குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தாய்மொழிக் கல்வியும் பன்மொழிக் கல்வியும் – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐநாவின் வழிகாட்டல்கள்! தமிழச்

செல்வன்26.02.2021....எந்தவொரு நாடும், அதன் கல்வியின் மூலம் மட்டுமே கலை, பண்பாடு, வரலாறு அதன் ஒருங்கிணைப் பிலான ’தேசம்’ என்னும் கோட்பாட்டையும், அதன் அரசியலையும் தனித்த ’இறையாண்மை’ யையும் நிலைநிறுத்த முடியும். இதனை ஐரோப்பிய நாடுகள் மிகத் தீவிரமாகக் கடைப்பிடிப்பதாலேதான் தத்தமது தாய்மொழியினைக் கொண்டே பயிற்றுவிக்கிறது எனலாம்.

 

தாய்மொழிவழியே பிற மொழிக் கல்விப் பிரகடனம்:

பல மொழி மக்கள் செறிந்து வாழும் நிலப்பகுதிகளில், அந்தந்த நிலத்தின் ஆதிக்க மொழி அல்லது ‘தேசிய’, ‘அலுவல்’ மொழி கல்வி மொழியாக இருக்கும் நிலையில், சிறுபான்மை மொழியினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த நீண்ட கால ஆய்வினை ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பினர் செய்து வருகின்றனர்.

அடிப்படையில் சில முன்மொழிவுகளை அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். இடம்பெயர்ந்தோ, மொழிச் சிறுபான்மையினராக வாழ்பவர்களின் குழந்தைகள் தங்கள் குடும்பம், சமூகம் சாராத மொழியில் கல்வி கற்கும் பொழுது, பெரும்பான்மை சமூகத்தில் இருந்து விலகி நிற்க வேண்டிய அவலத்திற்குத் தள்ளப்படுவதோடு, சமூக, அரசியல் ஓட்டத்தில் பங்குக்கொள்ள முடியாமலும் போவதாக கண்டறிந்தனர்.

புதுமொழியினை கற்கும் சூழல் உள்ள எவரும் முதலில் தாய்மொழியினை முறையாக கற்க வேண்டும் என்ற வழிகாட்டல் நெறிமுறைகளை , “Mother tongue based multi-lingual education MTB-MLE” என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் வழங்கினர்.


இதனை ஐரோப்பிய நாடுகள் தத்தமது நாடுகளில் பின்பற்றி வருவதையும் அவர்களது நடைமுறைகளையும் அடுத்தடுத்துப் பார்க்க இருக்கிறோம்.


ஐரோப்பிய நாடுகளும் கல்வியும்:


தாய்மொழி வழியிலான கல்வியினை ஐரோப்பிய நாடுகள் முழுமையும், சீனா, யப்பான், கொரியா, இந்தோனேசியா, தென் அமெரிக்கா நாடுகள் மற்றும் பல மொழிகள் பேசும் சிறு சிறுத் தீவுகள் கூட நடைமுறைப்படுத்தி வருவதையும், பிரித்தானியாவின் காலனியாதிக்கத்தில் இருந்த நாடுகள் மட்டுமே ஆங்கில வழிக்கல்வியை இன்னும் தக்க வைத்திருக்கிறது என்பது நாம் யாவரும் அறிந்ததே! தாய்மொழிக் கல்வி வழியாக தத்தமது கலை, பண்பாடு, வரலாறை தக்க வைக்க முடியும் என்ற அடிப்படையும் உள்ளடங்குகிறது.


ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் பன்னாட்டு அளவிலான கல்வியியல் ஆய்வுகள் மற்றும் வழிகாட்டல்களையும் கருத்தில் கொண்டு, ஐநாவின் கல்வி உரிமை சாசனங்களையும் பின்பற்றி, ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகளையும் ஏற்றுக்கொண்டு, தத்தமது நாட்டிற்கெனத் தனித்த விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறார்கள்.


