குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

தமிழர் அறங்களில் உயர்ந்த அறம் பிறர்மனை நோக்காமை. - திருக்குறள் 148

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறனொன்றோ ஆன்ற ஒழுக்கு

- திருக்குறள் 148

25.08.2021....இதற்குப் பரிமேலழகரின் உரையினைப் பார்ப்போம்.

பரிமேலழகர் உரை: பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை - பிறன் மனையாளை உட்கொள்ளாத பெரிய ஆண்தகைமை, சான்றோர்க்கு அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு - சால்புடையார்க்கு அறனும் ஆம், நிரம்பிய ஒழுக்கமும் ஆம்.

(புறப் பகைகளை அடக்கும் ஆண்மையுடையார்க்கும், உட்பகை ஆகிய காமம் அடக்குதற்கு அருமையின், அதனை அடக்கிய ஆண்மையைப் 'பேராண்மை' என்றார். 'ஒன்றோ' என்பது எண்ணிடைச் சொல். செய்தற்கு அரிய அறனும் ஒழுக்கமும் இதனைச் செய்யாமையே பயக்கும் என்பதாம்.

இவ்வாறு தமிழர் அறம், பிறர்மனைவியை நோக்காது வாழும் அழகை அறத்தின் உயர்வாகக் கொண்டாடுகின்றது. இது வெறுமனே பெண்ணின்பத்தோடு சுருங்கிடாது, பிறருக்குரிய உடமைப்பொருட்களாகிய மண்,பொன் முதலியவற்றோடும் பொருள் செய்து வாழ்வோர் உயர்ந்த அழகுடையார்.ஏனெனில் ஆணவக்குணங்களில் பிறர்பால் உள்ளதை தன்பால் உள்ளதோடு ஒப்பிட்டு பிறர்பால் உள்ளதை தன்பால் பெற்றுக்கொள்ளவேண்டும் என்னும் எண்ணத்தை உள்ளத்தில் வளர்த்து வெந்துநிற்றலே பொறாமையெனப்படும்.


ஆதிசங்கரரின் வாழ்க்கையைக் கூறும் சங்கர விசயங்கள் ஆதிசங்கரர் காமத்தை அனுபவித்து அறிந்துகொள்வதற்காக, மன்னனின் உடலினுள் கூடுவிட்டு கூடுசென்று அந்த மன்னனின் மனைவியரோடு கலவி இன்பம் ( அந்த மனைவியருக்கு தம்மை உணர்த்தாது) களித்து இன்புற்றார் என்று கூறுகின்றன. இங்கு, மன்னனின் பத்தினியார்கள் தம்மோடு புணர்வது தம் கணவரேயென்று கருதியிருந்தனர்.

இந்திரன் அகலிகையோடு கூடியது மாபெரும் குற்றமாக சீர்தூக்கப்பட்டு இந்திரன் சபிக்கப்பட்டான். சீதையைக் கவர்ந்துவந்த இராவணனின் செயல் அறத்தால் அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், ஸ்மார்த்தமத தாபகராகிய ஆதிசங்கரர் பிறன்மனையை அம்மனைவியருக்கு தெரியாது அனுபவித்து இன்புற்றாரென்று ஸ்மார்த்தமத நூல்கள் அவர் செயலை அங்கீகரித்து இருப்பது பெருவியப்பாகவேயுள்ளது.  முகமதுநபி முதுமை வயதில் குழந்தைப் பெண்ணைத் திருமணம் செய்தமை சைவருக்கு அவசியமற்றவொன்று. ஆனால், சைவசமயத்தை இஸ்லாமிய மார்க்கம் வீழ்த்த சைவசமயத் தத்துவங்களில் கைவைக்குமாயின் அச்சமயத்தின்பாலான விமர்சனங்கள் அவசியமாக முன்வைக்கப்படவேண்டும். இதனை, நாவலரின் சைவதூஷணபரிகாரம் முதலிய நூல்களால் தெளிதல் நன்று.  அதைச்செய்யாவிட்டால், சைவருக்குள் அவ்வகைத் திருமணங்களும் அறமேயென்று விதைக்கப்பட்டு, சைவசமயிகளும் சமூகத்தை அடிப்படைவாதங்களுக்குள் இழுத்துச்செல்வரேயொழிய முன்நோக்கி நகரார்.


