குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

மொழிஞாயிறு' தேவநேயப் பாவாணர் பிறந்த நாள்...07.02.1902 மிழர்விடுதலை என்றதான் சொன்னார்

16.04.2021...03.04.(மேழம்) திருவள்ளுவராண்டு 2052 !

பாவாணர் அவர்கள் எப்போதும் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. அவரிடம் தமிழன்பர்கள் சிலர் பிறந்தநாள் செய்தி கூறுமாறு வேண்டிய போது "நான் பிறந்தநாள் கொண்டாடுவதும் இல்லை; அதற்குச் செய்தியும் இல்லை" என்று கூறிவிட்டார். விழாக் கொண்டாடா விட்டாலும் உங்கள் பிறந்தநாளையொட்டித் தமிழ் மக்களுக்குச் சொல்ல விரும்பும் அறிவுரையைக் கூறலாமே!... என்று வேண்டவே, பாவாணர் தம் பிறந்தநாள் செய்தியாக விடுத்தது வருமாறு:

"இந்து மாவாரியில் மூழ்கியுள்ள குமரிக் கண்டத் தென் கோடியில் கி.மு. 50000 (ஐம்பதினாயிரம்) ஆண்டுகட்கு முன்பே முழுவளர்ச்சி அடைந்த தமிழே உலக முதல் உயர் தனிச் செம்மொழியும் திரவிடத் தாயும் ஆரிய மூலமும் ஆகும். தேவமொழி என்று ஏமாற்றித் தமிழகத்திற் புகுத்தப்பட்ட சமற்கிருதம் என்னும் வடமொழியாலேயே தமிழ் தாழ்த்தப்பட்டது; அதனால் தமிழனும் தாழ்த்தப்பட்டான். தமிழன் மீண்டும் முன்னேறுவதற்குத் தமிழ் வடமொழியினின்றும் விடுதலையடைதல் வேண்டும்.

"வடமொழியினின்று தமிழை மீட்பதே என் வாழ்க்கைக் குறிக்கோள். தமிழ் உயர்ந்தால் தான் தமிழன் உயர முடியும். அதற்குத் தமிழர் இனி எல்லா வகையிலும் தமிழையே போற்றுதல் வேண்டும்.

"முதற்கண் தமிழர் அனைவரும் தமிழ்ப்பெயரே தாங்கல் வேண்டும். ஆண்டில் ஒரு நாளைப் பெயர் மாற்றத் திருநாள் என்று இனி ஆண்டுதோறும் கொண்டாடி வருவது நன்று. பிறந்த அண்மையில் பிறமொழிப் பெயர் பெற்றவர் எல்லாரும் அந்நாளில் தம்பெயரைத் தனித்தமிழ்ப் பெயராக மாற்றிக் கொள்ளலாம். அதை இல்லத்தில் விழாவாகக் கொண்டாடுவதுடன் ஊர்வலத்தாலும் ஊரார்க்கு அறிவிக்கலாம்.

"தமிழ்ப்பெயர் தாங்குபவரே உண்மைத் தமிழர் ஆவர். தமிழ்ப்பெயர் ஏற்றபின் தமிழிலேயே திருமணத்தையும் இருவகைச் சடங்குகளையும் செய்தலும் செய்வித்தலும் வேண்டும். கடவுள் நம்பிக்கை உள்ளவர் திருவழிபாட்டையும் தமிழிலேயே ஆற்றுதல் வேண்டும். இங்ஙனம் தொடர்ந்து செய்துவரின் இன்னும் ஐந்து ஆண்டிற்குள் தமிழர் தம் அடிமைத்தனமும் அறியாமையும் அடியோடு நீங்கி மேலையர் போல் புதுப்புனைவு தலைப்படுவர் என்பது திண்ணம்.

"ஆங்கிலர் நீங்கியதால் தமிழ்நாடு விடுதலையடைய வில்லை. ஆரியம் நீங்குவதே தமிழர் விடுதலையாகும்."

பாவாணர் காலத்தில் வடமொழி ஆதிக்கம் இருந்தது. தற்போது ஆங்கிலமொழி ஆதிக்கம் கூடி விட்டது. அவர் உயிரோடிருந்திருந்தால் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியாக, "ஆரியத்தோடு ஆங்கில ஆதிக்கமும் நீங்குவதே உண்மையான தமிழர் விடுதலையாகும்" என்று தான் திருத்தி முழங்கியிருப்பார்!