அதேவேளை, கல்வித்துறையின் செயற்பாட்டு வடிவங்கள் எந்த அளவிற்கு அதிகாரப் பரவலாக்கம் செய்து, சிறு சிறு நிலப்பகுதிகள்/ உள்ளாட்சி அமைப்புகளின் ஆளுகையின் கீழ் கொண்டுச்செல்ல முடியுமோ, அவ்வளவு அதிக அளவிலான அதிகாரப்பகிர்வு நடத்தப்பட்டிருக்கும். அதேவேளை கல்வி மொழி மற்றும் பன்மொழிக் கல்வி முறை குறித்தும் ஐரோப்பிய நாடுகள் சில அடிப்படை கொள்கையினை பின்பற்றி வருகிறது எனலாம்.


நவீன தாராளமய, உலகமயமாக்கல் சூழலில் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப வளர்ச்சி ஒருங்கிணைவு ’ஆங்கில’ மொழியினை மையப்படுத்தி இருக்கும் நிகழ்காலச் சூழலிலும், ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் பல்லின மக்கள் பன்முகத்தன்மையோடும் பலக்கலாச்சாரங்களோடும் பெருந்திரளாக மாறி நிற்கும் சூழலிலும்,  ஐரோப்பிய நாடுகள் தத்தமது கல்வியில் அவரவர் தாய்மொழிக் கல்விக்கான சீர்கேடு ஏதும் நிகழாமல், அதேவேளை பல்லின மக்களின் தாய்மொழியினையும் கல்வியில் இணைத்துக்கொண்டு, அதேவேளை, ஆங்கிலத்தையும் முறையாக பயிற்றுவித்து வருகிறது.


ஐரோப்பிய நாடுகளில், மொழிச் சிறுபான்மையினரின் தாய் மொழிக் கல்விக்கான உரிமையினை ’மொழிச்சிறுபான்மை உரிமை’ என்றும் இந்நாடுகளுக்கு இடம்பெயர்ந்தோர், குடியேறிய பிற இனக்குழுக்களுக்கான கல்வி உரிமையினை ’மொழியியல் மனித உரிமை’ என்ற சட்ட விதிமுறைகளின் கீழாக அணுகுகிறார்கள் என்பதை நினைவில் கொள்க!


ஐரோப்பிய நாடுகளின் கல்வி உரிமைப் பிரகடனம்:



ஐரோப்பிய நாடுகள் பின்பற்றும் ஐரோப்பிய ஒன்றிய விதிமுறைகள் என்ன?


ஐரோப்பிய நாடுகளின் கூட்டு அரசுகளின் (28 நாடுகள்) அரசியல் அதிகார மையமான ஐரோப்பிய பாராளுமன்றமும் இதற்கென பல முன்மொழிவுகளை அனைத்து ஐரோப்பிய உறுப்பு நாடுகளுக்கும் பொதுவான கல்வித்துறை பரித்துரைகளை முன்மொழிந்திருந்தன.


அவற்றில்,


அரசியல் காரணிகளுக்கு அப்பாற்பட்டு, கல்வியியல் காரணங்களையும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பியல் தொடர்பான அறிவியல் ஆராய்ச்சிகள், எல்லோரும் பராமரிக்க வேண்டிய மொழியியல் மரபு, பண்பாட்டுக்கூறுகள் என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, கல்வி வழங்கல் முறை தாய் மொழியிலானதாக இருக்க வேண்டும்.

வகுப்பறை மொழித்தொடர்பு, மாணாக்கரின் அறிவுத்தேடல், புரிதல், வளர்ச்சி ஆகியவைகளில் தாய் மொழி மிக முக்கியம் என்பதை ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ளுதல் அவசியம்.

ஐரோப்பியராகவும் இருந்து சிறுபான்மை மொழி பேசும் மக்கள் பிரிவினராக இருக்கும்பட்சத்தில், அந்நாட்டின் அரச மொழியிலான கல்வியில் பயில வேண்டியதில்லை. சிறுபான்மை மொழிப்பிரிவினருக்கு அவரவர் மொழியில் கல்வி கற்க எல்லா உரிமைகளும் உண்டு.

