தீர்மானம் பற்றிய விபரம்:
ஐ.நா தீர்மானம் இலங்கைக்கு தோல்வி, ஆனால் தமிழர்களுக்கான நீதியல்ல அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளது.
இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை இலங்கை அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானமாக காணப்படுகின்றது.
ஐ.நா மனித உரிமைச்சபையில் பிரித்தானியா தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பிலான தீர்மானத்துக்கு A/HRC/46/L.1 ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. வாக்கெடுப்பில் 14 பங்கேற்கவில்லை.
அண்மைக்காலத்தில் அனைத்துலக அரங்கொன்றில் இலங்கைக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக இது உள்ளது.
கடந்த காலத்தில் இலங்கை சாமார்த்தியமாக 'பயங்கரவாதத்தின் மீதான போர்' என்று பூச்சாண்டி காட்டி உத்திகளைக் கையாண்டது. 2015ல் ஏமாற்று அரசியலைக் கையாண்டு ஐ.நா மனித உரிமை;சபையின் 30/1 தீர்மானத்தைப் பிற நாடுகளுடன் கூட்டாக முன்மொழிந்து விட்டு, அதனைச் செயலாக்காமல் அனைத்துலக சமூகத்தினை சமாளித்திருந்தது.
ஏற்கெனவே தங்களிடம் சான்று இருப்பதாக ஐ.நா மனிதவுரிமைச் சபையின் துணை ஆணையாளர் மெர் கான் வில்லியம்ஸ் கூறியுள்ள போதிலும், புதிய தீர்மானத்தில் ஒரு கூறு 'ஐ.நா ஆணையாளர் அலுவலகம் தகவலும் சான்றும் திரட்டவும் ஒருங்கமைக்கவும் பகுத்தாராயவும் பாதுகாக்கவும் வேண்டும்' என்று கேட்டுக் கொள்வதாக' உள்ளது. இது பாதிக்கப்பட்ட தமிழர்களை ஆற்றுப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட வெற்றுக்கூடான உள்ளடக்கமாக இது தோன்றுகிறது.
மேலும் ஐ.நா மனிதவுரிமைப் சபையில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வி, அனைத்துலக இராயதந்திர தளத்தில் இலங்கை ஒதுக்கி வைக்கப்பட்ட அரசாகிக் கொண்டிருப்பதை வெளிக்காட்டுகின்றது.
இந்தத் தீர்மானம் இலங்கை விவகாரத்தில் பின்னோக்கி சென்றுள்ளது. பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த நீதிபதிகளும் அயல்நாட்டு நீதிபதிகளும் பங்கேற்க வேண்டுமென 2015ம் ஆண்டு தீர்மானம் முன்மொழிந்திருந்தது. ஆனால் இன்றைய தீர்மானமோ பொறுப்புக்கூறலை முழுக்க முழுக்க ஓர் உள்நாட்டுப் (சிறிலங்கா) பொறிமுறையிடமே விட்டுவிடுகிறது.
நாகரீக நாடுகளின் சட்டப்புத்தகங்களில் அசிங்கமான கறையாக வர்ணிக்கப்படும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைப் பொறுத்த வரை, 2015 தீர்மானத்தில் இடம்பெற்ற 'நீக்கம்' என்ற சொல் இன்றைய தீர்மானத்தில் காணப்படவில்லை.
இலங்கை அரசாங்கத்தின் உயர்நிலையில் இருப்பவர்கள் போர்க்குற்றங்கள் புரிந்திருப்பதைத் தெளிவாகக சுட்டிகாட்டும் வகையில் ஐ.நாவின் மூன்று அறிக்கைகள் உள்ளன. (ஐநா வல்லுநர் குழு அறிக்கை, உள்ளக ஆய்வறிக்கை (பெட்ரி அறிக்கை எனப்படுவது), இலங்கை தொடர்பான மனிதவுரிமை ஆணையாளர் அலுவலக OISL அறிக்கை)
இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவும், உலகளாவிய மேலுரிமையினை இலங்கை தொடர்பில் அனைத்துலக சமூகம் செலுத்த வேண்டும் என ஐநா உயராணையர் மிசேல் பசலே ஏற்கெனவே விடுத்த அழைப்பில் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைச்சபையின் 4 முன்னாள் ஆணையாளர்களும், இலங்கைக்குச் சென்றுவந்த 13 முன்னாள் ஐநா சிறப்பு அறிக்கையாளர்களும், இலங்கை தொடர்பான ஐநா பொதுச் செயலரின் வல்லுநர் குழுவில் இடம்பெற்ற 3 உறுப்பினர்களும் இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பக் கோரியிருந்தார்கள்.
தற்போதைய ஐ.நா கூட்டத் தொடரினை மையப்படுத்தி தாயக தமிழர் அரசியல் தரப்புக்களும், தமிழ் சிவில் சமூகமும், தமிழ் சமயத் தலைவர்களும், புலம்பெயர் தமிழர் அமைப்புக்களும், தமிழுலகமும், உட்பட பலரும் தமது முதன்மைக் கோரிக்கையாக இதனை முன்வைத்திருந்தனர்.
இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் கொண்டுபோய் நிறுத்துவதற்குத் தேவைப்படுவது நாடுகளிடத்திடத்தில் அரசியல் மனத்திட்டம்தானே தவிர புதிய செயல்திட்டமன்று.
அரசுகளின் கட்டுப்பாட்டிலுள்ள மன்றங்களில் நீதி பெறுவதில் அரசுகளற்ற தேசங்கள் சந்திக்கும் சவால்களை ஐநா மனிதவுரிமைச் சபையின் இன்றைய தீர்மானம் காட்டுகிறது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பும் உலகச் சமுதாயமும் சுயநிர்ணய உரிமையை ஓர் அடிப்படைக் கொள்கையாக ஏற்றுள்ள போதிலும், அதனை நீதி நோக்கில் பயன்படுத்தும் முயற்சியை இப்போதிருக்கும் அரசுகள் தமது நலன்களின் அடிப்படையில் வழிமறிப்பதே வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்தத் அரசுகள் தமது 'இறைமையையும்' 'ஆட்சிப்புலக் கட்டுக்கோப்பையும்' கட்டிக் காப்பதன் போர்வையில், நாசிக் கொடுமைகளை நினைவுபடுத்தும் இனஅழிப்புக்களையும், மானிடக்குற்றங்களை நடத்தத் தயங்குவதில்லை. மனிதவுரிமைகள் பற்றியும் சனநாயகம் பற்றியும் நீட்டி முழக்கும் உலக அரசுகள் தம் புவிசார் அரசியல் நலன்களுக்காக இந்தக் குற்றங்களைக் கண்டுகொள்வதில்லை என்பதே உண்மை. சுவிசு தகவல் மையம்.செய்திகள்.