இராவணன் மேலது நீறு என்று அவனது சிவபரத்துவ வாழ்வைக் கொண்டாடிய நமது நாயன்மார்கள்,  இராவணனை வல்லரக்கன் என்றெல்லாம் அவனைக் கண்டித்தும் பாடியுள்ளனர். கண்டித்துப் பாடியமையினால் நாயன்மார்கள் தரந்தாழ்ந்தோர் ஆகார்.

சைவசமயத்தினுள் ஸ்மார்த்தமதத்தின் ஆதிசங்கரருக்கு சிலை பிரதிஷ்டை, ஆதிசங்கரரே இந்துமத தலைமை குரு, ஸ்மார்த்தமத ஆதிசங்கரரே சண்மதம் என்னும் சைவ,வைணவங்களைத் தாபித்தாரென்ற பொய்புழுகு , வள்ளலார் முதலியோர் பாடல்களை  பதிவாக்கியம் அன்றென்பதால் ஒதுக்கிவிட்டு, ஆதிசங்கரரின் பாடல்களை பதிவாக்கியங்களோடு ஆலயங்களில் ஓதுதல் என்று ஸ்மார்த்தமத சம்பிரதாயங்களும், திணிப்புக்களும் சைவசமயத்தினுள் ஊடுருவியமை மாத்திரமன்று, பிராமண ஆண்களுக்கு மாத்திரமே ஞானம் கிடைக்கும் என்று ஆதிசங்கரர் வலியுறுத்திய  அவர் சமயக்கொள்கையையும் சம்பிரதாயங்களையும் காரைக்கால் அம்மையாருக்கும் கண்ணப்பருக்கும் முத்தியளித்த சைவசமயம் ஏற்று சைவத்தத்துவக்கற்பிழந்து வாடிநிற்கும் சீரழிவும் நம் கண்முன்னே இருக்கும் நிலைமைகளாகும். இதனை ஏறத்தாழ 100 ஆண்டுகளாய் விமர்சிக்கும் துணிவில்லாது எல்லோரும் அமைதியாக ஏற்கும் சிவத்துரோகத்திற்கு ஆளாயினர். சூளை சோமசுந்தரநாயகப்பெருமான், மாயாவாததும்சகோளரி கதிரைவேற்பிள்ளை பெருமான் முதலியோருக்குப் பிறகு சைவசமயம் இவற்றை கேள்விக்குள்ளாக்கவில்லை.


இவற்றைக் கேள்விக்குள்ளாக்காது, விமர்சனங்களுக்கு உள்ளாக்காது ஆன்றோர் ஒளிந்துகொள்வார்களாயின் இதே ஆதிசங்கரரின் பெயரால் பிறப்புவழி பிராமணர்க்கு மாத்திரமே முத்தி, அதுவும் பிராமணப் பெண்களாயின் அக்குலத்தில் ஆண்களாய்ப் பிறந்து முத்தி பெறல் வேண்டும் என்னும் கீழான கொள்கைகள் சைவமரபில் பரவிக்கொண்டேயிருக்கும். சிவ உற்பத்தியென்னும் சிவாசாரியார்களெல்லாம் தங்களை பிரம்ம உற்பத்தியென்று உழன்று ஆதிசங்கரரின் இக்கொள்கைகளுக்குள் மயங்கி, சைவசமய தீக்கைகளை மறந்து சைவத்தினுள் சுமார்த்தமதக் கொள்கைகளை வளர்த்தேவருவர்.  இவையாவும் தடுக்கப்பட்டு சைவசமயத்தின் உயர்வான கொள்கைகள் நிலைநாட்டப்படவேண்டுமாயின், ஆதிசங்கரரின் கொள்கைகளை முன்வைக்கும் நூல்கள் கேள்விக்குள்ளாக்கபட்டேயாகவேண்டும்.