மொழி சிறுபான்மை பிரிவினர், தத்தமது மொழியில் கல்வி கற்கும் அதேவேளையில், அரசின் அலுவலக மொழியினை கற்பதும் மிக அவசியமாகிறது. (இதனை, தமிழ்நாட்டில் குடிப்பெயரும் பிற மொழிப்பிரிவினர் அவரவர் தாய்மொழிக் கல்விக் கற்கும் அதேவேளை, தமிழை கட்டாயம் அரசின் அலுவலக மொழி என்ற அடிப்படையில் கற்க வேண்டும் என்ற அளவில் ஒப்பிட்டுப் புரிந்துக்கொள்ளலாம்).

அரசின் அலுவலக மொழியினையும் கல்வி மொழியையும் அறியாத பிற மொழிப் பிரிவினரின் குழந்தைகள் கல்வி மொழியாக தத்தமது மொழி தவிர்த்து அலுவலக மொழியின் அடிப்படையில் புது மொழியினை கல்விக் கற்கும் சூழலில், அவர்கள் கல்வி கற்கும் திறன் முற்றிலும் சிதைய வாய்ப்புள்ளதால், அத்தகையச் சூழலில் இருமொழிக் கல்வியின் அடிப்படையில் அக்குழந்தைகளுக்கான கல்வியைத் தொடங்குவதே சரியானதாக இருக்கும்.

இருமொழிக் கல்வி, பலமொழிக் கல்வியின் மூலம் தத்தமது பண்பாட்டு, இனக்கூறு விழிமியங்களை குழந்தைகள் மறக்க வாய்ப்புண்டு என்ற கருதுகோலினை பல ஆய்வுகள் மறுத்துள்ளதோடு, இருமொழி, பலமொழிக் கல்வி அவரவர் பண்பாட்டு, இனக்கூறு விழிமியங்களுக்கு வலுச்சேர்க்கவே செய்யும் என்ற ஆய்வுகளின் முடிவையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய உறுப்பு நாடுகள், தத்தமது நாடுகளில் குடிப்பெயர்வோர், போரின் காரணமாக புலம்பெயர்ந்து குடியேறியோர், என பல்வேறு பண்பாட்டு, மொழி, இனக்கூறுகளில் பின்னணியில் வந்தோருக்கு இருமொழிக்கல்வியை வழங்கும்பொழுது அவரவர் பின்னணியைக் கருத்தில் கொண்டு, முறைப்படியான கொள்கை வகுத்து இருமொழிக் கல்வியினை ’இடைநிலை’, ’இடைக்கால’ ’இணைப்பு’ என்ற அடிப்படையில் இல்லாது ’பலமான’, ’நேர்த்தியான’ அடிப்படையில் கல்வி வழங்கும்பொழுதே கல்வி என்பது முழுமை பெறும்.


பன்மொழிச் சூழல் கல்வியில் தாய்மொழியின் பங்கு:


தாய்மொழிக் கல்வியும் பிறமொழிகள் கற்பதன் அவசியம் என்னும் கட்டுரையில், பல மொழிகளை கற்க எவ்வாறு தாய் மொழி அவசியமாகிறது என்று விரிவாக்கியுள்ளேன்.


1949இல் நோர்வே, சுவீடன், டென்மார்க், இங்கிலாந்து உள்ளிட்ட 10 நாடுகள் இணைந்து வெளியிட்ட ஐரோப்பிய ஆணையக் கூட்டுப் பிரகடனத்திலேயே, பன்மொழி சூழலில் வளரும் குழந்தைகளுக்கான தாய்மொழிக் கல்வி உரிமைப் பற்றித் தெளிவாக குறிப்பிட்டு இருந்தனர்.


