குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, ஐப்பசி(துலை) 27 ம் திகதி புதன் கிழமை .

இரண்டாம் வட்டுக்கோட்டை தீர்மானம்: காலத்தின் தேவையா ? இல்லையா?

10.08.2021...இலங்கைத்தீவில் குடியேற்றவாத முடிவுடன் ஈழத் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் ஆர ம் பமானது.தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அரசியற் செயற்பாடிற் கான தேசிய பிரகடனமாய் 1976 ஆம் ஆண்டு உருவாக்கிய வட்டுக்கோட்டைத் தீர்மானம் அமைகிறது.

அதாவது அது இலங்கைத் தீவில் தமிழர்கள் தம் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான பிரகடனமாய் அமைந்தது.

அந்த தீர்மானத்தின் அடிப்படையிலேதான் மூன்று தசாப்தங்களுக்கு மேலான கால ஆயுதப் போராட்டம் நிகழ்ந்து. எனினும் தமிழர்களின் தேசிய அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படாமல் தமிழினம் தொடர்ந்து அதிவேகமான இனவழிப்பை சந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இரண்டாம் வட்டுக்கோட்டை தீர்மானம் என்ற ஒன்றை அண்மையில் தமிழகத்தில் இருந்து உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் தலைமையில் நிறைவேற்றப்பட்டமை என்பது ஒரு முக்கியமான காலகட்ட நிகழ்வாகும்.

இந்த இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் இன்றைய காலத்திற்கு தேவையா? இது அவசியமா? அதுவென்ன இரண்டாம் தீர்மாமனம்? என பலவாறான கேள்விகள் பலருக்கும் எழுக்கூடும்.

அது அவரவர் அரசறிவியல் அறிவின் அளவின் வெளிப்பாடு. எனவே இதனை அரசறிவியல் வரலாற்றின் ஊடாகவும் அதாவது இயங்கியலின் அடிப்படையில் நோக்குவதுதான் சாலச் சிறப்புடையது. இன்றைய உலகம் உலகமயமாக்கல் முதலாம் கட்டம், இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் என அதன் ஒவ்வொரு காலகட்ட வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் அதை ஒவ்வொரு கட்டங்களாக படி முறைப் படுத்தப்படுகிறது.

லிபரலிசம், நியோலிபரலிசம் என அமைவது போல அனைத்து விடயங்களும் தொடர் வளர்ச்சிக்கும் அதேநேரம் மாற்றங்களுக்கும் உட்படுவது தவிர்க்க முடியாதது. அவ்வாறே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாம் கட்ட ஈழப்போர், இரண்டாம் கட்ட ஈழப்போர், மூன்றாம் கட்ட ஈழப்போர் என கால கட்ட வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் அவை பாகுபடுத்தப்படுவதை ஈழப் போராட்டத்திலும் பார்க்க முடிகிறது.

அந்த வகையிற்தான் 1976 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானம் 45 ஆண்டுகள் கடந்த நிலையில் உலகளாவிய வெளியுறவுக் கொள்கைகள் அரசியல் போக்குகளும் மாறி இருக்கும் சூழ்நிலையில் அந்த சூழலுக்கு இசைவாக விடுதலைப் போராட்டத்தின் மூலோபாயத்தில் மாற்றங்களின் தேவை எழுவதும், மாற்றங்களும் செப்பனிடுகை செய்யப்பட வேண்டியதும் அவசியமானதே.

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட காலத்தில் பனிப்போர் உச்சகட்டத்தில் இருந்தது. அன்று இலங்கையின் புவிசார் அரசியலில் இருந்த அரசியல் நிலையும் இன்று இருக்கின்றன அரசியல் நிலைகளும் வேறராக உள்ளன.

அன்றைய வட்டுக்கோட்டை தீர்மானத்தின் மூலமான ஈழத்தமிழர் கடைப்பிடித்த வெளியுறவுக் கொள்கை என்பது

1) அணிசேராக் கொள்கை,

2)விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்தல்

-என்ற இரண்டு பிரதான விடயங்களையே கொண்டிருந்தது. அதனையே பின்பற்றுவதற்கேற்ற போராட்ட வழிமுறைகளும் அதன் வியூகங்கள் வகுக்கப்பட்டன.

