07.12.2021.....உலகின் கேடுகளின் முகம் அந்தச்செயல். 2012 இல் இருந்து இலங்கையைச் சேர்ந்த பிரியந்த குமார தியவடன அங்கு பொறியியலாளராக பணியாற்றி வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் மத வெறியர்களால் தாக்கப்பட்ட பின்னர் வீதியில் வைத்தே எரித்து கொன்றுள்ளனர்.
கொடூரம் என்னவெனில், எல்லோரும் பார்த்திருக்கவும் கடந்துசெல்லவும் ஏதோ குப்பைக்கு நெருப்பு வைப்பதுபோல் எரித்து கொன்றதுதான்.
அச்செயலை ஒருவரால் படம்பிடித்து இணையத்தில் பதிவேற்ற முடிந்திருக்கிறது.
அந்த மனிதனின் மனைவி தன்கணவர் வீதியில் எரிக்கப்படுவதைப்பார்த்து எவ்வளவு வதையுண்டு துடித்திருப்பார் ?
அவர் ஊடகங்களில் தோன்றி ‘’ என் கணவர் ஒரு அப்பாவி’’ என்று சொல்லும்போதே இதயம் நொருங்கும் சத்தம் கேட்கிறது.
அவர் பிள்ளைகள் இந்த உலகத்தை எப்படிப்பார்ப்பார்கள் ?
இந்த உலகம் எப்படிப்பட்டவர்களின் கைகளில் சிக்கி இருக்கிறது என்பதை அமைதியாக சகித்துக்கொண்டிருக்கும் மக்கள் இன்னும் புரியவில்லை.
இதனால் பாகிசுதானில் இருப்பவர்கள் எல்லோரும் மோசமானவர்கள் என்ற முடிவுக்கு வரத்தேவையில்லை.
பாகிசுதானின் அதிபர் இம்ரான் கான் ‘’இது பாகிசுதானுக்கு ஒரு அவமானகரமான நாள் !’’ என்று கூறிவிட்டு சும்மா இருக்கவில்லை. 100 பேர் கைதுசெய்யப்பட்டு 15 பேர் நேரடிக்குற்றவாளிகள் என இனங்காணப்பட்டுள்ளனர்.
இச்செயலை கண்டித்து மத வெறியர்களுக்கு எதிராக அந்த பஞ்சாப் மாநிலத்தில் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். இறந்தவர் யாரோ என்று அவர்கள் விட்டுவிடவில்லை.
இந்த கொடூரத்தை கேட்டதுமே எனக்கு நினைவுக்கு வந்தது டெயிலி எக்சுபிரசு இதழுக்கு நோர்வே நாட்டு சுற்றுலாப்பயணி 1983 ஆண்டு கொழும்பில் தான்கண்ட காட்சியை பதிவுசெய்ததுதான்.
« …. ஒரு பேரூந்து எங்களின் முன் நிறுத்தப்பட்டது. அதில் இருந்த சிங்கள மக்களை ஒரு குழு இறக்கியது. பின்னர் எல்லாக்கதவுகளும் அடைக்கப்பட்டது. அதற்குள் இருபதிற்குமேற்பட்ட தமிழர்கள் இருந்தனர். நூற்றுக்கணக்கானோர் சுற்றி பார்த்துக்கொண்டிருக்க பேரூந்தை சுற்றி பெற்றோல் ஊற்றிவிட்டு அதை கொழுத்திவிட்டனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என தமிழர்கள் போரூந்தோடு கருகிப்போனார்கள். இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இலங்கை போலீசாரும் நின்றனர்…. »
இது நடந்த போது நான் பிறக்கவில்லை. ஆனால் பிரியந்த குமார எரிந்தபோது உயிரெல்லாம் துடிக்கிறது.
இந்த சம்பவங்களை விட எழுத்திலும், சொல்லிலும் சொல்லமுடியாத பல கொடூரங்கள் இலங்கையில் நடந்தன.
ஆனால் யாருக்கும் வலிக்கவில்லை !
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக இலங்கையின் மனித மாண்புகள்தெரிந்த பிரதமர்..பயங்கரவாதிகளின் இந்த செயல் என்னை அதிச்சி அளிக்கச்செய்தது. குற்றவாளிகளை பாகிசுதான் அதிபர் நீதியின் முன் நிறுத்த வேண்டும் !.. »
என்றிருக்கிறார். எனக்கு இந்த செய்தி அதிர்ச்சிக்கு அதிர்ச்சியை தந்தது.
பாகிசுதானில் கொல்லப்பட்ட பிரியந்த வின் மனைவி நிரோசி தசநாயக்க விற்கு கரங்களை நீட்டி மனித மாண்பைச் சொல்வோம்.
நிரோஷி உங்கள் கணவருக்கு நீதி கிடைக்கும் !
ஏனெனில் உங்களுக்கு ஒர் அரசு இருக்கிறது!