ஐரோப்பிய ஒன்றிய அரசுகள், 1998, 2004, 2006, மற்றும் 2007இல் வெளியிட்ட கல்வி வழிகாட்டல் நெறிமுறைகளில், ”எந்தவொரு குழந்தையும் அதன் குடும்பச் சமூகத்தின் முதன் மொழியினை கற்காமல் இரண்டாவது மொழியினைக் கற்கும் நிலை இருக்கக்கூடாது. அது, அக்குழந்தையின் இரண்டாவது மொழியினை கற்கும் திறனையே பாதிக்கும். அதேப்போல, பன்மொழிச் சமூக வாழ்வியலில், அவரவர் தாய்மொழியினை முறையே கற்று, புலம்பெயர்ந்தச் சூழலின் அலுவலக மொழியினைக் கற்பது, அக்குழந்தையினை புலம்பெயர்ந்த நாட்டினுள் நல்லிணக்கத்துடன் வெற்றிகரமாகவும் அமைத்துக் கொடுக்கும்” என எடுத்துக்கூறியது.multicultural-marketing


மேலும் கும்மின் (1989, 2002, 2010) மற்றும் கார்சியா (2008) வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில், ”ஒரு குழந்தை தாய்மொழி வழியாக பிற மொழிகளைக் கற்கும் நிலை என்பது இரண்டாவது மொழியினை வலுவாக கற்க மட்டுமல்லாது, தன்னுடைய உலகத்தினை புது உலகம் நோக்கி இணைக்கவும் பயன்படுகிறது. முதன் மொழியே பிற மொழிகளுக்கு அறிவுப்பாலமாகவும் திகழ்கிறது. பலமொழிகள் கற்கும் பன்மொழிச் சூழலில் மனித மூளையின் அறிவுப்பகிர்விற்கும் குழந்தையின் தாய்மொழி அவசியமாகிறது.” எனச் சுட்டிக்காட்டியுள்ளனர்.


இரு மொழிகளை குழந்தை ஒரு சேர கற்பதும் மூளையின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உகந்ததுதான். இன்னும் சொல்லப்போனால், வளர்ந்த மனிதனே கூட, தன்னுடைய ஒவ்வொரு காலப்பகுதியிலும் வெவ்வேறு மொழிகளை கற்பது மிக அவசியம்தான். மொழியினை பகுத்துணர ஒதுக்கி வைத்திருக்கும் நரம்பு மண்டலங்கள் ஒரே மொழியின் ஒலியை கேட்கும் பொழுது செயல்பாட்டுத் தேக்கம் அடைகிறது. அதேவே, பல மொழிகளை கேட்கும் பொழுது மொழிக்கான நரம்பு மண்டலம் விரிவடைந்து தளராமல் வேலை செய்வதால், மூளையின் ஆரோக்கியமான செயல்பாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


வயதாக வயதாக, மூளையின் செயல்பாட்டில் தேக்கம் ஏற்படும், சிந்தனையில் தளர்ச்சி ஏற்படும். பிற மொழிகளை தொடர்ச்சியாக கற்கும்பொழுது மூளையின் நரம்பு மண்டலங்களின் செயல்பாட்டில் தாக்கம் ஏற்பட்டு, தசையினை கட்டுப்படுத்துதல் முதல், உணரும் திறன், முடிவெடுக்கும் திறன் போன்றவைகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் உருவாகும். வயதான காலத்தில் உருவாகக்கூடிய அல்ஜெமீர் (Alzheimer disease) நோய் வராமல் தடுக்குவும் பல மொழிகளை கற்பது அவசியம் (இணையச்சுட்டிகள்: 1)


நோர்டிக் நாடுகளின் பொதுத்தன்மை:

ஐரோப்பிய நாடுகளினுள், குறிப்பாக, நார்டிக் நாடுகள் (நோர்வே, ஃபின்லாந்து, டென்மார்க், சுவீடன் மற்றும் ஐஸ்லாந்து) தாய்மொழிக் கல்விக்கென நடைமுறையில் வைத்திருக்கும் சட்டங்கள் உலகிற்கே வழிகாட்டல் எனலாம். நோர்வே, சுவீடனில் தமிழ் மொழிக்கான கல்வி உரிமை மற்றும் மதிப்பெண் அங்கீகாரம் குறித்து ”உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி” கட்டுரையில் பார்த்தோம்.


