத்துக்கொள்ள முடியவில்லை. சந்திரிக்கா, கரு சயசூரியவை பார்த்து அஞ்சினார். அவரும் மேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கு மகாத்மா ஒருவரை தேடினார். சுசில் பிரேமயயந்தவை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார். கருவின் மகாத்மா அரசியலுக்கு சவால் விடுப்பதற்காக சுசிலை, சந்திரிக்கா முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தார். சுசிலும் முதலமைச்சரானார். சந்திரிக்கா 1999 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் வென்று.

2000 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு செல்லும் போது, கருவும், அவரது தம்பி அனுரவும் கம்பஹாவில் போட்டியிட்டமை அவருக்கு பிரச்சினையாக மாறியது. பண்டாரநாயக்க ஒருவர், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டது அது முதல் முறையாக இருந்தது. அத்துடன் பொதுத் தேர்தலில் சுதந்திரக் கட்சியின் சார்பில் பண்டாரநாயக்க ஒருவர் போட்டியிடாதது முதல் சந்தர்ப்பமாகவும் அமைந்தது.

சந்திரிக்கா மிகவும் அச்சமடைந்தார். கரு மற்றும் அனுரவை எதிர்கொள்ள பண்டாரநாயக்க ஒருவர் அவருக்கு இருக்கவில்லை. இதனால், கரு மற்றும் பண்டாரநாயக்க குடும்பத்தின் முடிக்குரிய இளவரசர் அனுர பண்டாரநாயக்க ஆகியோரை எதிர்க்க சுசிலை கம்பகா மாவட்டத்தில் போட்டியிட செய்தார். பண்டாரநாயக்கவினரின் பிரதிநிதியாக சுசில் அங்கு களமிறக்கப்பட்டார்.

சுசில் கம்பகா மாவட்டத்தில் வெற்றி பெற்று காண்பித்தார். அனுர பண்டாரநாயக்கவை விட சுசில் அதிகளவான விருப்பு வாக்குகளை பெற்றார். அது சுசிலை ஆளும் கட்சியின் முக்கிய புள்ளியாக மாற்றியது. சந்திரிக்கா தனக்கு விருப்பமான துறையான கல்வியமைச்சை சுசிலுக்கு வழங்கினார். 2001 ஆம் ஆண்டு அவரது அரசாங்கம் தோல்வியடைந்து யே.வி.பியுடன் கூட்டணி அமைத்த போது, கூட்டணியின் செயலாளராக சுசிலை நியமித்தார்.

தனக்கு நெருக்கமான அரசியல் தோழர் மங்களவை விட சுசில் மீது நம்பிக்கை வைத்து அவர் அந்த பதவியை வழங்கியிருந்தார். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் சந்திரிக்கா, பிரதமர் பதவிக்கு ஒருவரை தெரிவு செய்ய குழுவை நியமித்ததுடன் குழுவின் உறுப்பினராக சுசிலையும் நியமித்தார். சுசில் சந்திரிக்காவை விட சிறிலங்கா சுதந்திரக் கட்சி குறித்து சிந்தித்து, மகிந்த இராயபக்சவை பிரதமர் பதவிக்கு நியமிக்க கைகளை தூக்கினார்.

2005 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த வேண்டியது அனுரவையா, மகிந்தவையா என்ற பிரச்சினை எழுந்த போது, சுசில், சந்திரிக்காவையும் பகைத்துக்கொண்டு மகிந்தவுக்கு சார்பான நிலையை எடுத்தார். தேர்தல் வெற்றி பெற வேண்டுமாயின் மகிந்தவை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என சுசில் கூறினார்.

மகிந்த 2005 ஆம் ஆண்டு மற்றும் 2010 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடும் போது, சுசிலே, வேட்புமனுக்களில் கையெழுத்திட்டார். எனினும் 2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் மகிந்த குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக மாறி வருவதை சுசில் கண்டார்.

