03.02. 2021....தனி தமிழ் ஈழம் அமைத்திட பொது வாக் கெடுப்பு நடத்த வேண்டும் என உலக தலைவர்களுக்கு தி.மு.கழகத்தின் சார்பில், பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள் ளது.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், இந்த விடயம் தொடர்பாக அவர், நூற்றுக்கும் மேற்பட்ட மின் அஞ்சல் கடிதங்களை அனுப்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சனாதிபதி யோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரித்தானிய பிரதமர் பொரிசு(ஸ்) யோன்சன், கனடா பிரதமர் யசு(ஸ்)டின் ட்ரூடோ, அவுசுரேலிய பிரதமர் சு(ஸ்)கொட் மொரிசன் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், ஐ.நா. மன்றப் பொதுச்செயலாளர், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத் தலைவர், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தலைவர், இந்திய வெளிவிவகார அமைச்சர் யெய்சங்கர் உள்ளிட்ட பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு அவர் இவ்வாறு கடிதங்களை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ள அவர், “2009-ம் ஆண்டு நோர்வே- பிரான்சு(ஸ்), கனடா, சுவிட்சர்லாந்து, சேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் வாழ்கின்ற புலம்பெயர்ந்து வந்த இலங்கைத் தமிழர்கள் இடையே ஒரு பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. தமிழ் ஈழம் அமைவதற்கு அவர்கள் பெரும் ஆதரவு அளித்தனர்.
2011ம் ஆண்டு மார்ச் 25ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம், ஐ.நா. அறிக்கையின் அடிப்படையில் ஒரு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியது.
விடுதலைப்புலிகள் உட்பட இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், அனைத்திற்கும் மேலாக இலங்கையின் வடக்கு கிழக்கு மாநிலங்களைப் பிரித்து தனித்தமிழ் அமைப்பதற்கு ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத் தீர்மானம் கோருகின்றது.
இலங்கை வடக்கு மாகாண மன்றம், 2015-ம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதி ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களை ஒன்றாக இணைக்க வேண்டும்.
சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் தமிழர் தாயகப் பகுதிகளில் இருந்து சிங்கள ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என அந்தத் தீர்மானம் கோருகின்றது.
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஒரு பொது வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று அந்தத் தீர்மானம் வலியுறுத்துகின்றது.
எனவே ஐ.நா. மனித உரிமைகள் மன்றம் மற்றும் ஐ.நா.வின் அனைத்து உறுப்பு நாடுகளும் சேர்ந்து கீழ்காணும் கோரிக்கைகளை ஆய்வு செய்து தீர்வு காண வேண்டும் என நாங்கள் கோருகின்றோம்.
ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமையை ஏற்க வேண்டும், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
2015 பெப்ரவரி 10ஆம் திகதி இலங்கை வடக்கு மாகாண மன்றம் நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்க வேண்டும்.
இலங்கை அரசு நடத்துகின்ற எந்த விசாரணையின் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை இல்லை எனவே பன்னாட்டுக் குற்ற இயல் நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
இந்திய அரசு, மனித உரிமைகள் மன்ற உறுப்பு நாடுகளை ஒருங்கிணைத்து நிகழ்ச்சி நிரல் 4-ன்படி சிறப்பு ஆணையர் ஒருவரைத் தெரிவு செய்து, இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்கள், தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைக் கண்காணிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும்.
இலங்கையில் நடைபெறுகின்ற மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்புடைய உறுப்பினர்களுடன் இலங்கைக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாநிலங்களில் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா. பொதுப்பேரவைக்கும் மனித உரிமைகள் மன்றத்திற்கும் ஆய்வு அறிக்கை வழங்க வேண்டும்.
08.பிரச்சினைகளை உடனுக்குடன் வெளிக்கொணர வேண்டும். அதிகாரபூர்வ செய்தி அறிக்கைகளை வெளியிட வேண்டும்.
09.இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவித்து நீதி வழங்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.