நோர்டிக் நாடுகளின் கல்வித்துறையில் பொதுத்தன்மை எனப் பார்த்தால், உயர்கல்வி வரை இலவசமாக வழங்குவதோடு, எந்தவொரு குழந்தையும் கல்விக் கற்க வெகுத்தொலைவு சென்றுவிடாதபடி, அருகாமைப் பள்ளிகள், ஸ்காண்டினேவியன் பண்பாடுகள் உள்ளடக்கிய பாடத்திட்டம், மதம், இன, மொழி, நிறங்கள் என எவ்விதப் பாகுபாடுகளையும் ஏற்றுக்கொள்ளாத மனநிலைக்கு ஏற்ற சமூகக் கல்வி, குறிப்பிட்ட வயது வரை தரம்பிரித்தல், கல்வித்திறன் வகைப்படுத்தல் முறை இல்லாத கல்விமுறை என பல நடைமுறைகளை மேற்கோள் காட்டலாம்.


மிக முக்கியமான ஒன்று, நோர்டிக் நாடுகளின் தாய்மொழியோடு அவரவர் தாய் மொழியைக் கற்றுத்தருவதோடு, அதற்குரிய மதிப்பெண் அங்கீகாரத்தினை மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எல்லா உயர்கல்வி உள்நுழைவு மதிப்பீட்டிற்கும் பயன்படுத்த அனுமதிப்பது எனலாம். ஏனைய ஐரோப்பிய நாடுகளில், அந்தந்த நாட்டுத் தாய்மொழியோடு, ஒவ்வொரு குழந்தையின் தாய்மொழிக்கும் முக்கியத்துவம் இருக்கிறது என்றாலும், உயர்கல்வி உள்நுழைவின் மதிப்பீட்டிற்கு எல்லா மொழிகளுக்கும் அங்கீகாரம் இல்லை, அப்படி இருப்பின், ஒவ்வொரு மாநிலமும், பள்ளி மாவட்ட நிர்வாகத்தின் எல்லைகளில் மாற்றம் உண்டு.


நோர்டிக் நாடுகள், தாய்மொழிக் கல்வி வழியாக பிறமொழிக் கல்வி மற்றும் பிற பாட கல்வி அறிதல் என்னும் கோட்பாட்டினை சட்ட வடிவில் உறுதியாகவும் வெகுச்சிறப்பாகவும் நிலைநிறுத்தி வைத்திருக்கிறது எனலாம். சுவீடன், டென்மார்க், ஃபின்லாந்து நாட்டில் பலமொழிக் கல்விகள் குறித்த நிறைய ஆராய்ச்சிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.

குழந்தைகளின் வளர்ச்சி அறிவியல், மனிதர்களின் மூளைச் செயல்பாடுகள், உளவியல், கல்வியியல் என அனைத்தையும் உள்ளடக்கிய ஆய்வுகள் வழியே நிறுவப்பட்டத் தகவல்களை மேற்கோள்களாக இந்நாடுகளின் கல்வித்துறைச் சட்டங்களில் காணலாம். பன்னாட்டு அளவில் மொழியியல் மற்றும் கல்வியியல் ஆராய்ச்சிகள் செய்யும் பேராசிரியர்களின் இந்நாடுகளைச் சார்ந்தோரின் படைப்புகள் அதிகமாகத் தென்படுவதும் இந்நாடுகள் தாய்மொழிக் கல்விக்கும் பன்மொழிக் கல்விக்கும் வழங்கும் முக்கியத்துவம் அறியலாம்.