2011 ஆம் ஆண்டு கொலன்னாவை நகர சபைத் தேர்தலில் மைத்திரிபால, சுசில், நிமல் சிறிபால டி சில்வா போன்ற கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பாரத இலச்மன் பிரேமச்சந்தரவுக்கு சார்பாக செயற்பட்ட போது, மகிந்த மற்றும் இராயபக்ச குடும்பத்தினர் துமிந்த சில்வாவுக்கு ஆதரவாக செயற்பட்டனர். இந்த பிளவு அதிகரித்து மைத்திரிபால பொது வேட்பாளராக போட்டியிட நிலை உருவானது.

மகிந்த சுசிலை, எரிசக்தி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, தொழிற்நுட்பம் என்ற துறையை வழங்கி, அதிகாரங்களை துண்டித்திருந்த நிலையிலேயே சுசில் மகிந்த இராயபக்சவின் வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்தார். 2015 ஆம் ஆண்டு மகிந்த தோல்வியடைந்தார். மைத்திரிபால சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரானார். கட்சியின் தலைவர் என்ற வகையில் மைத்திரிபால சிறிசேனவுக்கு இணங்க பணியாற்றினாலும் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மகிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற திடமான நிலைப்பாட்டில் சுசில் இருந்தார்.

100 நாட்களுக்கு பின்னர் பொதுத் தேர்தலை நடத்துவதாக மைத்திரிபால, ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்குறுதி வழங்கியிருந்தார். எனினும் பொதுத் தேர்தலை ஒத்திவைக்குமாறு ஆலோசனை வழங்கியவர்களில் சுசில் முன்னணியில் இருந்தார். அப்போது மைத்திரியையும் மகிந்தவையும் இணைக்க பாடுப்பட்டவர்களிலும் சுசில் முன்னணியில் இருந்து செயற்பட்டார்.

மைத்திரி நாடாளுமன்றத்தை கலைத்ததும் மகிந்தவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று சுசில் 2015 ஆம் ஆண்டு யுலை மாதம் 9 ஆம் திகதி ஊடகங்களிடம் கூறினார். மகிந்தவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தான் கூறியது யுலை 13 ஆம் திகதி உறுதியாகும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

ஒரு மாதத்திற்கு முன்னர் அதாவது 2015 ஆம் ஆண்டு யுன் மாதம் 21 ஆம் திகதி ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு செவ்வி வழங்கியிருந்த சுசில், மகிந்த பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். மகிந்தவுக்கு வேட்புமனு வழங்கப்பட்ட பின்னர், பசில் இராயபக்ச, சுசிலின் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருந்தார்.

முதலில், மகிந்தவையும் இரண்டாவதாக பசிலையும் சுசிலே, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு அழைத்துச் சென்றார். மகிந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சுசில் பிரேமயந்த இவ்வாறு கூறியிருந்தார்.

“ சந்திரிக்கா, மகிந்தவை சனாதிபதி வேட்பாளராக நிறுத்த உதவவில்லை என்பதை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது செயலாளர் என்ற வகையில் கூறுகிறேன். சனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவும் உதவவில்லை. கட்சி அலுவலகங்களை வழங்கவில்லை. ஏன் சந்திரிக்கா, மகிந்த மீது இந்தளவுக்கு ஆத்திரம் கொண்டுள்ளார் என்பது எனக்கு தெரியாது. இந்த பகை முற்பிறவியில் இருந்து வந்திருக்கலாம்” எனக் கூறியிருந்தார்.

மகிந்த இராயபக்சவை பாதுகாத்து வெற்றி பெற செய்வதற்காகவே சுசில் பிரேமயயந்தவை அரசியலில் முக்கியமான பத்திரமாக உருவாக்கிய சந்திரிக்கா குறித்து அப்படி கூறியிருந்தார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நெருங்கும் தருவாயில், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மகிந்தவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்ததுடன் பிரதமர் பதவியை தரப் போவதில்லை எனக் கூறியிருந்தார்.

பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் கட்சியில் இருப்பதாக கூறி, சிலரது பெயர்களையும் வெளியிட்டிருந்தார். அவர்களில் சுசிலும் ஒருவர். எனினும் மறுநாள் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்திய சுசில், தனக்கு பிரதமர் பதவி வேண்டாம், மகிந்தவை பிரதமராக நியமிக்குமாறு பகிரங்கமாக கூறினார். இதனையடுத்து சுசில் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா ஆகியோரை மைத்திரி, பதவிகளில் இருந்து நீக்கினார்.

எனினும் சுசிலும் அனுர பிரியதர்சன யாப்பாவும் மகிந்தவை கைவிடவில்லை. 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்த லின் பின்னர் சுசில், மைத்திரி – இரணில் அரசாங்கத்தில் அமைச்சர் பதவி ஒன்றை பெற்றுக்கொண்டார். மைத்தி ரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இடையில் மோதலை உருவாக்கவே அவர் அமைச்சரவைக்குள் இருந்து வந்தார். அவரது தந்திரம் பலித்தது. இறுதியில், மைத்திரி, ரணிலை விரட்டி விட்டு, மகிந்தவை பிரதமராக நிய மித்தார். அது தோல்வியடைந்த பின்னர், சுசில் அமைச்சர் பதவியை கைவிட்டார்.

2015 ஆம் ஆண்டு சுசில் இருக்கவில்லை என்றால், மகிந்தவுக்கு தேர்தலில் போட்டியிட வேட்புமனு கிடைத்திருக்காது. அப்படியானால் தற்போது கோட்டாபய என்பவரும் இருந்திருக்க மாட்டார். அன்று மைத்திரி, மகிந்தவுக்கு வேட்புமனுவை வழங்கி இருந்தால், மகிந்த போட்டியிட்டிருக்க மாட்டார். தனித்து போட்டியிட்டு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரிய பலத்தை பெற்றுக்கொடுத்திருப்பார்.

2015 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலைமையானது 2018 ஆம் ஆண்டு காணப்பட்ட நிலைமைப் போல் இருக்கவில்லை என்பதே இதற்கு காரணம். அப்படி நடந்திருந்தால், தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் சனாதிபதி ஒருவரே ஆட்சியில் இருந்திருப்பார். இப்படி எழுதப்படவிருந்த வரலாற்றை மாற்றியமைத்தது சுசில் போன்றவர்கள். மைத்திரியை கொண்டு வரலாற்றை மாற்றியதன் காரணமாகவே மீண்டும் மகிந்த பிரதமராக பதவிக்கு வந்துள்ளதுடன் இராயபக்ச ஒருவர் சனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றார்.

சுசிலின் தோல் மீது ஏறி அரச மாளிகைக்கு சென்ற இராயபக்சவினர் இன்று சுசிலை இராயாங்க அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கியுள்ளனர். சுசில் என்பவர், சந்திரிக்காவுக்கு பின்னர் கட்சியின் தலைமைக்கு தெரிவு செய்யக் கூடிய அளவுக்கு பிரபலமான அரசியல் பாத்திரம். எனினும் சுசில் அந்த சந்தர்ப்பத்தை மகிந்தவுக்கு வழங்கினார்.

மைத்திரி கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்த பின்னரும், சுசிலுக்கு கட்சியின் தலைமை பொறுப்புக்கு வர வாய்ப்பு இருந்தது. அந்த சந்தர்ப்பங்களை சுசில், ,ராaபக்ச குடும்பத்தினருக்கு வழங்கினார். சுசில், ராஜபக்சவினரின் வரலாற்றை எழுதிய நபர். இந்த வரலாற்றை மாற்றி, புதிதாக எழுதக் கூடிய அடிப்படையான அரசியல் பலம் தற்போதும் சுசிலுக்கு உள்ளது.

கட்டுரையாளர் – உபுல் யேர்சப் பெர்னாண்டோ

மொழியாக்கம் -சு(ஸ்)டீபன் மாணிக்கம்