இன்று தலைநகர் பேர்ணில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கூட்டாட்சி அரசின் உறுப்பினர்கள் இதனை அறிவித்துள்ளார்கள். செய்தியாளர் சந்திப்பினை ஆரம்பித்து உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் கை பார்மலின் பேசுகையில், " சுரங்கப்பாதையின் முடிவில் ஒளியை நாங்கள் இப்போது காண்கிறோம், ஆனால் சுரங்கப்பாதை இன்னும் மிக நீளமாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆதலால் தொற்றுநோயியல் பரிணாமத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் படிப்படியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன." என்றார்.
இன்றைய அறிவிப்பின்படி, மார்ச் 1 முதல் ஒரு சில நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்ற போதிலும் பொருளாதார நடவடிக்கைகள் முழுவதுமாக மீண்டும் திறக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை நோய்த்தொற்றுகளைத் தவிர்க்கும் பொருட்டு, ஓரளவுக்கு மட்டுமே தளர்த்தல் நடவடிக்கைகள் இருக்கும். கடைகள், அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள், உயிரியல் பூங்காக்களின் வெளிப்புற பகுதிகள், தாவரவியல் பூங்காக்கள், விளையாட்டு மற்றும் ஓய்வு வசதிகள் மீண்டும் திறப்பதற்கான அனுமதிகள் வழங்கப்படும் அதேவேளை உணவகங்களைத் திறக்க இன்னமும் அனுமதியில்லை.