அவரவர் தாய்மொழிக் கல்வி மூலமாக ஃபின்லாந்து பள்ளிக் கல்வி பற்றின ஆய்வுக்கட்டுரையில், ”ஓவ்வொரு குழந்தைக்கும் அவரவர் தாய்மொழியினை முறையாகவும் தொடர்ச்சியாகவும் கற்க வைப்பதும், அவர்கள் தம் பண்பாட்டுப் பெருமை, மொழிப் பெருமை குறித்தெல்லாம் தொடர்ந்து உரையாடுவதும் பெற்றோர்களின் பொறுப்பாகிறது. அக்குழந்தை ஃபின்லாந்து பாடமுறைக்கு வரும்பொழுது, அக்குழந்தையின் தாய்மொழிக்கு ஈடானா, இணையான திறனைப் பெறும் வரையில் ஃபின்னிஷ் மொழி இரண்டாம் மொழியாகவே இருக்கும். அதன்பின்னரே, பள்ளியின் நிர்வாகவும் அக்குழந்தையின் இருமொழித் திறன், பன்மொழித்திறன் உள்ளிட்டவைகளை கணக்கில் கொண்டு, மேலதிக கல்வியை ஃபின்னீஷ் மொழியில் வழங்கும்” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேக்கட்டுரையில், ”தாய்மொழிக் கல்வி அவரவர் வாழும் குடும்பச் சூழலோடு தொடர்புடையது என்பதால், தாய்மொழியைக் கற்பதென்பது, அக்குழந்தை தன்னை நெறிப்படுத்திக் கொள்ளவும், வாழ்வியல் நிகழ்வுகள் திட்டமிட்டப்படி அடுக்கிக் கொள்ளவும், சமூகத்தோடு உறவாடுவது தொடர்பான தன் பண்பாட்டில் உணரும் நல்லொழுக்கங்களையும் கற்பதால், பன்மொழிச் சூழலில் அக்குழந்தையால் வெற்றிகரமானவராக திகழமுடிகிறது. மேலும் எந்தவொரு மனிதரும் தங்கள் இன அடையாளம் மற்றும் சமூக விழிமியங்களை பேணிக்காக்க தாய்மொழி மிக அவசியமாதலால், அடிப்படை மனித உரிமையின் கீழ் உள்ளடக்கப்படுகிறது” எனவும் எடுத்துக் கூறியுள்ளனர்.

LOGO-Multilingual-and-Multicultural-Education22000, 2004, 2006 தொடர்ச்சியாக பலக்கட்ட ஆய்வுகளை நடத்தி அதன் முடிவுகளையும் வைத்தே, ”அவரவர் தாய்மொழியில் கல்வியின் முதன்நிலையைக் கற்கும்பொழுதே, சுவீடனுக்கு வரும் குழந்தைகள் சுவிடீஷ் மொழி உட்பட்ட பல மொழிகளையும் பிற பாடங்களையும் கற்றுத் தேர்ந்து வருவதையும், பள்ளிகளில் மட்டுமல்லாது பல்கலைக்கழகங்களிலும் வெற்றியாளராக திகழ்வதை உறுதிப்படுத்தியுள்ளதாக” கோத்தென்பர்க் நகர மொழியியல் கல்வி மைய இயக்குநர்கள் ஒரு கட்டுரையில் தெரிவித்தனர். https://www.nt2.nl/documenten/meertaligheid_en_onderwijs/kambel_meertaligheid_binnenwerk_eng_h4.pdf

சுவீடன் கல்வித்துறையும் தாய்மொழிக் கல்வியும்:

சுவீடனில் பல நாட்டு, பன்மொழி இனக்குழுக்களின் அதிகரிப்பின் பின்னர், 2009இல் புதிய மொழிக் கொள்கையை அந்நாட்டு அரசு நிர்ணயிக்கிறது. அதில்தான், ”சுவீடனில் வாழும் அனைவருக்கும் அவரவர் தாய்மொழியினை கற்கும் உரிமைகள் குறித்தும் அதற்குரிய நடவடிக்கைகள் குறித்தும் விவரிக்கப்பட்டன”.

