குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

இலக்கியம் அறிவோம்!நந்தா விளக்கு=தீண்டா விளக்கு= அணையா விளக்கு சோழர்காலத்தில் துாண்டாமணி விளக்கானது!

02.10.2021...16.கன்னி.தி.ஆ2052 நந்தா விளக்கு என்றால் விளக்கின் திரி தூண்டாமல் இரவும் பகலும் அணை யாமல் எரியும் விளக்கு என்று பொருள். நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

பொதுமக்கள் அளித்த சிறு சிறு நிவந்தங்கள் கோவில் உண்ணாழிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தா விளக்குகள் ஏற்றப் பயன்பட்டன.

சாவா மூவா பேராடுகள் என்றால் சாவினாலோ மூப்பினாலோ எண்ணிக்கை குறையாத ஆடுகள் என்று பொருள். முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றே சாவா மூவா பேராடு என்ற திட்டம் உருவாக வழிவகுத்தது.

இந்தப் பதிவு .சாவா மூவா பேராடுகள் திட்டம் பற்றி விரிவாக அலசுகிறது.

*நந்தா விளக்கு என்றால் என்ன? இந்த விளக்கின் சிறப்பு என்ன?*

கோழி முட்டை வடிவில் காணப்படும் இந்த அணையா விளக்கினை மணி விளக்கென்றும் தூங்காமணி விளக்கென்றும் குறிப்பிடுகிறார்கள்.

நந்தா விளக்கு என்றும் இதனைக் குறிப்பிடுவதுண்டு. நந்துதல் என்ற சொல்லுக்கு அணைதல் என்று பொருள். நந்தா விளக்கு என்றால் அணையாமல் எரியும் விளக்கு என்று பொருள்.

தூண்டா விளக்கு என்றும் தீண்டா விளக்கு என்றும் இத்தகைய விளக்குகள் குறிப்பிடப்படுவது உண்டு. இரவும் பகலும் எரியும் இந்த விளக்கின் திரி தூண்டாமல் அல்லது மனிதனால் தீண்டாமல் எரியும் விளக்கு என்பது இதன் பொருள்.

இந்த விளக்குகளில் உருளை வடிவிலான எண்ணெய்க் கலயம், எண்ணெய் வழிவதறகான சிறு துவாரம், விளக்கு ஆகிய பகுதிகள் காணப்படுகின்றன.

விளக்கில் திரி இட்டு ஏற்றப்பட்ட சுடர் எரிந்து கொண்டிருக்கும். எண்ணெய்க் கலயத்திலிருந்து சிறு துவாரம் வழியாகச் சிறிது சிறிதாக எண்ணெய் விளக்கில் சொட்டிக்கொண்டிருக்கும்.

இதன் காரணமாக விளக்கும் இரவு பகல் என்று தொடர்ந்து அணையாமல் எரிந்து கொண்டிருக்கும். உருள் கலயத்தின் மேற்பகுதியில் அன்னப்பறவை போன்ற உருவங்களை அமைத்து இருப்பார்கள். இந்த விளக்கு சங்கிலியால் இணைக்கப்பட்டுக் கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டிருக்கும்.

நந்தா விளக்குகள் குறித்த பல செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

”அணங்குடை வரைப்பகம் பொலிய வந்திறுக்குஞ்

திருமணி விளக்கின் அலைவாய்ச்”

(அகநானுாறு – மணிமிடைப்பவளம், பாடல் எண்.266, 20, )

தெய்வத்தை உடைய குன்றிடத்தே பொலிவுற வந்து தங்கும் அழகிய திருமணிவிளக்கு ஒளிர்வது குறித்து இப்பாடல் விவரிக்கிறது.

”கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி

அந்தி மாட்டிய நந்தா விளக்கின்

மலரணி மெழுக்க மேறிப் பரல்தொழ”

(பட்டினப்பாலை பாடல் வரிகள். 246 – 248)

சிறைப்பிடித்து வந்த பகைவர் மனையோராகிய மகளிர், ஊரார் பலரும் நீருண்ணும் துறையிலே முழுகி, அந்திமாலைப் போதில் ஏற்றிய நந்தா விளக்கினை மலரால் அழகு செய்து வைக்கப்பட்ட மெழுகிய இடம் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

“வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும்

மாறுசெல் வளியி னவியா விளக்கமும் ”

(பரிபாடல் பாடல். எண்.8: 97-98)

மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் செல்லும் வழியில் பூசை செய்ய எழுந்து மணக்கும் சந்தனமும், தூபத்துக்குரிய பொருட்களும், காற்றால் அணையாத விளக்கமும், மணங் கமழ்கின்ற மலர்களும் ஏந்திப் பரங்குன்றத்தையடைந்து தொழுவோர் பற்றி பரிபாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.

“எல்வளை மகளிர் மணிவிளக்கெடுப்ப” (சிலப்பதிகாரம்)

“சிந்தாதேவி செழுங்கலை நியமத்து

நந்தா விளக்கே…” (மணிமேகலை)

“நந்தா விளக்குப் புறம் ஆகு என நான்கு கோடி நொந்தார்க் கடந்தோன் கொடுத்தான் பின்னை நூறு மூதூர்” (சீவகசிந்தாமணி:12:187)

சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பொதுமக்கள் அளித்த சிறு சிறு நிவந்தங்கள் கோவில் உண்ணாழிகைகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நந்தா விளக்குகள் ஏற்றப் பயன்பட்டன.

இவை தனித்தனிப் பெயர்களால் அழைக்கப்பட்டன. இவற்றிற்கு உரிய நெய்யினை விவசாயிகள் தனித்தனியே அளித்து வந்தனர். இது தொடர்பாகப் பல தமிழ் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டன.

நந்தாவிளக் கொன்றினுக்கு வைத்த சாவாமூவாப்பேராடு தொண் ணூறு

“சாவா மூவா பசு” என்றும் சில கல்வெட்டுகளில் காணப்படும்.

பசுவின் நெய்யும் ஆட்டின் நெய்யும் சோழர்கள் காலத்துக் கோவில்களில் விளக்கு எரிக்கப் பயன்பட்டது.

.பண்டைக்காலத்தில் கோவில் உண்ணாழிகை என்னும் கருவறைகளில் இரவும் பகலும் எரியும் பொருட்டு அணையா விளக்கு வைப்பது வழக்கம்..அரண்மனையின் பள்ளியறைகளிலும் அணையா விளக்கு வைப்பதுண்டு.

கோவிலில் நந்தா விளக்கெரிப்பதற்கு ஏராளமான நெய் தேவைப்பட்டது. தேவையான நெய் தினமும் கிடைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் கோவிலுக்கு இருந்தது. நந்தா விளக்கெரிப்பதற்கான நிவந்தங்களை மக்கள் சபையோரிடம் செலுத்தினார்கள்.

சிலர் பொற்காசுகளாகவும் சிலர் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடு அல்லது பசுக்களாகவும் நிவந்தம் கொடுத்தார்கள்.

*சாவா மூவா பேராடுகள் திட்டம் எவ்வாறு உருவானது?*

முதலாம் இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றே சாவா மூவா பேராடு என்ற திட்டம் உருவாக வழிவகுத்தது எனலாம்.

சோழநாட்டில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணின் வாழ்வில் சில பிரச்சினைகள் இருந்தன. அவள் சிவன் கோவிலுக்குச் சென்று சிவலிங்கத்தை மனமுருக வேண்டிக்கொள்கிறாள்.

தன்னுடைய பிரச்சினைகளைச் சிவபெருமான் தீர்த்துவைத்தால் ஆண்டு முழுவதும் உண்ணாழிகையில் நந்தா விளக்கு ஏற்றிக் காணிக்கை செலுத்துவதாக மனமுருகி நேர்ந்துகொள்கிறாள்.

கோவிலில் பொறுப்பில் இருந்த அதிகாரியிடம் தனது விண்ணப்பத்தையும் நந்தா விளக்கெரிப்பதற்கான விருப்பத்தையும் தெரிவித்தாள். கோவில் அதிகாரி கணக்குப் போட்டு, உண்ணாழிகையில் ஆண்டு முழுவதும் நெய் விளக்கேற்றுவதற்கு இவ்வளவு காசுகள் செலவாகும் என்று விடை சொல்கிறார்.