அன்று அண்டை நாடான இந்தியா அணிசேரா கொள்கையை கடைப் பிடித்த நாடாக காணப்பட்டது.

அதே நேரத்தில் இரசியாவுடன் 20 ஆண்டுகால பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்திருந்தது. எனினும் அது அணிசேராக் கொள்கையின் தலையாய நாடு என்று சொல்லிக்கொண்டு அது இரசியாவின் அணியில் இடம் பெற்றிருந்தது.

அவ்வாறே இலங்கை அணிசேர நாடாக இருந்து கொண்டு அது அமெரிக்கச் சார்பாக காணப்பட்டது. அதே காலத்தில் நடைமுறையில் சீனா ,அமெரிக்க சார்பு நாடாகவே இருந்தது. 1990 ஆம் ஆண்டின் பின்னர் பனிப் போரின் முடிவில் இரு அணிகள் என்ற நிலைமை இல்லாமல் போயிற்று.

அணிகள் இல்லாத இடத்தில் அணிசேரா நாடுகள் என்ற ஒன்று தேவையா? அது தேவையற்றது தானே. இப்பின்னணியில் 1990 இன் பின் இந்தப் பூமியில் அணிசேரா நாடு என்ற ஒரு நாடு கிடையாது போனது. அவ்வாறே அணிசேராக் கொள்கை என்ற ஒரு கொள்கையும் நடைமுறையில் இல்லாது போனது .

கடந்த 30 ஆண்டுகளாக ஒருமுனை உலக அரசியல் இருந்த காலகட்டம் மாற்றமடைந்தள்ளது. தற்போது கொரனாவின் பின்னான காலத்தில் ஒரு புதிய உலக ஒழுங்கு ஏற்படத் தொடங்கியிருக்கிறது. தற்போது உலகளாவிய அரசியலில் இருமுனை அரசியல் முகாமாக மையங்கொள்ளத் தொடங்கிவிட்டது. அன்று பனிப்போர்க் காலத்தில் இரசியா வகித்த பங்கை இன்று சீனா வகிக்க தொடங்கிவிட்டது.

அன்றைய அமெரிக்க சார்பான சீனா இன்று அமெரிக்காவின் எதிர்முனையில் நிற்கிறது. அன்றைய அமெரிக்காவின் எதிர்ப்பு நாடான இந்தியா இன்று அமெரிக்கா கூட்டுக்குள் நட்புநாடாக மாறிவிட்டது.

அன்று அமெரிக்க சார்பாக இருந்த இலங்கை இன்று சீனா சார்பாக மாறிவிட்டது.

இந்த மாற்றங்கள் அந்தந்த நாடுகளுக்கு தேவையாகவும் உள்ளது. அதுவே அவர்களின் பாதுகாப்பிற்கான வழியாகவும் உள்ளது என்பதுவே நடைமுறை வட சொல்லான (யதார்த்தம்.)

இந்தச் சூழ்நிலையில் ஈழப் போராட்டத்திலும் ஈழத் தமிழர்கள் தங்களுடைய போராட்டப் பாதையை தகவமைப்பு வேண்டிய காலத்தின் தேவையும் நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது.

அதற்கு ஏற்றவகையில் போராட்டத்தின் ஒவ்வொரு வழிமுறைகளிலும் மாற்றங்கள் செப்பனிடுகைகள் அவசியமானதே. உலக அரசியலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் ஏற்ற வகையில் அந்த மாற்றங்களுக்கு ஈடு கொடுக்கக் கூடிய வகையில் இலக்கு நோக்கிய அதன் பாதைகளை முறைப்படுத்துவது முக்கியமானதாகும்.

அந்த வகையிற்தான் ஆயுதப் போராட்ட காலத்திலும் காட்சிகளும், கட்டங்களும் மாறி மாறி வந்ததன்னை பார்க்க முடிகிறது. அந்த மாற்றங்களின் தொடர்ச்சி முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் கடந்த 12 ஆண்டுகளிலும் காண முடிகிறது.

இந்த தொடர் மாற்றங்களுக்கு ஏற்ற வகையிற்தான் வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலும் புதிய கட்ட வளர்ச்சிக்கு ஏற்ற புதிய கட்ட பரிமாணம் தேவைப்படுகிறது. மாற்றங்களும் திருத்தங்களும் இல்லையேல் வளர்ச்சி ஒரு போ தும் நடைபெறாது. மாற்றங்கள் என்பது வளர்ச்சிக்காக அமைய வேண்டும் என்பதை இங்கே முக்கியமானதாகும்.

