ஏன் தன்னை முனிவர் என்று அழைத்தார் என்ற கேள்வி நமக்கு எழலாம். இத்தனை நூல்களை தமிழில் எழுதிய பின்னரும் ஆசை நிறைவடையாமல், தமிழரின் பாரம்பரிய சித்த மருத்துவத்தை தெளிவுற கற்றுத்தேர்ந்து, மருந்துகளை செய்து, பரிபாஷைகளை கற்று, மக்களுக்கு மருத்துவ பணியும் செய்தார். தான் பயன்படுத்திய மருந்துகளை தொகுத்து, நசகாண்ட வெண்பா, மகாவீரிய சிந்தாமணி, நவரத்தின சுருக்க மாலை, வைத்திய சிகாமணி, சுரமஞ்சரி, தனிமுறைத் திரட்டு, குணவாகடம், நிலக்கண்ணாடி போன்ற சித்த மருத்துவ நூல்களை பாடல்வடிவில் ஓலைசுவடியில் எழுதினார். இப்படி ஒரு சித்தராகவே வாழ்ந்த காரணத்தால், தன்னை வீரமாமுனிவர் என்று அழைக்க விரும்பினார். இந்த நூல்கள் எங்கு இருக்கின்றன, மேலும் நூல்கள் எழுதினாரா, இவருக்கு சித்த மருத்துவ சீடர்கள் இருந்தார்களா, இவர் சித்த மருத்துவ நூல்களை வெளிநாட்டு மொழிகளில் எழுதினாரா போன்ற தகவல்கள் நமக்கு கிடைக்கவிலை.
165 ஆண்டுகளாக இவரின் சித்த மருத்துவ சுவடிகள், வைத்தியர்களிடம் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரப்பட்டது. சித்தவைத்திய மகானாகிய ஹக்கீம் பா. முஹம்மது அப்துல்லா சாஹிபுவிடம் இந்த ஓலைசுவடிகள் கைக்குக் கிடைத்தவுடன், அவர் 1912 ஆம் ஆண்டு, இவற்றில் சிலவற்றை புத்தகமாக வெளியிட்டார். பல சுவடிகள் மிகவும் சேதாரமாகிவிட்டதால் வெளியிட முடியவில்லை என்றும், இன்னும் வீரமாமுனிவரின் பல சித்தா சுவடிகள் தன் கைகளில் கிடைக்காமல் போனதற்கு வருந்துகிறேன் என்றும் அப்துல்லா சாகிபு புத்தக முன்னுரையில் வருந்துகிறார். இன்று நாம் புற்று நோய்க்கு பயன்படுத்தும் சித்திரமூல குளிகை மற்றும் காந்தரசவில்லை, தோல்நோய்களை போக்கும் பூவரசங்காய் எண்ணெய் என எண்ணற மருந்துகளை வீரமாமுனிவரின் சுவடிகளில் நாம் பார்க்கலாம்.
“வெற்றிலைசுண் ணாம்பபினைச் சமனாகச்சேர்த்து
மேவுகல்வத் திட்டரைத்துத் துவரைபோல
நற்றாமாத் திரைகள் செய்துகொள்வாயொன்று
நாடியவொன் றரையெனுமாத் திரைகள் வீதம்
உற்றசில தினங்களுக்குள் மலப்போக்கெல்லா
மோகோகோ பறந்துவிடுஞ் சிறிதுநில்லா
தற்றிடுநாட் பட்டிருந்த தெனினுமிந்த
வற்புதத்தை யெவரறிவார் பாரின்மீதே”
- வீரமாமுனிவர் வைத்திய சிந்தாமணி
வெத்திலை + சுண்ணாம்பு + அபின் மூன்றையும் சேர்த்து செய்த மாத்திரையால், எத்தனை நாட்பட்ட மலப்போக்கும் சரியாகும் என்கிறார். நவீன மருத்துவத்தில், அபின் (opiods) வகுப்பை சார்ந்த மருந்துகள் irritable bowel syndrome மற்றும் inflammatory bowel syndrome போன்ற குடல் சம்பந்தமான நோய்களின் வயிற்றுப்போக்கை சரிசெய்ய பயன்படுத்தப்படுகிறது என்பதை இங்கு நினைவுகூற விழைகிறேன்.
இன்று (நவம்பர் 8 ) வீரமாமுனிவரின் 341 ஆவது பிறந்தநாளில் அவரை நன்றியோடு தமிழ் சமூகம் நினைவுகூருகிறது. சித்த மருத்துவம் உலகபொது மருத்துவம், அதன் வளர்ச்சிக்கு உலகெங்கும் இருந்து சித்தர்கள் பங்களித்துள்ளனர். இந்த தமிழ்துறவி வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட வேண்டிய சித்தர்கள் வரிசையில் நிற்கிறார்.- அருள் அமுதன்.