இந்தப் பெண்ணிடம் இருந்து ஓர் ஆண்டிற்கு உண்ணாழிகையில் நந்தா விளக்கேற்றுவதற்கான பொற்காசுகளையும் உடனே பெற்றுக் கொள்கிறார். கோவில் கணக்கர் அந்தப் பொற்காசுகளைக் கோவில் கருவூலத்தில் வரவு வைத்துக் கொள்கிறார்.

கோவில் அதிகாரி வாங்கிய காசிற்கு உரிய அளவு நெய்யினை வாங்கி உண்ணாழிகையில் ஓர் ஆண்டிற்கு விளக்கு ஏற்றி இருந்தால் இந்த நிகழ்ச்சி அப்போதே முடிவுக்கு வந்திருக்கும். ஆனால் முடித்து வைக்க இறைவன் திருவுளம் கொள்ளவில்லை போலும்.

மாமன்னர் இராஜராஜரின் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி விவரிக்கப்படுகிறது. கோவிலுக்கும் மக்களுக்கும் பயன்படுமாறு நந்தா விளக்கு ஏற்றும் திட்டம் தயாரிக்கப்படுகிறது. சாவா மூவா பேராடுகள் என்று இந்தத் திட்டத்திற்குப் பெயரும் சூட்டப்படுகிறது.

உழுவதற்கு நிலம் இல்லாமல் வறுமையில் வாடிக்கொண்டிருந்த விவசாயிகளின் பட்டியல் சேகரிக்கப்படுகிறது. இந்த விவசாயிகள் கோவிலுக்கு வருமாறு அழைக்கப்படுகிறார்கள்.

இப்படி ஒரு விவசாயி தஞ்சை கோவிலுக்கு வருகிறார். கோவில் அதிகாரி விவசாயிகளிடம் திட்டத்தை விவரிக்கிறார். உண்ணாழிகையில் ஓர் ஆண்டுக்கு நெய் விளக்கு ஏற்றுவதற்கு நாள் ஒன்றுக்கு ஓர் ஆழாக்கு நெய்யினை விவசாயி தரவேண்டும். விவசாயி தன்னுடைய வாழ்க்கையை நடத்துவதற்கான செலவுகளையும் இத்திட்டத்தின் மூலம் நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

இந்தத் திட்டத்தின் படி ஆண்டு முழுவதும் தினமும் ஓர் ஆழாக்கு நெய் தருவதற்கு எத்தனை ஆடுகள் தேவைப்படும்? என்ற கேள்வியை முன்வைக்கிறார்.

96 ஆடுகள், ஒரு கடா மற்றும் குட்டிகள் அடங்கிய ஆட்டுக்கிடையினைக் கொடுத்தால் தான் தினமும் கோவிலுக்கு ஓர் ஆழாக்கு நெய் தர முடியும் என்று விவசாயி விடை சொல்கிறார். கோவில் அதிகாரி நேர்த்திக்கடன் செய்துகொண்ட பெண்ணிடம் பெற்றுக்கொண்ட பொற்காசுகளைக் கொண்டு விவசாயி கோரிய கணக்கில் ஆட்டுக்கிடையினை வாங்கி விவசாயியிடம் ஒப்படைக்கிறார்.

மாமன்னர் இராஜராஜர் விதித்த நிபந்தனையையும் கோவில் அதிகாரி விவசாயியிடம் தெரிவிக்கிறார்: விவசாயி கேட்டுக்கொண்ட எண்ணிக்கையில் ஆடுகள் ஒப்படைக்கப்படுகிறது. விவசாயியின் கணக்கில் இந்த ஆடுகள் நிலுவையில் இருக்கும். ஒப்புக்கொண்டபடி விவசாயி ஓர் ஆழாக்கு நெய் கொடுத்துவிட வேண்டும். ஆண்டு முடிவில் இதே எண்ணிக்கையில் ஆடுகளைத் திரும்பக் கோவில் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். விவசாயி விரும்பினால் இத்திட்டத்தின்படி வரும் ஆண்டுகளிலும் கோவிலுக்கு ஓர் ஆழாக்கு கொடுத்துவரலாம் என்பதுதான் இந்த நிபந்தனை.

