குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலகிலேயேஅதிகமானதமிழ்ச்சுவடிகள்

12.8.19.....உலகிலேயே அதிகமான தமிழ்ச் சுவடிகள் சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில்தான் உள்ளது. இங்கு, 26 லட்சம் ஓலைச்சுவடிகளை கொண்ட, 72,748 சுவடி கட்டுகளும், 25,373 ஆய்வு நூல்களும் உள்ளன.பலரும் ஓலைச் சுவடிகள் என்றதும் தஞ்சை சரபோaயி நூலகத்தையே எண்ணுவர் .ஆயினும் உண்மை சற்று ஆழத்தில் அறியப்படாமலேயே எப்போதும் இருக்கிறது .

இந் நூலகம் ஆராய்ச்சிக் கருவூலமாகத் திகழ்வதைக் கருத்திற்கொண்டு முனைவர் சு.சௌந்தரபாண்டியனின் முயற்சியால் ’அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் மற்றும் ஆய்வு மையம்’ என்று பெயர் மாற்றப்பட்டுத் தற்போது இப்பெயரிலேயே இது இயங்கிவருகிறது.

இம் மையத்தில் தற்போது தமிழ், வடமொழி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பாரசீகம், அரபு, உருது, சிங்களம் ஆகிய மொழிகளிற் சுவடிகள் உள்ளன. சுவடிகளில் ஓலைச்சுவடிகளும் தாட் சுவடிகளும் அடங்கும்.இது முழுக்க முழுக்க மாநில அரசு நிறுவனமானமாகும் .

காலின் மெக்கன்சி (1754-1821), லேடன் (Dr.LeYdan), சி.பி.பிரௌன் (Mr.C.P.Brown) ஆகிய மூவரின் தொகுப்புக்களே இந் நூலகம் உருவாவதற்கு ஆதாரமாகும். இம்மையத்தில் இலக்கியம், இலக்கணம், வரலாறு, தத்துவம், அறிவியல், வானியல் முதாலன பிரிவுகளைச் சேர்ந்த சுவடிகள் உள்ளன. தமிழ்நாடு, ஆந்திர மாநில வரலாறுகளைக் கூறும் கைபீதுகளும் (Kaifyats) இருக்கின்றன.

காலின் மெக்கன்சி (Colin Mackenzie, 1754 – 8 மே 1821) ஆங்கிலேய கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்காட்லாந்திய இராணுவ அதிகாரி. 1815 ஆம் ஆண்டு அவர் இந்தியாவின் முதல் தலைமை மதிப்பீட்டாளர் ஆனார்.

மெக்கன்சி, தொல்பொருள் சேகரிப்பு மற்றும் ஒரு கீழ்த்திசை நாட்டு ஆர்வலர்.ஆரம்பத்தில் தனிப்பட்ட ஆர்வத்தாலும் பின்னர் மதிப்பீட்டாளர் பணியின் பொருட்டும் தென்னிந்தியாவின் சமயம், செவிவழி வரலாறு, கல்வெட்டுகள் முதலியவற்றை உள்ளூர் உரைபெயர்ப்பாளர்களையும் அறிஞர்களையும் பயன்படுத்திப் பட்டியலிட்டார். 1799 ஆம் ஆண்டு திப்பு சுல்தானை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு மைசூர் வட்டாரத்தை மதிப்பிட பணிக்கப்பட்டார்.

மைசூர் வட்டாரத்தின் நிலப்பரப்பு விளக்கப்படங்கள், குறிப்புகள், தொல்பொருள் சிறப்புமிக்க இடங்கள் முதலியவற்றைக் கொண்ட நில வரைபடங்களை முதன்முதலாக உருவாக்கினார். ஆயிரக்கணக்கான சுவடிகள், கல்வெட்டுகள், மொழிபெயர்ப்புகள், நாணயங்கள் மற்றும் ஓவியங்களைக் கொண்ட அவரது திரட்டுகளை இந்திய அரசு நூலகம் அவரது இறப்பிற்குப் பின் கையகப்படுத்தியது. அவரது திரட்டுகள் இந்திய வரலாற்றைப் பற்றி அறிந்து கொள்ள இன்றியமையாத சான்றுகளாகத் திகழ்கின்றன.

சுவடிகளைக் கொண்டு ஆராய்ச்சிகள் தற்போது அரிதாகவே நடைபெற்றுவரும் நிலையிலும் இம்முயற்சி முற்றிலும் மானுடவியல் துறைகளில் முழுமையான தரவுகளாகப் பயன்படுத்தப்படாத சூழலிலும் ‘மெக்கன்சி சுவடிகளில் தமிழகப் பழங்குடிமக்கள்’ என்ற தலைப்பில் தஞ்சைத் தமிழ் ப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முயற்சியே நூலாக்கம் பெற்றுள்ளது. அவரின் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகமெங்கும் ஓலைச் சுவடிகள் தேடும் பணி நடைபெற்றது .அதில் பெரும் பங்காற்றும் நல்வாய்ப்பும் எனக்கு கிடைத்தது.