ஈழப் போராட்ட அரசியல் செல்நெறியில் உலக அரசியலில் பல்வேறு காலகட்ட மாற்ற, வளர்ச்சியைச் சந்தித் திரு க்கிறது. குடியேற்றவாத முடிவு காலம், பனிப்போர் காலம், பனிப்போரின் பின்னான காலம், பனிப்போரின் பின்பின்னான காலம்(பின்லேடனுக்கு பிந்திய காலம்), முள்ளிவாய்க்காலின் பின்னான காலம் என பல காலகட்டங்களை கடந்திருக்கிறது.

ஒவ்வொரு காலகட்டத்தின் நிகழ்வுகளிலும் மாற்றங்கள் தேவைப்பட்டன. அந்த மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் நாம் புதிய வகையில் தேவைக்கேற்ற கட்டமைப்பு மாற்றங்களை செய்தாக வேண்டும். இந்தப் பின்னணியில் முள்ளிவாய்க்காலுக்கு பின்னான காலத்தில் உலகளாவிய அரசியலிலும், புவிசார் அரசியலிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன.

சீனாவின் இந்து சமுத்திர நுழைவு முற்றிலும் புதிய சீனாவின் வெளியுறவு கொள்கையை நடைமுறை அர்த்தத்தில் "" புதிய பட்டுப்பாதை"" என்ற பெயரில் அது உலகளாவிய மூலவளங்களை சீனாவுக்கு கொண்டு செல்வதையே இலக்காக கொண்டுள்ளது.

தமிழீழ நிலப்பரப்பின் கேந்திர முக்கியத்துவம் புவிசார் அரசியலில் என்றுமில்லாத அளவிற்கு அதன் முக்கியத்துவம் இன்று அதிகரித்து விட்டது. உலகளாவிய வர்த்தக போட்டியின் மையமாக இந்து சமுத்திரமும் அதன் மத்தியிலுள்ள ஈழத்தமிழர் நிலமும் இன்று பெரும் வல்லரசுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன.

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய சீனாவின் புதிய பட்டுப்பாதை கோட்பாடும், அதற்கு எதிராக அமெரிக்க இந்திய கூட்டிலான இந்தோ-பசிபிக் கோட்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டன.

இந்த இரண்டு புதிய கோட்பாடுகள் இரு முனைகளிலிருந்து வெளிப்படுத்தப்பட்ட காலத்தில் பூகோளம் முழுவதையும் பாதிக்கவல்ல கொரோனா உயிர்க்கொல்லி நோய் வந்துவிட்டது. இப் பேரிடரின் பின்னான காலத்தில் பிரகடனப் படுத்தப்படாத ஒரு உலக ஒழுங்கு ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

இது வரையறுக்கப் படவில்லை என்பது வேறுவிடயம். இவை எல்லாம் உலகளாவிய அரசியலில் முக்கிய பண்பு நிலை மாற்றத்தை வெளிக்காட்டி நிற்கிறன.

இவ்விரண்டு முனைகளுக்கும் அவற்றின் கோட்பாடுகளுக்கும் இடையில் அகப்பட்டு இருக்கும் இலங்கைத் தீவையும் அதில் முக்கிய பாத்திரம் வகிக்கப் போகும் ஈழத்தமிழர்கள் தமது அரசியல் சாதுரியத்தை வெளிக்காட்ட வேண்டிய காலமாக இக்காலம் அமைந்து காணப்படுகிறது.

வரலாற்று வளர்ச்சி தமிழர்களுக்கு புதிய கட்டளைகளை பிறப்பித்திருக்கிறது.

காலத்திற்கும் சூழலுக்கும் பொருத்தமான மூலோபாயங்களை வகுக்க நிர்ப்பந்திக்கிறது.

இந்த அந்த வகையில் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் 45 ஆண்டுகால தொடர் மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் இன்றைய சூழலில் புதிய மூலோபாய ஒழுங்குபடுத்தலை வெளிப்படுத்துவதாக இரண்டாம் வட்டுக்கோட்டைத் தீர்மானம் அமைவதில் தவறு ஏதும் இல்லை.


-தி. திபாகரன், M.A.