விவசாயி மகிழ்ச்சியுடன் ஆடுகளைத் தன் வீட்டிற்கு ஓட்டிச் செல்கிறார்.

நிபந்தனைப்படி அவர் கோவிலுக்கு நாள் தோறும் ஓர் ஆழாக்கு நெய் வழங்கி வருகிறார். சில நாட்களுக்குள்ளாகவே கோவிலில் கிடைத்த ஆடுகள் குட்டிபோட்டு பல்கிப் பெருகிவிட்டன. ஆட்டுக்குட்டிகளை விற்று தன் குடும்பச் செலவுகளைச் சமாளிக்கிறார்.

குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடுகளை திரும்ப ஒப்படைக்க முடியும் என்ற நம்பிக்கை விவசாயியின் மனதில் குடிகொண்டுள்ளது.

கோவிலில் நேர்ந்து கொண்ட பெண்ணின் பிரச்சினை தீர்ந்த காரணத்தால் உண்ணாழிகையில் நாள்தோறும் நந்தா விளக்கு ஏற்றப்படுகிறது. உழுவதற்கு நிலம் இல்லாத விவசாயிக்கு ஆடுவளர்ப்புத் தொழில் கைகூடியுள்ளது.

ஆடுவளர்ப்புத் திட்டத்தால், விவசாயியின் வாழ்க்கை, சிக்கலின்றி நடைபெறுகிறது. கோவில் நிர்வாகம் சார்பில் வாங்கி, விவசாயிக்குக் கொடுக்கப்பட்ட ஆடுகள் அதே எண்ணிக்கையில் எப்போது வேண்டுமானாலும் திரும்பக் கிடைத்துவிடும். இது தான் சாவா மூவா பேராடுகள் திட்டத்தின் மேன்மை. இதில் பங்கேற்கும் அனைவருக்குமே வெற்றி

*நந்தா விளக்கு ஏற்றுவதற்கான வேண்டுதல்கள் எவை?*

பொதுவாக ஒருவர் நோய்நொடி அகன்று உடல் நலம் பெற வேண்டியோ அல்லது ஒருவர் உயிர்நீத்த சமயத்தில் அவர் நற்கதி அடைவதற்காக வேண்டியோ நந்தா விளக்கு ஏற்றுவதற்குக் குடும்பத்தார் அல்லது உற்றார் உறவினர்கள் நிவந்தம் வழங்குவது வழக்கம்.

*சாவா மூவா பேராடுகள் திட்டம் எப்படிப் பரவலாக்கப்பட்டது?*

கோவிலில் விளக்கெரிப்பதற்காகப் பொதுமக்கள் பொற்காசுகளை நந்தாவிளக்கு நிவந்தங்களாகச் சபையோருக்கு வழங்கினார்கள். இதற்கு மாறாக 90 அல்லது 96 என்ற எண்ணிக்கையில் ஆடுகளையோ அல்லது 32 பசுக்கள் மற்றும் ஒரு காளையையோ நிவந்தமாகக் கொடுத்துள்ளார்கள். அரை நந்தா விளக்கு எரிக்க 45 அல்லது 48 ஆடுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலே குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆடுகளையும் பசுக்களையும் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்ட சபையோர் அதே எண்ணிக்கையில் நிலமற்ற விவசாயிகளிடம் கொடுத்து அவர்களிடமிருந்து தினமும் ஓர் ஆழாக்கு நெய் பெற்றுக்கொண்டார்கள். கோவில் உண்ணாழிகைகளில் இடையறாது இரவுபகலாக நந்தா விளக்கு ஏற்றப்பட்ட செய்தியினைத் தஞ்சாவூர் திருப்பூந்துருத்தி கோவில் கல்வெட்டு பதிவு செய்துள்ளது