தென்னிந்திய மொழி மற்றும் வரலாறு குறித்த ஆய்வுகளில் எல்லீஸ், கால்டுவெல் போன்ற குறிப்பிடத் தக்க சிந்தனையாளர்களில் ஒருவர்தான் ஐரோப்பியரான கர்னல் காலின் மெக்கன்சி என்ற ஸ்காட்லாந்து நாட்டவர். இவர் இந்தியாவில் வட இந்திய வரலாறு பெறுகின்ற முக்கியத்துவத்தைப் போன்று தென்னிந்திய வரலாறு கவனம் பெறாத சூழலில் தென்னிந்திய வரலாறு குறித்து பல்வேறு ஆவணங்களைப் பல்வேறு உதவி யாளர்களின் துணைகொண்டு தொகுத்தவர். தமிழகப் பழங்குடி மக்கள் குறித்த இவரது ஆவணத் தொகுப் பானது 1816இல் தொடங்கப்பட்டுள்ளது. இவர் 1783இல் கிழக்கிந்தியக் கம்பெனி மூலம் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு வந்தவர். இவர் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி நடத்திய போர்களில் பங்கு பெற்ற தோடு பல்வேறு பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் முதலில் சென்னை மண்டலத்திற்கும் பின்பு அனைத்து இந்தியாவிற்குமான முதல் தலைமை நில ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்றார். இவர் இத்தகைய பணிகளுக்கிடையேதான் தொல்பொருள் களைச் சேகரிக்கும் பணியை மேற்கொண்டார். இவர் சேகரித்தவற்றுள் கல்லிலும் செம்பிலுமாக இடம் பெற்றுள்ள 3000 சாசனங்களும் 15 மொழிகளைச் சேர்ந்த 1568 சுவடித் தொகுப்புகளும் 8076 கல்வெட்டுகளும் 2630 பாறை ஓவியங்களும் 78 வரைபடங்களும் 6218 நாணயங்களும் 102 படிமங்களும் அடங்கும் என்று ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறு தொகுக்கப்பட்ட மெக்கன்சியின் சுவடிகளில் 1534 சுவடிகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுவடிகளாகும். இவை இலக்கியம், வரலாறு, பண்பாடு, வாழ்க்கைமுறை, சாதியமைப்பு, அரசர்கள், பாளையக் காரர்கள், பழங்குடி மக்கள் பற்றிய செய்திகளை உள்ளடக்கியது. இவற்றுள் தமிழகப் பழங்குடி மக்கள் பற்றிய 16 சுவடிகளை ஆசிரியர் இங்கு ஆய்விற்கு எடுத்துக் கொண்டுள்ளார். இவற்றுள் 11 மூலச் சுவடிகளும் 5 படியெடுக்கப்பட்ட சுவடிகளும் அடங்கும். இச்சுவடிகளில் இடம்பெற்ற குறும்பர், வேடர், இருளர், ஏனாதியர், குறவர், வில்லியர், கரையர், பட்டணவர் லம்பாடியர், மலையரசர், குண்ணுவர் போன்ற பழங்குடி மக்கள் குறித்த செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு இடங்களுக்குச் சென்று கள ஆய்வு மேற் கொண்டு தொகுக்கப்பட்ட விவரங்களே இங்கு நூலாக்கம் பெற்றுள்ளது.

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதிக்கால மற்றும் பத்தொன் பதாம் நூற்றாண்டின் தொடக்கால சேகரிப்புகள், பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அட்டவணைப்படுத்தும் பணியை ஐரோப்பியச் சமூகம் செய்தது. ஆனால் அவை முழுநிறைவாக நடை பெற்றதாகக் கூறமுடியாது. இருபதாம் நூற்றாண்டின் இடைக் காலத்தில் தமிழ்ச்சூழலில் மெக்கன்சி சேகரிப்புகள் ஆவணப்படுத்தப்பட்டன.

- மெக்கன்சியின் கல்வெட்டுக்களை ‘தென்னிந்திய கோயிற் சாசனங்கள்’ எனும் பெயரில் பதிப்பித்த ஆய்வாளர் தி.நா.சுப்பிரமணியன்

இப்போது, 2,400 சுவடிக் கட்டுகளில் உள்ள 3 லட்சம் ஓலைச்சுவடிகள் எண்மப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து ஓலைச்சுவடிகளும் எண்மப்படுத்தப்பட்டு வெளியிடப்படும்'' என தொல்லியல் துறை ஆணையர் தா.கார்த்திகேயன் கூறினார்.

2015 ஜனவரி அன்று நடைபெற்ற விழாவில் கூறியுள்ளார் .

எண்மப்படுத்தப்பட்ட (டிஜிட்டல்மயமாக்கப்பட்ட) மூன்று லட்சம் ஓலைச்சுவடிகளை பள்ளிக் கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி இணையதளத்தில் அன்று வெளியிட்டார்.