அதில் மேலும், ”சுவீடனிற்கு புலம்பெயர்ந்து வருபவரின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சுவீடன் நாட்டு தம்பதியர், வேறு ஒரு நாட்டில் இருந்து குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தாலும், அக்குழந்தை தன் தாய் மொழியை வீட்டில் பேசாமல் இருந்தாலும் கூட, அக்குழந்தை தாய் மொழியில் பேச, பயில, கற்க இத்திட்டம் துணை நிற்கும்” எனவும் கூட தெளிவுப்படுத்தினர்.


சுவீடனைப் பொறுத்தவரை, அதன் கல்வியியல் தேசிய ஆணையம் கல்வி மொழித் தொடர்பான கட்டுப்பாட்டினை முன்மொழிந்து நடைமுறைப்படுத்துகிறது. ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும் கட்டாய இலவசக் கல்வியினை வழங்குவது அரசின் கடமையாகிறது.


அப்படி வழங்கப்படும் கல்வியில் அவரவர் தாய்மொழியினை கற்கும் உரிமையை சுவீடன் எப்படி கையாள்கிறது?


சுவீடன் நாட்டின் அலுவலக சிறுபான்மை மொழியாக இருக்கும் மியாங்கியாலி, சமி, ரோமானி சிப்ஃ, யித்தீஷ் மொழிகள் முதல் மொழியாக இருப்பவர்களுக்கு முழுமையாக தாய்மொழி வழியிலேயே கல்வி கற்கும் உரிமையையும் சுவீடன் கல்வித்துறை நடைமுறைப்படுத்தி வைத்திருக்கிறது.


அதேப்போல, அரசுப் பள்ளியின் பாடத்திட்டத்தில், புலம்பெயர்ந்து வந்தோருக்கு, சுவிடீஷ் மொழியினை இரண்டாவது மொழி என்ற அடிப்படையிலும் அவரவர் தாய் மொழியினை முதலாவது மொழி என்ற அடிப்படையிலும் வகுத்து வைத்திருக்கிறார்கள். அவரவர் தாய்மொழி இல்லாத சமூக மொழியினை அல்லது முதல் மொழியினை கற்க வேண்டியச் சூழலில், தாய்மொழி வழியாகத்தான் பிற மொழியினை கற்க முடியும் என்பதால், சுவீடனில் குழந்தைகளுக்கான தாய் மொழியை கற்பிக்கும் நடைமுறையைப் பின்பற்றுகிறார்கள்.


பள்ளிகள் ஒவ்வொன்றிலும் 5 மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட மொழியினை கற்கும் விருப்பத்தினை அல்லது குறிப்பிட்ட மொழி வழியாக முதல்நிலைப்பாடத்தினை கற்கும் விருப்பத்தினைத் தெரிவிக்கும் பொழுது அந்தந்தப் பள்ளிகள் அதற்குரிய மொழிப்பாட ஆசிரிய-ஆசிரியைகளை நியமிக்கலாம். இல்லாதபட்சத்தில் கூட, அருகாமை பள்ளிகளில் இருந்து 5 முதல் 8 மாணவ, மாணவிகள் இணைத்துக்கூட தாய்மொழிப் பாடம் சொல்லித்தரப்படுகிறது.