ஆதிசங்கரர் என்பார் அரசன் மனைவிகளோடு அந்த மனைவிகளுக்கு தெரியாமல் அரசன் உடலில் புகுந்து காமக்களியாட்டம் செய்தது உண்மையன்று என்றால், நீலகண்ட சிவாசாரியாரோடு வாதிட்டு சைவத்தைத் தோற்கடித்தார் என்னும் வரலாறும் பொய்யென்று ஸ்மார்த்தமதத்தாரே ஏற்கவேண்டிய நிலையுருவாகும். ஆதிசங்கரர் ஞானத்தில் விதைத்த ஏற்றத்தாழ்வுக்கொள்கைகள் விமர்சிக்கப்பட்டேயாகும். அவர் அதுபற்றி எழுதிய நூல்கள் விமர்சிக்கப்பட்டேயாகும். அவ்வாறு அல்லாது, ஆதிசங்கர் முத்தியில் விதைத்த ஏற்றத்தாழ்வுக்கொள்கைகள், பால்வேற்றுமைக் கொள்கைகள், நீலகண்ட சிவாசாரியரோடு வாதிட்டு சைவத்தை தோற்கடித்தார் முதலிய அவர்மதக் கதைகளெல்லாம் உண்மையென்றால், ஆதிசங்கரர் மாற்றான் மனைவியரை புணர்ந்து இன்புற்றாரென்று அம்மதத்தார் நூல்களில் உள்ள செய்தியும் உண்மையாகும். அப்படியானவர் விமர்சிக்கப்பட்டேயாகவேண்டும். சுவாமி விவேகானந்தர் ''அன்பில்லார்'' என்று விமர்சித்தார். நாம் பிறன்மனை கவர்ந்தார் என்று விமர்சிக்கின்றோம். இரண்டுமே அவர்கள் கொண்டாடும் நூல்களில் உள்ளவையே.

இவை ஞானத்துக்கு தடையாவெனின், பெற்றான்சாம்பனை ஆட்கொள்ள ஒரு உமாபதி சிவாசாரியார் அமைந்தமைபோன்று நமக்கும் ஏதேனும் ஒருபிறவியில் சிவபெருமான் ஒருவரை அமைத்துத்தானே தரப்போகின்றார். சைவசமயம் அனைத்து உயிர்களும் முத்தியுறும் என்று உறுதியளிக்கும் சமயம். எனவே, இந்தப்பிறவியா.........எத்தனை ஆயிரம் பிறவியா என்று ஐயுறவில்லை. எனக்கு முத்தி வேண்டும், எனக்கு முத்தி வேண்டும் என்று முத்தியின்பால் பற்றுவைத்தால் முத்தி கைகூடாதென்பது சைவ முடிவு. ஆனால், சிவத்தில் பற்றுவைத்தால் முத்தி தானே கைகூடும்.


நம்பால் அன்புடையார் நாம் ஆதிசங்கரை விமர்சிப்பது கண்டு வருந்தற்க. நம்பால் அன்புகொண்டு அறிவிக்கும் செய்திகளை உள்வாங்கிக்கொண்டுள்ளோம்.எனினும், இப்பணியைச் செய்வதற்கு எவருக்கும் சத்தியில்லையென்பதைக் கண்டே, நாம் இவற்றை செய்தேயாகல் வேண்டுமென்று திடசங்கற்பம் கொண்டுள்ளோம். ஒரு மருத்துவர் சீழ்பிடித்த வயிற்றினைத் திறந்து சீழினை அகற்றிச் சுத்தம் செய்வார். சீழுக்குள் கைவைக்காதீரென்றால் நோயாளியின் உயிரைக் காக்கமுடியாது. இங்கு சைவத்தைச் சூழ்ந்துள்ள  சீழ் ஆதிசங்கரத்துவம்.

எல்லாம் திருவருட்சம்மதம்


இலங்கையிருந்து மருத்துவர் பிரதாபன்.