தொல்லியல் துறையின் www.tnarch.gov.in என்ற இணையதளத்தில் நிகண்டு, இலக்கண விளக்கம், தொல்காப்பியம், நன்னூல், பன்னிரு பாட்டியல் உள்ளிட்ட ஓலைச்சுவடிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்-ஆய்வு மையத்தில் உள்ள 72,648 சுவடிக் கட்டுகளில் 26 லட்சம் ஓலைச் சுவடிகளையும், 25,373 ஆய்வு நூல்களையும் கொண்டிருக்கிறது.

""இப்போது,சென்னை அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில் உள்ள 2,400 சுவடிக் கட்டுகளில் உள்ள 3 லட்சம் ஓலைச்சுவடிகள் எண்மப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் அனைத்து ஓலைச்சுவடிகளும் எண்மப்படுத்தப்பட்டு வெளியிடப்படும்'' என தொல்லியல் துறை ஆணையர் தா.கார்த்திகேயன் கூறினார்.

நிகழ்ச்சியில், தமிழ்நாடு சுற்றுலா, பண்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரா.கண்ணன் பேசியது:

இந்த ஓலைச்சுவடிகளை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடலாம். பிரிட்டிஷார் ஆட்சிக்காலத்தில் ஓலைச்சுவடிகளுக்கு உரையெழுதி வெளியிடுவார்கள். அந்த உரைகளின் அடிப்படையிலேயே அனைத்து ஆய்வுகளும் நடக்கும். ஓலைச்சுவடிகளைப் பார்த்து யாரும் புதிதாக ஆய்வு செய்யவில்லை. ஆனால், இப்போது ஓலைச்சுவடிகளையே இணையதளத்தில் வெளியிடுவதால் யார் வேண்டுமானாலும் ஓலைச்சுவடிகளில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பதை நேரடியாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் என்றார் அவர்.

தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளர் டி.கே.ராமச்சந்திரன் பேசியபோது, ""இந்த 26 லட்சம் ஓலைச்சுவடிகளை எண்மப்படுத்தி வெளியிட்டால், புதிதாக இணையதளத்தில் ஆய்வாளர்களை உருவாக்க முடியும். இது நவீன காலத்தில் மிகப்பெரிய தமிழ்க் களஞ்சியமாக விளங்கும்'' என்றார் அவர்.

உலகின் முதல் இணைய சுவடிகள் நூலகம் என்ற பெருமையை பெற்றுள்ளது, அரசினர் கீழ்த்திசை சுவடிகள் நூலகம்.

இவ்வாறே நானும் தனிப்பட்ட முறையில் 2018 வரை எனது குழுவால் சேகரிக்கப்பட்ட சுவடிகளை

www .tamilsiddharsuvadigal .com எனும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளேன் . இதைப்பயன்படுத்தி அந்த சுவடிகளில் பொதிந்துள்ள அரி ய செய்திகளை அறியலாம், பிறரும் அறியச் செய்யலாம் சுவடிகள் பேணப்பட்டு பதிவுக்குப்பின் வைத்திருந்தவர்கள் வசமே ஒப்படைக்கப்பெற்றது .எதோ அடியேனின் ஒரு சிறிய தமிழ்த் தொண்டு !

அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகத்தில்தான் உள்ளஅனைத்து ஆவணங்களையும், ஸ்கேன் செய்து, இணையதளத்தில் வெளியிட தொல்லியல் துறைமுடிவு செய்தது. அதன் அடிப்படையில், எல்காட் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், ஓலைச்சுவடிகளை, லெமன்கிராஸ் எண்ணெய், சிட்ரெனெல்லா எண்ணெய், கார்பன் உள்ளிட்டவற்றை கொண்டு பதப்படுத்தி ஸ்கேன் செய்து, பதிவேற்றம் செய்து வருகிறது, தொல்லியல் துறை.

இந்த ஆவணங்கள், 600 டி.பி.ஐ., கொண்ட, டிப் வகை வண்ணப் படங்களாக மாற்றப்பட்டு, பி.டி.எப். வடிவத்தில், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை மூன்று லட்சம் பக்கங்களுக்கு மேல் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளன. அவை, http:/www.tnarch.gov.in என்ற இணையதளத்தில், பதிவேற்றப்பட உள்ளன.

இந்த செய்திகள் தினமணி நாளிதழில் 2015 பெப்ருவரி 01 அன்று வெளிவந்தது . மேலும் இந்த கட்டுரையில் இடம்பெற்ற செய்திகள் பலவும் இணையத்தில் தேடி தொகுக்கப்பட்டவை .தற்போது நண்பர்களின் நினைவூட்டலுக்காக மீண்டும் இதை தொகுத்து வழங்குகிறேன் .

அண்ணாமலை சுகுமாரன்

12/8/19