நான் வசிக்கும் கோத்தென்பர்க் நகரில் மட்டும் 70 மொழிகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த சுவீடனில் 200 சிறுபான்மை மொழிப் பேசும் பிரிவினர் வாழ்கிறார்கள் என்பதும், இதில் 140ற்கும் மேற்பட்ட மொழிகளை சுவீடன் கல்வித்துறை கற்றுத்தருகிறது என்பதும், இந்திய மொழிகளில் தமிழ், பஞ்சாப், இந்தி ஆகியவற்றிற்கு கல்வித்துறை செயற்பாட்டிற்கான அலுவலகம் இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


தாய்மொழிக் கல்விப் பயிற்றுநர்கள் மாணவ, மாணவிகளுக்கு தாய்மொழிப் பாடத்தினையும், அதன் வழி சுவிடீஷ் மற்றும் பிறப்பாடங்களை அந்தந்த வகுப்பு ஆசிரியர்களின் துணையோடும் தனியாகவும் கற்றுத்தருகிறார்கள், மேலும், பள்ளிக்கும், பெற்றோருக்கும், மாணவ/மாணவிகளுக்கும் இடையிலான கருத்துப் பரிமாற்றத்திலும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.


(சுவீடன் நாட்டிற்கு வந்த பொழுது, அரசுப்பள்ளியில் என் குழந்தை சேரும் சூழலில் தமிழ் மட்டுமே அறிந்தவன் என்பதால், அவருக்கு தமிழில் சோதனைகள் நடத்தியதோடு, தமிழ் ஆசிரியையைக் கொண்டு இருமொழிக் கல்வி வழங்கியதையும் ” உலக நாடுகளில் தாய்மொழிக் கல்வி” கட்டுரையில் படித்திருப்பீர்கள்).


ஐரோப்பிய நாடுகளின் தாய்மொழிக் கல்விக்கென்று தனி வரலாற்று பின்னணியும், சமூகவியல் பின்னணியும் கூட உண்டு. அவரவர் தாய் மொழிக்கு முக்கியத்துவம் தரும் அதேவேளை, இருமொழிக் கொள்கை குறிப்பிட்ட வயது வரையும் பன்மொழிக் கல்விக் கொள்கை அடுத்தடுத்தக் கட்ட கல்வி வயது என தொடர்ந்தும் எல்லாக் குழந்தைகளையும் கல்விக் கற்க வைப்பதோடு, அவரவர் தாய் மொழியினையும் உள்ளடக்கி எவ்விதத்திலும் யாரும் எதற்காகவும் புறக்கணித்துவிடாத, நல்லிணக்க, ஒருங்கிணைந்த கல்வி முறையினை ஐரோப்பிய நாடுகள் பின்பற்றுக்கின்றன.


இங்கே தான் இந்திய ஒன்றியத்தின் கல்வி முறையில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகள் உட்புகுத்த நினைக்கும் ‘இந்தி’, ‘சமஸ்கிருத’ கல்வியினை அறிவியல் அடிப்படையிலே, சமூகக் கோட்பாட்டு அடிப்படையிலோ செய்யாது, அரசியல் சூழச்சி மற்றும் அதிகாரப் பசியின் ஊடாக, அடக்கி ஆளுதல் மனநிலையில் செய்வதற்குமான முக்கிய வேறுபாடுகளை நாம் புரிந்துக்கொள்ளவும் வேண்டும்.


கல்வித்துறையில், இருமொழி மற்றும் பன்மொழி கல்வி முறையை எவ்வித பிரித்தாளும், மேலாதிக்கத் தன்மையற்ற, ‘நல்லிணக்க’ வடிவிலும் அறிவியல் அடிப்படை மற்றும் வருங்காலத் தேவை அடிப்படையிலும் அமைத்தல் அவசியமாகிறது. அதனைவிடுத்து, ஆட்சி அதிகாரத்தின் பேராளுமை கொண்டு மொழிக்கொள்கையை கல்வியில் புகுத்த நினைத்தால், இதற்கு முன் பல நூற்றாண்டுகளின் அத்தகையச் சூழல்களில் எல்லாம்  தேசிய, இறையாண்மை வடிவங்கள் எவ்வாறு புத்தெழிச்சிப் பெற்றன என்பதும் நம் மனக் கண் முன் வந்துபோவதை தவிர்க்க முடியவில்லை.