உறவாடி கெடுக்கும் சமசுகிரதம் கலக்கும்போது கண்டுகொள்வது கடினம். இந்தக் கலப்பினை மேற்கொள்ளுபவர்கள் முதலில் தமிழும் சமசுகிரதமும் இரண்டு கண்கள் என ஆரம்பித்து; கலப்பு ஒரு கட்டத்தைத் தாண்டியபின்...
தமிழால் தனித்து இயங்கமுடியாது, அது ஒரு செம்மொழியல்ல, சமசுகிரதத்தின் வழித்தோன்றலே தமிழ் என்றெல்லாம் கதை பேசுவார்கள். இந்த சூழ்ச்சி நோக்கிற்காக சிவபெருமானையும், அரசனையுமே துணைக்கழைப்பார்கள் (வீரசோழியம்).
இவ்வாறான முயற்சியால் மூன்றில் இரண்டு பங்குத் தமிழர்களை ஏற்கனவே தெலுங்கு, கன்னடம், துளு மற்றும் மலையாளம் எனப் பிரித்தெடுத்துவிட்டார்கள். இன்று வழக்கில் நாம் பயன்படுத்தும் தமிழிலும் ஏறக்குறைய 10 முதல் 30 வரையான விழுக்காடு அளவிற்குக் கிரந்தச்சொற்கள் கலந்துள்ளன. எஞ்சியுள்ள தமிழையும் அழிக்கும் முயற்சியினையே இப்போதும் செய்துவருகிறார்கள்.
"தமிழிலுள்ள சொற்கள் யாவுமே பொருள் குறித்தனவே". எனவே வேர்ச்சொல் விளக்கம் உரிய முறையிலிருந்தால், அச் சொல் தமிழே. வடமொழிச் சொற்களை இனங் காண்பதற்குச் சில வழிமுறைகளிலிருக்கின்றன. அவற்றினை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
ஒரு சொல்லில் கிரந்த எழுத்துகள் { ஸ,ஷ,ஜ,ஹ,ஸ்ரீ...} இருந்தால் அச் சொல் தமிழல்ல. [வருஷம் = ஆண்டு, சந்தோஷம் = மகிழ்ச்சி]. அதே வேளை சில தமிழ்ச் சொற்களிடையே கிரந்த எழுத்துகளை வலிந்து புகுத்தியுள்ளார்கள் (எ.கா- புஸ்தகம், வேஸ்டி). இவற்றில் கிரந்த எழுத்துகளை நீக்கிப் பயன்படுத்த வேண்டும் (எ.கா- புத்தகம், வேட்டி).
2. பெருமளவிற்கு முன்னொட்டுக் கொடுத்து எதிர்ச்சொற்கள் ஆக்கப்படும் `சொல்-இணைகள்` வடமொழிச் சொற்களே. குறிப்பாக `அ` முன்னொட்டுப் பயன்படுத்தப்படும் இணைகள். [சாதரணம்- அசாதரணம் இது தமிழில் வழமை – வழமையல்லாத]
3. தமிழில் முதலெழுத்தாகச் சில எழுத்துகள் ( ட, ண, ர, ல, ழ, ள, ற, ன) வராது. அவ்வாறு வந்தால் அவை வடமொழிச் சொற்களே! [ரதம் =தேர், லட்சியம் = இலக்கு]
4. தமிழில் குறில் எழுத்தில் தொடங்கும் தமிழ்ச்சொல்லுக்கு அடுத்து `ர்` என்ற மெய் தோன்றாது. அவ்வாறு தோன்றின் அது தமிழல்ல [அர்த்தம் = பொருள், சர்வம் = எல்லாம்]
5. `சௌ` என்ற எழுத்தில் தொடங்கும் சொற்களும் தமிழாகாதவை. [சௌக்கியம்]
மேற்கூறிய முறைகளைக் கடைப்பிடித்துப் பெருமளவு சொற்களை இனங்கண்டு கொள்ளலாம். இவற்றினைத் தவிர ஏனைய வட சொற்களை வேர்ச்சொல் விளக்கம் மூலமே கண்டுகொள்ள முடியும்.
இறுதியாக வடமொழிச் சொற்களும் அவற்றுக்கான தமிழ்ச் சொற்களையும் உள்ளடக்கிய நூலினைக் கீழுள்ள இணைப்பில் காண்க.